அறவழியா? ஆயுதவழியா? அமரர் மு.தளையசிங்கம் நினைவுகள் - முருகபூபதி

.

‘எழுத்தாளர்கள் Activist ஆக இருத்தல் தகுமா? தகாதா?’ என்னை நீண்டகாலமாக அரித்துக்கொண்டிருக்கும் கேள்வி இது.

பேப்பரும் பேனையும் கற்பனையும் இருந்தால் போதும். எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் குவிக்கலாம். எழுதியவற்றை பிரசுரிக்க பத்திரிகை உலகத் தொடர்பும் கிடைத்துவிட்டால் எழுத்தாளனாகி விடலாம்.

“ஒரு எழுத்தாளனின் கடமை அவ்வளவுதானா? வெறுமனே பெயரும் புகழும் தேடுவது மாத்திரம்தானா அவனது வேலை. தானும் சிந்தித்து மாற்றவர்களையும் சிந்திக்கச் செய்வதும் எழுத்தாளனின் வேலை” என்பார் ஜெயகாந்தன்.




“எழுத்தின் மூலமாகத்தான் மக்களை சிந்திக்கத் தூண்டுகின்றோமே – மக்களுக்கு போதனை செய்கின்றோமே. அதற்கும் அப்பால் நமக்கென்ன அலுவல் கிடக்கின்றது” என்று எழுத்தாளர்கள் எண்ணுவார்களாயின் மேற்குறிப்பிட்டவாறு அவர்களுக்கு பேப்பர், பேனா, கற்பனையுடன் - வெளியிட பத்திரிகையும் இருந்தால் மாத்திரம் போதுமானதுதான்.

சமுதாயத்தில் புரையோடிப்போயுள்ள அழுக்குகளை நீக்கவும், அநீதிகளை அம்பலப்படுத்தி, அவற்றுக்கு மாற்று வழிகளைக் காண்பிப்பதற்கும் எழுத்தை மாத்திரம் ஆயுதமாகப் பாவிப்பதுடன் அவனது கடமை முற்றுப்பெறுகின்றதா?

சிலர் “ஆம்” என்கின்றனர். சிலரோ “இல்லை” அதற்குமேலும் அவன் செயலூக்கத்துடன் இயங்க வேண்டியுமுள்ளது என்கின்றனர். எப்பொழுதும் வித்தியாசமாக சிந்திப்பவர்களினாலும் செயல்படுவர்களினாலுமே ஒரு தேசத்தில் மாற்றமும் முன்னேற்றமும் காணப்படும் என்பர். வேலை, வீடு, உணவு, நித்திரை, குடும்பம் என்று ஒரு வட்டத்துள் சுழன்றுகொண்டு எழுதி, “எழுத்தாளர்” என்ற பெயரை சம்பாதித்தவர்களும் இருக்கின்றனர்.

தன்னலன் பற்றிய சிந்தனையே இன்றி ஊண் உறக்கம் பாராமல் சமுதாயப் பணியே தனது தலையாய கடமை என்று தமது வாழ்நாள் பூராவுமே மக்களோடு இணைந்த Activist எழுத்தாளர்களும் உள்ளனர்.

முதலில் குறிப்பிடப்பட்டவர்களினால் பிரச்சினையே இல்லை. சில சமயங்களில் அவர்கள் Field இல் இறங்காது போனாலும் எழுத்துக்களினால் தாக்கத்தை – சிலிர்ப்பை ஏற்படுத்துவார்கள். அல்லது வெறும் “பச்சைத்தண்ணீர்” எழுத்தாளர்களாகி விடுவார்கள்.

ஆனால் “Activist” ஆக வாழும் படைப்பாளிகளினால் அவர்களுக்கும் பிரச்சினை, மற்றவர்களுக்கும் சங்கடம்” என்ற அசோகமித்திரனின் கருத்தை, கருத்து ரீதியாக எற்கத்தான் வேண்டியுள்ளது. அதற்காக அவர் சொல்லுமாற்போன்று எழுத்தாளர்கள் Activist ஆகிவிடக்கூடாது என்பது என்வாதம் அல்ல.

எனது வாழ்நாளில் நான் முதல்முதலில் இனம்கண்டு கொண்டActivist writer  மு.தளையசிங்கம். நான் ஒரு Activist ஆக வாழ்கின்றேனா இல்லையா என்பதை இன்னமும் என்னால் தீர்மானிக்க முடியாதிருந்த போதிலும் அவ்வாறு வாழத்தான் வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குப் போதித்த குருவாக மு.தளையசிங்கத்தை குறிப்பிடுவேன்.

இவரது நிழலில் வாழ்ந்து ஞானம்பெற நான் முயலவில்லையாயினும் - அவரது வாழ்வும், எழுத்தும், என்னை மிகவும் ஆகர்ஷித்துள்ளது. அவருடன் நெருங்கிப் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பும் சந்தர்ப்பங்களும், கிட்டவில்லையே என்ற ஆதங்கம் மனதை இன்றும் நெருடுகின்றது.

தமிழ் அறிவுலகத்தில் புதிய சிந்தனைகளைச் செலுத்தியதுடன் நின்றுவிடாமல் பாதிப்புற்ற மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பேணிப் பாதுகாப்பதற்காகப் போராடிய ஒரு போராளி தளையசிங்கம்.

மகாகவி பாரதி, காலம் கடந்தும் பேசப்படுவது போன்று தளையசிங்கம் “சிந்தனை உலகத்தால்” நிச்சயம் எண்ணிப் பார்க்கப்படுவார். அவரது தீர்க்க தரிசனமான கருத்துகள் கவனத்திற்குள்ளாகும் என்றே நம்புகின்றேன்.

“உண்மை” அழிவற்றது.

தளையசிங்கமும் உண்மை பேசியவர்- சத்திய வேட்கையுடன் எழுதியவர் – போலி மாயைகளுக்குள் சிறைப்பட்டுச் சிதைந்து போகாதவர்.

சுந்தரராமசாமி எழுதிய “ஜே.ஜே.சில குறிப்புகள்” படித்திருக்கிறீர்களா? ஓரிடத்தில் அவர் எழுதுகிறார். – “பாரதி, புதுமைப்பித்தன், தளையசிங்கம் போன்று ஜே.ஜே.யும் அற்பாயுளில் மறைந்தான். ஆற்றல்மிக்க எழுத்தாளர்களுக்கெல்லாம் அற்பாயுள் தானோ” என்று.

டானியலின் நாவல் ஒன்றிலும் தளையசிங்கம் தாழ்த்தப்பட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்காகப் போராடி – அடக்குமுறையின் கோரத்தால் உயிர் துறந்த அந்தச் சம்பவமும் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறாக, நாவலிலக்கியத்திலும் பொருளானவர் தளையசிங்கம்.

1972ம் ஆண்டு நான் இலக்கிய உலகில் பிரவேசித்த காலம். எனது முதலாவது சிறுகதை இந்த ஆண்டு ஜூலை மாதம் மல்லிகையில் பிரசுரமாகியது.

பெயர், “கனவுகள் ஆயிரம்” நீர்கொழும்பு கடல்வாழ் மக்களின் கதை. இது வெளியாகி ஓரிரு மாதங்களில், கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலய மண்டபத்தில் “பூரணி” காலாண்டிதழ் வெளியீட்டு விழாவும் - “ஈழத்து இலக்கிய வளர்ச்சி” என்ற தலைப்பில் கருத்தரங்கும் பேராசிரியர் கா.சிவத்தம்பி தலைமையில் நடைபெற்றன.

நான் கலந்து கொண்ட முதலாவது இலக்கியக் கூட்டம் அது. எப்பொழுதும் “முதலாவது” மனதில் பசுமையாகப் பதிந்துவிடும்தானே - இங்குதான் பலர் எனக்கு அறிமுகமானார்கள். அடுத்து, “தளையசிங்கம்” பேசுவார் - என்று சிவத்தம்பி கூறினார்.

ஒரு மெலிந்த உருவம், எழுந்து வந்து அமைதியாக, நிதானமாக கருத்துக்களை முன்வைத்தது, மு.நித்தியானந்தன் வெகுண்டெழுந்து ஆவேசமாகத் தனது மாற்றுக்கருத்துக்களைச் சொன்னார். அன்று தான் அவரும் எனக்கு அறிமுகமானார்.

வாதப் பிரதிவாதங்களும் தொடர்ந்தன. தளையசிங்கம் பேசிவிட்டு, மற்றுமொரு அறையில் “சிகரெட்” புகைத்துக் கொண்டிருந்த எஸ்.பொ.விடம் வருகிறார். டொமினிக் ஜீவாவும் பின்தொடர்ந்து வந்து, தளையசிங்கத்துடன் காரசாரமாக வாதம் செய்கிறார். ஜீவா எப்பொழுதும் உணர்ச்சி வசப்பட்டு உரத்துப் பேசும் இயல்புள்ளவர்.

அவர் போட்ட சத்தம் என்னையும் இன்னும் சிலரையும் எழுந்து வந்து வேடிக்கை பார்க்க வைக்கிறது. – எஸ்.பொ. நளினமாகச் சிரித்துக் கொண்டு – சிகரெட் புகையை விட்டுக் கொண்டிருக்கிறார்.

மண்டபத்தில் கருத்தரங்கு தொடர்கின்றது. ஜீவாவின் சத்தம் மண்டபம் வரையில் நீள்கிறது. சிவத்தம்பி – “என்னவாம்” என்று பார்வையால் கேட்கின்றார்.

 ஜீவா ஆத்திரம் அடங்கி, மீண்டும் மண்டபத்துள் வந்து அமர்கிறார்.தளையசிங்கமும் நிதானமிழக்காமல் அமைதியாகப் பின் தொடர்ந்து வந்து அமருகின்றார்.

அங்கு ஏற்பட்ட எதிர்பாராத சூழ்நிலையினால் தளையசிங்கத்துடன் பேசுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. நீர்கொழும்புக்குப் போய்ச் சேர வேண்டுமே, அம்மா பார்த்துக் கொண்டிருப்பார்களே - என்ற கவலை மனதை வாட்டியது. புறப்பட்டு விட்டேன். எனினும் தளையசிங்கத்துடன் ஓரிரு வார்த்தைகளாவது பேசக் கிடைக்கவில்லையே என்ற கவலை வேறு.

இந்தக் கவலை அந்தக் கூட்டம் நடந்து இரண்டாவது நாளிலேயே எதிர்பாராத விதமாகத் தீர்ந்து விட்டது. அன்று ஒரு மாலை வேளை. நான் கொழும்பு மெலிபன் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தேன். வீதியோரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு இலக்கியக் கூட்டத்தில் நான் பார்த்த “அந்த மெலிந்த உருவம்” கைகளைக் கட்டிக்கொண்டு யாருக்காகவோ காத்து நிற்பது தெரிகிறது.

“அட… தளையசிங்கம் அல்லவா..?”

அருகே சென்று, “வணக்கம்” என்றேன். என்னை ஏற இறங்கப் பார்த்து சிறு தயக்கத்துடன் “வணக்கம் நீங்கள் யார்? உங்கள் பெயர்?” தளையசிங்கம் கேட்டார், சொன்னேன்.

அந்த மெலிந்த உருவம் அணிந்திருந்த கண்ணாடிக் கூடாக அந்தக் கண்களைப் பார்த்தேன். “அப்பா.. என்ன தீட்சண்யமான ஒளி… சத்தியமாகச் சொல்கிறேன், தளையசிங்கத்தை போற்றுவதற்காக நான் கூறும் விதப்புரையல்ல”.

ஞானிகளிடம்தான் அத்தகைய “பார்வை” இருக்கும் என படித்ததுண்டு. அப்படி ஒரு பார்வையை அன்று நான் அவரிடம் கண்டேன். சற்று வேளையி பூரணில் ஆசிரியர் என்.கே.மகாலிங்கமும்  தளையரின் தம்பி மு.பொன்னம்பலமும் அவ்விடத்துக்கு வந்து விடுகின்றனர்.

“உழைக்கும் வர்க்கத்திற்காகவே சஞ்சிகை வெளியிடுகின்றேன்” எனக் கூறும் டொமினிக் ஜீவாவின் “மல்லிகையில்” நாம் இது வரையில் அறிந்திராத உழைக்கும் வர்க்கம் ஒன்றின் “பேச்சு மொழி வழக்கை” அண்மையில் இவரது கதை மூலம் அறிந்தோம். – என்று என்னை தளையருக்கு அறிமுகப்படுத்தினார் நண்பர் மகாலிங்கம்.

“அப்படியா… சந்தோஷம் … இன்னும் அந்தக் கதையை நான் படிக்கவில்லை, உங்களைப் பார்த்ததில் மிகமிகச் சந்தோஷம் தொடர்ந்து எழுதுங்கள், எதிர்பார்க்கிறோம்” தளையசிங்கம் எனது கைகளைப் பற்றிக் கொண்டு வாழ்த்துக் கூறினார். இது தான் “முதலும் இறுதியுமான சந்திப்பு” என கனவிலும் நான் நினைக்கவில்லை. இச்சந்திப்பின் பின்னர் சில மாதங்கள் கழித்து அதிர்ச்சியான செய்தி ஒன்று கேட்டேன்.

“தளையசிங்கம் 2-4-1973 இல் மறைந்தார்.” என்னால் தாங்கமுடியாத சோகம். அவரது மரணத்தின் பின்னணியை அறிந்தபோதுதான் தளையசிங்கமும் ஓர் Activist Writer என்ற உண்மையும் தெரிந்தது.

நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தினால் அவருக்கு, அவர் மறைந்து இருபது நாட்களிலேயே (22-4-73) அஞ்சலிக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த அமைப்பு நடத்திய முதலாவது நிகழ்ச்சியே தளையசிங்கத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் அஞ்சலிக் கூட்டமாக அமைந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது.

தளையசிங்கமும் பெரும்பாலான எழுத்தாளர்களைப் போன்று “தானுண்டு தன்பாடுண்டு” என்று வாழ்ந்;திருக்கமுடியும். அடிநிலை மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாணாமல் வள்ளுவருக்கு விழாவும் மாநாடும் நடத்திய பெரிய மனிதர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று, அவர்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பி;ப் போராடியதன் காரணம் என்ன?.

அவருக்கு ஒரு நோக்கம் இருந்தது. தன் பிரதேசத்து மக்கள் கோயிலில் குடிநீர் பெறுவதற்கு வக்கில்லை. இந்தச் சமயத்தில் வித்தியாசமாகச் சிந்தித்தார், செயற்பட்டார். குடிநீருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த “கண்ணகி அம்மன்” ஆலய வளவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

சாதிமான்களின் தூண்டுதலினால் பொலிஸாரின் கோரமான தாக்குதலுக்கு இலக்கானார். அவரைத் தாக்கிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் சொன்னாராம், “நீ ஆறு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டாய்” என்று.

அந்த வாக்கு பலித்தது.

இதனால்தான் தளையசிங்கத்தின் மரணத்தை கண்டித்தவர்கள் “அது ஒரு கொலை” என்றனர். சாதிமான்களின் சதிராட்டம் தளையரை காவு கொண்டது. “தளை” களை நீக்கப் போராடிய “தளையர்” எமக்கு முன்மாதிரியானார்.

சமுதாய வாழ்வில் போராளியாக விளங்கிய தளையசிங்கம், இலக்கிய உலகிலும் சமர் புரியத் தவறவில்லை என்பதற்கு அவரது விமர்சனங்கள் சாட்சி.

மாக்ஸிஸத்துக்கு அப்பால் சிந்திக்காமல் எல்லை வகுத்துக் கொண்டவர்களுக்கு தளையசிங்கத்தின் “பிரபஞ்ச யதார்தவாதம்” பிற்போக்குத்தனமானதாக இருக்கலாம். தளையசிங்கம் எழுதியது புரியவில்லை என்றவர்களும் (முற்றாக ஒதுக்கியவர்களும் - ஒதுங்கி நின்றவர்களும்) பிறிதொரு காலத்தில் மீண்டும் எடுத்துப் படிப்பார்கள் அல்லது தேடிப் படிப்பார்கள் என்றே கருதுகின்றேன்.

ஆம், அவரது சிந்தனைகளைப் புரிந்து கொள்வதில் சிரமங்கள் உண்டு. அதற்கான பக்குவம் எம்மில் (நான் உட்பட) பலருக்கு இன்னும் வரவில்லை என்பதுதான் உண்மை. இக்கட்டத்தில் ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகின்றேன்.

1984ஆம் ஆண்டு நான் தமிழகம் சென்றிருந்த சமயம், என்னைப் பெரிதும் கவர்ந்த பிரபல எழுத்தாளர் கி.ராஜராராயணன் அவர்களைத் தேடி – அவர் வாழ்ந்த விவசாயக் கிராமமான “இடை செவலுக்கு” (திருநெல்வேலிக்கும் சாத்தூருக்கும் இடைப்பட்ட கோவில்பட்டி என்ற ஊருக்கு அருகாமையில் உள்ள சிறிய அழகிய கரிசல்காட்டு கிராமம் )சென்றேன்.

எழுத்தாளர் சிதம்பரரகுநாதனின் துணைவியார், ரஞ்சிதம் அவர்கள் எனக்கு வழிசொல்லி பஸ் ஏற்றி விட்டார்கள். (ரகுநாதன் என் தந்தை வழி உறவினர்) முன்னறிவிப்பின்றிச் சென்ற என்னை கி.ரா. வும் அவரது துணைவியாரும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தனர். நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ் இலக்கிய உலகில் கி.ரா மிகவும் வித்தியாசமான மனிதர்.

“விமர்சனங்களை படிக்க மாட்டார்” என்ற உண்மை அச்சந்திப்பில் தெரிந்தது. எனினும் அவர் தளையசிங்கத்தின் எழுத்துக்களை கருத்தூன்றிப் படித்திருக்கிறார்.

“கைலாசபதி, சிவத்தம்பி என்றெல்லாம் பல விமர்சகர்கள் இருப்பதாக அறிந்ததுண்டு. ஆனால் அவர்களை நான் படித்தில்லை. இருந்தாலும் தளையசிங்கம் என்று ஒருவர்… கொஞ்சம் கண்களை நுழைச்சுப் பார்த்தேன்.. படிக்கும் போது, ஒரு “சுயம்பான சிந்தனையாளர்” என்று உணர முடிந்தது.” என்று கூறிய கி.ரா உள்ளே சென்று, “சக்தி” என்ற மாத இதழ் ஒன்றை எடுத்து வந்து காட்டுகிறார்.

தமிழகத்தில் வெளியாகிறது. “சக்தி”, அதில் தளையசிங்கத்தின் கட்டுரை ஒன்றை அவர் மறுபிரசுரம் செய்வித்திருக்கிறார்.

1990 ஆம் ஆண்டில் தமிழகம் சென்ற சமயம் சோவியத் கலாச்சார நிலையத்தில் “கலை இலக்கியப் பெருமன்ற”த்தின் மாநாட்டிலும் பார்வையாளனாகக் கலந்து கொண்ட பொழுது இடைவேளையில் வெளியே வந்தேன். ஒருவர் மேஜையில் பல புத்தகங்களைப் பரப்பி வைத்துக் கொண்டு விற்பனை செய்கிறார்.

அதில் ஒன்று “மு.தளையசிங்கம் - ஒரு அறிமுகம்” இதனை அவரது தம்பி பொன்னம்பலமும் சுந்தரராமசாமியும் எழுதியுள்ளனர். கோவை, “சமுதாயம் பிரசுராலயம்” வெளியிட்டுள்ளது. இந்தப் பிரசுராலயமும் “க்ரியா”வும் தளையரின் மேலும் சில புத்தகங்களை வெளியிட்டுள்ளன.

தளையசிங்கத்தின் சிந்தனைகள் “புங்குடுதீவு”க்குள் சிறைப்பட்டவை அல்ல, என்பதற்கு இதற்கு மேல் வேறு ஏதும் சான்றுகள் வேண்டுமா?

ஏறக்குறைய 28 ஆண்டுகளின் முன்பு கண்டியிலிருந்து வெளியாகிய செய்திப் பத்திரிகையில் பிரசுரமான “ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – (1956-1963)” என்ற தொடர் கட்டுரை, பின்னாளில் நூலாக வெளிவந்தது. இலக்கிய விமர்சனத்துறையில் நாட்டமுள்ள புதிய தலைமுறை எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய பயனுள்ள நூல்.

தளையசிங்கம் தீர்க்கதரிசனம் மிக்க படைப்பாளி என்பதற்கு இந்நூல் சிறந்த உதாரணம். மிகவும் தெளிவாக தனது கருத்துக்களை முன் வைக்கின்றார். இந்நூலைப் பற்றிய அறிமுகம் இங்கு அவசியமில்லையாயிலும் “மாற்றுக் கருத்தோட்டம் மிக்க” கைலாசபதி, சிவத்தம்பி, ஏ.ஜே. கனகரட்னா, எஸ்.பொ. முதலான ஆற்றல் மிக்க எழுத்தாளர்களைக் கடுமையாக விமர்சிக்கும் பொழுதும் - நயமுடன் நாகரீகமாக – தனது நிலைப்பாட்டையும் தெரிவித்து, அவர்களின்; எழுத்தின் போக்குகளையும் இனம் காட்டுகின்றார்.

விமர்சனக் கலையை – “சீரியஸாக” எழுத விரும்புவோர் - தளையசிங்கத்திடம்தான் கற்க வேண்டும்.

புரட்சியையும் அது கொண்டுவரும் சர்வாதிகாரத்தையும் கண்டு அதிருப்திப்பட்டு வெளிநாட்டுக்கு ஓடுபவர்கள் ஒரு நாளும் தங்கள் உள்நாட்டுத் தேவைகளுக்கு உதவுபவர்களாய் இருப்பதில்லை. அவர்கள் ஆத்திரத்தாலும் வெறுப்பாலும் பீடிக்கப்பட்டு புரட்சியால் உள்நாட்டில் ஏற்பட்ட நல்ல பண்புகளைக் கூட ஒப்புக் கொள்ளாதவர்களாக மாறிவிடுகின்றனர். (பக்கம் -150)

“நற்போக்கு”க்கூடராம் கைலாசபதியின் பெயரை முற்றாக ஒதுக்கிவிட முயல்கிறது. முற்போக்குக் கட்சி, எப்படி அவரையே முழுமுதல் இலக்கியக் கடவுளாக வழிபட விரும்பிற்றோ அப்படியே – நற்போக்கு அவரின் பெயரை முற்றாக அழித்துவிட முயல்கிறது. அதனால் இரண்டும் பிழைத்து விடுகின்றன. உண்மை இரண்டிலும் இல்லை. இரண்டுக்கும் இடையில்தான் கைலாசபதி. கட்டாயம் நம் இலக்கியப் பார்வையை ஒருபடி உயர்த்தியேதான் இருக்கிறார். முதலில் அதை ஒப்புக் கொண்டுதான் கைலாசபதியின் செல்வாக்கைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி ஆரம்பமாக வேண்டும். (பக்கம் 41).

இவ்வாறு தளையசிங்கம் அக்கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதியற்புதமான சிந்தனையாளன் இவ்வாறு எம்மத்தியில் வாழ்ந்தார் என்பதே பெருமைக்குரிய விடயம். அவரது எழுத்துக்களைப் படிக்கும் போது எம்மை அறியாமலேயே எமக்குள் “தேடல்” மனப்பான்மை புகும்.

இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் தளையசிங்கத்தைப் படிக்க வேண்டும்.

இந்த ஆக்கத்தை நிறைவுசெய்யும்போது ஒரு முக்கியமான தகவலையம் சொல்ல விரும்புகின்றேன்.

தமிழ் ஈழப்போராட்டத்தில் முதலாவது போராளியாக கருதப்படும் உரும்பிராய் சிவகுமாரன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில்தான் தளையசிங்கமும் புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோயில் முன்றலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குடிநீர் பிரச்சினையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

தளையர் இயல்பாகவே சாதுவான மனிதர். அகிம்சையில் நம்பிக்கை கொண்டவர். ஊதிவிட்டால் விழுந்துவிடும் உடல் அமைப்பு. இந்த அப்பாவி மனிதரை பொலிஸார் ஏன் இழுத்துவந்து அடைத்திருக்கிறார்கள் என்ற சந்தேகம், இன்ஸ்பெக்டர் சந்திரசேகராவுக்கு கைக்குண்டு எறிந்தவர் என்ற சந்தேகத்தில் பிடிபட்டு வந்திருந்த சிவகுமாரனுக்கு எழுந்தது?

“ சேர்… என்னைத்தான் தீவிரவாதி எனச்சொல்லி இழுத்துவந்தார்கள். உங்களை எதற்காக தடுத்துவைத்திருக்கிறார்கள்?” என்று கேட்கிறார் சிவகுமாரன்.

“ தம்பி, எங்கள் புங்குடுதீவு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ள உரிமையில்லை. அதற்காக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினேன். சில சாதிமான்களின் தூண்டுதலால் அடித்து இழுக்கப்பட்டு வந்துள்ளேன்.” என்றார் தளையசிங்கம்.

இதனைக்கேட்ட சிவகுமாரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

“ சேர்… உங்களுக்கு விசர். இந்த சாதிமான்களை இப்படி அகிம்சை வழியில் படிப்பித்து திருத்த முடியாது. நிங்கள் என்ன செய்திருக்கவேண்டும் தெரியுமா? மேல்சாதிக்காரரின்ட வீட்டுக்கிணறுகளுக்குள்ள பொலிடோலை ஊத்தியிருக்கவேணும்.”

இவ்வளவும்தான் அந்தத்தகவல்.

சில வாரங்களில் சிவகுமாரன் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். தiளையசிங்கம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சொன்னவாறே சில மாதங்களில் இறந்துவிட்டார்.

அவர் இறப்பதற்கு முன்னர், இலங்கையில் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகும் அறிகுறியை, தான் சிவகுமாரன் என்ற இளைஞரிடம் கண்டுகொண்டதாக சொல்லியிருக்கிறார்.

காலங்கள் உருண்டோடின. அகிம்சையில் ஆரம்பித்த போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறி, மீண்டும் கவனஈர்ப்பு, உண்ணாவிரதம் என்றெல்லாம் பலவகையான அகிம்சைப்போராட்டங்களின் பாதைக்கு திரும்பியிருக்கிறது.

தளையசிங்கம் தீர்க்கதரிசியா?

(குறிப்பு: முருகபூபதியின் காலமும் கணங்களும் நூலில் இடம்பெறவுள்ள கட்டுரை)

5 comments:

tamilmurasu said...

தலையசிங்கத்தின் போர்ப்பறை சொல்லிய விடயங்கள் இன்று நடப்பதை கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அவருடைய மெய்யுள் என்ற நாவலில் சொல்லப்பட்டது போல் சோசலிசத்தைக் கட்டிக்காப்பதற்கும் சகலதையும் துறந்த ஒரு வெளியான மனம் தேவை அதை அடைந்தால்ததான் எதுவும் நிறைவு பெறும்.முற்றுப்பெறாததற்கு காரணமும் அதுதான் "நான்"

இந்திரன்

kirrukan said...

சோசலிசம் வேறும் ஏட்டுச்சுரக்கைதான்...இன்றைய காலகட்டத்தில் இது எந்த வகையில் எமக்கு உதவபோகிறது..கதை கட்டுரை எழுதுவதற்கு மட்டும் நல்லாக இருக்கும் .வேறும் கற்பனைவாதம்.மனித உரிமைகளை மதிக்க தெரியாத நாடுகள்தான் இப்ப சோசலிசம் ,மவோயிசம் என்று கூக்குரல் இடுகிறார்கள்.

திருநந்தகுமார் said...

எனது ஆசானான் சிவராமலிங்கம் அவர்களும், அவரின் தம்பி புலவர் ஈழத்துச் சிவானந்தனும் அடிக்கடி தளையசிங்கம் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொள்வர். அவுஸ்திரேலியாவில் தளையசிங்கம் பற்றிய நினைவுகளை மீட்டுவந்த நல்லதொரு கட்டுரை இது. தமிழ் பயிலும் மாணவருக்கும் உதவக்கூடிய தகவல்.
உருபராய் சிவகுமாரனின் நினைவுதினம் ஜுன் ஐந்து. அதே தேதியில் எழுத்துலகப் போராளி தளையசிங்கம் பற்றிய ஆக்கம் வந்தமை பொருத்தமாந்தே.

tamilmurasu said...

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி திரு

என்ன கிறுக்கன் சோசலிசம் என்றால் காத தூரம் ஓடுகிறீர்கள் ???????? வருகைக்கு நன்றி கிறுக்கன்

kalai said...

சோசலிசம் பேசும் கியூபாவும், சீனாவும், ரஸ்யாவும் ஐ நாவின் சிறிலங்காவிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை எதிர்க்கின்றன. ஆனால் முதலாளித்துவ நாடுகளான அவுஸ்திரெலியாவும், கனடாவும் ,அமெரிக்காவும் ,பிரித்தானியாவும் ஐ நாவின் சிறிலங்காவிற்கு எதிரான போர்க்குற்றவிசாரணைக்கு ஆதரவு தருகின்றன.