புகழ்பெற்ற திரையுலக நட்சத்திரம் எலிசபெத் ரெய்லர் காலமானார்

.
வாஷிங்டன்: இருபதாம் நூற்றாண்டின் மிகப் புகழ்பெற்ற திரையுலக நட்சத்திரமான எலிசபெத் ரெய்லர் 23 ம் திகதி மார்ச் மாதம் புதன்கிழமை தனது 79 ஆவது வயதில் லொஸ் ஏஞ்சல்ஸில் காலமானார்.
இரு தடவைகள் ஒஸ்கார் விருதை வென்ற நடிகையான ரெய்லர் நீண்டகாலமாக நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் அண்மைக் காலமாக இருதயக் கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்தார்.








செடர்ஸ்சினாய் மருத்துவ நிலையத்தில் ரெய்லர் உயிரிழக்கும் போது அவரது நான்கு பிள்ளைகளும் அவருக்கருகில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நெஷனல் வெல்வெட், கிளியோபட்ரா உள்ளிட்ட மிகப் பிரபலமான திரைப்படங்களில் ரெய்லர் நடித்திருந்தார்.

மிகச் சிறந்த நடிகையாகவும் மிக அழகான பெண்ணாகவும் விளங்கிய ரெய்லர் தனது நடிப்பு, கவர்ச்சிக்குச் சமமாக திருமண வாழ்க்கையை அமைத்துக் கொள்வதிலும் புகழ் பெற்றவர்.

1950 60 காலப்பகுதியில் புகழின் உச்சத்திலிருந்த ரெய்லரின் பெயர் 1958 1961 வரை ஒஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

ஏற்கனவே கொன்ராட் ஹில்டன், ஜுனியர், மைக்கல் வைல்டிங், மைக்கல் ரொட் மற்றும் எடி பிஸர் ஆகியோரைத் திருமணம் செய்திருந்த ரெய்லர் 1964 இல் கிளியோபட்ரா திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த பேர்பணை திருமணம் செய்திருந்தார்.

எனினும் 1975 இல் இந்த உறவும் முறிந்துவிட அதன் பின்னர் ஜோன் டபிள்யூ வோர்னர் மற்றும் லறி போர்ரென்ஸ்கி ஆகியோரைத் திருமணம் செய்திருந்தார்.

முதல் படமான நெஷனல் வெல்வெட் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது ரெய்லர் வீழ்ந்து விபத்துக்குள்ளானதிலிருந்து அவருக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் ஆரம்பமாகின.

1961 இல் கபவாதத்தால் பாதிக்கப்பட்ட ரெய்லர் மது மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளுக்கு அடிமையானார்.

இதனைத் தொடர்ந்து உடலில் உண்டான பல்வகை நோய்களுக்கான சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளான ரெய்லர் 2004 இலிருந்து இருதய நோயால் பாதிக்கப்பட்டார்.

மலர்கள் மற்றும் பூங்கொத்துக்குப் பதிலாக எலிசபெத் ரெய்லரின் அறக்கட்டளை நிறுவனத்திற்கு பங்களிப்பை நல்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரெய்லரின் குடும்பத்தினரால் விடுக்கப்பட்ட அறிக்கையில்;

எமது தாய்க்கு உலகில் சிறப்பான இடம் உள்ளது என்பதை நாம் அறிவோம். அவரது புகழ் என்றைக்கும் மறையாது என்பதுடன் அவரது அன்பு எப்போதும் எமது இதயங்களில் வாழ்ந்துகொண்டே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.பி.சி.



No comments: