மகாவம்சத்திலிருந்து சிங்கள தேசியவாதத்தை நோக்கி -1

.
-நடராஜா முரளிதரன்-

அமெரிக்காவில் வாழும் “அர்ஜுனா குணரத்னா” என்ற சிங்கள எழுத்தாளர் மகாவம்சத்திலிருந்து சிங்கள தேசியவாதத்தை நோக்கி எவ்வாறு சிங்கள மக்களின் உணர்வுகள் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளன என்பது குறித்து எழுதிய கட்டுரையொன்றினை சாரமாகக் கொண்டு இக் கட்டுரை எழுதப்படுகிறது. (ஆதார நூல் : வியூகம் இதழ் -2, கட்டுரை -: வரலாற்றுப் பிரக்ஞையின் உருவாக்கம்; மகாவம்சத்திலிருந்து சிங்கள தேசியவாதத்தை நோக்கி)

சிங்கள மக்கள் தம் கற்பனையில் தங்களது வரலாறு தொடர்பான ஐதீகங்களை, உணர்வுகளை எவ்வாறு பற்றிப் பிடித்துள்ளார்கள்? அது அவர்களது ஆழ்மனதில் எவ்வாறு புதைந்து கிடக்கின்றது? என்பவை குறித்துப் பல ஆதாரங்கள் பேசப்படுவது வழக்கம். முக்கியமாக ஆய்வாளர்களால், எழுத்தாளர்களால் இவை குறித்த ஆக்கங்கள் பல்வேறு கோணங்களிலிருந்தும் எழுதப்பட்டுள்ளன.


இவ்வாறான ஐதீகங்களுக்கு அடிப்படையாக முன்வைக்கப்படுபவற்றில் விஜயன், துட்டகைமுனு கதைகள் , இலங்கைக்குப் புத்தர் மேற்கொண்டதாகக் கூறப்படும் மூன்று விஜயங்கள் தொடர்பான புராணக் கதைகள் மிகவும் பிரபல்யம் படைத்தவை. இவ்வாறான வரலாற்றுக் கதைகளில் ஆறாம் நூற்றாண்டில் எழுதியதாகக் கருதப்படும் “மகாவம்சம்” அதி முக்கியத்துவம் படைத்தது.

எனவே இதில் சிங்கள மக்களது வரலாற்று உணர்வு(பிரக்ஞை) குறித்துப் பெருமித உணர்வுகளுக்கூடாக அதீதமாகக் கருத்துக் கூறுபவர்கள் அதன் அடிப்படையான அம்சங்களில் பெரும் மாறுதல்களுக்குள்ளாகாமல் அந்த உணர்வு தொடர்வதாகவே எழுதியுள்ளார்கள். கடந்த காலம் என்பது நிகழ்கால அரசியல் தேவைகள் , சூழல்கள், நிர்பந்தங்கள் என்பனவற்றின் மேல் கட்டியெழுப்பப்பட்டதாகக் கொள்ளலாமா? கடந்த காலம் என்று நாம் குறிப்பிடுகின்ற போது தற்போது நாம் எழுதுகின்ற , எழுத முனைகின்ற கடந்த கால வரலாறு பற்றியதே என்பதை நாம் உணர்நது கொள்ளுதல் அவசியமானது.

கிறீஸ்தவம், கத்தோலிக்கம், மேற்குமயமாதல் போன்ற ஆதிக்கங்கள் , ஊடுருவல்களுக்கு எதிராகப் பௌத்த சிங்கள மக்களை எழுச்சி கொள்ள வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட அணுகுமுறையானது அவை பிரச்சினை தராதவையாக மாறிவிட்ட பின்னரும் கூட வேறு வகையான விடயங்களுக்காகத் , தேவைகட்காக இதே அணுகுமுறை பயன்படுத்தப்படலாம் என்பதை எமக்குப் புலப்படுத்துகிறது.

பௌத்த மறுமலர்ச்சியின் தந்தை என்று கூறப்படுகின்ற “அநகாரிக தர்மபாலா” பௌத்த மறுமலர்ச்சிக்கான எடுகோள்களை மேற்கு நாட்டவர்களது கீழைத்தேசம் தொடர்பான கருத்துருவாக்கங்களில் இருந்தே பெறுகின்றார். பௌத்த மறுமலர்சி என்பதுதான் நவீன சிங்கள தேசியவாதத்துக்கான அடித்தளத்தை இட்டது. ஆனால் சிங்கள மக்களது இந்த வரலாற்று உணர்வானது ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அதே சமயம் மாறிவரும் சமூக , பொருளாதார , வரலாற்றுக் கட்டுமானங்களில் மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்ற வேளையில் ஏற்கனவே உள்ள அம்சங்களையும் உபயோகித்துத் தற்போது உருவாக்கப்பட்டதே இந்த வரலாற்றுப் பிரக்ஞை (உணர்வு) என்பதாகக் “குணரத்னா” எழுதிய கட்டுரையின் மையப் பொருள் அமைகிறது.

மகாவம்சம், நவீன வரலாற்று ஆசிரியர்கள் இதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தினை வைத்துக் கொண்டுதான் இலங்கையின் வரலாறு தொடர்பான பொது மக்கள் தளத்திலான உரையாடல்கள் அமைகின்றன.

பாடசாலை மாணவர்கள் - பாடங்கள்
பொது மக்கள், அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள் பயன்படுத்தும் சொல்லாடல்கள்.  நாடகம், இலக்கியம், ஜனரஞ்சக சினிமா வெளிப்படுத்தும் உரையாடல்கள்.
ஆரிய இனக் கோட்பாடு

இது 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கோட்பாடு. வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய ஆரியர்களது வாரிசுகளாக , வழித் தோன்றல்களாகச் சிங்கள மக்கள் உருவகிக்கப்படுகிறார்கள். இந்தக் கருத்துருவாக்கத்தைப் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தையென்று கருதப்படும் “அநகாரிக தர்மபாலாவே” 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிரபல்யப்படுத்தினார். இதற்கான ஆதார ஊற்று மகாவம்சமே. இதன் மூலம் 2500 வருடங்களை உள்ளடக்கிய தொன்மையான வரலாற்றுப் பாரம்பரியத்தைச் சிங்கள மக்கள் இலங்கையில் பாத்தியதை கோர முடிகின்றது.

கர்ண பரம்பரைக் கதைகளின் படி அதற்கூடாக இழையோடி வெளிப்படுத்தப்படுவது பௌத்தம் இலங்கையில் பேணப்படுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாகச் சிங்கள மக்கள் உள்ளார்கள் என்பதே. ஆரியர் என்ற ஓர் இனம் இருந்தது என்ற கருத்தை இன்று பொதுவாக அறிஞர்கள் ஏற்பதில்லை ( இலங்கையில் தமிழர் - கா.இந்திரபாலா, பக்கம் 145).

“மகாவம்சம்” என்ற நூலில் இரு இடங்களில் மாத்திரமே “சிங்களம்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தென்னிந்தியப் படையெடுப்புக்கள் எவ்வாறு மாபெரும் சிங்கள நாகரீகத்தின் அழிவுக்குக் காரணமானது என்று கூறி அதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது அதனுடன் இணைந்த உலக வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு சேர்ந்து வளர்ச்சியடைந்து வந்துள்ளது என்பதை இங்கு நாம் நோக்க முடியும். காட்டுமிராண்டிகளால் இந்தத் தீவு அழிக்கப்படுவதற்கு முன் இந்த அழகிய தீவு ஆரிய சிங்களவர்களின் சொர்க்கமாக விளங்கியது என “அநகாரிக தர்மபாலா” கூறுகின்றார்.
 
இதில் முக்கியமான விடயமாக அவதானிக்க வேண்டியது என்னவெனில் நாம் மக்களது வரலாற்று உணர்வு(பிரக்ஞை) பற்றிக் கலந்துரையாடும் போது புத்திஜீவிகள், மேட்டுக்குடிச் சிந்தனையாளர்களது தாக்கம் பற்றித்தான் உண்மையில் பேசுகிறோம். இது ஒட்டு மொத்த மக்கள் திரளின் கருத்தையும் , அபிப்பிராயத்தையும் உள்ளடக்கியிருப்பதாகக் கொள்ளலாமா? அவ்வாறு கொண்டிருப்பதற்கான அவசியம் கிடையாது. அப்படிக் கொண்டிருப்பதாகக் கருதுமிடத்து அதன் முழுமை குறித்த கேள்விகள் எழுவதற்கான சாத்தியங்கள் பற்றிய வாய்ப்புக்களையும் நாம் கவனத்தில் கொள்ளல் அவசியமானது .

ஒரு சகாப்தத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்கள் அந்தச் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்க சக்திகளின் கருத்துக்களேயாகும் என்ற “மார்க்ஸின்” சொற்றொடரொன்று “குணரத்னாவால்” சுட்டப்படுகின்றது.

நவீன சமுதாயத்தில் காணப்படும் போக்குவரத்துச் சாதனங்கள், பத்திரிகை, ரேடியோ ,தொலைபேசி, பாடத்திட்டங்கள், கல்விமுறை போன்றவற்றிற்கூடாக ஆதிக்க சக்திகள் தமக்கான கருத்தியல்களை சமூகத்தில் வலுவாக வேருற்றி விடுகின்றன. நவீன இலங்கையில் அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகள, கிராம ஆசிரியர்கள், சித்த வைத்தியர்கள் ஆகியோர் காலனித்துவ ஆட்சியின் போது குறிப்பாக பிரிட்டிஸ் ஆட்சியின் போது அற்ப சலுகைகள், சிறிதளவான பொருளாதார மேம்படுத்தல்கள் போன்றவற்றை ஈட்டிக்கொள்வதில் சிங்களக் குட்டி முதலாளிகள் ஈறாகத் தங்களது பிரதான போட்டியாளர்களாகத் தமிழர்களை நோக்குகிறார்கள்.

எனவேதான் “பௌத்த மறுமலர்ச்சி” தொடர்பான கருத்தியல் நிலைப்பாடு சாதகமானதாகச் சிங்களக் குட்டி முதலாளிகள், சிங்கள மேட்டுக் குடிகள் ஆகியோரால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. இங்குதான் நவீன இலங்கையின் முனைப்பாகத் தெரிகின்ற புத்திஜீவி மேட்டுக்குடியின் “வரலாற்றுப் பிரக்ஞை” என்பது சிங்கள மக்களால் முழுவதுமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. ஆனால் இலங்கையின் பழைய வரலாற்றுக் காலகட்டங்களில் இவ்வாறான அணுகுமுறை சிங்கள மக்களின் வரலாற்று உணர்வு தொடர்பாக எவ்வாறு இருந்திருக்க முடியும் என்பதற்குப் போதிய சாட்சியங்கள் கிடையாது.

இலங்கை வரலாற்றில் பண்டைய இடைக்கால கட்டங்களில் சிங்கள, பாளி மொழிப் படைப்புக்கள் மேட்டுக்குடியைச் சேர்ந்த புத்திஜீவிகளின் எழுத்தாக்கங்களே. ஏனவே அவை ஒட்டுமொத்த மக்கள் திரளின் கருத்துக்களை வெளிப்படுத்துவனவாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

இவ்வாறான தொன்மையான பிரதிகள் கூறும் கருத்தியல்கள் மொழி வழித் தேசியவாதத்தில் வெளிப்படும் சிங்களவர் என்ற நவீன தேசியவாதக் குறியீட்டை அதன் அர்த்தத்தில் பிரதிபலிக்கவில்லை.

ஆகவே அந்தச் சமூகம் “பௌத்தர்கள்” என்ற கற்பிதம் கொண்ட சமூகமாகவே குறைந்த பட்சம் 10ஆம் நூற்றாண்டு வரையில் நோக்கப்படுகின்றது. ஏனவே இதற்குள் தமிழர், சிங்களர் என்ற இரு தரப்பாரும் பௌத்தர்களாக நோக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு உண்டு. “மகாவம்சம்” என்பது பௌத்த துறவிகளுக்கான கற்றலுக்காகப் பயன்பட்ட அதேவேளை பயிற்சி முறைகளுக்குமான பிரதியாகவும் அது அமைகிறது. இலங்கையின் வரலாற்றை எழுதும் நோக்கிலான படைப்பாக அது தொகுக்கப்படவில்லை. பௌத்த நிறுவனத்தைப் புனிதப்படுத்தும் நோக்கிலேயே அதன் உருவாக்கம் அமைந்தது.

(இன்னும் வரும்)

1 comment:

kirrukan said...

[quote]
ஏனவே இதற்குள் தமிழர், சிங்களர் என்ற இரு தரப்பாரும் பௌத்தர்களாக நோக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு உண்டு.[/quote]

தமிழ் புத்திஜீவிகள் தமிழ் பெளத்தம் பற்றி ஆராயமல் தமிழ் இந்து ,இந்தியா என்று ஆராய வெளிக்கிட்டு இன்று நாட்டுக்கு உரிமை கூற முடியாத நிலையில் இருக்கிறான்