உலகச் செய்திகள்

துருக்கியில் நில நடுக்கம் ஆயிரம் பேர் பலி

சீனாவில் மனிதாபிமானம் முற்றாகவே மரணித்துவிட்டதா?

கடாபியின் வெளிநாட்டு முதலீடு 9.8 இலட்சம் கோடி!

சகுனிகளின் "நியாயத் தீர்ப்பு'

எம். மணிகண்டன்


கடாபி ஆதரவாளர்கள் 50 பேர் கொடூர கொலை



தாய்லாந்து விமான நிலையத்தில் வெள்ளம் புகுந்தது


கடாபியின் இரகசிய இரசாயன ஆயுத களஞ்சியசாலை கண்டுபிடிப்பு


துருக்கியில் நில நடுக்கம் ஆயிரம் பேர் பலி

Monday, 24 October 2011

earth_queke2துருக்கியின் கிழக்குப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தினால் சுமார் ஆயிரம் பேர் இறந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.

இந்தப் பகுதியில் 7.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் இதன் போது துருக்கி வான் மாகாணத்தில் காணப்பட்ட பல பாரிய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் அதனை அண்மித்த ஏர்சிஸ் பகுதியில் 20 தொடக்கம் 30 வரையான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த அனர்த்தம் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியிருக்கலாமென அஞ்சப்படுவதுடன் காயமடைந்த பலர் மீட்புப் பணியாளர்களினால் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் துருக்கியின் வடக்கு,கிழக்குப் பகுதிகளில் 20 ஆயிரம் பேர் வரையிலானவர்கள் பலியாகிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி தினக்குரல்


சீனாவில் மனிதாபிமானம் முற்றாகவே மரணித்துவிட்டதா?

24/10/2011

இரண்டு வயதுக் குழந்தை மீது வாகனத்தினால் மோதிவிட்டு வேன் சாரதி ஒருவர் அலட்சியமாக வேனில் சென்றதுடன் அக்குழந்தை உயிரிழக்கக் காரணமான இரண்டு பேரை சீனநாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அக் குழந்தையானது இவ் விபத்திற்கு முகங்கொடுத்து சில நாட்களின் பின்னரே உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவத்தின் காணொளிக் காட்சி ஊடகங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அக்காணொளியில் குழந்தை வாகனத்தில் மோதப்படுவது முதல் மற்றையவர்கள் அலட்சியமாக விலகிச் செல்வது வரை அனைத்தும் பதிவாகியிருந்தது.

மேலும் சீனர்களில் மனிதாபிமானம் தொடர்பிலும் கேள்விகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சீனப் பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.

நன்றி கவின் / வீரகேசரி




கடாபியின் வெளிநாட்டு முதலீடு 9.8 இலட்சம் கோடி!

23/10/2011

புரட்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபி வெளிநாடுகளில் 9.8 இலட்சம் கோடியை முதலீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கச்சா எண்ணெய் வளம் மிக்க லிபியாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்த கடாபிக்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதத்தில் புரட்சி வெடித்தது. இதனைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை இடம்பெற்றது.

ஐ.நா உத்தரவின் பேரில் நேட்டோ படையும் புரட்சியாளர்களுக்கு உதவியது. இந்நிலையில், கடந்த 20ஆம் திதி தனது சொந்த ஊரான சிர்தேயிலிருந்து தப்பிக்க முயன்ற கடாபியை புரட்சிப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

அமெரிக்காவில் முதலீடு செய்திருந்த 1.81 இலட்சம் கோடியும், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் முதலீடு செய்திருந்த சுமார் 1.47 இலட்சம் கோடியும் முடக்கப்பட்டது.

இதுதவிர, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 1.47 இலட்சம் கோடி என மொத்தம் 4.9 இலட்சம் கோடியை வெளிநாடுகளில் முதலீடு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், 9.8 இலட்சம் கோடி முதலீடு செய்திருப்பதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி வீரகேசரி


சகுனிகளின் "நியாயத் தீர்ப்பு'
எம். மணிகண்டன்

நாgaddafiட்டு மக்களைச் சித்திரவதை செய்தார், எதிர்க்கட்சிகளை ஒடுக்கினார், பத்திரிகைகளை முடக்கினார் என்றெல்லாம் கடாஃபி மீது குற்றம்சாட்டப்படுகிறது. இப்படிக் குற்றஞ்சாட்டும் அமெரிக்காவும் பிரிட்டனும் எப்படிப்பட்டவை தெரியுமா? கடாஃபியை நம்பவைத்து வஞ்சித்த நாடுகள்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் விஞ்ஞானி ஏ.க்யூ.கானின் அணு ஆயுதக் கள்ளச் சந்தை வந்த பிறகு, அணு ஆயுதத் தொழில் நுட்பம் என்பது கத்தரிக்காய் வெண்டைக்காய் போலக் கிடைக்கத் தொடங்கியிருந்தது. லிபியாவும் இந்தத் தொழில்நுட்பத்தை ஒரு விலை கொடுத்து "கள்ளத்தனமாக' வாங்கியது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தோரியம் போன்ற மூலப்பொருள்கள் கிடைத்தன. இரண்டையும் கொண்டு அணுஆயுதத்தை உருவாக்கிவிட கடாஃபி திட்டமிட்டிருந்தார். மூலப்பொருள்களைச் செறிவூட்டும் பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. அப்போதுதான் ரகசியப் பேச்சு என்கிற பெயரில் பிரிட்டனும் அமெரிக்காவும் கடாஃபிக்கு வலை விரித்தன. 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு, கொஞ்சம் மேற்குப்பக்கம் கடாஃபி சாயத் தொடங்கியிருந்த காலம் அது. தனது அல்காய்தா விசுவாசத்தையும் அவர் குறைத்துக் கொண்டிருந்தார். பக்கத்து நாட்டுக் கலகக்காரர்களுக்கும் அவர் உதவுவதை நிறுத்திக் கொண்டிருந்தார். இஸ்ரேலுக்கு எதிராகப் போரிடும் பாலஸ்தீனப் போராட்டக்காரர்கள் மீதான ஆர்வத்தையும் கைவிட்டிருந்தார். அயர்லாந்து புரட்சிப் படைக்கு உதவி செய்து பிரிட்டனைச் சீண்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

ரெற்டி நாடு என்கிற பெயரைப் போக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. அதனால் மேற்கத்திய நாடுகளின் சதியைத் தெரிந்து கொள்ளவில்லை. பிரிட்டனும் அமெரிக்காவும் கேட்டுக் கொண்டபடி அணு ஆயுதத்தைக் கைவிடுவதாக கடாஃபி அறிவித்தார். ரசாயன ஆயுதங்கள், நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகள் போன்றவற்றை ஒப்படைத்தார். இது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அணு ஆயுதக் கள்ளச்சந்தையை ஏ.க்யூ.கான் உருவாக்கியிருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களையும் அமெரிக்காவிடம் கொடுத்தார் கடாஃபி. பூரித்துப் போன பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் நேரில் வந்து கடாஃபியைப் பாராட்டினார். அதன்பிறகு பல முக்கிய எண்ணெய் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. கடாஃபியின் படைகளுக்கு பிரிட்டன் பயிற்சி அளித்தது. இப்படிப் பல வகையிலும் கடாஃபிக்கும் மேலைநாடுகளுக்குமான நெருக்கம் அதிகரித்தது. ஆனால் இந்த உறவு உண்மையானதல்ல என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.

கடாஃபிக்கு வீசிய அதே வஞ்சக வலையைத்தான் வடகொரியாவுக்கும் ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகள் வீசின. ஆனால் அந்த நாடுகள் மசியவில்லை. அணுஆயுத, அணுசக்தித் திட்டங்களைக் கைவிடுவதாக இல்லை. அதனால் இன்று வரைக்கும் பொருளாதாரத் தடைகள் போன்ற சாத்வீக வழியிலேயே அந்த நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளை நம்பி, தம்மிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்த கடாஃபிக்கு துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விஷயத்தில் மேற்கத்திய நாடுகளை மட்டும் குறைகூறிப் பயனில்லை. வளரும் நாடுகளுக்கு உறுதுணையாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் சீனாவும் ரஷியாவும்கூட ஒரு வரலாற்றுத் தவறைப் புரிந்திருக்கின்றன. லிபியாவின் வான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கான அனுமதி கோரும் தீர்மானம் ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு வந்தபோது, இந்த இரு நாடுகளும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கடாஃபிக்கு இந்தக் கதி தேவைதான் என்று நியாயம் கூறப்படுகிறது.

கடாஃபி பல்வேறு வகையான குற்றங்களைப் புரிந்தவராக இருக்கட்டும். அதற்காக இன்னொரு நாட்டில் புகுந்து நாட்டின் தலைவரைக் கொடூரமாகக் கொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அணு ஆயுதங்களைக் கைவிடுவோருக்கும், வைத்துக் கொள்ளாதவர்களுக்கும் இதுதான் நிலை என்றால், அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மீது உலக நாடுகளுக்கு, அதிலும் குறிப்பாக மேற்கத்திய எதிர்ப்பு நாடுகளுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிடும். இதுவரை அணுஆயுதம் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களை வைத்துக் கொள்ளாத நாடுகள்கூட அவற்றைத் தயாரிப்பதற்கான முயற்சிகளைத் தேடக்கூடும். ஏ.க்யூ.கானின் ஆள்கள் உலகம் முழுவதும் இருப்பதால், இந்தக் காலத்தில் இதெல்லாம் பெரிய விஷயமேயில்லை.

லிபியாவிலேயே கடாஃபிக்கு கடும் எதிர்ப்பு இருந்தது என்பது உண்மைதான். தமக்கு எதிரான போராட்டங்களை ராணுவத்தின் மூலம் அடக்கினார் என்பதுதான், பாதுகாப்பு சபையில் அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் முக்கிய அம்சம். ஆனால், அன்று தீர்மானத்துக்கு ஆதரவாக நின்றவர்கள், இன்று சிர்தே நகரையே தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். பல நூறுபேரைக் கொன்றிருக்கிறார்கள். கடாஃபியைப் பிடித்த இடத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் சிதறிக் கிடந்திருக்கின்றன. கடாஃபி எப்படிச் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்பதைச் சொற்களால் விவரிக்கவே முடியாது.

கடாஃபி கொடூரமான குற்றவாளியாகவே இருந்தாலும், அவரைச் சித்திரவதை செய்ததன் மூலம் மேற்கத்திய நாடுகளும் மாபெரும் போர்க்குற்றம் புரிந்திருக்கின்றன. ஒபாமா கொண்டுவரும் சட்டங்களைச் சொந்தக் கட்சியினரே மதிப்பதில்லை. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் பெயர் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் கெட்டுப் போயிருக்கிறது. இப்படி எதிர்கால நம்பிக்கையை இழந்தவர்கள் "நியாயத் தீர்ப்பு' வழங்கும் நிலையில்தான் இன்றைய உலக அரசியல் இருக்கிறது.

- தினமணி -

கடாபி ஆதரவாளர்கள் 50 பேர் கொடூர கொலை

நியூயார்க், அக்.25 (டிஎன்எஸ்) சித்ரவதை செய்யப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்ட லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் ஆதரவாளர்கள் 50 பேர், கிளர்ச்சியாளர்களால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க மனித உரிமை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து நியூயார்க் நகரிலிருந்து செயல்பட்டுவரும் மனித உரிமை அமைப்பு ஒன்று தனது வெப்சைட்டில் தெரிவித்திருப்பதாவது; கடந்த 21ஆம் தேதி லிபியா அதிபர் கடாபி கிளர்ச்சியாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதே நாளில் அவரது சொந்த ஊரான சிர்டி நகரில் உள்ள மெகாரி என்ற ஹோட்டல் வளாகத்தில் 50 பேர் தலையில் குண்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளனர். இது குறித்து மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் இயக்குனர் பீட்டர் புகாரெயிட் கூறுகையில், கடாபி கொல்லப்பட்ட நாளன்று தான் இவர்கள் கிளர்ச்சியாளர்களிடம் சிக்கியுள்ளனர். அவர்களது கைகள் பின்புறமாக கட்டப்பட்டு, தலையில் துப்பாக்கி குண்டுகள் துளைத்ததற்கான காயங்கள் இருந்துள்ளன என்றார். இதிலிருந்து அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து லிபியா இடைக்கால அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

நன்றி தேனீ

தாய்லாந்து விமான நிலையத்தில் வெள்ளம் புகுந்தது


26 Oct 2011

பாங்காக், அக்.25 : தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள விமான நிலையத்தில் வெள்ளம் புகுந்துள்ளது.

பாங்காக்கில் டான் மூவாங் விமான நிலையம் உள்ளது. இது இரண்டாவது விமான முணையம் ஆகும். இதிலிருந்து தாய்லாந்தின் உள்ள பிற பகுதிகளுக்கு விமானங்கள் செல்கின்றன.

மற்றொன்று சுவர்ணபூமி என்ற இடத்தில் உள்ளது. இது சர்வதேச விமான நிலையம் ஆகும்.

இந்நிலையில், டான் மூவாங் விமான நிலையத்தில் தண்ணீர் புகுந்துள்ளது. இதையடுத்து விமான சேவைகள் ஒருவாரத்துக்கு ( நவம்பர் 1-ம் தேதி வரை) ரத்து செய்யப்பட்டுள்ளாதாக குறைந்த கட்டணத்தில் விமான சேவையை அளித்துவரும் நோக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பட்டி சாராசின் தெரிவித்துள்ளார்.

மழை நீர் வடிய ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என அவர் கூறினார். இதனால், சர்வ தேச விமான நிலையமான சுவர்ணபூமியிலிருந்து விமானங்கள் இயக்கப்படும் என்றார் அவர்.

டான் மூவாங் விமான நிலையத்தின் வடபகுதியிலிருந்து மழைநீர் புகுந்துள்ளதாகவும், ஆனால், விமான ஓடு பாதைகள் வெள்ளத்தால் சூழப்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஜுலை மாதத்திலிருந்து தாய்லாந்தில் தொடர்ந்து வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், இதுவரை 366பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வடபகுதிகளில் வெள்ளம் வடிந்து வருவதாக அதிகாரிகள் கூறினர். தலைநகர் பாங்காக்கில் உள்ள 50 மாவட்டங்களில் 7-ல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

நன்றி தினமணி


கடாபியின் இரகசிய இரசாயன ஆயுத களஞ்சியசாலை கண்டுபிடிப்பு

கவின்

 27/10/2011

லிபியாவில் கடாபியினது இரகசிய இரசாயன ஆயுதக் களஞ்சியசாலையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

சிர்ட் நகரின் தெற்கே நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த 80 ஆயுதக் களஞ்சியசாலையொன்றிலேயே அபாயகரமான இரசாயன ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன.

இந்த ஆயுதங்கள் இடைக்கால அரசாங்கப் படையினர் சிர்ட் நகரைக் கைப்பற்றும் வரை கடாபியின் படையினரின் காவலின் கீழ் இருந்தாக இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேட்டோவின் உளவு விமானங்கள் சிர்ட் நகரிலிருந்து தெற்கே 130 மைல் தொலைவில் ருகவா எனும் இடத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் சந்தேகத்துக்கிடமாக இரசாயன ஆயுதங்கள் நிலக் கீழ் அறைகளில் களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதை கண்டறிந்தமை குறிப்பிடத்தக்கது

 நன்றி வீரகேசரி




No comments: