தமிழ் சினிமா

.
வாகை சூட வா


 1966-ல் அரசு வேலை என்பது எட்டாக்கனியாக இருந்த காலகட்டதில் குழந்தை தொழிலாளர்களை மையமாக வைத்து ஒரு கிராமத்தில் நடக்கும் கதை.ஆயிரம் விளக்கு

அப்பா-மகன் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கதை.
வாகை சூட வா

1966-ல் அரசு வேலை என்பது எட்டாக்கனியாக இருந்த காலகட்டதில் குழந்தை தொழிலாளர்களை மையமாக வைத்து ஒரு கிராமத்தில் நடக்கும் கதை.

ஒரு அரசாங்க வேலை வேண்டும். அதற்கு முன் கிராம சேவை தன்னார்வ அமைப்பு மூலம் ஒரு கிராமத்தில் தற்காலிக வாத்தியார் வேலை செய்தால் வேலைக்கான சம்பளமும், ஒரு சான்றிதழும் கிடைக்கும்.

இந்த சான்றிதழை வைத்து அரசாங்க வேலைக்கு எளிதில் சென்றுவிடலாம் என்று பத்திரம் எழுதி தன்னைப் படிக்க வைக்கும் அப்பா (பாக்யராஜ்) வின் கனவை நிறைவேற்ற கண்டெடுத்தான் காடு என்ற கிராமத்திற்கு வருகிறார் வேலுத்தம்பி (விமல்). மண்ணோடு மண்ணாகக் கிடக்கும் செங்கல் சூழைகளில் வேலை செய்பவர்களின் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தர முயற்சிசெய்கிறார் வேலுத்தம்பி. அந்த கிராமத்து மக்கள் படித்தவன் வேலையைக் கெடுக்கப் பாரக்கிறான் என்ற நினைப்பில் வாத்தியாரை சேர்த்துக் கொள்ளாமல் இருக்கும் அந்த மக்கள் படிப்பறிவில்லாத தங்களை, ஆண்டை என்பவன் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறான் என்பதை உணர்ந்த நேரத்தில் வாத்தியாரின் கைகளில் தங்களுடைய பிள்ளைகளை ஒப்புவிக்கிறார்கள். கிராமத்தில் குறும்புத்தனம் செய்த மழலைகள் மெல்ல மெல்ல சொக்பீஸ் வைத்து சிலேட்டில் கிறுக்க ஆரம்பிக்கிறார்கள்.

தனது கொத்தடிமைகள் புதிதாக கல்வி கற்க ஆரம்பித்துள்ள கல்வி தனக்கெதிரான புரட்சிக் கேள்வியாக மாறும் நாள் நெருங்கி வருவதை உணர்ந்த ஆண்டைக்கு கோபம் தாங்கமுடியவில்லை. அந்த மக்களையே அழிக்க முயல்கிறான். அந்த மக்களைக் காப்பாற்ற வருகிறார் வாத்தியாரின் தந்தை. வந்த அவர் அரசு வேலைக்கான உத்தரவுக் கடிதத்தை வாத்தியாரிடம் தருகிறார். வாத்தியாரும் உற்சாகத்தோடு அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டு வேலையில் சேரப் புறப்பட்டார். பாதி உறக்கத்தில் எழுந்து தவிப்பவர்களைப் போல், அரைகுறை கல்வியோடு கண்முன் நிற்கின்ற மழலைகளின் கண்ணீருடன் விடைபெறுகிறார் வாத்தியார். வாத்தியார் அரசு வேலையில் சேர்ந்து விட்டாரா, அந்த மழலையரின் கல்வி என்ன ஆனது போன்ற ஒரு அழகிய கதையை நிறைவான அத்தியாயம் மாதிரி சொல்லப்பட்டுள்ளன.

அரசாங்க வேலைக்காக ஏங்கும் இளைஞனாக நடித்திருக்கும் விமல் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக நடித்திருக்கிறார். பொன்வண்ணனின் ஆட்கள் இவரை அடிக்கும் போது விமலின் நடிப்பு மிக பாராட்டும் வகையில் அமைந்திருக்கிறது. கிராமத்து சிறுவர்களின் விளையாட்டான விபரீதத்தில் மாட்டிக்கொண்டு முழிப்பதிலும் சரி, நாயகி இனியாவின் காதலை கண்டுகொள்ளதாத காட்சிகளிலும் சரி விமல் தான் கூத்துப்பட்டறை மாணவன் என்பதை நிரூபித்திருக்கிறார். கேரளத்து வரவான இனியா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். டீக்கடை வைத்திருக்கும் மதி கதாபாத்திரத்தில் வரும் இவர் விமலிற்கு சரியாக சாப்பாட்டை கொடுக்காமல் பணத்தை கறந்து கொள்வதும், பின்பு விமல் மேல் காதல் கொண்டு, அவருக்கு விதவிதமாய் சமைத்துக் கொடுப்பதும் அசத்தியிருக்கிறார். இவருடைய ஆடை 1966-களில் இருந்த காலத்தை பிரதிபலிக்கிறார் இனியா.

விமலின் அப்பாவாக பாக்யராஜ், அண்ணாமலை என்ற கேரக்டரில் வரும் இவர் தனக்குத்தான் அரசாங்க வேலை கிடைக்கவில்லை தன்னுடைய மகனுக்காவது எப்படியாவது வாங்கித் தந்து விட வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இதற்காக தன் மகனை சேவா சங்கம் என்னும் அமைப்பின் மூலமாக கிராமத்தில் ஆறுமாதம் தங்கி படிப்பு சொல்லி தந்தால் அரசாங்க வேலை கிடைக்கும் என்ற ஆலோசனையை மகனுக்கு சொல்லும் போது, அறிவுரை கூறும் போதும் யதார்த்த வாழ்வில் வரும் தந்தையாக நம் மனதில் நின்றுவிட்டுப் போகிறார்.

ஊர் பெரிய புள்ளியாக வரும் பொன்வண்ணனுக்கு கனமான பாத்திரம்தான் என்றாலும் சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்.

இத்தனை நாளும் நாம் ஆண்டையிடம் இப்படி ஏமாந்து போனோமே என்ற தவிப்புடன், சூழையில் கிடக்கும் தன் பிள்ளையை தரதரவென இழுத்துப் போய் விமலிடம் ஒப்படைத்து வாத்தியாலே இந்த பிள்ளையை உங்க கையிலே ஒப்படைக்கிறேன் எதையாவது கத்துக் கொடுங்க, என அந்த தாய் கதறும்போது கண்களில் நம்மையும் மீறி கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. இப்படத்தின் கலை இயக்குநர் சீனு 1966-ஆம் ஆண்டில் தமிழகத்தில் இருக்கும் ஒரு கிராமத்தை அப்படியே நம் மனக்கண்ணில் கொண்டு வருவதற்கு அரும்பாடு பட்டிருக்கிறார். 2 கோடி ரூபாய் செலவில் அருப்புக்கோட்டை அருகே கண்டெடுத்தான் காடு என்ற கிராமத்தை உருவாக்கி, அதில் 60 குடும்பங்கள் வாழ்வதற்கு வீடு என அனைத்திற்கும் கஷ்டப்பட்டிருக்கிறார்.

இருந்தும் திரைக்கதை 1966-ல் நடப்பதற்கானக் காரணம் என்ன? 2011-ல் எல்லா குழந்தைகளுக்கும் கல்வி கிடைத்துவிட்டதா? கொத்தடிமை முறை இன்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதா? அப்படியானால் 20 போடி குழந்தைத் தொழிலாளர்களுக்கு இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்வது எதற்கு? இப்படி நிறைய கேள்விகளும் எழத்தான் செய்கின்றது. இருந்தாலும், சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சற்குணம். செங்கள் சூளையிடும் கிராமத்திற்கு முதல் முதலில் வந்த ஒருவர் அங்கிருக்கும் மரங்களை வெட்டிவிட, பிறகு அதனால் மனம் பேதலித்து அந்த ஊரில் சுற்றிவரும் கதாபாத்திரத்தின் மூலம் மரங்களை வெட்ட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதே போன்று செங்கல் சூளையில் பணிபுரியும் பணியாளர்களின் வாழ்க்கையும், அந்த மண்ணும் எப்படி ஒன்றாக கலந்திருக்கிறது போன்ற விஷயங்களை ரொம்பவே துள்ளியமாக படமாக்கியிருக்கிறார்.

பொட்டல்வெளி, மழை ஆங்காங்கே தேங்கி நிற்கும் மண் நிறத்தில் இருக்கும் தண்ணீர் போன்றவை அற்புதமாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. பல ஷாட்களில் ஓம் பிரகாஷ் அழகாக வடிவமைத்திருக்கின்றார். குறிப்பாக அந்தக் கிராமமே தெய்வமாக வழிபடும் ஒரு பெரியவர் இறந்து விட அந்தக் கிராம மக்கள் அவரது உடலை நோக்கி ஒப்பாரி வைத்துக் கொண்டே ஓடும் ஒரு காட்சி. அப்படியே டாப் ஆங்கிள்ல போய் பிரம்மாண்டமாகக் காண்பித்திருப்பார். தமிழ் ரசிகனுக்கு நிச்சயம் இது புது அனுபவமாக இருக்கும்.

அறிமுக இசையமைப்பாளர் ஜிப்ரான் பாடல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொறு பாணியில் கொடுத்திருக்கிறார். டைட்டில் கார்டில் ஒலிக்கு செங்க சூளக் காரா என்ற பாடல் முதல் ‘போறானே போறானே’ ‘சரசர சாரக்காத்து’ போன்ற பாடல்கள் அனைத்துமே அபாரம் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு பீரியட் படத்தை கொடுத்த சற்குணத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அக்காலத்தில் படிப்பறிவில்லா மக்கள் எப்படி இருந்தார்கள், தமது குழந்தைகளை அவர்களையறியாமல் தொழிலாளர்களாக்குவது என சமூக பிரச்னை கலந்து ஒரு காதல் கதையை புனைந்து தந்திருக்கிறார்.

நன்றி விடுப்பு

ஆயிரம் விளக்கு
அப்பா-மகன் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கதை.

பெயரைக் கேட்டால் மதுரையே நடுங்கும் தாதா லிங்கம் (சத்யராஜ்). அவர், திடீரென்று பாசத்துக்கு ஏங்க ஆரம்பிக்கிறார். தனக்கொரு மகன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று இண்டர்வியூ வைத்தெல்லாம் மகனை தேடுகிறார். ஆனால், இவர் பெயரைக் கேட்டாலே விழுந்தடித்து ஓடுகிறார்கள்.

இந்நிலையில் தான் தேடும் தகுதிகள் கொண்ட சாந்தனுவை கண்டுபிடிக்கிறார். அவரோ, லிங்கத்தின் வலதுகரம் என்ற பொய் பந்தாவுடன் வலம் வருபவர். வேறொரு பெயரில் சாந்தனுக்கு அறிமுகமாகி அவரது அன்புக்கு பாத்திரமாகிறார் சத்யராஜ். இவருக்கு அவர் உதவி செய்ய, அவருக்கு இவர் உதவி செய்ய என்று பாசப்பயிர் வளர்கிறது. சத்யராஜின் எதிரியான சுமன், சத்யராஜை போட்டுத்தள்ள நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்போது சாந்தனுவும் அவருடன் சேர்ந்து விட்டதால் அவரையும் போட்டுத்தள்ள திட்டம்போடுகிறார். மீண்டும் சத்யராஜ் ஆயுதத்தை எடுத்தால் என்கவுன்டர் செய்ய பொலிஸ் காத்திருக்கிறது. ஆனால் சாந்தனுவுக்காக அவர் ஆயுதம் எடுக்க வேண்டிய நிலையும் வருகிறது அடுத்து என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, விக்கு வைக்காத தலை என்று ரவுடி லிங்கமாகவும், அப்பாவி கண்ணாயிரமாகவும் தனக்கு கொடுத்த வேலையை சத்யராஜ் சரியாக செய்திருக்கிறார். ஆங்காங்கே சில காட்சிகளில் தனது முந்தைய படங்களையும் ஞாபகப்படுத்துகிறார். சாந்தனு கோபால் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஃபைட், காமெடி, காதல், செண்டிமென்ட் என அனைத்திலும் அசத்தியிருக்கும் சாந்தனுவுக்கு ஆக்ஷன் சப்ஜெக்ட்டும் பொருந்தும் என்பது புரிகிறது. அவ்வப்போது பாக்யராஜ் போல நடித்து காட்டுகிறார்.

என்னதான் பாக்யராஜ் அவருடைய அப்பாவாக இருந்தாலும், அவர் நடிக்கிற படங்களில் எல்லாம் இப்படி செய்வது போரடிக்கிறது. சனாகான் உதட்டை குவித்து காதல் வசனம் பேசுவது, சாந்தனு நல்லவர் என்பதை உணர்ந்து ஓடிவந்து கட்டிப்பிடித்து காடு மலையெங்கும் டூயட் பாடுவது என ஹீரோயின் கடமையைச் செய்கிறார். ஆனால் வடக்கத்திய முகத்துடன் இருக்கும் அவருக்கு மதுரை வழக்கு டப்பிங் கொடுத்திருப்பதுதான் கொடுமை.

சுமன், சதா சத்யராஜை கொல்ல திட்டமிடுகிறார் கத்தி கத்தி வசனம் பேசுகிறார். இறுதியில் பொசுக்கென்று செத்துப்போகிறார். லிங்கம் நல்லவன்பா, நான் கமிஷனரா இருக்கிற வரைக்கும் அவன் வன்முறையில இறங்க மாட்டான். அப்படி இறங்கினா, என்கவுன்டர்ல போடுறேன் என்று பொலிஸ் பணிக்கு புதிய பரிமாணம் கொடுத்து கொமெடி பண்ணுகிறார் 'பிதாமகன்' மகாதேவன். 'நாயகன்' படத்தில் கமலுக்கு உதவியாய் இருப்பது போல, இப்படத்தில் சத்யராஜிற்கு உதவியாளராய் வந்து போகிறார் டெல்லி கணேஷ். கஞ்சா கருப்பு, தீப்பெட்டி கணேசன் ஆகியோரின் கொமெடி காட்சிகள் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றன. சில இடங்களில் எரிச்சலூட்டுகின்றன.

லிங்கத்தை முன்னபின்ன பார்க்காத சாந்தனு, அவருடைய வலது கை நான் தான் என்று ரீல் விடும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், படம் முழுக்க சாந்தனுவுடன் சுற்றும் லிங்கத்தை யாருக்கும் தெரியாமல் இருப்பது சலிப்பு தட்டுகிறது. கவிப்பேரரசு வைரமுத்து இப்படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 'மதுர மதுர' பாடல் தாளம் போட வைக்கிறது. 'என்ன தவம்' பாடலில் கே.ஜே.யேசுதாஸின் குரல் நம் மனதை பதம்பார்க்கிறது.

மற்ற பாடல்களும் கேட்கும் ரகம். கண்ணனின் ஒளிப்பதிவு கதையோடு நகர்ந்திருக்கிறது. தாதாவுக்கு ஏற்படும் மகன் பாசம் என்ற ஒன்லைன் ஒ.கே. ஆனால் திரைக்கதையாக்கி இருக்கும் விதத்திலும், படமாக்கியிருக்கும் விதத்திலும் வெளிச்சம் இல்லை. ஊரே நடுங்கும் தாதாவை ஊருக்குள் யாருக்கும் தெரியவில்லை, தான் தந்தையாக பாவிக்கும் ஒருவர், விருந்தினர் போல தினமும் வந்து போவதைப் பற்றி சாந்தனு கவலைப்படவில்லை. சத்யராஜ் மீது பாசம் பொழிபவர் உயிருக்கு போராடும் அவரது கற்பனை மகனை பார்க்க வேண்டும் என்று கூட நினைக்கவில்லை.


நன்றி விடுப்பு

No comments: