இந்திய மாணவர்கள் உட்பட 15 ஆயிரம் பேர் விசா ரத்து

.
மெல்போர்ன் : இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு மாணவர்கள் 15 ஆயிரத்து 66 பேரின் விசாக்களை, பல்வேறு காரணங்களுக்காக ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. கடந்தாண்டில் ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை, மொத்தம் 15 ஆயிரத்து 66 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்துள்ளது. இவர்களில், 3,624 மாணவர்கள் தேர்வுகளில் தோல்வியுறுதல் அல்லது வகுப்புகளுக்குச் செல்லாதது போன்ற காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் உள்ளனர். மேலும் 2,235 பேர், தாங்கள் உண்மையில் சேர்ந்த வகுப்புகளுக்குச் செல்லாமல், சட்ட விரோதமாக வேலை பார்த்து வந்தனர். பெண்கள் சிலர், மாணவர் விசாக்களைப் பயன்படுத்தி பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர். அதனால், இவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விசா ரத்து செய்யப்பட்ட மாணவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அதற்கடுத்த நிலையில் சீன மாணவர்கள் இருப்பதாகவும் ஆஸி., அதிகாரிகள் தெரிவித்தனர். ஆஸி.,யில் கடந்த ஜூன் மாதம் எடுக்கப்பட்ட கணக்குப்படி, மொத்தம் 3 லட்சத்து 32 ஆயிரத்து 709 வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர். இவர்களில் பாதிக்கு மேல் பல்கலைக் கழகங்களில் படித்து வருகின்றனர்; பலர் தொழிற் பயிற்சி பட்டயப் படிப்பு படித்து வருகின்றனர். அங்குள்ள வெளிநாட்டு மாணவர்களில் ஐந்து பேரில் ஒருவர் சீனர் என்றும், ஆறு பேரில் ஒருவர் இந்தியர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். நியூசவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் தான் அதிகளவில் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர்.

நன்றி தேனீ

No comments: