கலைவளன் சிசு நேர்காணல் - நேர்காணல்: ஆவூரான்.

.
அந்தக் காலத்து யாழ்ப்பாணம், பிறந்த மண்ணும் புகலிடமும் என்ற கட்டுரைத் தொகுதியைத் தந்த கலைவளன் சிசு நகேந்த்திரன் ஐயா அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்டவர்.

லண்டன் மற்றிகுலேசன் வரையில் பரமேஸ்வராக் கல்லூரியிலும் பின்னர் யாழ் மத்திய கல்லூரியில் வர்த்தக முகாமைத்துவம் கற்று London chamber of commerce உயர் தரப் பரீட்சைக்கு தேற்றிவர். கணக்காய்வுத்திணைக்களத்தில் பணி புரிந்து.ஓய்வு பெற்றவர் கவிஞர் அம்பியின் வேதாளம் சொன்ன கதை நாடகத்தின் மூலமும் ராஜ் நாடக மன்றத்தின் சக்கடத்தார் என்னும் நாடகத்தின் மூலமும் உலகறிந்த நாடக நடிகரானார்.


ரகுனாதனின் நிர்மலா என்ற ஈழத்துத் திரைப்படத்திலும் எஸ்வி.துரைராஜாவின் குத்துவிளக்கு முதலான திரைப்படத்திலும் தோன்றியவர். கலைஞர் தாசீசியஸ், குழந்தை சண்முகம்,திருநாவுக்கரசு ஆகியோருடன் நாடகப் பட்டறையில் பயிற்சிகள் பெற்றவர். இவர் அவுஸ்ரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் நடப்பாண்டுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1) ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து கணக்காய்வுத் திணைக்களத்தில் வேலை செய்த உங்களுக்கு நாடகத்துறையில் ஈடுபட ஊந்து சக்தியாக இருந்த காரணம் அல்லது சந்தர்ப்பம் என்று எதை சொல்லுவீர்கள்?

கொழும்பில் வேலை செய்து கொண்டிருக்கும்போதும் நிறையத் தமிழர்களுக்கு அலுவலக வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் தமது பொழுதைப் போக்க பலர் பல பகுதி நேர வேலைகளில் ஈடுபடுவார்கள்.

உதாரணத்துக்கு வானொலி, நாடகப் பட்டறை என்று.பொழுது போகும். எனக்கு கலையில் நிறைய நாட்டம் இருந்தது சுந்தரலிங்கம் என்பவர் என்னைக் கூப்பிட்டு

நாங்கள் நாடகக் கொம்பனிவைத்திருக்கிறம் நேரமிருந்தால் நீங்களும் வாருங்கள் என்றார். கலைத்துறையில் ஈடுபட வேண்டும் என்று இருந்த எனக்கு இது பெரிய சந்தர்ப்பமாகப் போய்விட்டது. இதே நேரம் பேராசிரியர் திரு சிவத்தம்பி அவர்களும் அவரின் வானொலி நாடகமான ”சிறாப்பர் குடும்பம்”நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் தந்தார்.இப்படிப் பல நாடகங்களில் நடிப்பதற்கு சுந்தரலிங்கத்தின் நாடகக் கொம்பனி என்னை அறிமுகம் செய்து வைத்தது. இதைக் கேள்விப்பட்டிருந்த அச்சுவேலி இராஜரட்ணம் என்பவர் என்னைக் கண்டு ராஜ் நாடகக் கொம்பனி (நகைச்சுவை நாடகமன்றம்) தரகர்றோட், ஆச்சிக்குச் சொல்லாதே. நாடகங்கள் என்று நடித்தேன்.

2)நாடகத்துறையை எடுத்துக் கொண்டால் நீங்கள் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறீர்கள். உங்களுடைய திருமண வாழ்க்கைக்குப் பிறகு எப்படித் தொடர்ந்தீர்கள்.?

எனது குடும்பம் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். நான் அப்பொழுது கொழும்பில் ஒரு அறையில் இருந்தேன். தொழிலைப் பார்த்துக் கொண்டு இடைப்பட்ட நேரத்தில் கலைக்குப் பணி செய்ய வேண்டும் என்ற எனது ஆவலை வீட்டுக் காரரால் எதுவும் செய்து விட முடியவில்லை.எனக்கு அமைந்த சந்தர்ப்பங்கள் நாடகத்துறையைப் பொறுத்தமட்டில் எனக்கு நாடகத்துக்கான முதலுரிமை கொடுத்தேன் என்று சொல்லவேண்டும் அது தான் எனக்கு மன நிறை கொடுத்தது. என்னோடு ஒட்டிக் கொண்டது. வேலைக் காரன் போன்ற சிறிய பாத்திரம்மாக இருந்தாலும் தட்டிக் கழிக்காமல் நடித்தேன்.

3)சக்கடத்தார் நாடகம் நான் பார்க்கவில்லை (நாடகம் பற்றி வந்த விமர்சனம் வாசித்திருக்கிறேன்.ஆயிரம் மேடைகளுக்குமேல் அந்த நாடகம் அலங்கரித்திருக்கிறது. இது எப்படிச் சாத்தியமானது?

அச்சுவேலி இராஜரட்ணம் யாழ்ப்பாணத்தில் தனது நாடகக் கொம்பனியைத் தொடரலாம் என்று நினைத்தார். ஆனால் அது அவரால் தொடரமுடியாமல் போகவே வானொலியில் சக்கடத்தார் என்ற ஒரு நாடகத்தை அவர் செய்துகொண்டிருந்தவர். அந்த வானொலி நாடகத்தை யாழ்ப்பாணத்தில் மேடை நாடகமாகச் செய்யலாம்.என்று என்னை அழைத்து அவர் தான் என்னை அந்த நாடகத்தில் வாத்தியார் என்ற பாத்திரத்தைத் தந்து நான் கேள்விகளைக் கேட்க அவர் அழகாகப் பதில் சொல்லும் விதத்தில் நாடகம் நல்ல சோக்காக அமைந்து போச்சு.அவரின் உடல் அசைவின் அழகைப் பார்த்தால் இன்னும் சிரிப்பு வரும். பாடசாலைகளிலும் நாம் அந்த நாடகத்தினையே மேடை ஏற்றியுள்ளோம்.

நாடகத்துறையோடு சம்பந்தப்படுத்தி நான் கொஞ்சம் சொல்லவேண்டும்.

பி. பி, சி தமிழோசை வானொலி அறிவுப்பாள தாசீசியசும் குழந்த சண்முகம் அவர்களும் சேர்ந்து ஒரு நாடகப் பட்டறை (பயிற்சிப் பட்டறை)வைத்தவர்கள் ஒவ்வொரு சனி ஞாயிறு தினங்களிலும் பயிற்சிப்பட்டறை.அவர்களின் நாடகப் பயிற்சியின் பின்பு நாடகத்தில் நடித்தேன் பின்பு லண்டன் போனபோது லண்டனிலும் தாசீசியஸின் ”களரி” நாடக மன்றத்தில் நடித்தேன். லண்டனில் இருந்து பியாவிடை தேனீர் உபசாரத்தின் போதுதான் அவர்களால் கலைவளன் என்ற பட்டமும் கொடுத்தார்கள்.

4)அவுஸ்ரேலியாவில் வெளிவரும் கலப்பை சஞ்சிகையில் ’அந்தக் காலத்து யாழ்ப்பாணம்” என்ற கட்டுரைத் தொடரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது.?

எனது மகளும் மருமகனும் ஜேர்மனியில் வாழ்கிறார்கள். எனது முதலாவது பேத்தியின் ஆசிரியர் பேத்தியிடம் கேட்டிருக்கிறார் ஆங்கிலேயர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த பழக்க வழக்கங்களைச் சொல்லும்படி, அப்போதுதான் எனது மகள் இப்படி யாழ்ப்பாணத்து பழக்க வழக்கங்களை எழுதி அனுப்பும் படி.என்னிட கேட்டார் பேத்தியின் தேவைக்காக எழுதியதை சேர்த்து வைத்திருந்து. இதனையே பின்பு என்னிடம் உள்ளவற்றை அவுஸ்ரேலிய பட்டதாரிகள் சங்கத்தின் வெளியீடான கலப்பையில் பிரசுரிக்க உகந்ததா என்று டாக்டர் கேதீஸ்வரனிடம் கேட்டேன்.அவர் உடனே அனுப்பும்படி சொல்லி அதன் நிமித்தம் கலப்பையில் வெளிவந்தது.இதனை வாசித்துப் பார்த்த எஸ்.பொ அவர்களும் இதனைப் புத்தகமாகப் போடலாம் என்று ஆலோசனை சொல்ல இது ஒரு கட்டுரைத் தொகுதியாக கலப்பையின் வெளியீடாக வெளிவந்தது.

5) அந்தக் காலத்து யாழ்ப்பாணம் வெளிவந்து ஒரு நீண்ட இடைவெளியின் பின்னர் (அந்தக் காலத்து யாழ்ப்பாணத்துக்கு முற்றிலும் எதிர் மறையான) பிறந்த மண்ணும் புகலிடமும் என்ற கட்டுரைத் தொகுதியை தரக் காரணமாக எது ஊன்று கோலாய் இருந்தது. இது பற்றி பகிர்ந்து கொள்ளுங்களேன்?

நான் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் அங்கத்தவராக இருந்தபோது எழுத்தாளர் முருகபூபதியும் வேறு சிலரும் கேட்டனர், யாழ்ப்பாணத்துப் பழக்க வழக்கங்களை எழுதின நீங்கள் இங்கு இருக்கும் மக்களின் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறைகளையும் எழுதினால் என்ன என்று? இந்த உந்துதலினால் எமது புலம் பெயர் மக்களின் வாழ்க்கையையும் அவர்கள் படும் பாடுகளையும் எமது தமிழ் மண்ணில் உள்ளவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று எழுதி எழுத்தாளர் முருகபூபதியிடமும் வண்ணையூரான் சிற்சபேசனிடமும் காட்டி சில திருத்தங்களையும் செய்து A.T.L.A.S என்ற அவுஸ்ரேலியக் கலை இலக்கியச் சங்கத்தின் வெளியீடாக வெளிக் கொணர்ந்தோம்.இதற்கு நல்ல வரவேற்பும் விமர்சனங்களும் கிடைத்தது.

6) நீங்கள் எழுதி வெளியிட்ட இரண்டு கட்டுரைத் தொகுதிகளின் விற்ற லாபத்தை எமது தேசத்தின் மக்களுக்கு கொடுத்ததாகக் கேள்விப்பட்டோம். அது பற்றி..?

கஸ்ரப்படும் எமது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற

எண்ணம் என் மனதில் ஊறிப்போனது. எனது வயது காரணமாக என்னால் ஊதியம் பெறக்கூடிய வேலை செய்ய முடியாது.அதனால் எனது கட்டுரைத் தொகுதிகள் இரண்டின் விற்பனையின் இலாபதின் ஒரு பங்கை அங்கு கஸ்ரப்படும் மக்களுக்குப் போய்ச் சேரக் கூடிய நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மூலம் எனது உதவியைச் செய்தேன்.

7) தொண்ணூறு வயதை நிறைவு செய்திருக்கும் நீங்கள் சும்மா இருக்க மாட்டீர்கள் இனி வரும் காலங்களில் எழுத்துத் துறையோடு சம்மந்தப் படுத்தி என்ன மாதிரியான ஆக்கங்களைத் தர இருக்கிறீர்கள்?

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திலும், வேறு சிலருக்கும் மொழி பெயர்ப்புச் செய்து கொடுக்கிறனான். அது சம்பந்தமாக சில சொற்களை சேர்த்து வைத்திருக்கிறேன். அதாவது ஆங்கிலத்துக்கு தமிழும் தமிழுக்கு ஆங்கிலம் என்று பல மொழிபெயர்ப்புக்களை செய்து ஒரு சிறிய கையேடு ஒன்று வெளிக் கொணரலாம் என்று இருக்கிறேன். எனது வயது காரணமாகவோ என்னவோ எனக்குச் சில சொற்களுக்கு மொழி பெயர்ப்பு முடியாமல் இருக்கிறது. இதை யாரிடமாவது காட்டி உதவி பெற இருக்கிறேன். அப்படிச் செய்தால் எனக்கும் எனது சமூகத்துக்கும் உதவும் என்று நினைக்கிறேன். கூடியவிரைவில் அதையும் வெளிக் கொணரலாம் என்று நினைக்கிறேன்.

8)ஈழத்துத் திரைப்பட வரலாறு உலகத்துக்கு தெரிய வருகின்ற காலத்துக்கு முன் நீங்கள் நடிப்புத்துறைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளீர்கள்.அந்த அனுபவத்தை அல்லது அந்த சந்தர்ப்பம் எப்படி அமைந்தது?

கவிஞர் அம்பிகை பாகனின் ’வேதாளம் சொன்ன கதை” கவிதை நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது இன்று பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகரும் இயக்குனருமான ரகுநாதன், அவர் ஒரு நாள் தற்செயலாக சந்தித்தபோது நிர்மலா என்ற படம் நாளை தயாரிக்கிறம் வந்து பாருங்கோ என்று கேட்டபோது நானும் ஆவலாய்ப் பார்க்கப் போனேன். அப்போது திடீரென்று ரகுநாதன் ஓடிவந்து “ஒரு கள்ளுக் குடிக்கும் காட்சி அதில் நீங்களும் கூட இருந்து கள்ளுக் குடிப்பது போல் இருங்கோ” என்றார். எனது வசனமாக “என்ன கள்ளு சப் என்று இருக்கிறது” என்றேன். கள்ளு வித்தவருக்குப் பிடிக்கவில்லை. ’அப்பிப் போடுவன்’ என்றார். அவ்வளவுதான் நிர்மலா படத்தில் எனது காட்சி.

அடுத்ததாக வி. எஸ். துரைராஜா அவர்களின் குத்துவிளக்குத் திரைப் படத்திலும் சிறிய காட்சியிலும் நான் தோன்றி நடித்திருக்கிறேன். இவைகள் எல்லாம் நானும் ஈழத்துத் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன் என்ற மனநிறைவு உள்ளது.

9) நீங்கள் தொண்ணூறு வயதை எட்டியிருக்கும் இந்த வேளையில் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ஏதும் இருந்தால் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்?

கட்டாயம். என் வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவம் அல்லது ஆச்சரியம் என்று கூடத் தான் சொல்லலாம்.

ஒரு ஏழு வருடங்களுக்கு முன்பு நான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் தொண்டு செய்யும் விதமாக வன்னிக்கு போயிருந்தேன். ஒரு நாள் எமக்குப் பொறுப்பாக உள்ளவர் நீங்கள் உடனே வெளிக்கிடுங்கோ நாம் ஒருவரைப் போய்ப் பார்க்கப் போகிறோம் என்றார். அவர் சொல்கிறாரே என்று உடனே வெளிக்கிட்டேன். அங்கு ஒரு வீட்டில் போய் இருந்தபோது வரவேற்பறையில் திடீர் என்று எல்லோரும் எழும்பினார்கள் நான் கதவுக்குள்ளால் வருபவரைப் பார்த்தேன். என்னால் நம்பமுடியவில்லை...!! பார்த்தால் அவர் என்னருகில் வந்து என்னை ஒரு பார்வை பார்த்தார் அது ஒரு ஆழமான பார்வை! ஊடுரூவும் பார்வை!!! நானும் அவரைப் பார்க்கிறேன். என் கண்களில் இருந்து கண்ணீர் சாரை சாரையாப் வழிந்தோடுகிறது(குறுக்கிட்டு யாரைப் பார்த்தீர்கள் என்று இதுவரையும் நீங்கள் சொல்லவிலையே)வேறு யார் எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் அவரைப் பார்த்த நாளை என் வாழ்நாளில் மறக்கவோ மறைக்கவோ முடியாது.

10) நீங்கள் தொண்ணூறு வயதுவரையும் மிகவும் இளமையான தோற்றத்துடுடன் இருக்கும் காரணம் என்ன?

எனக்கு வயது போய்விட்டது என்று எப்போதும் நினைத்தது இல்லை.

இனி இங்கு உள்ள சீரியல்களைத் தான் பாலோடு சாப்பிடுவேன். ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் “Nap a while after lunch and walk a mile after dinner”

என்பதற்கு அமையத்தான் தினமும் செய்வேன்.

மற்றது நான் படுக்கையை விட்டு எழும்ப முன் சில உடற்பயிற்சிகளைச் செய்வேன். இது தான் எனது உடல் ஆரோக்கியத்துக்குள் உள்ள ரகசியம்.

சிசு நாகேந்திரம் ஐயாவிடம் நிறைய அனுபவங்களும் ஆரோகியமான விடையங்களையும் சுமந்துகொண்டு நாம் வந்தோம்.அவர் இன்னும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெற வேண்டும் என்று இறைவனைப் பிராத்திதுக் கொள்கிண்றோம்.






No comments: