மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 12


.
                                                                                  பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
அத்தியாயம் 12

ஊரைக் குறிக்கும் பாடல்கள்

சில பாடல்கள் எந்தெந்த ஊர்களில் வழக்கிலிருந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கத்தக்க வகையில் உள்ளன. ஊர்களைக் குறிப்பிட்டு அல்லது சம்பந்தப்படுத்தி வெளிப்படையாக வேறுசில பாடல்கள் காணப்படுகின்றன. அவ்வாறான பாடல்கள் சில தனியாக இப்பகுதியில் தரப்படுகின்றன.


கிரானிலிருந்து என்ர கிளி எழுதும் காகிதத்த
வாசித்துப் பார்க்க மனம் தாங்கக் கூடுதில்லை

கன்னிக் கிரான்குரவி கடுமழைக்கு ஆற்றாமல்
மி;ன்னிமின்னிப் பூச்சாலே விளக்கெடுக்கும் கார்காலம்

ஏறா வூரானென்று ஏளனமாய்ப் பேசாதடா
மோறா போட்டகத்தி-உன்ர, மூர்க்கத்திற்கு மருந்துகட்டும்



மட்டக்களப்பாரே மண்முனையாரே
சுட்டதுறையாரே தோணியுடமாட்டீரோ

ஒருகொத்து ஈச்சங்கொட்டை வறுத்துக் கொட்டி
ஒன்பது பேராகக் கூடிக்குத்தி
கருகப்பிலையால் தாலி கட்டி
கல்லடி நாச்சிக்குக் கல்யாணமாம்

காத்தான் குடிப்புக்குக் கரத்தைகொண்டு போறமச்சான்
சீத்தை இரண்டுமுழம் - அந்தச், சீமையிலே பஞ்சமோகா

காலிவிளை பாக்கிற்கும் களுதாவளை வெற்றிலைக்கும்
ஏலங் கராம்பிற்கும் ஏற்றதுதான் உன்னெழில்வாய்

கல்லாத்து நாவலிலே கண்ணிகட்டிப் பூத்ததுபோல்
கன்னத்து மீசைரண்டும் கண்ணுக்குள் நிற்குதுகா

ஊரான்வள்ளத்தில் உப்பேத்திப்போறமச்சான்
கல்லாத்து விரிசலில - உன்னை, கவிழ்த்து வெள்ளம் கொட்டிடாதோ

கல்லாத்து விரிசலில கறுப்பனென்று ஓர்முதலை
மல்லாத்திப் போட்டு- மச்சான்ர, மணிக்குடலை வாங்குதுகா

காத்தான் குடியிலிருந்து - ஒரு, கன்னிநாகு வந்திருக்கு
காசைத்தா வாப்பா- நம்மட, கைமுதலாய் வாங்கிடுவோம்

மண்டூர்க் கந்தா- என்ர, மனக்கவலை தீர்ப்பையெண்டால்
சாகுமளவு முன்னை சாமிஎன்று கையெடுப்பேன்


அக்கரைப் பற்றோ அவருங் கரவாகூரோ
சாய்ந்த மருதூரில் சாதிசனம் உண்டாமோ

தங்கு பொழுதார்க்கும் தம்பிலுவில் ஊரார்க்கும்
பொங்கு கடலார்க்கும் பொறுதிசொல்லக் கூடுதி;ல்லை

அக்கரைப் பற்றிலையோ அங்குகர வாகிலையோ
சம்மாந் துறை யிலையோ- என்ர, தங்கவண்டார் தங்கிறது

வில்லுக் கரத்தையிலே வெள்ளைமாடு ரண்டுகட்டித்
தட்டிவிடுகா மச்சான்- நாங்கள், சம்மாந்துறை போய்வருவோம்

மச்சானே இன்பம் மணக்கின்ற சீறாவே
உச்சால சாய- வாப்பா, உறுகாமம் போகின்றார்

சினட்டி நெல்லரிசும் சிவந்த இறால் ஆணமதும்
பொத்துவில் ஊரும் பொருந்தினதோ உந்தனுக்கு

போறாரு வன்னியனார் பொத்துவில்லைப் பாப்பமெண்டு- என்ன
மருந்துகளைப் போட்டு மயக்குறாளோ தேவடியாள்

மருதவட்டான் குளத்தருகே மாடுமேய்க்கும் தம்பிமாரே
மாலைப்பசு நாகு மறியலுக்கு வந்ததாமோ

மானாகம் வட்டைக்கு மாடுதேடிப் போறமச்சான்
காரமுள்ளுத் தைத்திடாமல் கலந்தரப்பா உன்காவல்

ஓமணாப் பொண்டுகளே உசந்தகொண்டைக் காறிகளே
மன்னாரான் வாறானென்று வழிமறிச்சி  நில்லாதீங்க

கண்டி கொழும்போ  கண்காணா ராச்சியமோ
கீழக் கரையோ- உங்கட, கிளியிருந்து போகிறது

கண்டி கொழும்பு மில்லை கண்காணா இடமுமில்லை
கீழைக் கரையு மில்லை - உங்க, கிளிஇருந்து போகிறது

கோட்டையில மூத்த என்ர கொழும்பு மகராசாவோ
வெள்ளிப் பிரம்பே- ராசா, விடியுமோகா இன்றிரவு

வங்காளம் போறனென்று மனக்கவலை வையாதே
சிங்காரக் கொண்டைக்கு -ரெண்டு, சின்னச்சீப்பு வாங்கிவாறன்

ஊரான ஊர் இழந்து உசந்த கறி சோறிழந்து
இறைச்செலும்பு மில்லாமல்- மீரான், ஏன்கிடக்கான் தீவினிலே

மேற்போந்த பாடல்களில் குறிப்பிடப்படும் ஊர்கள் பின்வருமாறு:

கிரான்
ஏறாவூர்
மட்டக்களப்பு
கல்லடி
காத்தான்குடி
காலி
களுதாவளை
கல்லாறு
மண்டூர்
அக்கரைப்பற்று
கரவாகு
சாய்ந்தமருது
தம்பிலுவில்
சம்மாந்துறை
உறுகாமம்
பொத்துவில்
மருதவட்டான் குளம் (இடப்பெயர்)
மானாகன்வட்டை (இடப்பெயர்)
மன்னார்
கண்டி
கொழும்பு
கீழக்கரை (இடப்பெயர்)
கோட்டை
வங்காளம் (வங்காள தேசம்)
தீவு ( புளியங்தீவு, காரைதீவு, போரதீவு, முனைத்தீவு)

முடிவுரை

மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் என்ற இந்தக் கட்டுரைத் தொடர் இப்போதைக்கு முற்றுப்பெற்றாலும் மனதைக்கவரும் நாட்டுப்பாடல்கள் எல்லாமே இக்கட்டுரைத் தொடரில் இடம்பெற்றுவிடவில்லை என்பதை அறியத்தர விரும்புகின்றேன்.

காலத்தால் அழிந்தவை, நீளத்தால் மெலிந்தவை, நாட்டின் இன்iறைய கோலத்தால் மறந்தவை, எல்லாம் போக, ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் இன்னும் அந்த நாட்டிலே நடமாடிக்கொண்டிருக்கின்றன. எனக்கு எட்டாமல் எத்தனையோ பாடல்கள் எத்தனையோ ஊர்களில், சந்துகளில், பொந்துகளில் இன்னமும் சிந்துபாடிக்கொண்டிருக்கும். எனக்கு எட்டியவற்றிலும் சில நூறு பாடல்களை இத்தொடரில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை.
கோடாலி கொண்டு
கொள்ளிக்குப் போறபெண்ணே
ஓடாவி வேலை
உனக்கும் தெரியுமாகா

என்பனபோன்ற நையாண்டிப் பாடல்களும், ஊர்களைக் குறிக்கும் பாடல்களும் எத்தனையோ உள்ளன.

நாட்டுப் பாடல்கள் காலத்தால் அழியாத காவியங்கள் என்று சொல்ல முடியாது. காலத்தில் கரைந்து போய்க்கொண்டிருக்கும் ஓவியங்கள். ஆனால் காப்பாற்றப்பட வேண்டிய பொக்கிசங்கள். காலம் வாழ்வுகொடுத்தால் அவை என்றென்றும் எளிமைத் தமிழின் இனிமையை சொல்லிக்கொண்டிருக்கும். செந்தமிழ் இலக்கியப் பந்தலில் சுகந்த மணம் வீசித் தொங்கிக் கொண்டிருக்கும்

நிறைவுற்றது.

1 comment:

Ramesh said...

பாடும் மீன் சிறிஸ்கந்தராஜாவை பாராட்டுகிறேன். இப்படியான நாட்டார் பாடல்களை பொறுக்கிச் சேர்த்து தந்தது ஒரு பெரிய விடயம். முடிந்தது என்ற கடைசிவரிகளைக் கண்டதும் கவலையும் தொற்றிக் கொண்டது. வாசிப்பது இலகுவானது அதை எழுதி முடிப்பது என்பது பெரிய காரியம்.நல்லவற்றை ஒன்றுதிரட்டி ஓரிடத்தில் வைக்கும் முரசுவின் பணி தொடரவேண்டும்.