இலங்கைச் செய்திகள்


சர்வாதிகார குடும்ப ஆட்சியாளர்களுக்கு கடாபியின் மரணம் சிறந்த பாடம்: விக்கிரமபாகு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தின் முக்கியத்துவம்


கூட்டமைப்பு தமது மக்களின் குறைகளை சர்வதேசத்துக்கு கூறுவதில் தவறில்லை: ஐ.தே.க.

பொதுநலவாய போட்டிகளை விட வடக்கு கிழக்கில் பல தேவைகள் தேங்கிக் கிடக்கின்றன: லக்ஷ்மன் கிரியெல்ல

நடக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எப்போது? குமரகுருபரன் கேள்வி

தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் ரொபேட் பிளேக்குடன் சந்திப்பு

சர்வாதிகார குடும்ப ஆட்சியாளர்களுக்கு கடாபியின் மரணம் சிறந்த பாடம்: விக்கிரமபாகுலிபியாவின் மக்கள் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட முஅம்மர் கடாபியின் ஆட்சி பின்னர் மக்களை அடக்கும் சர்வாதிகார, குடும்ப ஆட்சியாக மாறியமையே அவரது அழிவுக்குக் காரணமாக அமைந்தது என இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

உலகின் குடும்ப சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு கடாபியின் மரணம் சிறந்த பாடமாகுமென்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில்,

லிபிய மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அம்மக்களுக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் போராட்டத்தை ஆரம்பித்து ஆட்சியை கைப்பற்றியவர் கடாபி. ஆனால் காலப் போக்கில் மக்களை அடக்கி ஒடுக்கி குடும்ப ஆட்சியாக சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்தார்.

இதனால் நசுக்கப்பட்ட மக்கள் நாட்டுத் தலைமைத்துவத்தின் மீது அதிருப்தியும் ஆத்திரமும் வெறுப்பும் அடைந்தனர்.

மக்களின் எதிர்ப்பை சம்பாதித்ததால் கிளர்ச்சி வெடித்தது. இறுதியில் உயிரிழந்தார். இது சண்டையின் போது நடந்ததா அல்லது கைது செய்யப்பட்டதன் பின்னர் நடந்ததா என்பது பற்றித் தெரியாது.

ஆனால் இது தொடர்பில் கண்ணீர் விட முடியாது. அதேவேளை, கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அது மனித உரிமை மீறலாகும்.

எனவே, சர்வாதிகார குடும்ப ஆட்சியாளர்களுக்கு இது சிறந்த பாடமாகும் என்றார்.

நன்றி வீரகேசரி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தின் முக்கியத்துவம் _
27/10/2011


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளது. இந்தப் பயணமானது தமிழர்களைப் பொறுத்தவரையில் முக்கியத்துவமானதாகக் கருதப்படுகின்றது. இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க பயணத்திற்கு அரசாங்கத் தரப்பில் சிலர் தமது எதிர் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

சுமார் 30 வருட கால யுத்தத்தின் பின்னர் தமக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலும், அரசியல் கட்சித் தலைவர்கள் பலராலும் அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்திய போதும் அரசாங்கம் ஒரு சரியான தீர்வை இது வரையில் பெற்று தராமல் ஒவ்வொரு பேச்சுவார்த்தை முடிவிலும் ஏதோ சில காரணங்களைக் கூறி தமது பேச்சு வார்த்தைகளை முடித்தது.

மேலும் அரசாங்கத்தின் ஒவ்வொரு பேச்சு வார்த்தையின் போதும் பேசப்பட்டு வந்த முக்கிய வி;டயமாக அவசரகாலச்சட்டம் காணப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு நன்மையாக இருந்போதும் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவசர காலச்சட்டத்தின் சில சரத்துகள் சேர்த்து கொள்ளப்பட்டன. இதனால் சிறுபான்மையினரை மறைமுகமாக இது பாதிக்கின்றது.

இதனையடுத்து வடக்கில் தற்போது காணிப்பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களால் எதிர்ப்புகள் வெளியிடப்பட்ட போதும் அதற்கு அரசாங்கம் ஏதோ காரணங்களைக் கூறி வருகின்றது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பை ஏற்று தலைவர் சம்பந்தரின் தலைமையில் அமெரிக்கா சென்றுள்ள குழு தமிழ் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இச் சந்திப்பையடுத்து ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடனும் சந்திப்பொன்று நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு சந்திப்பொன்று நடக்குமேயானால் அரசாங்கத்திற்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பயணத்தைத் தொடர்ந்து அரசாங்கம் தமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என தெரிவிக்கின்ற போதிலும் மறைமுகமான கருத்தடிப்படையில் தமது எதிர்ப்புகளையும் தெரிவிக்கின்றன.

வீட்டுக்குள் ஏற்படும் பிரச்சினையை வீட்டுக்குள்தான் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டிற்கு சொன்னால் அவமானம். எனவே எமது நாட்டுப் பிரச்சினையை நாமே பேசி தீர்த்துக் கொள்ளவது புத்திசாலித்தனமானது. இதனைவிடுத்து நாட்டின் பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வது வெட்கத்திற்குரிய விடயம் என்பதோடு இதனால் ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை என அரசாங்கம் தெரிவிக்கின்றது.

30 வருட காலமாக மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளையும் சுகபோகங்களையும் சில வருடங்களுக்குள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பயங்கரவாதத்திற்கு கொடுக்கின்ற ஆதரவு இன்னும் சர்வதேசத்தில் இருந்து வருகின்றது. இவ்வாறான நிலையிலேயே பொய்களைக் கூறி சர்வதேசத்தின் கவனத்தை திசை திருப்புவோர்களும் இருக்கின்றனர் என பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபகஷ அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்களைச்சந்தித்தபோது குறிப்பிட்டிருந்தார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டுவதில் அரசாங்கத்திடம் உண்மைத் தன்மையோ வெளிப்படைத் தன்மையோ கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தை காலம் கடத்தும் முயற்சி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க விஜயமானது அவர்களின் ஜனநாயக உரிமையாகும். தமது மக்களின் குறைகளைக் கூட்டமைப்பினர் தெளிவுபடுத்துவதில் தவறு கிடையாது. அது தடுக்கப்படக்கூடியதும் அல்ல. மேலும் சர்வதேச ரீதியிலான அழுத்தங்கள் இல்லாதவாறு நேர்மையாக செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குறிப்படுகின்றது.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்காவிற்கான விஜயம் எவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது என எம்மால் உணரமுடிகின்றது.. இதன் முக்கியத்தும் எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் பிரதிபலிக்கும் என்பதே உண்மை.
நன்றி வீரகேசரிகூட்டமைப்பு தமது மக்களின் குறைகளை சர்வதேசத்துக்கு கூறுவதில் தவறில்லை: ஐ.தே.க. _
27/10/2011


தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டுவதில் அரசாங்கத்திடம் உண்மைத் தன்மையோ வெளிப்படைத் தன்மையோ கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தை காலம் கடத்தும் முயற்சியாகும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க விஜயமானது அவர்களின் ஜனநாயக உரிமையாகும். தமது மக்களின் குறைகளை கூட்டமைப்பினர் தெளிவுபடுத்துவதில் தவறு கிடையாது. அது தடுக்கப்படக்கூடியதும் அல்ல. மேலும் சர்வதேச ரீதியிலான அழுத்தங்கள் இல்லாதவாறு நேர்மையாக செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதை மீண்டும் ஒரு முறை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் மற்றும் பொது நலவாய நாடுகள் மாநாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். திஸ்ஸ எம்.பி. மேலும் கூறுகையில், பொதுநலவாய நாடுகளின் மாநாடு நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது. இதில் கலந்து கொள்ளவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சென்றிருக்கின்றார். அரச தலைவர்கள், இம்மாநாட்டில் பங்கு கொள்வது இயல்பான விடயமாகும். இந்நிலையில் பொது நலவாய நாடுகளின் மாநாட்டின் போது இலங்கைக்கு எதிரான பல சவால்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் சர்வதேச ரீதியாக எழுகின்ற சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கும் எழுகின்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும் அரசாங்கம் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில் சர்வதேச நாடுகளைப் பகைத்துக் கொள்வதில் பலன் இல்லை. பொதுநலவாய நாடுகள் அனைத்திலும் இலங்கைக்கான தூதுவர்கள் உள்ளனர் இவர்களினூடாக ராஜதந்திர நடவடிக்கைகளை அரசு கையாளவேண்டும். மறுபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றது. கூட்டமைப்பு தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றது. இது கூட்டமைப்புக்கு மட்டுமல்ல எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பொதுவானதாகும். எனவே, கூட்டமைப்பு அமெரிக்கா சென்றமை அல்லது ஏனைய நாடுகளுக்கு செல்கின்றமை, தமது நிலைப்பாடுகளை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்கின்றமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல எந்தவொரு கட்சியும் ஆட்சேபிக்க முடியாது. அது அவர்களுக்கே உரிய ஜனநாயக உரிமையாகும். அதனைக் கட்டுப்படுத்தவோ தடைசெய்யவோ முடியாது. தமிழ் மக்களின் விடயம் தொடர்பிலும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் அரசாங்கம் தவறிழைத்து விட்டமையே இவ்விவகாரம் சர்வதேச மட்டத்துக்கு சென்றிருப்பதற்கும் சர்வதேச நாடுகள் எமது விடயங்களில் மூக்கை நுழைப்பதற்கும் அடிப்படைக் காரணமாகும். யுத்தம் நிறைவடைந்து இரண்டரை வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. யாவும் கிடப்பில் போட்டவாறே உள்ளன. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினை எட்டும் நோக்கில் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இதுவரையில் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் மேற்படி பேச்சுக்களில் ஆளும் தரப்பு சார்பில் வெளிப்படைத் தன்மை இல்லாதிருப்பதையே உணர முடிகின்றது. பேச்சுக்களை இழுத்தடித்து நாட்களைக் கடத்துவதிலேயே அரசாங்கம் ஆர்வம் காட்டுகின்றது. அது மட்டுமல்லாது நாட்களைக் கடத்துவதன் மூலம் மூடி மறைப்புக்களை மேற் கொள்வதானது அரசியல் தீர்வை முன்வைக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்பதையே காட்டிநிற்கின்றது. இவ்வாறான நிலைமைகளே உள்நாட்டுப் பிரச்சினை சர்வதேசத்துக்கு செல்கின்றமைக்கு வழி வகுத்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான அமெரிக்காவின் அழைப்பு மற்றும் சர்வதேச அழுத்தங்கள் என அனைத்தும் இதனடிப்படையிலேயே இடம் பெற்று வருகின்றன என்றார்.

நன்றி வீரகேசரி

 
பொதுநலவாய போட்டிகளை விட வடக்கு கிழக்கில் பல தேவைகள் தேங்கிக் கிடக்கின்றன: லக்ஷ்மன் கிரியெல்ல _


27/10/2011

பொது நலவாய போட்டிகளை அம்பாந்தோட்டையில் நடத்துவதைப் பார்க்கிலும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட வேண்டிய அதிமுக்கியமான பல தேவைகள் வடக்கு கிழக்கில் பரந்தளவில் தேங்கிக் கிடப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று தெரிவித்தார்.

கிரிக்கெட் கலாசாரமே அற்ற அம்பாந்தோட்டையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கை அமைத்திருப்பதால் எந்தப்பயனும் இல்லை என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிரியெல்ல எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,

பொதுநலவாய போட்டிகளை அம்பாந்தோட்டையில் நடத்துவதைப் பற்றி ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை. பாரிய விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடத்தப்படுவது நன்மையளிக்கும் விடயமாகும்.

இருப்பினும் அவ்வாறானதொரு போட்டித் தொடரை நடத்துவதற்கான இயலுமை இருக்கின்றதா என்பதை பற்றியும் இங்கு சிந்திப்பது அவசியமாகும்.

மேலும் எமது நாட்டின் இன்றைய நிலைவரங்களின் பிரகாரம் அம்பாந்தோட்டையில் இவ்வாறு பாரிய போட்டித் தொடர் ஒன்றை நடத்துவதிலும் பார்க்க வடக்கு கிழக்கில் நிறைவேற்ற வேண்டிய பாரிய பல தேவைகள் பரந்த நிலையில் தேங்கிக் கிடக்கின்றன. அதேபோல் வீடுகளை நிர்மாணிக்க வேண்டிய தேவைகளும் உள்ளன. இவற்றையும் அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

நன்றி வீரகேசரி

நடக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எப்போது? குமரகுருபரன் கேள்வி

Thursday, 27 October 2011

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் அண்மைக்காலங்களில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றமை வரவேற்கப்படவேண்டியது. இவர்களில் பலர் விடுவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் கொண்டு செல்லப்படுவதாக அவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பல வருடங்களாக எதுவித விசாரணைகளும் இன்றி தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் வாடுகின்றனர். இவர்களின் விடுதலைக்கு எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என இவர்களின் பெற்றோர்கள் கேட்கின்றனர். துயரத்தின் விளிம்பில் தமிழ் அரசியல் கைதிகளை அரசு ஏன் பாராமுகமாக உள்ளது.

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி நல்லையா குமரகுருபரன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

தீபாவளிப்பண்டியையாவது நாம் எமது பெற்றோர், உறவினர்களுடன் இணைந்து கொண்டாடுவோமா என இவர்கள் ஏங்கியிருந்தனர்.

இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் இதுவரையில் அத்தண்டனைக்காலத்தை முடித்து விடுதலையடைந்திருப்பார்கள்.

இவர்களில் சிலர் 10 வருடங்கள் 15 வருடங்களாக சிறைகளிலும், தடுப்பு முகாம்களிலும் உள்ளனர். இவர்களின் விடுதலை குறித்து பல்வேறு தரப்பினரும் பேசியுள்ளனர்.

சட்டமா அதிபர் இவர்களில் 600 பேர் வரை எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி உள்ளதாகவும், அவர்களின் கோவைகள் தனது மேசையில் இருப்பதாகவும் முன்பு தெரிவித்திருந்தார். நீதியமைச்சரும் இவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.

ஆனால் குற்றச்சாட்டு ஆதாரம் இல்லாத போதிலும் இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்பது அரசின் நிலைப்பாடாகும்.

இந்த நிலைப்பாட்டை ஜனாதிபதியை தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சந்தித்த போதும் தெளிவாகக் கூறப்பட்டது.

இது எப்படியிருப்பினும் குற்றம் சாட்ட ஆதாரம் இல்லாதிருந்த போது மனுதர்ம ரீதியில் விளக்க மறியலில் வைத்திருந்தாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு. இக் கைதிகளால் அவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் துன்பதுயரங்களுக்கு அளவில்லை.

குறிப்பாக அரசின் பங்காளிகளாக மாறியுள்ள தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மனிதாபிமானம், மனித உரிமைகள், மனுநீதி பற்றிப் பேசுபவர்கள் இக் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதியிடம் பேசி ஒரு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நன்றி தினக்குரல்

தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் ரொபேட் பிளேக்குடன் சந்திப்பு


28/10/2011

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் செவ்வாய்க்கிழமை இலங்கையில் இருந்து புறப்பட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழு வாஷிங்டனைச் சென்றடைந்தது.

இந்தக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்க சென்றுள்ள சம்பந்தன் தலைமையிலான குழு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளனர். இதன் முதற்கட்டமாக இவர்கள் ரொபேட் ஓ பிளேக்கை சந்தித்துள்ளனர்.

நன்றி வீரகேசரி

No comments: