இலங்கைச் செய்திகள்

.
*    நாவாந்துறையில் கைதான 100 பேர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு?

*  மர்ம மனிதனை துரத்தியவர்கள், வீடுகளிலிருந்த பெண்கள் மீது தாக்குதல்; மூவர் கைது உடுவில் ஆலடிப் பகுதியில் சம்பவம்

* திக்குவல்லையில் இரு தரப்பினரிடையே மோதல் நால்வர் காயம்; வீடுகள், வாகனங்கள் சேதம்

* யுத்தத்தின் பின்னரான அழிவுகளை பான் கீ மூன் இணைத் தலைமை நாடுகளுக்கு அறிவித்துள்ளார்: விக்கிலீக்ஸ் தகவல்

* வட பிராந்தியத்தில் காணி உரிமை பதிவு செய்யும் விடயத்தில் அதிருப்தியான ஏற்பாடுகள்

* அச்சத்தின் கிடுக்கிப்பிடிக்குள் அவதியுறும் சிறுபான்மை மக்கள்

* அரசியல் உறுதிப்பாடற்ற ஆட்சியாளர்கள் நாட்டிற்கு ஏற்படுத்திய பாதகங்கள்

*  இலங்கைக்கு எதிராக தீர்மானம் வந்தால் தமிழர்களுக்கு ஆபத்து: சம்பிக்க

 *  நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்?

* மர்ம மனிதர் செயல்களை தடுத்து நிறுத்த ஜனாதிபதியிடம் கோரும் தீர்மானம் யாழ்.மாநகர சபையில் நிறைவேறியது

*  சர்வதேசத்துடனான முரண்பாட்டிற்கு அரசாங்கம் அப்பாவி தமிழ் மக்களை பலிகடா ஆக்கக்கூடாது - சம்பிக்க ரணவக்க உளறுகிறார் - மனோ கணேசன் குற்றச்சாட்டு

நாவாந்துறையில் கைதான 100 பேர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு?

5/9/2011
நாவாந்துறையில் மர்ம மனிதர்களின் ஊடுருவலின் பின்னர் இடம்பெற்ற கலவரத்தையடுத்து கைதான 100 பேர் மீது, இராணுவ முகாமைத் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வடக்கிலோ தெற்கிலோ கிறீஸ் பூதம் என்று ஒன்றுமில்லை. இதுவரை எவரும் அவ்வாறு கைது செய்யப்படவில்லை. நாவாந்துறையில் கைது செய்யப்பட்ட 120 பேர் இராணுவத்தால் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர் கூறுகையில்,

இராணுவமோ பொலிஸாரோ அவர்களைத் தாக்கவில்லை. கைது செய்யப்ப டுவதற்கு முன்னமோ பின்னரோ கூட அவர்கள் தாக்கப்படவில்லை. அவர்கள்தான் இராணுவ முகாமைத் தாக்கினார்கள். பொலிஸாரையும் இராணுவத்தினரையும் தாக்கினார்கள். அவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

படையினரின் முகாம்களைத் தாக்குவது பயங்கரவாத நடவடிக்கை என்று மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம். முகாம்களைத் தாக்கிய அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்.குடாநாட்டில் எந்தப் பயமும் இல்லை. நேரில் சென்று நிலைமையை அவதானித்துள்ளேன். எந்த அச்சமும் இல்லை. அப்படியே அச்சநிலை ஏற்பட்ட இடங்களுக்குப் பொலிஸாரும் இராணுவத்தினரும் சென்று அமைதியை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி வீரகேசரி


மர்ம மனிதனை துரத்தியவர்கள், வீடுகளிலிருந்த பெண்கள் மீது தாக்குதல்; மூவர் கைது உடுவில் ஆலடிப் பகுதியில் சம்பவம்
Monday, 05 September 2011

உடுவில் ஆலடிப் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு, மர்ம மனிதனைத் துரத்திச் சென்றவர்களையும் வீடுகளிலிருந்த பெண்களையும் படையினர் தாக்கியதாகவும் மூவரைக் கைது செய்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

உடுவில் ஆலடிப் பகுதியில் அரைக்கும் ஆலையொன்றுக்கு அருகே சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது;

இப்பகுதியிலுள்ள வீடொன்றினுள் இருவர் எட்டிப் பார்ப்பதை அவதானித்தவர்கள், அயலவர்களைத் திரட்டிக்கொண்டு அந்த இருவரையும் பிடிக்க முனைந்த போது, அதிலொருவர் பிரதான வீதிப் பக்கமாகவும் மற்றவர் அருகிலுள்ள இராணுவ காவலரண் பக்கமாகவும் ஓடியுள்ளனர். எனினும் இருவரையும் இவர்களால் பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து அந்த மக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்ட போது, சில வீடுகளுக்குள் மர்ம மனிதர்கள் புக முற்பட்ட வீடுகளிலிருந்தவர்கள் அவலக் குரலெழுப்பவே மர்ம மனிதர்கள் ஓடித்தப்பிவிட்டனர்.

பாதுகாப்பிற்காகப் பலரும் தங்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே திரண்டு நின்ற போது அப்பகுதிக்கு ஜீப்களிலும் துவிச்சக்கர வண்டிகளிலும் வந்த படையினர் அங்கு நின்றவர்களைப் பொல்லுகள் மற்றும் தடிகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

வீடுகளுக்கு வெளியே நின்றவர்களைத் தாக்கி வீடுகளுக்குள் செல்லுமாறு மிரட்டியுள்ளனர். இதன்போது பெண்கள், சிறுவர்களும் தாக்குதலுக்குள்ளானதுடன் கர்ப்பிணிப் பெண்ணொருவரும் தாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது மூவரைக் கைது செய்த படையினர் அவர்களை மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கவே அவர்களை மல்லாகம் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர் செய்த போது மூவரையும் நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றி தினக்குரல்


திக்குவல்லையில் இரு தரப்பினரிடையே மோதல் நால்வர் காயம்; வீடுகள், வாகனங்கள் சேதம்
Sunday, 04 September 2011

மாத்தளை மாவட்டம் திக்குவல்லயோனகபுரம் பகுதியில் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மையினத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் நோன்புப் பெருநாளான புதன்கிழமை மாலை இங்குள்ள மின்ஹாத் தேசிய பாடசாலை மைதானத்தில் முஸ்லிம் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடியபோது அதில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் புகுந்து குழப்பம் விளைவித்ததையடுத்து இரு தரப்பினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றது. இதில் இருதரப்பிலும் நால்வர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தையடுத்து அப்பகுதிக்கு வந்த திக்குவல்ல பொலிஸார் நான்கு பெரும்பான்மை இன இளைஞர்களைக் கைது செய்தனர்.

வெள்ளிக்கிழமை இப்பகுதியைச் சேர்ந்த இரு முஸ்லிம் இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் வெள்ளிக்கிழமை இரவு திடீரென இங்கு வந்த முப்பது நாற்பது பெரும்பான்மை இனத்தவர்கள் கெட்டவார்த்தைகளால் பேசிக்கொண்டு அல்அக்ஸாபுரத்திலுள்ள பன்னிரண்டு முஸ்லிம்களின் வீடுகளுக்கு கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்து சேதமாக்கியதுடன், இங்குள்ள பள்ளிவாசலின் ஒலிபெருக்கியையும் கண்ணாடிகளையும் அடித்து உடைத்தனர்.

அத்துடன் இங்குள்ள முஸ்லிம்களின் ஹோட்டல், வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்ட இரு வாகனங்கள், ஒப்பந்தக்காரர் ஒருவரின் வாகனமும் தாக்கிச் சேதமாக்கப்பட்டதுடன் மையவாடி பள்ளிவாசல் கதவுகளும் சேதமாக்கப்பட்டன.

இச்சம்பவங்களால் அப்பகுதிகளில் பதற்றம் நிலவியதுடன் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட அதிரடிப் படையினரும் அப்பகுதிக்கு வந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டோரைக் கலைத்தனர்.

இதன் பின்னர் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

திக்குவல்ல ஊடாக வாகனப் போக்குவரத்துக்கும் பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இச்சம்பவங்களையடுத்து திக்குவல்ல ஜும்ஆப் பள்ளிவாசலில் நேற்று சனிக்கிழமை உயர் பொலிஸ் இராணுவ அதிகாரிகள் சமரசக் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

இதேபோல திக்குவல்ல சிங்களப் பகுதியிலும் ஒரு உயர் மட்டக்கூட்டம் நடைபெற்றது.

தற்போது இங்கு அமைதி ஏற்பட்டு நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி தினக்குரல்

யுத்தத்தின் பின்னரான அழிவுகளை பான் கீ மூன் இணைத் தலைமை நாடுகளுக்கு அறிவித்துள்ளார்: விக்கிலீக்ஸ் தகவல்


7/9/2011
இலங்கையில் இறுதிகட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு, யுத்தம் நிறைவடைந்த நிலையில் விமானம் மூலம் சென்று அப்பகுதியை பார்வையிட்டதுடன் அங்குள்ள முழுமையான அழிவுகளை இணைத்தலைமை நாடுகளுக்கு பான் கீ மூன் அறிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்போது அங்கு அமைக்கப் பட்டிருந்த மெனிக்பாம் அகதி முகாமின் பரிதாப நிலைப் பற்றி கூறியுள்ளதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

பாதுகாப்பு வலயத்தில் செல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதை செய்மதிப் படங்கள் வெளிப்படுத்தியுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. 24 மணித்தியாலயமாக இலங்கையில் இருந்து பாதிக்கப்பட்ட பலபகுதிகளை பார்வையிட்டதுடன் இது தொடர்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தூதுக் குழுவுக்கு விளக்கத்தை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி இரவு விமான நிலையத்தில் வைத்துக் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விஜயம் தொடர்பில் நோர்வே நாட்டுத் தூதுவரான டோர் ஹெற்றெம்; கேட்டபோதே, யுத்தம் இடம்பெற்ற பகுதியில் அமைதியற்ற துன்பகரமான நிலைமையே காணப்பட்டதாக பான்கீமூன் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

போரின் காரணமாக 2 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் அடைப்பட்ட நிலையில் ஊட்டச் சத்து இன்றி இருக்கின்றதாகவும் கூறியுள்ளார். ஏனைய முகாம்களைப் பார்க்கும்போது இம்முகாம் மிகவும் மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்

நன்றி வீரகேசரி


வட பிராந்தியத்தில் காணி உரிமை பதிவு செய்யும் விடயத்தில் அதிருப்தியான ஏற்பாடுகள்
Wednesday, 07 September 2011

வட பிராந்தியத்தில் காணி உரிமையைப் பதிவு செய்வதில் அதிருப்தியான முறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கவலை தெரிவித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.


இது தொடர்பாக சட்டத்தரணி கந்தையா நீல கண்டன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சிப்லி அசீஸுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;

வட பிராந்தியத்திலுள்ள மக்கள் புதிய உறுதிகளுக்கு (காணி) விண்ணப்பிப்பதற்கு கோரிக்கை விடுக்கும் அறிவித்தலொன்றை காணி அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ளது. இந்த அறிவித்தல் தொடர்பாக தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்த விடயம் தொடர்பாக 2011 செப்டெம்பர் 6 இல் (நேற்று) த ஐலன்ட் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தியொன்றையும் இணைத்துள்ளேன். உரிமையாளருக்கு புதிய உறுதியை விநியோகிப்பதற்கு முன்பாகக் குறிப்பிடப்பட்ட காணி அளவீடு செய்யப்படும் எனவும் ஒவ்வொரு விண்ணப்பத்தினதும்

உரிமை தொடர்பாக காணி அபிவிருத்தி அமைச்சு உறுதிப்படுத்திக்கொள்ளுமெனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த இணையத்தளமொன்றிலிருந்து தரவு இறக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் அடிப்படைத் தகவல் கொண்ட படிவத்தின் பிரதியையும் இங்கு நான் இணைத்திருக்கின்றேன்.

இலங்கையில் காணி உரிமை பதிவுக்குப் பொருத்தமான சட்டம் குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆவணங்கள் ஒழுங்கு விதி பதிவுக்கு அமையவே காணி உரிமை பதிவுக்கான சட்டம் பொருந்தக் கூடியதாக இருக்கின்றது. உரிமைப்பத்திர சட்டத்தின் பதிவுச் செயற்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் ஆவணங்கள் ஒழுங்கு விதிகள் பதிவு செய்தலே பிரயோகிக்கப்படக்கூடியதாக உள்ளது. உரிமைப்பத்திரம் சட்டத்தின் பதிவிலுள்ள பல்வேறு குறைபாடுகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியிருப்பது பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்த சட்ட மூலத்தைத் திருத்துமாறு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் அதனைத் திருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பொருத்தமான சட்டத்தின் பிரகாரம் மட்டுமே எந்த காணி உரிமையையும் பதிவு செய்ய முடியும். உறுதிகளை வழங்குவதற்கு காணி காணி அபிவிருத்தி அமைச்சு முனைவதற்கு இயலாது. சட்ட ரீதியான ஏற்பாடுகளைக் கொண்டிராமல் உரிமைப்பத்திரம் குறித்து தீர்மானிப்பதற்கும் காணி உரிமை குறித்தும் எவ்வாறு அவர்களால் தீர்மானிக்க முடியும்.

இதேவேளை, அடிப்படைத் தகவல் படிமமானது குறைபாடுகளைக் கொண்டதாகத் தயாரிக்கப்பட்டிருப்பதை நான் அவதானித்துள்ளேன். உதாரணமாக படிமத்தின் பத்தி 3.3 கீழ் உள்ள கேள்வியில் “எவ்வாறு காணி உரித்து மாற்றப்பட்டுள்ளது என்பது இடம்பெற்றுள்ளது. இதற்குரிய தேர்வான பதிலாக சட்ட முரணான உரித்தாக்கல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட முரணான உரித்தாக்கல் மூலம் எவ்வாறு உரிமையை மாற்ற முடியும். மற்றொரு விருப்பத்திற்கு உரிய பதிலாக ஒழுங்கீனமான கொள்வனவு என்பது காணப்படுகிறது. இதனை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

யாவற்றுக்கும் மேலாக படிவத்தின் அடியில் உறுதிப்பத்திரத்தின் உறுதிப்படுத்தும் விடயமானது இறுதியில் கிராம அதிகாரியினால் அவதானிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு தீர்மானிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடும் திருப்திகரமற்றதாகும்.

இந்த விடயம் குறித்து காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் கவனத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உடனடியாகக் கொண்டு செல்ல வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன். அத்துடன், இந்த அறிவிக்கப்பட்ட முறைமையை உடனடியாக இரத்து செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சகல குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யக்கூடியதாக உரிமைப்பத்திர சட்ட பதிவில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென அரசாங்கத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்த வேண்டும். அதன் பின்னர் வடபிராந்தியத்திலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் சட்ட ரீதியான முறையில் இந்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கந்தையா நீலகண்டன் வலியுறுத்தியிருக்கிறார்.

நன்றி தினக்குரல்

அச்சத்தின் கிடுக்கிப்பிடிக்குள் அவதியுறும் சிறுபான்மை மக்கள் Wednesday, 07 September ௨௦௧௧

போர்க் காலத்தை விடவும் பெரும் அச்சுறுத்தல் நிறைந்த சூழ்நிலையில் நாட்டு மக்கள் அச்சத்துடன் வாழும் நிலையையே முழு நாட்டிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதுவும் சிறுபான்மை, தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில்


எந்த நேரத்தில் என்ன நடக்கப்போகின்றது என்ற மன நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாட்டில் எந்தப் பகுதியிலும் சீரான சிவில் நிருவாகம் நடப்பதாகத் தெரியவில்லை. எந்தப் பகுதியைப் பார்த்தாலும் அதிகார அச்சுறுத்தலே காணக்கூடியதாக உள்ளது.

கிறீஸ் மர்ம மனிதர் நடமாட்டம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை படிப்படியாக முழுநாட்டிலும் மக்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். மர்ம மனிதர் என்ற போர்வையில் நடக்கும் கூத்துகளும் காடைத் தனங்களும் வெறித்தனங்கள் என்பவற்றின் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பதைப் பாதுகாப்புத் தரப்பால் இன்னமும் கூட கண்டறிய முடியவில்லை. இச் செயற்பாடானது மக்களைப் பெரும் சந்தேகத்துக்குள்ளாக்கியுள்ளது. தவறாக நடக்க முற்பட்டோரை சந்தேகத்துக்கிடமானோரை பிடித்துக்கொடுத்தால் கூட பின்கதவால் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். பதிலாக சட்டத்தை தம் கையில் எடுத்தார்கள் எனக் கூறி அப்பாவி மக்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுகிறார்கள். குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றார்கள்.

மர்ம மனிதர்கள் நடமாடாத இடமே நாட்டில் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் அதிர்ச்சி தரும் சம்பவங்களாகக் காணப்பட்ட போதிலும் இன்று அது சர்வசாதாரண விடயம் போன்றே அவதானிக்கப்படுகின்றது. பாதுகாப்புத்தரப்பினர் இந்த விடயத்தில் அலட்சியப் போக்குடனேயே செயற்பட்டு வருகின்றனர். மர்ம மனிதர் என்று சந்தேகத்தில் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை. ஆனால், அப்பாவிப் பொதுமக்கள் சட்டத்தைக் கையிலெடுத்தார்கள் எனக் கூறி பலர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடயத்தில் மக்கள் அரசு மீதே சந்தேகம் கொண்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்து இந்த விடயத்துக்கு தீர்வு காண முற்படாமல் அரசு கண்டும் காணாத போக்கில் இருப்பது வேடிக்கையான விவகாரமாகவே நோக்க வேண்டியுள்ளது. யுத்த காலத்தை விடவும் மோசமான நிலைமை இன்று வடக்கில் காணப்படுகின்றது. மனிதாபிமானமற்ற காடைத்தனங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இவற்றைத் தடுக்க அரசாங்கமோ, பாதுகாப்புத்தரப்போ உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.

மர்ம மனிதர் விவகாரத்துக்குப் புறம்பாக இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தும் ஒரு சதித்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. மாத்தளை மாவட்டத்தில் திக்குவல்லை என்ற முஸ்லிம் கிராமத்தில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மீண்டும் இனக் கலவரத்தைத் தோற்றுவிக்கும் ஒரு முயற்சியின் ஆரம்பமாக இதனை நோக்க வேண்டியுள்ளது. நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரம் வெடிக்குமானால் அதனைத் தாங்கும் சக்தி எந்தவொரு சமூகத்திடமும் காண முடியவில்லை. அரசியல் அதிகாரத்துக்காக அப்பாவி மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது.

நாட்டில் சீர்குலைந்து போயுள்ள சிவில் நிருவாகக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். யாரும் இதனை விளையாட்டாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஒன்றுபட்டு இந்த விடயத்தில் அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். பாதுகாப்புத்தரப்பினர் சட்டத்தையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்த வேண்டும். பாரபட்சமான முறையில் நடக்க முனையக்கூடாது. சட்டமும் நீதியும் இலங்கையர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே விதமாக இருக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கட்டாயக் கடப்பாடாகும் என்பதை கூறி வைக்கின்றோம். நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலைபெற வேண்டும். சகல மக்களும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழக் கூடிய சூழ்நிலை தோற்றுவிக்கப்பட வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

நன்றி தினக்குரல்

அரசியல் உறுதிப்பாடற்ற ஆட்சியாளர்கள் நாட்டிற்கு ஏற்படுத்திய பாதகங்கள்
Thursday, 08 September ௨௦௧௧

புரையோடிப்போயுள்ள தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான அரசியல் தீர்வு காண்பதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதைத்தான் பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பொருளியல்


விரிவுரையாளர் கலாநிதி சுமனசிறி லியனகே அண்மையில் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். (த ஐலண்ட்08.08.2011) சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் டில்லி விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடன் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எட்டப்பட்ட இணக்கம் புறந்தள்ளப்பட்டுள்ளது. "தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தரப்பினருடனான பேச்சுவார்த்தை தொடர்பில் அரசாங்கமானது நேர்மையாகவோ இதய சுத்தியாகவோ செயற்படாது கருத்தொருமிப்பு ஒன்றினை எட்டுவதற்கு மனப்பூர்வமாக முனையாது காலம் கடத்தி வருகின்றது' என்று சுமனசிறி மிகச் சரியாகவே கூறியிருந்தார். உண்மையில் அதுவே நடந்து கொண்டிருப்பதைக் காணலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு

எதிரான விமர்சனங்கள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது (த.தே.கூ.) நிபந்தனைகள் மற்றும் காலக் கெடு விதிப்பதாக சில அரசியல் ஆய்வாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். அரசாங்கத்திற்கும் த.தே.கூ.வுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கான இணைப்பாளராகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமானவருமாகிய சஜின் வாஸ்குணவர்தன, த.தே.கூ., தமிழீழ விடுதலைப்புலிகள் கையாண்டு வந்த தந்திரோபாயங்களைப்பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். த.தே.கூட்டமைப்பின் தந்திரோபாயங்கள் தீவிரவாதிகளுக்கான சலுகைகளாகவே கருத வேண்டியுள்ளதென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார். அதற்கெல்லாவற்றுக்கும் அப்பாற் சென்று தனது எல்லை கடந்து கருத்து தெரிவித்துள்ளவராகிய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இரு இனங்களுக்குமான சகவாழ்வுக்கு தற்போதைய அரசியலமைப்பு போதுமானதாகும். இதனைப் பேசித்தீர்த்துக் கொள்ளலாம். இதில் ஒரு பிரச்சினையும் இல்லையென நான் நம்புகின்றேன். இது தொடர்பாக மேலும் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லையென நான் நினைக்கின்றேன். ஏனென்றால், தற்போதைய அரசியலமைப்பானது அடிமட்டத்தினர் வரை அதிகாரத்தினை வழங்கியுள்ளது. நாம் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து விட்டோம். இனிமேல் அரசியல்தீர்வு என்றொன்று தேவையில்லை என்று கூறியுள்ளதைக் காணலாம். எனவேதான், 2006 ஜூலை மாதம் சர்வகட்சி மாநாடு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டபோது, ஜனாதிபதி ராஜபக்ஷ கூறிவைத்த நிலைப்பாடு, அதாவது, "மக்கள் தத்தம் பிரதேசங்களில்' தமது தலைவிதியை தாமே கையிலெடுக்கும் முகமாக தமது அரசியல் பொருளாதார பிரச்சினையைப் பொறுப்பேற்க வேண்டும். சுருங்கக் கூறின், அரசியல் தீர்வென்று வரும்போது,"மக்கள் தமது தலைவிதியை நிர்ணயிப்பதற்கு அதிகாரப்பகிர்வு அவசியமும் அவசரமுமானதாகும்' என்று அவர் கூறிவைத்தது காற்றில் பறக்க விட்டுள்ளமை கண்கூடு எனலாம்.

நிற்க, வரலாற்று ரீதியாக நோக்குவோமாயின், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான அணுகுமுறையைப் பொறுத்தவரை இன்றைய அரசாங்கம் மட்டும் தான் இதய சுத்தியாகச் செயற்படவில்லை என்பதல்ல. பண்டாரநாயக்கசெல்வநாயகம் ஒப்பந்தம் (1957) மற்றும் டட்லி சேனநாயக்கசெல்வநாயகம் ஒப்பந்தம் (1965) இரண்டுமே அவற்றின் மைகாயு முன்னதாகவே ஒரு தலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்டன. இனவாத அரசியலுக்குள் சென்று முதுகெலும்பைப் பறிகொடுத்த நிலையிலேயே பண்டாரநாயக்கா மற்றும்"கனவான்' என்று சோடனை செய்யப்பட்டிருந்த டட்லி இருவரும் தமது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தினர். ஜயவர்தன, பிரேமதாச, சந்திரிகா ஆகியோரின் அணுகுமுறைகள் பிந்திய காலகட்டங்களில் ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரின் ஐ.தே.க. தலைமையிலான ஆட்சியின் போதென்றாலும் சரி பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீ.ல.சு.க., பொதுஜன முன்னணி ஆட்சியின் போதென்றாலும் சரி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் விழலுக்கிறைத்த நீராகிப்போயின. ஜே.ஆர்.ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மாவட்ட சபைத் திட்டமென்றாலும் சரி (1981), மாகாண சபை முறைமையென்றாலும் சரி (1987) பிரச்சினைக்குச் சரியான தீர்வாக அமையவில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை.

பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை ஜே.ஆர்.ஜயவர்தன 1984 இல் நடத்திய வட்டமேசை மாநாடு அல்லது சர்வகட்சி மாநாடென்றாலும் சரி, பிரேமதாச தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 14 மாதங்களாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்களென்றாலும் சரி அசட்டையாக காலம் கடத்தும் நோக்கங்கொண்டவையாகவே இருந்தன. அதுபோலவே அரசியல் வானில் துரித கதியில் பயணித்து 1994 இல் ஜனாதிபதி பதவியை சந்திரிகா அம்மையார் கைப்பற்றிய கையோடு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்தாராயினும் அரசாங்கத் தரப்பில் ஒரு தத்துவமான அரசியல் மயப்பட்ட தூதுக்குழுவொன்றினை ஈடுபடுத்துவதை விடுத்து அதிகாரிகள் மட்டத்திலான குழுவொன்றினை அனுப்பிவைத்தார். அத்தோடு அரசியல் தீர்வுத் திட்டம் எதுவும் நீண்ட நாட்களாக முன்வைக்கப்படாமையால் விடுதலைப் புலிகள் சலிப்படைந்து அரசாங்கத்தை விமர்சிக்கத் தலைப்பட்டனர். அதாவது சந்திரிகா அரசாங்கம் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தனக்குப் புகழ் சேர்ப்பதற்கு கவர்ச்சிகரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதே ஒழிய கனதியாகவோ இதயபூர்வமாகவோ செயற்படுவதற்குத் தவறிவிட்டது எனக் குற்றம்சுமத்தி பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளியேறி, திருகோணமலை துறைமுகத்தில் தமது தாக்குதல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்தனர்.

அரசியல் உறுதிப்பாடற்ற ஆட்சியாளர்கள்

கடந்த 6 தசாப்தங்களாக அரசியல் உறுதிப்பாடின்மை எல்லா அரசாங்கங்களும் கொண்டிருந்த அங்கவீனமாகும். அவையாவும் தமது தென்னிலங்கை சிங்கள பெரும்பான்மை வாக்கு வங்கியைக் குறிவைத்து அடுத்த தேர்தலில் கவனம் செலுத்தினார்களே ஒழிய எதிர்கால சந்ததியினைப் பற்றிச் சிந்திப்பதற்குத் தலைப்பட்டது அரிது. ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்று 6 வருடங்கள் கழிந்த பின் "சண்டே ரைம்ஸ்' (01.01.1995) பத்திரிகைக்கு வழங்கியிருந்த செவ்வி ஞாபகத்திற்கு வருகிறது.

அவர் கூறியதாவது;

"இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி ஆட்சிமுறைமை தான் சிறந்ததாயிருக்குமென நான் எண்ணியிருந்த போதும் எனது ஒரு தசாப்த ஆட்சிக் காலத்தில் அத்தகையதொரு திட்டத்தை முன்வைப்பதற்கு எனக்குத் துணிச்சல் இருக்க வில்லை என்று அவர் அச் செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில், சமஷ்டி ஆட்சி முறைமைதான் இலங்கைக்கு மிக உகந்ததாகுமென 1926 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கவே முதன்முதலாக யோசனை வெளியிட்டவர். பிந்திய காலகட்டங்களில் அவர் அதனை முற்றாக மறந்து விட்டார். அதுமட்டுமல்லாமல் அவர் அன்று ஐ.தே.க. விலிருந்து வெளியேறி ஸ்ரீ.ல.சு.க.வை அமைப்பதற்கு வரைந்த விஞ்ஞாபனத்தில் (1951) சிங்களம், தமிழ் இருமொழிகளும் அரச கரும மொழிகளாக அந்தஸ்தளிக்கப்படும் என்று உள்ளடக்கப்பட்டிருந்ததாயினும் பதவிமோகம், உந்திய சந்தர்ப்பவாதம் காரணமாக தமிழ் மொழியைப் புறந்தள்ளி விட்டு சிங்களம் மட்டும் தான் அரச கரும மொழியாக்கபடுமென்று 1956 தேர்தலில் வாக்குறுதியளித்து ஆட்சியை கைப்பற்றி இரண்டு மாதகாலத்தில் தனிச்சிங்களம்' எனும் சட்டத்தினை இயற்றியும் முடித்து விட்டார். அதேசட்டத்தில்தான் இரண்டு தசாப்த காலத்தின் பின் தோற்றம் பெற்ற தனி நாட்டுக்கோரிக்கைக்கான விதை நாட்டப்பட்டது. அதனைத் தான் அன்று தலைநிமிர்ந்து நின்ற இடதுசாரி தலைவர்கள் இருமொழிகள் என்றால் ஒரு தேசம் ஒரு மொழியென்றால் இரு தேசங்கள் என ஆணித்தரமாக எச்சரித்து தமது வன்மையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கர்தினல் மல்கம் ரஞ்சித்

வெளிப்படுத்தியுள்ள அறிவுரை

இன்றைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது தனது அரசியல் உறுதிப்பாட்டின்மையை மூடிமறைப்பதற்கு சிங்கள பௌத்த மேலாதிக்கம் கொண்ட வைராக்கியத்தினை முன்நிறுத்திவருகிறது. அரசிடமிருந்து தமிழர் எதிர்பார்ப்பது அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வேஒழிய, சலுகைகளோ சன்மானங்களோ அல்ல என்பதை ராஜபக்ஷ அரசாங்கம் நன்கு புரிந்து கொள்வது தான் சாலச்சிறந்ததும் நாட்டுக்கு மிக நல்லதுமாகும். காலங்காலமாக கடைப்பிடித்து வந்த ஆட்சிசெய்து வந்த எல்லா அரசாங்கங்களும் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனைதான் இன்று மிக அதிகளவில் கோலோச்சி வருகிறது. இது நிலையான ஒற்றுமைக்கும் சமாதானத்திற்கும் பாரிய தடைக்கல்லாயுள்ளது. உண்மையில், இன்றைய நிலையில் ஒற்றுமையும் சமாதானமும் ஏட்டளவில் தான் உண்டு எனவும் சிறுபான்மை மக்களிடமிருந்து பெரும்பான்மையினருக்கு அச்சுறுத்தல் உண்டென்று எண்ணுவது அவசியமற்றதெனவும் அண்மையில் மடு தேவாலய திருவிழாவைபவத்தில், தென்னிலங்கை மக்களும் ஆராதனையில் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறிவைத்ததையும் அத்தகைய சீரிய நல்லாட்சி நிலைப்பாடுகளையும் ராஜபக்ஷ அரசாங்கம் உள்வாங்குவது தான் நாட்டுக்குத் தேவைப்படுவதாகும்.

இறுதியாக கலாநிதி சுமணசிறி தனது மேற் குறித்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்த இன்னொரு முக்கியமான விடயத்தைப் பார்ப்போம்; அதாவது "விமோசன அரசியல் அடிப்படையிலானதொரு பாத்து விரிந்தமுன்னணி' உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் முன்வைத்த யோசனை பற்றியதாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் முன்வைத்த சில நிபந்தனைகள் நியாயப்படுத்தற்குரியவை என்று கூறிய அதேவேளை, தமிழ்த் தலைவர்களின் பொதுவானதொரு குறைபாட்டையும் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது அவர்கள் தமிழர் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை தனிமைப்படுத்தியே நடத்திவந்தார்களே ஒழிய தென்னிலங்கையிலும் ஆளும் வர்க்கங்களால் அவ்வப்போது அடக்குமுறைகளுக்கும் அடாவடித்தனங்களுக்கும் ஆளாக்கப்பட்டுவரும் மக்களின் போராட்டங்களை இனங்கண்டு கொள்ளவில்லை என்பதாகும். அத்தகைய போராட்டங்களுக்கு தமிழ்த் தலைமைகள் ஒத்தாசை வழங்குவதோடு நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதுதான் சிங்கள பேரினவாத சக்திகளுக்குப் பதிலடியாக அமையும்.

நன்றி தினக்குரல்

இலங்கைக்கு எதிராக தீர்மானம் வந்தால் தமிழர்களுக்கு ஆபத்து: சம்பிக்க


8/9/2011
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டால் அது உள்நாட்டில் வாழும் தமிழர்களுக்கே ஆபத்தாக அமையும். எனவே புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தப்பட்ட நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மையான ஆதரவு இலங்கைக்கு உள்ளது. ஆனாலும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் போலியான பிரசாரங்களும் குற்றச்சாட்டுகளும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அழுத்தமாக அமைந்துள்ளன. எவ்வாறாயினும் இந்தியாவின் நிலைப்பாடு விசேடமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில், மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக சுமத்தி வருகின்றன. ஆனால் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டால் எண்ணிலடங்காது. இவற்றிற்கெதிராக ஐ.நா. விசாரணைகளை முன்னெடுக்காது உலகத்திலேயே முதன்மையாக காணப்பட்ட புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி கொண்ட எமது இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றது.

குறிப்பாக எதிர்வரும் 12 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சாசன மாநாட்டில் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கான தீர்மானத்தை மேற்கொள்ள குறிப்பிட்ட சில நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறான ஒரு விசாரணைக்கு அனுமதி வழங்கப்படுமாயின் அது சர்வதேச பயங்கரவாதத்திற்கு சாதகமாக அமைந்து விடும்.

எனவே சர்வதேச சமூகம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மேற்குலக நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு எதிராக செயற்படும் போது அதன் விளைவுகள் இலங்கை தமிழர்களையே பாதிக்கும். கடந்த 30 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதை சற்று அவதானிக்க வேண்டும்.

தமிழர்கள் இலங்கையில் பின்னடைவுகளைக் காண்பதற்கு அவர்களின் பிரிவினைவாத கொள்கைகளே காரணம். எனவே முன்னைய கால கட்டத்திற்கு மீண்டும் தமிழ் மக்களை தள்ளிவிட்டு ஆபத்துக்களை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்களும் சர்வதேச சமூகமும் முயற்சிக்கக் கூடாது. ஐ.நா. மனித உரிமை பேரவையில் உள்ள 46 நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு உண்டு. எனவே அச்சம் கொள்ளத் தேவையில்லை.

2009 ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டபோது அவை தோல்வியடையச் செய்யப்பட்டன என்றார்.

நன்றி வீரகேசரி

நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்?


8/9/2011
இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பில் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை எதிர்வரும் 12ஆம் திகதி ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் இடம்பெறும் கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கக்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவலொன்று கிடைத்துள்ளது.

ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தொடர்ச்சியாக ஆராயப்பட்டு வந்த நிலையில் இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட் டுள்ளதாக தெரியவருகின்றது.
நன்றி வீரகேசரி
மர்ம மனிதர் செயல்களை தடுத்து நிறுத்த ஜனாதிபதியிடம் கோரும் தீர்மானம் யாழ்.மாநகர சபையில் நிறைவேறியது
Friday, 09 September 2011

jaffna_munipcalயாழ்.குடாநாட்டில் மர்ம மனிதர்களின் செயற்பாடுகளைக் கண்டித்து தடுத்தும் நிறுத்தக் கோரியும் ஜனாதிபதி உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளுக்கும் மகஜர் அனுப்பி வைப்பதற்கு யாழ்.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இத்தகைய வன் செயல்களைக் கண்டித்து சில மணிநேரம் கூட்டத் தொடரினை நேற்றைய தினம் ஒத்திவைத்ததோடு தொடர்ந்தும் நடைபெற்றால் இனிவரும் மாதாந்த கூட்டத் தொடரினையும் பகிஷ்கரிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் எட்டாவது மாதாந்தக் கூட்டம் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த மர்ம மனிதர்கள் பிரச்சினை குறித்து பல கூட்டங்களினை அரசு நடத்துகின்றது. ஆயினும் இதனை நடத்தும் அரசே இப்பிரச்சினையை ஏற்றுக்கொள்ளாமல் தான் உள்ளது என்றும் உறுப்பினர் பரஞ்சோதி கூறினார்.

இதற்காக உயர்மட்ட மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அதில் முன்னேற்றமும் ஏற்பட்டுள்து. இதில் முழுமையான மாற்றம் வரும் என நம்புகிறேன் என்று கூறிய மேயர், சிறிது நேரம் கூட்டத்தொடரை ஒத்திவைப்பதையும் குறிப்பிட்டார்.

கூட்டம் முழுமையாக ஒத்திவைக்காமையினால் எதிர்க்கட்சி உறுப்பினர் உட்பட சில உறுப்பினர்கள் கூட்டத் தொடரிலிருந்து வெளிநட்புச் செய்தனர்.

மர்ம மனிதர்களினால் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலையோடு எம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

ஆகவே இதனை ஒத்திவைக்க வேண்டும். இல்லாவிடின் நான் வெளியேறுவேன் எனவும் கூறினார்.

ஆயினும் இச் சம்பவங்களைக் கண்டித்து ஒருமித்த குரலில் ஏகமனதாகக் கடந்த கூட்டத் தொடரில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே இன்று ஆக்கபூர்வமான நல்லதோர் முடிவினை எடுக்க வேண்டும் என்றார் உறுப்பினர் மங்களநேசன்.

நன்றி தினக்குரல்

சர்வதேசத்துடனான முரண்பாட்டிற்கு அரசாங்கம் அப்பாவி தமிழ் மக்களை பலிகடா ஆக்கக்கூடாதுசம்பிக்க ரணவக்க உளறுகிறார் - மனோ கணேசன் குற்றச்சாட்டு

mano-ganesan1ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இலங்கையிலே வாழும் தமிழர்களுக்கு ஆபத்தாக அமையும் என்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்து பாரதூரமான இனவாத பிரகடனமாகும். இத்தகைய கருத்தை சம்பிக்க ரணவக்க உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத் தலைவர்கள், எந்த நாடுகளுடன் இணைந்து யுத்தம் நடத்தினார்களோ, அந்த நாடுகளுடனையே பேசி தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகளுடனான இலங்கை அரசாங்கத்தின் ராஜதந்திர முரண்பாடுகளில் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழ் மக்களை இழுக்கக்கூடாது. அரசாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் எச்சரிக்கை விடுக்கக்கூடாது என ஜாதிக ஹெல உருமயவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவிற்கு பதிலளித்துள்ள மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும், இந்தியாவும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டால், அது இலங்கையிலே வாழும் தமிழர்களுக்கு ஆபத்தாக அமையும் என்பதுவே சம்பிக்க ரணவக்கவின் அடிப்படை கருத்தாக அமைகின்றது. முதலில் இத்தகைய ஒரு ஆபத்தை தமிழர்களுக்கு ஏற்படுத்தப்போவது யார் என்பதை சம்பிக்க ரணவக்க பகிரங்கப்படுத்தவேண்டும்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பிலேயே ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் கவனம் திரும்பியுள்ளது. இந்த யுத்தத்தை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும், இந்தியாவும் பாரிய ஒத்தாசைகளை வழங்கியிருந்தன. இந்நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாதிருந்தால் இந்த யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்றிருக்க முடியாது. இது தொடர்பாக ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் பகிரங்கமாக ஏற்கனவே பலமுறை கூறியுள்ளனர். தற்போது இதே நாடுகள் இலங்கை அரசாங்கத்தை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சாட்டுவதாக சம்பிக்க ரணவக்கவும், அவரது கட்சியினரும் கூறுகின்றார்கள். இது இலங்கை அரசாங்கத்திற்கும், அமெரிக்க உட்பட்ட மேற்குலக நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இடைப்பட்ட பிரச்சினையாகும். சர்வதேச சட்டங்களுக்கு அமைய ஐநா சபைத்தான் இதை தீர்த்து வைக்கவேண்டும்.

யுத்தத்தின்போது அப்பாவி தமிழ் மக்கள்தான் சொல்லொண்ணா துன்பங்களுக்கு உள்ளானார்கள். பெருந்தொகையான உறவுகளை பறிகொடுத்து, அங்க அவயங்களை இழந்து, இலங்கையிலும், புலத்திலும் நிலையற்ற வாழ்க்கையை தமிழ் மக்கள் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். இதை இலங்கை அரசாங்கமும், சம்பிக்க ரணவக்கவும் மறந்துவிடக்கூடாது.

இப்பின்னணியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்து, பாரதூரமானது மட்டுமல்ல, மனிதாபிமானமற்றதாகும். சர்வதேச நாடுகளுடனான நட்புறவுடன் யுத்தம் நடத்தும்பொழுதும், தமிழர்கள்தான் பலிகடா. தற்போது அந்த நட்புறவு முரண்பாடாக மாறிவிட்ட நிலையிலும் தமிழர்கள்தான் பலிகடா. இதுதான் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்தாக இருக்கின்றது. எந்த நாடுகளுடன் இணைந்து யுத்தம் நடத்தினீர்களோ, அந்த நாடுகளுடனையே பேசி உங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுங்கள். தயவு செய்து சர்வதேச நாடுகளுடனான இலங்கை அரசாங்கத்தின் ராஜதந்திர முரண்பாடுகளில் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழ் மக்களை இதில் இழுக்காதீர்கள். தமிழ் மக்களுக்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் எச்சரிக்கை விடுக்காதீர்கள்.

நன்றி தேனீ

No comments: