தன்னையே தணலாக்கிய ஈகியர் செங்கொடி

.
.
இந்தியாவில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களின் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கேட்டு , தன்னுடலை எரிதழலாக்கிக் காவியமான செங்கொடி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் மெல்பேணிலும் சிட்னியிலும் நடைபெறவுள்ளன.

தமிழீழத் தாயகத்தில் நிலவிய இருளடைந்த நாட்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குத் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்காக வந்திருந்த முன்னாள் இந்தியப்பிரதமர் ராசீவ் காந்தி அவர்கள், 1991 ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதியன்று நடைபெற்ற துன்பியல் சம்பவம் ஒன்றின்போது கொல்லப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பல தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு 26 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் இவ்விசாரணைகள் முழுமையாக நடைபெறவில்லை எனவும் , பொய்யான குற்றச் சாட்டுகள் புனையப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்து , தமிழ் உணர்வாளர்கள் பலர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் , அவர்களில் 19 பேரை விடுதலை செய்ததுடன் நளினி , முருகன் , சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கும் தண்டனையை உறுதிசெய்ததுடன், ஏனைய மூவருக்கு ஆயுள்தண்டனையும் விதித்தது.

இதன் பின்னர் 2000 ஆம் ஆண்டில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும், பல்வேறு முறைப்பாடுகளையும் மனுக்களையும் சமர்ப்பித்தன் பயனாக, நளினிக்கு ஆயுள்தண்டனையாக மாற்றலாம் என்றும் ஏனைய மூவருக்கும் தூக்குத்தண்டனையை நிறைவேற்றலாம் எனவும் அன்றைய கருணாநிதி தலைமையிலான அரசு, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. எனினும் இந்திய குடியரசுத் தலைவரின் கருணை மனுவைக்கோரி 28-04-2000 அன்று தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் மீளவும் மனுச்செய்தனர்.

கடந்த 11 ஆண்டுகளாக எதுவித பதிலையும் வழங்காத இந்திய மத்திய அரசு , 12-08-2011 நாளிட்ட கடிதத்தில் , குறித்த மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து குறித்த மூவருக்கும் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 9 ஆம் திகதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுமென சிறைத்துறை நிர்வாகம் அறிவித்தது.

எப்போதுமே அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக, தனது சிறுவயது முதலே போராடிவந்த செங்கொடி என்ற புரட்சித் தமிழச்சி , மறுக்கப்பட்ட நீதிக்காக, 28-08-2011 அன்று தன்னையே வருத்தி தன்னுடலை எரிதழலாக்கி வீரகாவியமானார். ஈழத்தமிழ் மக்களுக்கு பேரவலம் நிகழ்ந்தபோது ஈகியர் முத்துக்குமாரன், எவ்வாறு தன்னை நெருப்பாக்கி ஈழத்துமக்களின் பிரச்சனையை வெளியுலகிற்கு கொண்டுவர முயன்றாரோ, அதேவழியில் தங்கை செங்கொடி தன்னுயிரை அர்ப்பணித்துக்கொண்டார்.

எரிதழலாகிப்போன எம் ஈகியர்களின் தியாகத்தின் உச்சத்தை மதிக்கின்ற அதேவேளை, இவ்வாறான போராட்ட வழிமுறையைப் பின்பற்றித் தம்முயிரை அர்ப்பணித்துக்கொள்ளவேண்டாம் என அன்புடனும் உரிமையுடனும் எமது உறவுகளைக் கேட்டுக்கொள்கின்றோம்.

ஈகியர் செங்கொடியின் நினைவு வணக்க நிகழ்வுகள் மெல்பேணில் பிற்பகல் 6 மணிக்கு Vermont South Community House என்ற இடத்திலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளதென அறியத் தருகின்றோம். சிட்னியில் நடைபெறவுள்ள வணக்கநிகழ்வுகள் பற்றிய விபரங்கள் வெகுவிரைவில் அறிவிக்கப்படுமென்பதையும் அறியத்தருகின்றோம்.

தியாகத்தின் நெருப்பான செங்கொடியை நினைவுகூரும் அதேவேளை, அவரின் கோரிக்கையான பேரறிவாளன் , சாந்தன் , முருகன் ஆகிய மூவரின் விடுதலையை வேண்டி, மறுக்கப்படுகின்ற நீதியைப் பெற்றிட இணைந்துகொள்ளுமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - அவுஸ்திரேலியா

No comments: