"அழகர்சாமியின் குதிரை" என்பார்வையில் - செ.பாஸ்கரன்


.

பரட்டைத்தலை குள்ள உருவம் குதிரை ஒன்றை கையில் பிடித்தபடி நிற்கும் போஸ்ட்டர்கள் புதிய படத்தின் வருகையை அறிவித்து நிற்கிறது. இரண்டு டொலர் DVD யை ஸ்பைஸ் கடையில் கையில் தூக்கி பார்க்கின்றபோது அழகர் சாமியும் தெளிவாக தெரியவில்லை அவன் குதிரையும் தெளிவாகத்தெரியவில்லை. யாராவது தெரிந்த நடிகர்கள் நடிக்கின்றார்களா என்று பார்த்தால் அப்படி யாரையும் காணவில்லை போல் தெரிகிறது.இந்த படம் பற்றி கேள்விப்படவும் இல்லை பார்ப்பதா விடுவதா என்ற மனப்போராட்டம். மினக்கெட்டு எடுத்துக்கொண்டு போய்ப் பார்கின்ற போது சினிமா என்ற பெயரில் குப்பைகளை கொட்டியிருப்பார்கள். அதைப்பார்க்க ஆரம்பித்து இடையில் கோபத்தோடு அன்றைய நல்ல இரவை பழுதாக்கிய கவலை மிஞ்சுகின்ற நாட்கள் பலமுறை இடம்பெற்றிருக்கிறது. இதனால்தான் பலமுறை யோசிக்க வேண்டியிருந்தது. DVD கவர்கூட ஒழுங்காக இல்லை படத்தின் பிறிண்ட் எப்படி இருக்கும் என்ற எண்ணமும் வந்துபோனது. ஒரு முறை கடைக்காரரிடம் கொப்பி எப்படித் தம்பி எண்டு கேட்டுவைக்க. அண்ண ரெண்டுடொலர் கொப்பி எப்பிடியண்ண இருக்கும் என்று அவர் திருப்பிக் கேட்ட கேள்விக்கு பிறகு அதைப்பற்றி கதைப்பதே இல்லை. இந்தியப் படங்களுக்கு குறிப்பாக தமிழ்ப்படங்களுக்கு மட்டும்தான் இப்படியொரு நிலமை.  படம் வெளிவந்த உடனேயே கள்ளக் கொப்பி போட்டு கடைகளுக்கு கொண்டு வந்து விடுவார்கள் நாமும் மூன்று மாதம் நல்ல கொப்பிக்கு பொறுக்க முடியாது



அரைகுறயாக தெரியும் காட்சிகளை பார்த்து முடிக்கும் நிலையை சபித்துக்கொண்டே மீண்டும் மீண்டும் பார்க்கின்றோம். அந்த வகையில் அழகர் சாமியின் குதிரை என் குதிரையாகியது. அன்றிரவே அதை பார்த்தேன்.
 படம் துவங்கிய போதே புரிந்து கொண்டேன் இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாகத்தான் இருக்குமென்று. புதிய முகங்கள் கிராமத்தின் சூழல் பறையறைந்து திருவிழாவைப்பற்றிய அறிவிப்பு , பின் அது பெண்களின் வாய்வழியாக பரவிச் செல்வது இப்படியே ஒரு கிராமத்தின் கதை சொல்லப்போகின்றார் ( பருத்திவீரனுக்கு பிறகு பலர் கிராமத்திற்கு படையெடுத்து விட்டார்கள்) என்பது தெளிவாகின்றது.


அழகும் கவர்ச்சியும் வாள்வெட்டும்தான் சினிமா என்ற பாணியில் இருந்து மாறிச் செல்கிறது திரைப்படம். மூட நம்பிக்கைகள் கொண்ட மக்களை எப்படி ஏமாற்றலாம் என்பதை கிராமத்திற்கே உரியபாணியில் சொல்லத் தொடங்கிய கதை அழகர்சாமி ஆற்றில் இறங்கினால் மழைபெய்யும் என்று நம்பும் மக்கள் கூட்டத்தையும் நம்பவைக்கும் ஆசாடபூதிகளையும் கொண்டு வருகின்றார். அழகர்சாமி ஆற்றில் இறங்கியும் மழைபெய்யாது பஞ்சம் வாட்டியதே என்ற சாதாரண விடயத்தைக்கூட விளங்கிக்கொள்ளமுடியாத அப்பாவிகளாக உள்ள கிராமத்து மக்களை மிக அழகாக படம் பிடிக்கின்றார்கள்.

சிறுவர்களை வேலைக்கு அனுப்பும் தேவைவந்து ஒரு கிராமத்து சிறுவர்கள் அத்தனை பேருமே ஆடு மாடுகளைப்போல் அள்ளிச்செல்லும் போது தாய்மார்களின் உள்ளக் குமுறல்கள் கண்ணில் கண்ணீரை வரவழைக்கிறது.

MGR தொடங்கிவைத்த சத்துணவு திட்டத்தினால் பாடசாலையில் வழங்கப்படும் உணவை வாங்கிக்கொண்டு ஓடிச்செல்லும் சிறுவன் வீட்டில் சுகவீனம் உற்று படுத்திருக்கும் சிறுவனுக்கு கொடுத்து உண்டு பசியை போக்கும் காட்சி கிராமத்து விவசாய மக்களின் வறுமையையும் எதிர்கால சந்ததி சோற்றுக்கு அல்லல் படும் இந்தியாவின் மறுபக்கத்தையும் காட்டும் மனதை நெருடும் காட்சியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு அச்சொட்டான கட்டாந்தரை கிராமத்து ஏழை உழைப்பாளியான கீரோ
( கீரோ என்றால் அஜித் கமல் போன்றவர்கள் தான் சினிமா ரசிகர்களுக்கு பழக்கப்பட்டது) தத்துருபமாக படைக்கப்பட்டிருக்கிறான். அவன் தன் குதிரையோடு கொஞ்சுவதும் அதன்மீது கொண்டிருக்கும் காதலும். அதனால் அவன் கொள்ளும் மகிழ்ச்சியும் கள்ளம் கபடமில்லாத ஒரு கிராமத்து மனிதனை எம்மோடு உறவாட விட்டிருக்கிறார்கள். இவனுக்கும் காதல் வருமா? என்ற கேள்வி பலருக்கு வியப்போடு வந்திருக்கும். அவனுக்கும் காதல்வரும் அவனும் மனிதன்தான் அந்தக்காதல் உயிரையும் கொடுக்கும் அளவிற்கு துணிந்த காதல் என்று மிக அருமையாகக் காட்டியிருக்கின்றார்கள். அதையும் ஏழைக் கிராமத்தானுக்டீக உரிய வடிவத்தில் காட்டியிருக்கின்றார்கள்.

அத்தோடு அந்தக் கிராமத்து அழகும் அதற்கான இசையும் எம்மை அந்தக் கிராமத்தோடு ஒன்றவைத்துள்ளது. கட்டிடக் காடுகளாக இருக்கும் வெளிநாடுகளுக்கு கமறாவைத் தூக்கிக்கொண்டோடும் நெறியாளர்களுக்கு கிராமத்துக் காடுகளும் குட்டைகளும் தரும் அழகுக் காட்சி நறுக்கென்று தலையில் குட்டுவைக்கின்றது.
குதிரையை அழகர்சாமிக்கு வேண்டும் என்று கட்டிவைத்து கொடுக்க மறுக்கும் ஊர் பஞ்சாயத்தும் அதனால் விரக்தியடைந்து தன்மேல் எண்ணயை ஊற்றி கொழுத்தி தற்கொலை செய்யப் போனவனை காப்பாற்றியபோது. தனக்காக ஒரு காதலி காத்துக்கொண்டிருக்கிறாள் நான் குதிரையோடு போகாவிட்டால் அவள் செத்துப் போயிருவாள் அந்த காதலைக் கொல்லாதீங்கடா என்று அழுகின்ற காட்சி எந்தக் கல்நெஞ்சையும் உருக்கிவிடும் அழகான நடிப்பு.

இறுதியில் கிராமத்தில் படித்த இளையனாகவரும் பஞ்சாயத்து தலைவரின் மகன் சாதியில் குறைந்த பெண்ணை திருமணம் செய்துவிட்டான் என்று அறிந்ததும் அழகர் சாமியை ஆற்றில் இறக்கக் கொண்டு சென்ற தலைவர் இனி இந்த ஊரில் மழையே பெய்யாது என்று சாபம் போடுவதும் அவரின் சாபம் உண்மையில்லை என்பது போல் அப்போதே மழை கொட்டுவதும் பழைய சாதிவெறியினை கழுவித் துடைத்தெறியும் சிந்தனையின் குறியீடாக காட்டப்படுவது மிகச் சிறப்பானது.
சினிமா என்பது நல்ல இலக்கியம் அது நாம் வாழும் வாழ்வையும் அதைச்சுற்றியுள்ள உறவுகளையும் அந்த உறவுகளின் நன்மை தீமைகளையும் ஒப்புரவோடும் முரனோடும் புரியவைப்பதுதான். ஒரு கிராமத்தானின் வாழ்வின் விழுமியங்களை, இன்றைய நகரத்தவர்கள்கூட புரிந்து கொள்ளமுடியாத வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் உலகம் கையளவு என்று மட்டும் சொல்லிக்கொண்டிருப்போம். இந்தக்கிராமத்து வாழ்க்கையையும் திரும்பிப்பார்க வைத்த இந்தப்படம் ஒரு நம்பிக்கையூட்டும் திரைப்படம் என்று கூறலாம்.


பாஸ்கர் சக்தியின் சிறுகதையை படமாக்க முடிவு செய்த இயக்குநர் சுசீந்திரன்னுக்கு பாராட்டுகள். படத்தின் ஹீரோ அப்புகுட்டி அசத்துகிறார். சரண்யா மோகன் தன் பாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார். கிராமத்துப் பெண் எப்படியிருப்பார், திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் பெண் எப்படியிருப்பார் என உணர்ந்து நடித்திருக்கிறார்.
இளையராஜாவுக்கு கிராமத்து படங்கள் என்றாலே அல்வா சாப்பிடுவது மாதிரி! இசை அற்புதமாக இருக்கிறது அதிலும் குதிக்கிற குதிக்கிற குதிர குட்டி பாடலில், அப்புகுட்டியின் பாத்திரமாகவே மாறிவிட்டார் இளையராஜா


ஆனால் எம்மவர்கள் எத்தனை பேர் இதை ரசிப்பார்கள்?

3 comments:

kirrukan said...

[quote]ஆனால் எம்மவர்கள் எத்தனை பேர் இதை ரசிப்பார்கள்?[/quote]

இப்படியான படங்களை நான் பார்க்கவே மாட்டேன் பிறகு எப்படி ரசிப்பதாம்...கி..கீ....?

படம் தொடங்கும் முதல் கீரோ எழையாக இருக்கவேணும் படம் முடியும் பொழுது பணக்காரனாக வந்து ஒரு கதாநாயகியோடு டூயட் பாடி படம் முடிய வேண்டும்..நாங்கள் விசில் அடிக்கவேண்டும்....

C.Paskaran said...

உங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி கிறுக்கன்.
கீரோ வென்றால் ஏழையாக இருந்து பணக்காரனாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்மிடமும் வந்து விட்டதுதான்.

திருநந்தகுமார் said...

செ.பாஸ்கரனின் குதிரையாகிவிட்ட அழகர் சாமியின் குதிரை பற்றிய விமர்சனக்குறிப்பு நன்று.
குப்பைகளைத் தோண்டி குண்டுமணிகளைத் தாருங்கள். குப்பை கொட்டவும் நேரமின்றி அல்லாடும் மனிதர்களில் நானும் ஒருவன்.
விரைவில் பார்க்க முயற்சிக்கிறேன்.
நன்றிகள்