காற்றில் மிதக்கும் அவள் குரல் -கவிதை - செ.பாஸ்கரன்


 .

வானம் சிந்தாத அந்த மாலைப்பொழுது
வண்ணயாலம் காட்டும் அழகாயத் தெரிகிறது
கருமேகம் கவிந்து கிடக்கும் அழகில்
மனம் லயித்துவிட சிந்தனை சிறகடிக்கிறது
அன்றும் இப்படித்தான்
விரிந்து கிடக்கும் கரும் கூந்தல்
முகிலென விளையாடும் அவள் முகம்பார்க்கிறேன்
பளிச்சென உதிர்க்கும் சிரிப்பு
மின்னலென வெட்டிப்போகிறது
மீண்டும் வானத்தைப்பார்க்கிறேன்
பொற்கொல்லன் ஊதிவிட்ட உலைக்களமாய்
கீழ்வானம் சிவந்து கிடக்கிறது
ஒற்றைக் கோடாய் சிவந்து சென்ற
அந்திவானத்தின் அழகுக்கோலம்
கண்சிமிட்டி கடந்து செல்லும்
அந்த தேவதையின் அழகுக்கோலமாகிறது
வட்டமிட்டு உயரப்பறக்கும் கரும்பறவையென
அவள் எண்ணஅலைகள் மனதை நிறைக்கிறது
அவள் கனிவான பார்வைக்காய்
காத்திருக்கும் என் மனதைப்போல்
காற்றின் கைகோர்த்தலுக்காய் காத்திருக்கும்
கருத்தரித்த மேகங்கள்
அந்தி வானமும் ஒற்றைப் பறவையும்
என் கண்ணிலிருந்து மறைகின்ற இருளில்கூட
அவள் குரல்மட்டும்
அந்தக்காற்றில் நிறைந்து வானில் மிதக்கிறது.

1 comment:

kirrukan said...

கவிஞரே அவள் குரல் மிதக்கும்...நன்றி கவிக்கு