தென்றல் என்ற பெயரை இழந்தவள் நீ -செ.பாஸ்கரன்

.

காற்றே உன்மீது
காதலில்லை எனக்கு
கடும் கோபம்தான்
நேற்று என் மூச்சுக்காற்றாய்
நீயிருந்தாய்
என் உயிரே நீயென்றிருந்தேன்
சுவாசம் புகுந்து மனதைத் தொட்டபோது
என் இதயத் துடிப்பாகினாய்


வெள்ளை மணற்பரப்பில் நான் நடக்க
கேசம் கலைத்து கேலிசெய்தாய்
உன் வருடலின் இனிமையில்
எனைமறந்தேன்
கண்விழித்துப் பார்த்தபோது
நீ காததூரம் சென்றிருந்தாய்
சொல்லாமல் சென்றதற்காய் 
நான் சினம் கொள்ளவில்லை
உன் வரவிற்காய் வழிபார்த்திருந்தேன்
விழிமூடாத் துயர்கொண்டிருந்தேன்
நீ வரமாட்டாய் என்ற வார்த்தை கேட்டது
வடக்கே நீ புரிந்த வன்செயல்கள்
நானறிந்தேன்
வருடிச்சென்ற காரிகை நீ
சுழன்றடிக்கும் சூறாவெளியாய்
கூரைமுகடுகளைப் புடுங்கியெறிந்த 
கதை கேட்டேன்
என் மூக்குநுனியில் நர்த்தனமாடியவள்
இன்று பெருவெளியில் சதிராடிவிட்டாய்
மீண்டும் நீ வரவேண்டாம்
தென்றலென்ற பெயரை இழந்துவிட்டாய்
இனியெனக்கு உன்மேல் காதலில்லை

2 comments:

Anonymous said...

விளித்தல் என்பது தவறு, விழித்தல் என்பதே சரியான தமிழ்.
(விழி - கண், விழித்தல் - கண் திறத்தல்)
தயவு செய்து தமிழை சரியாக எழுதுங்கள் பாஸ்கரன்!
- சந்திரன்

paskaran said...

சுட்டிக் காட்டியதற்கு நன்றி சந்திரன் . தவறு திருத்தப்பட்டுள்ளது.
செ. பாஸ்கரன்