அவுஸ்திரேலியாமலேசியா புதிய உடன்படிக்கை சர்வதேச அகதிகள் சட்ட விதிகளை மீறியுள்ளது நவநீதம்பிள்ளை குற்றச்சாட்டு


 
.
அவுஸ்திரேலியாவுக்குள் தஞ்சம் புகும் படகு அகதிகளை மலேசியாவிற்கு அனுப்புவதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளமையிலுள்ள சட்டத்தன்மை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. அவுஸ்திரேலியக் கரையை வந்தடைய முயற்சிக்கும் படகு மக்களின் பிரச்சினையை கையாள்வதற்குரிய அவுஸ்திரேலியாவின் புதிய திட்டத்தின் சட்டத் தன்மை குறித்தே ஐ.நா.மனித உரிமை




 ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.

800 குடியேற்றவாசிகளை மலேசியாவிற்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா முன்வைத்திருக்கும் திட்டமானது அகதிகளுக்கான சட்ட விதிகளை வெளிப்படையாக மீறும் செயலாகுமென நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் கூடிய மனிதாபிமானத்தை கடைப்பிடிக்குமாறும் அவர் அவுஸ்திரேலியாவை கோரியுள்ளார்.

ஐ.நா.பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்காத மலேசியாவுடன் இந்த அகதிகள் பரிமாற்றம் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மலேசியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கையானது ஜூலியா கிலாட் அரசிற்கு உள்நாட்டு மற்றும் அரசியல் பிரச்சினைகளை கையாள்வதற்கு ஆதரவாக இருக்கும்.

800 படகு மக்களை மலேசியாவிற்கு அனுப்புவது குறித்தே கொள்கையில் அவுஸ்திரேலியா தீர்மானமாக இருந்தால் நான் நினைக்கின்றேன் அது வெளிப்படையாக அகதிகள் சட்ட விதிகளை மீறும் செயல் ஆகும் எனவும் நவநீதிம்பிள்ளை தெரிவித்துள்ளார். துன்புறுத்தல்கள் சாசனம் மற்றும் அகதிகள் தொடர்பான சாசனத்தினை உறுதிப்படுத்தாத நாட்டிற்கு தனிநபர்களை அவுஸ்திரேலியா அனுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் மலேசியாவில் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது.அத்துடன் சர்வதேச தரக் கட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் அவுஸ்திரேலியா இவ்வாறான திட்டங்களுடன் ஒத்துப்போக முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பை மலேசியா உறுதிப்படுத்தாதமையானது படகு மக்கள் மீதான கிலாட் அரசின் ஒட்டுமொத்த அணுகு முறையை விமர்சிப்பதாக அமைகின்றதெனவும் நவநீதம்பிள்ளை குறிப்பிடுகின்றார்.

மக்களை எவ்வாறு திருப்பி அனுப்புவது என்பது முதலாவது தெரிவாக இருக்கக் கூடாது.மக்களை எவ்வாறு ஏற்பது என்பதுதான் முதலாவது தெரிவாக இருக்க வேண்டும் எனவும் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி தினக்குரல்

No comments: