புகைப்படக்காரி -கட்டுரை- அ.முத்துலிங்கம்
2011-09-02
நான் நேற்று மாலை பொஸ்டன் வந்து சேர்ந்தேன். இன்று காலை பக்கத்து வீட்டில் ஆரவாரம் தொடங்கியது. அதற்கும் நான் வந்ததற்கும் ஒருவித சம்பந்தமும் இல்லையென நினைக்கிறேன்.  பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மருத்துவர். மருத்துவத் துறையில் அவருக்கு விருது ஒன்று கிடைத்திருந்தது. அவரைப் பாராட்டுவதற்கு ஆட்கள் காரில் வந்தனர்; போயினர். மருத்துவர், அவர் வீட்டுக்கு முன் இருந்த மரங்கள் நிழல்தரும் தோட்டத்தில், சாய்மணக் கதிரை போட்டு, போரிலே வெற்றியீட்டிய ஒரு குறுநிலமன்னன்போல வீற்றிருந்தார். பத்திரிகைக்காரர்கள் பேட்டி எடுத்தார்கள். புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுத்தார்கள். வந்த சிலர் வணங்கி வாழ்த்து சொல்லிவிட்டு சென்றார்கள்.

புகைப்படக்காரியை அங்கேதான் கண்டேன். நிரந்திரமாக அங்கேயே தங்க வந்தவர் போல நீண்ட வாகனம் ஒன்றில் வந்து இறங்கியவர் இரண்டு பெரிய புகைப்படக்கருவிகள், மூன்று கால் நிறுத்தி, மடிக்கணினி, ஐபாட், பெரிய தோல்பை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக  இறக்கினார். அவர் ஏற்கனவே மருத்துவரிடம் அனுமதி பெற்றிருந்தார் போலிருந்தது. சாவகாசமாக தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து எங்கே மரங்கள், எங்கே புல்தரை, என்ன கோணத்தில் சூரிய கிரணம் விழுகிறது போன்றவற்றை ஆராய்ந்தார். ஒருவித அவசரமும் காட்டாமல் தன் வேலையை மிக நிதானமாகச் செய்துகொண்டிருந்தார்.

புகைப்படக்காரர்களை பார்த்திருக்கிறேன். முதல்தரமான புகைப்படக்காரியை பார்ப்பது இதுவே முதல் தடவை. Wall Street Journal, Smithsonian Magazine போன்ற பிரபலமான பத்திரிகைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில்  வேலை செய்பவர் இந்தப் பெண். வாகனத்திலிருந்து இறங்கியபோது அவருக்கு முன்பாக சிரிப்பு இறங்கியது. வயது 30 – 35 க்குள்தான் இருக்கும். கிழிந்த ஜீன்ஸும், உடற்பயிற்சிக்காரர் அணியும் பிராவுக்கு மேலே முழு ஊத்தையான ஒரு ரீசேர்ட்டும் அணிந்திருந்தார். இனி இல்லையென்று குதி தேய்ந்துபோன சப்பாத்துகள். சாம்பல் நிற தலைமுடியை பின்னுக்கு இழுத்து ஒரு மலிவான ரப்பர் வளையத்தால் கட்டியிருந்தார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இவர் நீச்சல் வீராங்கனையாகவோ, ஓட்டக்காரியாகவோ அல்லது பனிச்சறுக்கு நடனக்காரியாகவோ இருந்திருக்கலாம். அப்படியான நிமிர்ந்த தோற்றமும், நடையும். பார்த்தவுடனேயே சிநேகம் கொள்ளக்கூடிய முகம். பெயர் ஜெஸிக்கா என்றார்.
வாஷிங்டனில் இருந்து வெளியாகும் பிரபலமான பத்திரிகை ஒன்று, மருத்துவரைப் பற்றிய  நீண்ட கட்டுரை வெளியிட இருக்கிறது. அவருடைய சுயசித்திரத்துடன்  பிரசுரிப்பதற்கு பத்திரிகைக்கு படங்கள் தேவை. அவற்றைப் பிடித்து அனுப்புவதற்கு  பத்திரிகை ஜெஸிக்காவை ஒப்பந்தம் செய்திருந்தது. அதற்கான ஆயத்தங்களைத்தான் அவர் செய்துகொண்டிருந்தார்.

ஜெஸிக்காவிடம் மூன்று முக்கிய பண்புகள் இருந்தன. எந்நேரமும் அவர் பேசிக்கொண்டே இருந்தார். ஒரு நிமிடம்கூட அவர் வாய் ஓயவில்லை. மருத்துவரிடம் ஆலோசனை கேட்டார். அவரைப் பேசவிட்டார். ஜெஸிக்கா மனதுக்குள் ஏற்கனவே எப்படியான படங்களை என்ன கோணத்தில் எங்கே எடுப்பது என்பதை தீர்மானித்துவிட்டார். ஆனால் வெளியே மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது போல இப்படிச் செய்யலாமா அப்படிச் செய்யலாமா என்றெல்லாம் வினவினார். இரண்டாவது, மணி கிலுக்குவது போன்ற அவர் சிரிப்பு. எடுத்ததெற்கெல்லாம் சிரித்தார். ஒரு குட்டித் தவளை எங்கிருந்தோ குதித்து குதித்து வந்தது. அதைப் பார்த்துவிட்டு ஓர் ஐந்து வயதுக் குழந்தை போல இடுப்பில் கையை வைத்து குனிந்து சிரித்தார். அவருடைய சிரிப்பு அவருக்கும், அவர் பக்கத்தில் நிற்பவர்களுக்கும் உற்சாகம் தரக்கூடியது.  அடுத்த குணம் அவசரமின்மை. அன்று முழுக்க நேரம் கைவசம் உள்ளதுபோல அற்பமான விசயங்களையும் உற்ற நண்பருடன் பேசுவதுபோல மருத்துவரிடம் பேசி அவரை இயல்பு நிலைக்கு கொண்டுவந்திருந்தார். இதுவெல்லாம் நல்ல படம் எடுப்பதற்கான உத்திகள் என்று எனக்கு பின்னர்தான் தெரியவரும்.

மருத்துவர் அதே சாய்மணக் கதிரையில் அதே வளைவுகளுடன் அதே மாதிரி உடகார்ந்திருந்தார். அவர் காமிராவைப் பார்த்தாலும் அதனுடன் சிநேகமாவதா அல்லது  விடுவதா என்ற முடிவை இன்னும் எடுக்கவில்லை என்பது தெரிந்தது.  ஜெஸிக்கா காமிராவை தூக்கி கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டு படம் எடுக்கத் தொடங்கினார். தொடங்கினார் என்றால் மழை துளித்துளியாக பெய்வதுபோல  கிளிக் பண்ணினார். அவருடைய பேச்சும் கிளிக்கும் சிரிப்பும் தொடர்ந்து நடந்தது. புகைப்படங்கள் தேதி, நேரம் பதிவதுபோல ஒலியையும் பதிவுசெய்தால் அவர் எடுத்த பாதிப் புகைப்படங்களில் அவருடைய சிரிப்பொலியும் இருக்கும். காமிராவில் இருந்து அவர் கண்ணை எடுக்கவில்லை. சூரியன் முகிலுக்குள் மறைந்து சற்று இருட்டாகியபோது ‘நீங்கள் flash பாவிக்கமாட்டீர்களா?’ என்று கேட்டேன். ’சூரியனைவிட பெரிய flash இல்லை’ என்றார். இயற்கை வெளிச்சத்திலேயே படம் இயற்கையாக இருக்கும் என்பதில் அவர் திடமாக இருந்தார்.

தொடர்ந்து ஒரு மணி நேரம் அவருடைய விலையுயர்ந்த கனொன் காமிராவால் படம் பிடித்தார். எந்த நேரம் என்ன செய்வார் என்பதைச் சொல்ல முடியாது. திடீரென்று முழங்காலில் உட்கார்ந்து பிடித்தார். ஒரு நாற்காலியின் மீது ஏறி நின்று எடுத்தார். பின்னர் அத்தனை பேரையும் திடுக்கிடவைக்கும் விதமாக மரம் விழுவதுபோல விழுந்து புல்தரையில் குப்புறப் படுத்துக்கொண்டு பல படங்கள் எடுத்தார். மருத்துவர் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க இவரே அவரைச் சுற்றி சுற்றி வந்தார். இடைக்கிடை மருத்துவருடைய ஆலோசனையை கேட்டுக்கொள்வார். திடீரென்று வெடிச்சிரிப்பு வெளிப்படும். இருவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால் படம் எடுப்பதில் மட்டும் தடங்கல் கிடையாது. காமிரா படம் எடுத்தபடியே இருந்தது. ’இப்படிப் பாருங்கள். கொஞ்சம் அங்கே திரும்புங்கள். தளர்த்துங்கள். இதேதான் இதேதான். நீங்கள் பிறவிக் கலைஞர். உங்களுக்கு மருத்துவர் வேலை போனால் பரவாயில்லை. என்னிடம் வாருங்கள். உங்களை உச்சமான மொடலாக மாற்றி காட்டுகிறேன். இயற்கையான முகம் உங்களுக்கு. ஓ, என்ன அழகாக விழுகிறது. தளர்த்துங்கள், தளர்த்துங்கள். இன்னும் கொஞ்சம் நாடியை தூக்கி மேலே பாருங்கள்.’ இப்படிச் சொல்லிக்கொண்டே கவனமாகவும், பூரணமாகவும்  படங்களை எடுத்து தள்ளினார். பின்னர் அவற்றை தன் மடிக்கணினியில் போட்டு சரி பார்த்தார். ஒரு மணி நேரத்தில் ஏறக்குறைய 500 படங்கள் எடுத்திருந்தார். எல்லாமே அடர்த்தியான படங்கள். ஒவ்வொன்றும் 13MB க்கு குறையாத பக்குவத்துடன் இருந்தன.  

‘இனி என்ன செய்வீர்கள்? நீங்கள் எடுத்த 500 படங்களில் 10 படங்களை தெரிவு செய்து பத்திரிகைக்கு அனுப்புவீர்களா?’ என்று கேட்டேன். அவர் சொன்னார். இரண்டு விதமான ஒப்பந்தங்கள் இருக்கின்றன. சில ஒப்பந்தங்களில் 10 படங்களை அவர்களுக்கு அனுப்பினால் போதும். ஆனால் 500 படங்களில் 10 படங்களை தெரிவு செய்வது என்பது சிரமமான வேலை. ஒவ்வொரு படமாக நுட்பமாக ஆராய்ந்தபடியே வரவேண்டும். அப்படியும் சில நல்ல படங்கள் தவறிவிடும். குறைந்தது இரண்டு மணி நேர வேலை. இன்னொரு விதமான ஒப்பந்தமும் உண்டு. எடுத்த படங்கள் அனைத்தையும் அவர்களுக்கு அனுப்புவது. அவர்களே தெரிவு செய்வார்கள். எனக்கு நேரம் மிச்சம். ஆனால் என் படங்களில் உள்ள குறைபாடுகளை மற்றவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். அதை தவிர்ப்பதே எனக்கு விருப்பம். வாஷிங்டன் பத்திரிகையின் ஒப்பந்தப்படி நான் எடுத்த 500 படங்களையும் அவர்களுக்கு அனுப்பவேண்டும்’ என்றார்.

’படத்தை எப்படி தெரிவு செய்வீர்கள்?’ எனக் கேட்டேன். ’மிக முக்கியமானது படத்தில் இருப்பவர் படம் எடுத்தது தெரியாமல் இயற்கையாக இருப்பது. நான் தொடர்ந்து பேசிக்கொண்டே மருத்துவரை உற்சாகப்படுத்தியது அதற்காகத்தான். படத்தில் காணப்படும் பின்னணியும் முக்கியம். சிறப்பான பின்னணி இயற்கைதான். அழகான புல்வெளி, ஆகாயம், கடல், ஆறு, குளம் எல்லாமே நல்லதுதான். சூரியனுடைய கோணம் முக்கியமானது. வெளிச்சமும் நிழலும்தான் படம். அவை சமமான அளவில் கலக்கும்போது உத்தமமான படம் அமையும். எல்லாவற்றிலும் முக்கியமானது படம் ஒரு கதை சொல்லவேண்டும். படத்தின் பின்னால் கற்பனையை தூண்டக்கூடிய ஓர் அம்சத்தை உருவாக்க வேண்டும்’ என்று சொல்லியபடியே எந்த அவசரமும் காட்டாமல் சாவகாசமாக தன் பொருட்களை சேகரித்துக்கொண்டு வாகனத்தில் புறப்பட ஆயத்தமானார்.

எனக்கு சமாதானம் ஆகும்வரை நான் அவரை விடுவதாக இல்லை. ’நீங்கள் எடுத்த படங்கள் ஏதேனும் இருக்கிறதா?’ என்றேன். ஜெஸிக்கா பொறுமையானவர். தோளில் மாட்டிய கம்புயூட்டரை மீண்டும் இறக்கி, அதைத் திறந்து  தான் வெளிநாட்டில் எடுத்த சில புகைப்படங்களை எனக்கு காட்டிக்கொண்டு வந்தார். ஒரு படத்தை பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. அது இந்தியாவிலே எடுத்த படம். தமிழ்நாட்டிலேகூட இருக்கலாம். நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். திருத்த வேலைகள் நிறைய தேவைப்படும் ஒரு விடுதியின் முகப்பு. வண்ணங்கள் உரிந்து கிடக்கின்றன, வயர்கள் தொங்குகின்றன. மேலே ‘Ambika Guest House’ என்ற பெயர்ப் பலகை. அதன் கீழ் Comfortable Palace to Stay என்ற வாசகங்கள். வாசல்படியில் நின்று இரண்டு கால்களையும் எட்டி முன்னே வைத்து, பின்னங்கால்களை தரையிலே ஊன்றி பெரும் ஆலோசனையுடன் மெலிந்துபோன மாடு ஒன்று நின்றது. ‘உள்ளே போகலாமா, விடலாமா? இந்த இடம் என்னுடைய தகுதிக்கு ஏற்றதுதானா?’ என மாடு முடிவெடுக்க முடியாமல் தத்தளிப்பது  தெரிந்தது. Comfortable Place என்பதை தவறுதலாக Comfortable Palace’ என்று எழுதியிருந்தார்களோ அன்றி தெரிந்துதான் அப்படி எழுதி வைத்தார்களோ தெரியவில்லை. நான் பார்த்ததிலேயே மிக அழகான எழுத்துப்பிழை அதுதான்.

’நீங்கள் இப்போது சிரித்தீர்களே, அதுதான். புகைப்படத்தை பார்க்கும்போது ஏதாவது  உணர்ச்சி வெளிப்பாடு இருக்கவேண்டும். உங்கள் மனம் ஏதோ ஒரு கதையை பின்னிவிட்டது. அது புகைப்படத்தின் வெற்றி’ என்றார். ’எப்படி உங்களுக்கு அபூர்வமான தருணங்கள் அமைகின்றன?’ என்று கேட்டேன். அவர் சொன்னார். ‘எல்லோரும் நினைப்பதுபோல ஒரு நல்ல புகைப்படக்காரரின் கண்ணில் அவருடைய கண்ணின் வில்லை இருப்பதில்லை. புகைப்படக் கருவியின் வில்லைதான் இருக்கிறது. எந்த ஒருகாட்சியையும் காமிராவின் கண்தான் பார்க்கிறதே ஒழிய  என்னுடைய கண் பார்ப்பதில்லை. இதுதான் என தீர்மானித்ததும் படம் எடுத்துவிடவேண்டியதுதான். எல்லோரும் ஒரே காட்சியைத்தான் பார்த்தாலும் கவிஞர் ஒரு வித்தியாசமான கண்ணினால் பார்க்கிறார். உடனே கவிதையும் பிறக்கிறது அல்லவா? அப்படித்தான். நாங்கள் காட்சிகளை தேடிப் போவதில்லை. அவை எங்களைத் தேடி வரும். எங்கள் வேலை கண்களைத் திறந்து வைத்திருப்பதுதான்.’ எனக்கு பிரபல விஞ்ஞானி லூயி பாஸ்டருடைய புகழ்பெற்ற வாசகம் ஞாபகத்துக்கு வந்தது. ’ஆயத்தமான புத்திதான் தற்செயல்களை லாபமாக்கும்.’

500 படங்கள் எடுத்த இரண்டு மணி நேரத்துக்கு சன்மானமாக 1000 டொலர் அவருக்கு கிடைக்கும் என்று அவருடைய உதவியாளர் கூறினார். இந்த 500 படங்களில் பத்திரிகையில் வரப் போவது இரண்டு அல்லது மூன்று படங்களே. சிலவேளை ஒரேயொரு படம் பிரசுரமாகக்கூடும். மீதி எல்லாம் கழித்து விடப்படும். ஒரு சிற்பி சிலை செதுக்கும்போது சிலையளவு நாலுமடங்கு கல் கழித்துவிடப்படும். ஓர் ஆசிரியர் 500 பக்க நூல் எழுதும்போது 2000 பக்க எழுத்தை கழித்துவிடுகிறார். அதுபோலத்தான் இதுவும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். எவ்வளவு சமாதானம் சொன்னாலும் ஒரு சிறந்த புகைப்படக்காரர் ஒரு படம் தேவை என்பதற்காக 499 படங்களை வீணாக்குவது ஏற்கமுடியாமல் இருந்தது. நான் எங்கோ படித்தது ஞாபகத்துக்கு வந்தது. தென் அமெரிக்காவில் 150 பேர் மட்டுமே கொண்ட ஓர் இனக்குழு உண்டு. அவர்களுடைய மொழியில் ’அரைகுறையாக அம்பு எய்தவன்’ என்பதற்கு ஒரு வார்த்தை உண்டு. அரைகுறையாக அம்பு எய்தால் மிருகம் வலியில் துடித்து உழன்றுதான் சாகும். அந்த மொழியில் ஆக மோசமாக ஒருவரை திட்டவேண்டும் என்றால் அந்த வார்த்தையை சொல்லி வைவார்கள். ஒருமுறை தவறு செய்தவனுக்கு அந்த வார்த்தை என்றால் 499 முறை தவறு செய்தவருக்கு ஆங்கிலத்தில் ஏதாவது வார்த்தை இருக்கிறதா?

8ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை 400 வசனங்கள் எழுதச் சொன்னால் அதில் எப்படியாவது ஒரு நல்ல வசனம் அகப்படும். சிம்பன்ஸியிடம் 10,000 டொலர் இலக்கக் காமிராவைக் கொடுத்து, அது  500 படங்கள் எடுத்தால் அதில் ஒரு படமாவது அபூர்வனான அழகுடன் அமைய வாய்ப்பு உண்டு. ஒரேயொரு புகைப்படம்தான் எடுக்கலாம் என்று சொல்லி புகைப்படக்காரர் ஒன்றை எடுத்து அது உயர்ந்த படமாக அமைந்துவிட்டால் அந்த புகைப்படக்காரரின் திறனை அங்கீகரிப்பதில்  ஒரு பிரச்சினையும் இல்லை.  

நாயைக் கூட்டிக்கொண்டு நடப்பதற்கு வெளியே புறப்பட்டதுபோல கிழிந்த ஜீன்ஸும், ஊத்தை டீசேர்ட்டும் அணிந்து வந்திருந்த பெண்ணை நினைத்தபோது பிரமிப்பாகத்தான் இருந்தது. எவ்வளவு எளிமை. ஒரு கணமேனும் படம் எடுக்க வந்தவரை அச்சுறுத்தவில்லை, அவசரப்படுத்தவில்லை, அவமதிக்கவில்லை. ஏதோ முக்கியமான காரியம் நடக்கிறது என்பதுபோல உணர்த்தவில்லை. அந்தப் பெண்ணின் அமைதியான செயல் திறன் எவரையும் ஆச்சரியப்படுத்தும். நான் திரும்பத் திரும்ப நினைந்து வியப்பது அவருடைய முகம் சிரிக்காமல் இருக்கும்போது எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாமல் போனதைத்தான்.

மருத்துவரை திரும்பிப் பார்த்தேன். 500 படங்களை ஒருவர் எப்படி தாங்கிக்கொள்ள முடியும். அவர் இந்த உலகத்தில் இல்லை. விருந்து முடிந்த பின்னர் அகற்றப்படாத மதுக் கோப்பைபோல கவனிக்கப்படாமல் கிடந்தார்.  அவர் முழங்கால்கள் முகத்தின் உயரத்துக்கும் மேலாக நின்றன. மாதக் கடைசியில் கட்டுரையும் படங்களும் வெளியாகும் என்று சொன்னார்கள்.  வாஷிங்டனில் இருந்து பிரசுரமாகும் பத்திரிகையை நான் இன்னும் பார்க்கவில்லை. படங்கள் அபூர்வமான அழகோடு அமைந்திருக்கும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. நடந்ததை  யோசித்து பார்க்கும்போது ஒரு புகைப்படக்காரர் ஆகிவிட்டால் என்னவென்றுகூட எனக்கு தோன்றுகிறது. எழுத்து வேலை சோர்வு தரும் வேலை. ’செய்யாதன செய்யோம்’ என்றார் ஆண்டாள். இதுதான் செய்யவேண்டும் இதுதான் செய்யக்கூடாது என்று விதி ஏதாவது இருக்கிறதா? இப்பொழுதுதான் இலக்கக் காமிரா வந்துவிட்டதே. எத்தனை படங்களையும் சுட்டுத்தள்ளலாம். 2000 படங்கள் எடுத்தால் அதில் ஒன்று தேறாமலா போகும்.

END
http://amuttu.net/

1 comment:

Anonymous said...

திரு முத்துலிங்கம் அவர்கள் ஜெசிக்கா ஸ்க்ராண்டன் என்ற புகைப்பட கலைஞர் பற்றித்தான் இந்த கட்டுரையில் எழுதியுள்ளார். அவரது புகைப்படங்களை ரசித்த ஒருவன் என்ற முறையில், அவரது இணைய தள முகவரியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

http://jessicascranton.com/

http://scrantonphoto.blogspot.com/


நன்றி,

நேரிய பார்வை.