பிரபஞ்சத்தின் அதிவேக விரிவு கண்டறிந்த மூவருக்கு நோபல் பரிசு


.
ஸ்டாக்ஹோம்: பிரபஞ்சம் மிக வேகமாக விரிவடைந்து கொண்டே வருவதைக் கண்டுபிடித்ததற்காக, இந்தாண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான இந்தாண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமெரிக்கரான சால் பெர்ல்முட்டர், 52, அமெரிக்க ஆஸ்திரேலியரான பிரெய்ன் ஷ்மிட், 44, மற்றும் அமெரிக்கரான ஆடம் ரீஸ், 42, ஆகிய மூவரும் இந்தாண்டுக்கான நோபல் பரிசைப் பெறுகின்றனர். கடந்த 1990ல், பிரபஞ்சம் குறித்த ஆய்வில், ஒரு குழுவில், பெர்ல்முட்டர் மற்றும் ஷ்மிட்டும் மற்றொரு குழுவில் ரீசும் பணியாற்றினர். இந்த ஆய்வில் "சூப்பர் நோவா' க்களில் இருந்து வெளிவந்த ஒளி, எதிர்பார்த்த கால அளவை விட, மிக தாமதமாகவே பூமியை வந்தடைந்தது கண்டறியப்பட்டது. இதன் மூலம் இந்தப் பிரபஞ்சம் மிக வேகமாக விரிவடைந்து வருவதை மூவரும் கண்டுபிடித்தனர். பரிசு அறிவிப்பு குறித்துப் பேசிய ஷ்மிட், "நான் ஆஸ்திரேலியாவின் கேன்பெரா நகரில், என் குடும்பத்துடன் காலை உணவு அருந்த உட்காரும் போது, நோபல் பரிசு எனக்குக் கிடைத்துள்ளதாக சுவீடனில் இருந்து தொலைபேசி வந்தது' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

No comments: