இலங்கைச் செய்திகள்

1. பாலியல் கல்வியின் தேவை குறித்த அக்கறைகள்
2. தேர்தல் முடிவுகள் குறித்த வியாக்கியானங்கள்
3. தலைமுடிக்கு "டை' பூசிய ஆசிரியை நஞ்சு உடலில் பரவியதால் மரணம்
4 . அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சு வார்த்தை சாதகமாக முன்னோக்கி நகர்கிறது



1. பாலியல் கல்வியின் தேவை குறித்த அக்கறைகள்

இலங்கையில் வருடமொன்றுக்கு 2 இலட்சம் வரையிலான சட்டவிரோதக் கருக்கலைப்புகள் இடம்பெறுவதாகப் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் பாடசாலை பாட விதானத்தில் பாலியல் கல்வியையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடையத் தொடங்கியுள்ளன. 2011 ஆம் ஆண்டின் யுனிசெவ் அறிக்கையில் இலங்கையில் இளம் பருவத்திலுள்ளவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கின்ற நிலையில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கு 28 பேர் என்ற அடிப்படையில் 15 முதல் 19 வயது வரையான சிறுமியர்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 84 ஆயிரம் சிறுமியர்கள் குழந்தைகளைப் பிரசவிக்கும் அதேவேளை நாட்டிலுள்ள மூவாயிரத்துக்கு மேற்பட்ட சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையங்கள் மூலமாக நாளொன்றுக்கு 550 முதல் 700 என்ற கணக்கில் வருடமொன்றுக்கு 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றமையே தற்போது இலங்கையில் பாலியல் கல்வியின் அவசியத்தை புத்திஜீவிகள் மட்டத்தில் உணர்த்தியுள்ளது.


10 வயது முதல் 18 வயது வரையிலான விடலைப் பருவத்தைச் சேர்ந்த எமது நாட்டின் இளம் சந்ததியினரின் வாழ்க்கையை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டுமானால் அவர்களுக்கு பாடசாலை பாட விதானத்தில் பாலியல் கல்வியையும் சேர்த்துக் கொள்வது அவசியமெனக் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் திருமதி சாவித்திரி குணசேகர வலியுறுத்துகின்றார். பாலியல் கல்வியைப் புகட்டுவதன் மூலம் எமது சமூகத்திலுள்ள காமுகர்களிடமிருந்து எங்கள் நாட்டின் பிள்ளைச் செல்வங்களைப் பாதுகாக்க முடியுமென்றும் அவர் கூறியுள்ளார். பாலியல் கல்வியைப் புகட்டுவதன் மூலம் சிறுவர்கள் அவசியம் ஏற்படும் போது உணர்வுகளுக்கு இடமளிக்காமல் சரியான தீர்மானத்தை எடுத்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். சிலர் எமது பண்டைய கலாசாரப் பாரம்பரியங்களுக்கு அமைய சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் கல்வி அவசியம் இல்லையென்ற கருத்தைக் கொண்டுள்ளனர். சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் தொடர்பில் சரியான தகவல்களை எடுத்துரைப்பது அவசியம் என்ற நிலைப்பாட்டின் கீழ் அதற்கான சட்டங்கள் இன்று அமுலில் உள்ளன என்றும் பேராசிரியர் திருமதி சாவித்திரி குணசேகர சுட்டிக்காட்டுகின்றார்.

பாலியல் தொடர்பான விழிப்புணர்வின்மையாலேயே இலங்கையில் கருக்கலைப்புகள் அதிகரித்துள்ளன என்ற வாதத்தை நிராகரித்து விட முடியாது. கருக்கலைப்பு என்றவுடன் ஏதோ தகாத உறவினால் உருவான குழந்தையைக் கலைப்பதாகவே பலரும் கருதுகின்றனர். ஆனால், அது தவறான விடயம். கருக்கலைப்புக்கு பல காரணங்கள் உண்டு. 1883 ஆம் ஆண்டின் தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாமென மருத்துவர்கள் கருதும் பட்சத்தில் மட்டுமே கருக்கலைப்பினைச் செய்ய சட்டம் அனுமதிக்கின்றது. ஏனைய கருக்கலைப்புகள் எல்லாம் சட்டவிரோதமான கருக்கலைப்புகளாகவே கருதப்படும். இலங்கையின் சட்டத்தில் விரும்பியவாறு கருக்கலைப்பு செய்வதற்கு இடமில்லாததாலேயே சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்களினதும் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்வோரினதும் எண்ணிக்கைகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் உள்ளன. இலங்கையைப் பொறுத்தவரையில் கல்வியறிவு, பண வசதியில் உயர்ந்த மட்டத்தில் உள்ளவர்களும் நகரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுமே சட்டவிரோத கருக்கலைப்புகளில் அதிகமாக ஈடுபடுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

சட்டவிரோதக் கருக்கலைப்பு என்பது இலங்கைக்கு மட்டும் உரியதொரு பிரச்சினையல்ல. இலங்கை உள்ளிட்ட 35 வளர்முக நாடுகள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாகவுள்ளது. உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் ஆசிய பிராந்தியத்திலேயே அதிகளவான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது. குறைந்தளவான கருக்கலைப்புகள் சட்ட அனுமதி வழங்கியுள்ள நாடுகளிலேயே இடம்பெறுகின்றன. மேற்கு ஐரோப்பாவில் ஆயிரம் பெண்களில் 12 பேரும் வட அமெரிக்காவில் ஆயிரம் பெண்களில் 21 பேரும் ஆபிரிக்காவில் ஆயிரம் பெண்களில் 36 பேரும் கருக்கலைப்பில் ஈடுபடுகின்ற நிலையில் ஆசியாவில் வருடாந்தம் 2 கோடி 60 இலட்சம் பெண்கள் கருக்கலைப்பில் ஈடுபடுகின்றனர். இதில் ஒரு கோடி 10 இலட்சம் பேர் இந்தியப் பெண்களாகவும் 90 இலட்சம் பெண்கள் சீனப் பெண்களாகவும் உள்ளனர். இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தனியார் வைத்தியசாலைகளில் கருக்கலைப்புச் செய்வதற்கான செலவீனம் மிகவும் அதிகமென்பதாலேயே பலரும் சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையங்களை நாடுகின்றனர். இதனாலேயே உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இன்றைய நவீன யுகத்தில் கருத்தடைக்கான வசதிகள் ஏராளமானவை இருக்கையில் சட்டவிரோதக் கருக்கலைப்பு உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியது எனத் தெரிந்திருந்தும் அதனை பலரும் நாடுகின்றனர். இதற்குப் பெண்களின் கல்வியறிவின்மை, விழிப்புணர்வின்மை போன்றவையே காரணம். உலகில் சுமார் 5 கோடிப் பெண்கள் கருத்தடை சாதனங்களை உபயோகிக்காததால் கருத்தரிப்பதாகவும் இரண்டரைக் கோடிப் பெண்கள் கருத்தடை சாதனங்கள் சரியாகத் தொழிற்படாததால் கருத்தரிப்பதாகவும் அறிக்கையொன்று கூறுகின்றது. இலங்கையில் கருக்கலைப்பு சட்டவிரோதமானது என்பதாலேயே அதனை ஒளித்து மறைத்து செய்கின்றனர். அதனைச் செய்யும் மருத்துவர்கள் எனக் கூறிக் கொள்வோராலும் பெருமளவு பணம் கறக்கப்படுகின்றது. பயிற்சி அற்றவர்கள் கருக்கலைப்புச் செய்வதால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே இலங்கையில் இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால் பாடசாலை பாடவிதானங்களில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது, கருக்கலைப்புகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படுவது போன்றவை ஆரோக்கியமான விடயங்களாக இருக்குமென்பதே புத்திஜீவிகளின் அறிவுரையாகவுள்ளது. (நன்றி தினக்குரல்)


2. தேர்தல் முடிவுகள் குறித்த வியாக்கியானங்கள்
கடந்தவாரம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் எதிரணிக் கட்சிகளுக்கு முன்னரைக் காட்டிலும் கூடுதலான வாய்ப்புகள் இருக்குமென்று நாட்டு நிலைவரத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட எவருமே கூறியதில்லை. எதிர்பார்த்ததைப் போலவே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெருவெற்றி பெற்றிருக்கிறது. தேர்தல்கள் நடைபெற்ற 234 உள்ளூராட்சி சபைகளில் 205 சபைகளைச் சுதந்திர முன்னணி கைப்பற்றியிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முன்னர் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த உள்ளூராட்சி சபைகளை (19) விடவும் மிகவும் குறைவான (9) சபைகளையே இத்தடவை கைப்பற்றக் கூடியதாக இருந்திருக்கிறது. தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் வாக்களிப்பு நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளில் 12 சபைகளைக் கைப்பற்றி கூடுதலான உள்ளூராட்சிகளைத் தனதாக்கிக் கொண்ட இரண்டாவது அரசியல் கட்சி என்ற பெயரைச் சம்பாதித்திருக்கிறது. ஒன்றேயொன்று கண்ணே கண்ணு என்று அம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹராம பிரதேச சபையை மாத்திரம் தன்வசம் வைத்திருந்த ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) இத் தடவை அதையும் கூட இழந்து நிற்கிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கிழக்கு மாகாணத்தில் நான்கு சபைகளையே கைப்பற்றக்கூடியதாக இருந்தது. அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற போதிலும் தனித்துத் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் அதாவுல்ல தலைமையிலான தேசிய காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையையும் பிரதேச சபையையும் மலையக மக்கள் முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா பிரதேச சபையையும் கைப்பற்றியிருக்கின்றன. மாத்தளை மாவட்டத்தில் ஒரேயொரு பிரதேச சபையில் வெற்றிபெற்ற சுயேச்சைக் குழுவும் கூட அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றதாக இருந்ததையே காணக்கூடியதாகவுள்ளது.

இந்தத் தேர்தல்களின் முடிவுகள் குறித்து அரசியல் கட்சிகளினால் செய்யப்பட்டிருக்கக்கூடிய வியாக்கியானங்கள் மிகவும் சுவாரஸ்யமானவையாகவே இருக்கின்றன. ஜனாதிபதியின் மகிந்த சிந்தனை கொள்கைகளையும் இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்குவோமென்ற தொனிப் பொருளுடனான வேலைத்திட்டத்தையும் மக்கள் மீண்டும் ஏற்றுக் கொண்டிருப்பதையே உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருப்பதாக ஆளும் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். அதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலுடனும் பாராளுமன்றத் தேர்தலுடனும் ஒப்பிடும் போது கடந்தவாரத்தைய தேர்தல்களில் ஆளும் கட்சியின் வாக்குகளில் சுமார் 5 சதவீத வீழ்ச்சி காணப்படுவதாகக் கூறியிருக்கும் ஐ.தே.க. கடந்த பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும் போது தனது வாக்குகளில் சுமார் 5 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

சுதந்திரமுன்னணிக்கு இந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் 55.65 சதவீத வாக்குகளும் ஐ.தே.க.வுக்கு 33.89 சதவீத வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க.வுக்கு 29.34 சதவீத வாக்குகளே கிடைத்தன. ஒரே மாதிரியான இரு தேர்தல்களில் கட்சிகளுக்குக் கிடைத்திருக்கக்கூடிய வாக்குகளின் சதவீதங்களை ஒப்பிடுவதே பொருத்தமானதாக இருக்க முடியுமென்றும் பாராளுமன்றத் தேர்தலொன்றிலும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒன்றிலும் கட்சிகளினால் பெறக்கூடியதாக இருந்த வாக்குகளின் சதவீதத்தை ஒப்பிடுவது மக்கள் ஆதரவு நிலைவரத்தை மதிப்பிடுவதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய வழிமுறையல்ல என்ற வாதமும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அத்துடன் நியமனப் பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டதன் விளைவாக சம்பந்தப்பட்ட கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் இன்னமும் தீர்ப்பை வழங்காததால் பல உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை தேர்தல் ஆணையாளர் ஒத்திவைத்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

அதேவேளை உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியைக் காரணம் காட்டி சில உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஆகவே நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட முன்னைய தேர்தல்களில் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகளின் வீதங்களை கடந்தவாரத்தைய உள்ளூராட்சித் தேர்தல்களில் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் வீதங்களுடன் ஒப்பிடுவது பொருத்தமானதல்ல என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று முன்தினம் கொழும்பில் செய்தியாளர் மகாநாட்டில் உரையாற்றிய ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, எதிரணிக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தியிருப்பதைப் பார்க்கும் போது எதிரணியின் பலவீனமான நிலைமையைப் புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது. முன்னைய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது தங்களுக்கு வாக்குகள் அதிகரித்து வந்திருக்கின்றன என்று ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் முன்னரும் அடிக்கடி கூறியிருக்கிறார்கள். அதனால் அத்தநாயக்கவின் சப்பைக்கட்டு எவருக்கும் ஆச்சரியத்தைத் தருவதாக இல்லை.

அதேவேளை ஜே.வி.பி.யின் வாக்குவீதம் 11 சதவீதத்திலிருந்து 3.15 சதவீதமாக விழ்ச்சி கண்டிருக்கிறது. தேர்தல்கள் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளில் 57 ஆசனங்களை மாத்திரமே பெறக்கூடியதாக இருந்த ஜே.வி.பி. அதன் வரலாற்றில் முன்னென்றுமில்லாத ஆதரவு குன்றிய நிலையில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தேர்தல்களில் பின்னடைவு ஏற்பட்டாலும் தங்களது அரசியல் போராட்டங்களைத் தளராமல் தொடரப்போவதாக ஜே.வி.பி. தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் மக்களின் உண்மையான ஆணையைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை முக்கியமான ஒரு அம்சத்தை அவதானிக்க வேண்டியிருக்கிறது. முன்னென்றுமில்லாத வகையில் வாழ்க்கைச் செலவு இடையறாது அதிகரித்துக் கொண்டு செல்வதால், அதைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு உருப்படியான நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாமல் இருக்கும் அரசாங்கத்தின் மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டுவதற்கு மக்கள் உள்ளூராட்சித் தேர்தல்களைப் பயன்படுத்த வேண்டுமென்று எதிரணித் தலைவர்கள் பிரசாரங்களின் போது கேட்டிருந்தார்கள். ஆனால், அரசாங்கமே தேர்தல்களில் பெருவெற்றியைப் பெற்றிருக்கிறது. தங்களுடைய கொள்கைக் திட்டங்களையே மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று அரசாங்கத் தலைவர்கள் பெருமை வேறு கொள்கிறார்கள். அப்படியானால், வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே போனாலும், ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கத்தையே தாங்கள் தொடர்ந்து ஆதரிக்கப் போவதாக மக்கள் முடிவு எடுத்திருக்கிறார்களா?

எதிரணித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதன் பிரகாரம் பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்தின் மீதான வெறுப்பை வெளிக்காட்டுவதற்கு தேர்தலைப் பயன்படுத்த மக்கள் விரும்பவில்லையா? அத்துடன், அரசாங்கம் செயற்படுகின்ற முறையை மக்கள் ஆதரிக்கிறார்களா? தேர்தல் முடிவுகள் தொடர்பில் அரசியல்கட்சிகளின் தலைவர்களினால் செய்யப்பட்டிருக்கக் கூடிய வியாக்கியானங்களின் அடிப்படையில் நோக்குகையில் இந்தக் கேள்விகளுக்கான விடைகள் நிச்சயம் முக்கியமானவை. எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பிரசாரங்களின் போது அரச வளங்களும் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் மோசமாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்காக ஆளும் கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அவரின் இந்த விமர்சனத்துக்கு எந்தவகையில் வியாக்கியானம் கொடுப்பது? இச்சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த ஆங்கில எழுத்தாளரான நோபல் பரிசாளர் ருட்யாட் கிப்பிளிங் "வெற்றியும் தோல்வியுமே வஞ்சகமானவை' என்று ஒரு தடவை கூறியதே எமது நினைவுக்கு வருகிறது.  (நன்றி தினக்குரல்)



3.  தலைமுடிக்கு "டை' பூசிய ஆசிரியை நஞ்சு உடலில் பரவியதால் மரணம்
தென்பிராந்திய நிருபர் : தனது நரைத்த தலை முடிக்கு கறுப்பு நிற "டை' பூசி வந்த ஆசிரியை மரணமான சம்பவம் மாத்தறை ஆஸ்பத்திரியில் இடம்பெற்றது.

தெலிஜ்ஜவிலைகருக்களையைச் சேர்ந்த வீ.ஜி.இந்திராணி (56 வயது) என்ற இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு மரணமானார்.

இவர் தனது நரைத்த முடிக்கு சில காலம் கறுப்பு நிற "டை' பூசி வந்துள்ளார் எனவும் அதனால் தலைவலி மற்றும் நோய்கள் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று குணமடைந்து வந்தார் எனவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் "டை' பூசுவதையும் சில காலம் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் நிகழ்வு ஒன்றிற்காக தன்னை அழகுபடுத்த மீண்டும் தலை முடிக்கு கறுப்பு நிற டையைப் பூசிய போது திடீரென சுகயீனம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பயனின்றி மரணமானார்.

இவர் தலை முடிக்கு பாவித்த கறுப்பு டையில் உள்ள நச்சு இரசாயனக்கலவை உடலில் பரவியதால் மரணம் சம்பவித்ததாக மாத்தறை சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையைத் தொடர்ந்து மரண விசாரணை அதிகாரி லலித் டி சில்வா நச்சு உடலில் பரவியதால் மரணம் சம்பவித்ததாக தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்துக்கு முன்னரும் ஒருவர் தலை முடிக்கு நிற மையைத் தீட்டியதால் மாத்தறைப்பகுதியில் மரணமானார்.

தலை முடிக்குப் பயன்படுத்தும் டை நிறப்பூச்சுக்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் சுகாதாரப் பகுதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
(நன்றி தினக்குரல்)





அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சு வார்த்தை சாதகமாக முன்னோக்கி நகர்கிறது

(பகுதி 1)
- ஆக்கம்: டி.பி.எஸ்.ஜெயராஜ்

ஸ்ரீலங்காஅரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும்(ரி.என்.ஏ) இடையே தற்பொழுது நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளில், மார்ச் 18, வெள்ளிக்கிழமை நடந்த அதன் மூன்றாவது கட்டப் பேச்சுக்கள் சில சாதகமான முன்நகர்வுகளைப் பதிவு செய்திருக்கின்றன.

TNA Meetingபேச்சுக்களின் பின்னர் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இருந்து எடுத்தாளப்பட்ட கீழ்கண்ட குறிப்பு பேச்சு வார்த்தைகளின் சாரத்தை வெற்றிகரமாக வெளிப்படுத்தியிருக்கிறது.

“ஸ்ரீலங்காவில் வாழும் சகல மக்களினதும் அபிலாசைகளும் சந்திப்பதற்குப் பொருத்தமான அரசியலமைப்பு ஒழுங்குகளைப் பற்றிக் கலந்துரையாடல்களை இருதரப்பும் தொடர்ந்து மேற்கொள்ளும். இந்த அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு கட்டமைப்புக்கு வருவதற்கான கண்ணோட்டத்தில் தங்கள் பேச்சுவார்த்தைகளைத் தொடர அவர்கள் சம்மதித்துள்ளார்கள்.”

மூன்றாம் கட்ட அரசாங்க – ரி.என்.ஏ தரப்பு பேச்சு வார்த்தைகள், சாதகமான ஒரு முடிவைத் தெரிவிக்கிறது என்பதை அறியும்போது உண்மையில் ஒரு உள்ளத்துணிவு பிறக்கிறது. முந்தைய இரணடு சுற்று பேச்சுக்களுக்கு அப்பாலும் கடந்த சில வாரங்களாக இந்தப் பேச்சு வார்த்தைகளுக்கு இடையூ+று ஏற்படத்தக்கதான அச்சுறுத்தும் அரசியல் முறுகல் நிலை பரவியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

யாழ்ப்பாண மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞ}னம் சிறீதரன் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சித் தாக்குதல் இதைத் தடைசெய்யும் ஒரு நிகழ்ச்சி. மார்ச் 12 டெய்லி மிரர் பத்திரிகையில் இந்தப் பத்தி அந்தத் தாக்குதலை மீள்நிலைப் படுத்தி ரி.என்.ஏ நீண்டகாலமாகத் துயருறும் தமிழ் மக்களின் நலன் கருதி அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைகளை அந்தச் சம்பவம் தடையேற்படுத்த விட்டு விடக்கூடாது என ரி.என்.ஏ யிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தது.

சிறீதரனின் சம்பவத்துக்குப் புறமே மற்றும் சில இணைத்தலும் பிரித்தலுமான சம்பவங்கள் பேச்சு வார்த்தைகளைப் பாதிக்கக் கூடியதாக இடம் பெற்றிருந்தன. ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் சார்பாக உறுதியளிக்கப் பட்டதற்கும் நடைமுறைப் படுத்தப்பட்டதற்கும் இடையே சில பிளவுகளையும் காணக் கூடியதாக இருந்தது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அரச விரோத சக்திகளின் தூண்டுதல் காரணமாக ஒரு தமிழ் ஊடகத்தின் தவறான அறிவிப்பால் ரி.என்.ஏ க்கு பேச்சு வார்த்தைகளில் பங்கெடுப்பதற்கு தீவிர இக்கட்டான நிலை ஏற்பட்டிருந்தது.

நிச்சயதார்த்தம்

இந்தப் பின்னடைவுகளுக்கு எதிராக அரசாங்க - ரி.என்.ஏ பேச்சு வார்த்தைகள் 18ந் திகதி நடந்தேறியது. பேச்சு வார்த்தைகள் சீர்குலைந்து விடுமென வெளிப்பட்ட அச்சம் பொய்யென நிரூபணமாகியது. இந்த நிச்சயதார்த்தம் சாதகமான மற்றும் உறுதியான அடித்தள வேலைகள் உள்ளதாகத் தெரிவதுடன் எதிர்காலத்தின் சாதகமான முன்னேற்றங்களுக்கும் அடியிட்டுள்ளதாகத் தோன்றுகிறது. மார்ச் 18ல் நடந்தவற்றைப் பற்றி ஆழமாகத் ஆராய்வதற்கு முதல் இந்தப் பத்தி அரசாங்கத்துக்கும் ரி.என்.ஏக்கும் இடையேயான பேச்சு வார்த்தைகளின் தற்போதைய நிலைக்கு முன்னெடுத்துச் சென்ற தொடர் நிகழ்வுகளைச் சுருக்கமாகத் தேட விரும்புகிறது.அரசாங்க - ரி.என்.ஏ அரசியல் பேச்சு வார்த்தைகள,; ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மறுபடியும் ஒரு இரண்டாவது பதவிக்காலத்துக்காக கடந்த வருடம் தெரிவு செய்யப் பட்டதன் பின் இந்த நாட்டின் இன உறவுக் கோளத்தில் நடந்த மிகச் சிறந்த ஒரு விடயமாகும்.

அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் தமிழ் தேசிய பிரச்சினைகளுக்கு உறுதியான வழிகள் மற்றும் கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்தும் ஒரு தீர்வினைப் பற்றி பாராளுமன்றத்தில் உள்ள தனிப் பெரும் தமிழ் கட்சியுடன் பேசுவதற்காக ஆரம்பித்து வைக்கப் பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2010ல் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு ஸ்ரீலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலுமாக 13 ஆசனங்களை வென்றது.அதற்கு தேசிய பட்டியல் மூலமாகவும் ஒரு ஆசனம் கிட்டியது.

இந்தப் பத்தி 2011 டிசம்பர் 11ந்திகதிய டெய்லி மிரர் பத்திரிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ரி.என்.ஏ உடனான அரசியல் பேச்சு வார்த்தைகளை எப்படி ஆரம்பித்தார், என்பதைப் பற்றி மிக விரிவாக வெளிப்படுத்தியிருந்தது. ஜனாதிபதி ராஜபக்ஸ, ரி.என்.ஏ பாராளுமன்றக் குழுத் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தனை எந்த விதமான உதவியாளர்களும் இன்றி நேருக்கு நேர் சந்தித்தது மூலம் இறுக்கமான சூழ்நிலையை உருக வைத்தார்.

இந்தச் சந்திப்புகளின் விளைவாக அரசாங்க மற்றும் ரி.என்.ஏ பிரதிநிதிகளைக் கொண்ட இரண்டு கூட்டுப் பொறிமுறைகளை அமைப்பதற்கான முடிவு மேற்கொள்ளப் பட்டது.ஒன்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அடையும் உடனடிப் பிரச்சனைகளின் அக்கறைகள் பற்றியதாகவும் மற்றது ஒரு அரசியல் தீர்வை அடைவதை இலக்காகக் கொண்டு ஒரு கட்டமைப்பான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பது பற்றியது.

சம்பந்தன்

ரி.என்.ஏ தலைவர் சம்பந்தனும் ஏழு மற்றும் ஐந்து பெயர்களைக் கொண்ட இரண்டு பட்டியல்களைக் கூட்டுப் பொறிமுறையில் அங்கத்தவர்களாகச் சேர்த்துக் கொள்வதற்காகச் சமர்ப்பித்திருந்தார்.

கூட்டுப் பொறிமுறையில் அங்கம் வகிப்பதற்காகப் பிரேரிக்கப்பட்ட ஏழு பெயர்களும்,நிவாரணம்,

மறுவாழ்வு, மீள்குடியமர்வு, மீள்கட்டமைப்பு, மற்றும் வாழ்க்கை வசதிகள் போன்ற விடயங்களில் அக்கறை செலுத்துவதற்காகப் பிரேரிக்கப் பட்டவை. ரி.என்.ஏ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், எஸ்.சேனாதிராஜா, கே.பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன், ஏஅடைக்கலநாதன், பி.செல்வராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே அதற்காகப் பிரேரிக்கப் பட்டவர்கள்.

மற்றைய கூட்டுப் பொறிமுறையில் பிரேரிக்கப்பட்ட ஐவர்களான ஆர். சம்பந்தன், எஸ்.சேனாதிராஜா, கே.பிரேமச்சந்திரன்,எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத, பிரசித்தி பெற்ற வழக்கறிஞர் கே.கனகஈஸ்வரன் ஆகியோர்,அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களில் ஈடுபடுவதற்காகப் பிரேரிக்கப் பட்டவர்கள்.

இந்த நகர்வுகளுக்கு மேலதிகமாக மற்றுமொரு சாதகமான முன்னேற்றமும் உண்டு. இரண்டு நம்பிக்கையான பிரதிநிதிகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினாலும், ஆர். சம்பந்தனாலும் பிரேரிக்கப்பட்டு தமக்குள் தீவிரமான கலந்தாய்வுகளை தமக்குள் கொழும்பில் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தப் பேச்சுக்களின் பிரதான அம்சமாக மாகாண அலகுகளுக்கு அதிகப்படியான அதிகாரப் பகிர்வினை அடிப்படையாகக் கொண்டு அதேவேளை ஸ்ரீலங்காவின் ஐக்கியம், உறுதிப்பாடு, மற்றும் ஆள்புல ஒருமைப்பாடு என்பனவற்றை உறுதிப் படுத்துதும் விதத்தில் ஒரு முக்கியமான அரசியல் தீர்வை ஆராய்வதாகும்.

இருதரப்பு பிரதிநிதிகளும் ஜனாதிபதி ராஜபக்ஸ, மற்றும் சம்பந்தன் ஆகியோரை ஒவ்வொரு சுற்றுப் பேச்சுக்கள் முடிவடைந்ததும் ஒழுங்காக சந்தித்துப் பேசி வருகிறார்கள். தங்கள் கோட்பாடுகளின் ஆதரவு மற்றும் ஊக்குவிப்போடு இருதரப்பு பிரதிநிதிகளும் தங்கள் செயற்பாட்டில் மிக அதிக தூரத்துக்கு முன்னேறியிருக்கிறார்கள்.

பல வகையான பொருளிலும் அலகிலும் உள்ள அதிகாரப் பரவலாக்கங்கள் கலந்துரையாடப் பட்டு பல பரப்புகளிலும் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது.சில பரப்புகளில் சம்மதம் சாத்தியமாகவில்லை மற்றும் சில எப்படியாயினும் மிகவும் சிக்கலான பகுதிகள்.

இந்தப் பேச்சுக்கள்; மிக உயர் மட்டத்தில் வழங்கியிருப்பது உயர்மட்ட அதிகாரமுள்ள அதிகாரிளுடன் மேற்கொள்ள வேண்டிய எதிர்காலப் பேச்சுக்களுக்கான ஒரு அடிப்படை வெளித்தோற்றத்தை உள்ளடக்கிய முக்கிய வேலைத்திட்டத்தை உருவாக்கும் பங்கினை.

டிசம்பர் 11ந்திகதிய டெய்லி மிரர் பத்திரிகையில் இந்தப் பேச்சுக்களைப்பற்றி இந்தப் பத்தி எழுத்தில் வடித்திருந்தது,அந்தப் பேச்சுக்களுக்கு எந்த விதத்திலும் பங்கம் ஏற்படுத்தக் கூடாது என்கிற காரணத்தால் கலந்துகொண்ட இரு தரப்பு பிரதிநிதிகளின் பெயர்களும் வெளியிடப் படவில்லை.இப்போது நிகழ்வுகள் மற்றொரு தளத்தில் முன்னேறிச் செல்வதனால்,தற்போது பெயர்களை வெளிப்படுத்துவதில் தவறில்லை.மத்திவங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், அந்தப் பேச்சுக்களுக்கான ஜனாதிபதியின் பிரதிநிதி. அந்தப் பேச்சுக்களுக்கான சம்பந்தனின் பிரதிநிதி, ரி.என்.ஏ யின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான எம்.ஏ.சுமந்திரன் ஆவார்.

கூட்டுப் பொறிமுறை

மேடை அமைக்கப் பட்டு விட்டதால் இந்த வழிகளுக்கான மேலும் முன்னோக்கிய நகர்வுகளுக்கான விடிவுகாலம் 2011ல் பிறந்திருக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஒரு அரசியல் தீர்வினூடாக நீண்டகால நல்லிணக்கத்துக்கான குழுவொன்றை கூட்டுப் பொறிமுறை மூலம் அமைத்துள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் ஜனாதிபதியால் இந்தக் குழுவுக்காகப் பிரேரிக்கப் பட்டுள்ளனர். அவர்கள்,ரட்னசிறி விக்கிரம நாயக்க,நிமால் சிறிபால டி சில்வா மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோராவர். காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன குழுவின் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

ரி.என்.ஏ பிரதிநிதிகள் ஐவரும் கட்சித் தலைவரான சம்பந்தனால் நியமிக்கப் பட்டிருந்தாலும், சம்பந்தன் அதில் கலந்து கொள்ளாமல் உடல்நலப் பிரச்சனைகளால் தற்போது இந்தியாவில் உள்ளார்.

அரசாங்க – ரி.என்.ஏ இடையிலான ஆரம்பச் சந்திப்பு 2011 ஜனவரி 10ல் நடைபெற்றது.இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை சந்திப்பு நடைபெற வேண்டுமெனத் தீர்மானிக்கப் பட்டு அடுத்த கூட்டம் ஜனவரி 24க்கு நிச்சயிக்கப் பட்டது.

எப்படியாயினும் அது நடைபெறவில்லை மற்றும் இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் பெப்ரவரி 3ந்திகதியே நடைபெற்றது. மூன்றாவது சுற்றை நிர்ணயிப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டு மூன்றாவது சுற்றுப் பேச்சுக்கள் மார்ச் 1ந் திகதிக்கு நிச்சயிக்கப் பட்டது. இதுவும் கூட மிகக் குறுகிய அறிவித்தலுடன் இரத்தாக்கப் பட்டது. அமைச்சர்கள் தங்கள் அமைச்சரவை அலுவல்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் ஈடுபட வேண்டியிருப்பதால் அமைச்சர்கள் கொழும்பில் பிரசன்னமாக இருக்க முடியவில்லை என அதற்கான காரணம் சொல்லப்பட்டது.

பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் சமயத்தில் அமைச்சர்கள் கொழும்பில் இருக்க முடியுமென்பதால் ரி.என்.ஏ அடுத்த சந்திப்பை மார்ச் 7ல் நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோளுக்கு உடனடியாகப் பதில் எதுவும் வழங்கப் படவில்லை. அரசாங்கம் ஆர்வம் இழந்து விட்டபடியால்தான் இது நடக்கிறதா?

அரசாங்கத்துக்கு பேச்சுக்களின் பகிரங்க நடைமுறையில் இருந்த ஆர்வம் ஓரளவு குறைந்து விட்டது என்பது இதிலிருந்து தெளிவாகியது.சர்வதேச கருத்தரங்குகளில் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகள் ரி.என்.ஏ உடனான பேச்சுக்களைப் பற்றி சாதகமான கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

ராஜபக்ஸவின் ஆட்சி சமீப காலமாக பல விடயங்களில் சர்வதேசத்தின் அளவுக்கு மீறிய அழுத்தங்களை எதிர்கொண்டு வந்தது.அவைகளில் ஒன்று நீண்டகாலமாக இழுபட்டு வரும் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதில் விருப்பமற்று இருப்பதாகவோ அல்லது அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் செயலற்று இருப்பதாகவோ நோக்கப்படும் கண்ணோட்டம்.

இப்போது அரசாங்கம் ரி.என்.ஏ உடனான பேச்சுக்களை பிரதர்சனப் படுத்தி தான் இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்காக தமிழ் மக்களின் முன்னணிப் பிரதிநிதிகளுடன் பேரம் பேசுவதில் ஈடுபட்டிருப்பதாக உலகத்துக்குச் சொல்ல முடியும்.

எனவே அரசாங்கம் பேச்சுக்களில் உண்மையான கடப்பாடில்லாமல் ரி.என்.ஏ உடனான பேச்சுக்களைப் பயன்படுத்தி சர்வதேச கண்டனங்களை திசைதிருப்ப முயற்சிக்கிறதோ என்றொரு சந்தேகம் எழுந்தது. உள்நாட்டு வெளிநாட்டுத் தமிழ் ஊடகங்கள், அரசாங்கத்துடன் தெரிந்தே கூட்டு வைத்துக் கொண்டோ அல்லது தெரியாமலே அதனால் சவாரி செய்யப் பட அனுமதி வழங்கியது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது வசைபாடத் தொடங்கின.

ரி.என்.ஏ கூட இந்த விடயத்தில் ஒருவித மனக் குழப்பத்துக்கு ஆளாகியது. கட்சியின் ஒரு பகுதியினர் அரசாங்கத்துக்கு இதிலுள்ள நன்நோக்கம் குறித்து சந்தேகமெழுப்பினர். அரசாங்கம் பேச்சுக்களை கைவிடும் நிலையிலோ அல்லது கலைக்கும் நிலையிலோ தயாராக உள்ளது ஏனெனில் கடந்த தடவைகளில் எழுப்பப்பட்ட உடனடி விடயங்களைச் செயற்படுத்துவதற்கு அதற்கு இயலாமலோ அல்லது விருப்பமில்லாமலோ இருக்கிறது என அவர்கள் எண்ணத் தொடங்கினார்கள்.

இவற்றில் சில விடயங்களை ரி.என்.ஏ தனது முதலாவது சுற்றுப் பேச்சுக்களின்போது எழுப்பியிருந்தது, உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவது அல்லது குறைப்பது, வடக்கில் மற்றும் கிழக்கில் சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து அவற்றைக களைவது,மற்றும் மே 2009 க்கு முன்பிpருந்து தீவின் பல பாகங்களிலும் பாதுகாப்புத் தடைச் சட்டம்;(பி.ரி.ஏ) மற்றும் அவசர கால விதிகள் என்பனவற்றின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருக்கும் 600 – 800 வரையான தமிழர்களின் விதி என்பனவே அந்த விடயங்கள்.

பதில்

அரசாங்க தரப்பு இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களின் போது இவற்றுக்கான பதில்களுடன் மீள வருவதாக உறுதியளித்திருந்தது.இரண்டாவது சுற்று தொடங்கியதுமே ரி.என்.ஏ அரசாங்க தரப்பு பதில்களைக் கேட்டு மிகவும் அதிருப்தியடைந்தது.

அரசாங்க தரப்பு அமைச்சர்கள் சொன்னது வடக்கிலோ அல்லத கிழக்கிலோ உயர் பாதுகாப்பு வலயமென எதுவுமில்லை என்று. அப்போது ரி.என்.ஏ அரசாங்கப் பிரதிநிதிகளிடம் உயர் பாதுகாப்பு வலயங்களாக வடக்கில் பலாலியும் மற்றும் கிழக்கில் சம்பூரும் இருப்பதைக் குறிக்கும் தகவல்களை வழங்கினார்கள்.அவற்றில் அரசாங்கத்தால் அடிப்படை உரிமைகள் வழக்கு எஸ்சி எப்ஆர் 646 – 2003 ற்காகத் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களும் உள்ளடக்கப் பட்டிருந்தன.

வடக்கு மற்றும் கிழக்கில் சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருப்பவர்களிடமிருந்து அதைக் களைவது சம்பந்தமாக அரசாங்கத்தின் பதில் ஆயுதங்களைக் கையளிப்பதற்காக ஒரு பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்படும்,அதன்பின் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருப்பது பிணையில்லாத தண்டனைக்குரிய குற்றமாக குற்றவியல் சட்டக்கோவை திருத்தம் செய்யப்படும் என்பதாக இருந்தது. திரும்பவும் ரி.என்.ஏ அதிருப்திக்கு ஆளானது ஏனெனில் கட்சியின் பிரதான பார்வை தமிழ் ஒட்டுக்குழுக்கள் சட்ட விரோதமாக ஆயுதங்களைக் காவித் திரிவது பற்றியே இருந்தது.

தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பிரச்சனையிலும் ஒரு தொடர்பற்ற தன்மையே காணப்பட்டது. ரி.என்.ஏ குறிப்பிட்டது பாதுகாப்புத் தடைச் சட்டம்;(பி.ரி.ஏ) மற்றும் அவசர கால விதிகள் என்பனவற்றின் கீழ் எல்.ரீ.ரீ.ஈ.சந்தேக நபர்களாகக் கருதப்பட்டு பலப்பல வருடங்களாக வழக்கு விசாரணையின்றி சிறையில் வாடுபவர்களைப் பற்றி.ஆனால் அரசாங்கத்தின் பதிலில் இந்த வகையினரைப் பற்றிக் கருதாமல் மே 2009க்குப் பிறகு சரணடைந்த எல்.ரீ.ரீ.ஈ. போராளிகளைக் கையாள்வது பற்றியதாக இருந்தது.

எனவே ரி.என்.ஏக்கு பலப்பல வருடங்களாக சிறையில் வாடும் இந்தத் துர்ப்பாக்கியசாலிகளைப் பற்றி விரிவாக விளக்கி மேலும் பல ஆவணங்களைக் கையளிக்க வேண்டியிருந்தது.அங்கு ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களில் முன்னாள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியு குணசேகரா 30 ஜனவரி 2011ல் த நேசன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலும் உள்ளடக்கப் பட்டிருந்தது.அந் நேர்காணலில் அமைச்சர் 600 – 800 வரையான தடுப்புக்காவல் கைதிகள் 10 முதல் 15 வருடங்களாகத தடுப்புக்காவலில் வைக்கப் பட்டிருப்பதாகச் சொல்லியிருந்தார். எனவே அரசாங்க தரப்பு இந்த மூன்று விடயங்களையும் பற்றி விரிவான விளக்கத்துடன் மூன்றாவது சுற்றுப் பேச்சுக்கு வருவதாக ரி.என்.ஏயிடம் உறுதியளித்தது.எப்படியாயினும் இதனுடன் தொடர்புடையதான இரண்டாவது சுற்றில் கலந்துரையாடப்பட்ட தடுப்புக் காவல் கைதிகள் பற்றிய மற்றொரு விடயத்தில் அரசாங்கத்தின் பதிலினால் பிரச்சனை எழுந்தது.அதைத் தொடர்ந்து அரசாங்கம் – ரி.என்.ஏ இடையே உராய்வு ஏற்படுவதற்கு அந்தப் பிரச்சனை ஒரு தீவிர காரணமாகியது.

நடந்தது இதுதான்.இரண்டாவது சுற்றின்போது அரசாங்க தரப்பு தூதுக்குழு ரி.என்.ஏ யிடம் கூறியது,வவுனியாவில் இருக்கும் உள்ளக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் அடுத்த குடும்ப உறவினர்கள் பற்றிய தகவல்களைப் பராமரிக்கும் பயங்கரவாத புலனாய்வுத் திணைக்கள அலுவலகத்தில் தடுப்புக்காவல் கைதிகளைப்பற்றிய ஒரு கணணித் தரவு மையம் இருப்பதாக



தரவு மையம்

ரி.என்.ஏ க்குச் சொல்லப்பட்டது இந்தத் தரவு மையம் செயற்பாட்டில் உள்ளதாகவும் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் பாதிப்புக்குள்ளான தங்கள் சொந்த பந்தங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இத் தரவு மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று.அப்போது ரி.என்.ஏ வினாவியது தாங்கள் இதை விளம்பரப்படுத்தி மக்களை வவுனியாவுககுப் போய் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும்படி அறிவிக்கலாமா என்று.

வழங்கப் பட்டபதில் அதை ஆமோதித்தது.

தடுப்புக்காவலில் உள்ளவர்களும் உள்ளக இடம் பெயர்ந்தவர்களும் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள்.ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் இருக்குமிடத்தைப் பற்றிய தகவல்களை அறியமுடியாமல் அலைமோதுகின்றனர்.பலருக்கு அவர்களது பிரியப் பட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பது கூடத் தெரியாது.சிலருக்கு அவர்கள் உயிரோடு இருப்பது தெரியும் ஆனால் அவர்கள் எங்கே வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது தெரியாது.இந்த மனித அவலங்களின் பரிமாணத்தை வெளி உலகம் பெருமளவில் அறிந்திருக்க வில்லை. இந்த விடயத்தில் அரசாங்கம் உணர்ச்சியற்று மரத்துப் போயிருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.இது சாதாரணமாக விளங்கிக் கொள்ளக்கூடிய விடயமாக இருந்தபடியால் ரி.என்.ஏ இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழ் பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் தரவு மைய வசதியிருப்பதாக விளம்பரப் படுத்தியது.

ரி.என்.ஏ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதையிட்டு பலவித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுவதால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தெளிவான நடைமுறை இலாபங்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளால் கிடைக்கின்றன என பிரச்சாரம் செய்ய முயன்றது.

ரி.என்.ஏயால் மேற்கொள்ளப்பட்ட விளம்பரத்துக்கு நன்றி சொல்லும் வகையில் நூற்றுக் கணக்கான மக்கள் இந்தத் தரவு மையத்தைப் பயன்படுத்தி இயலுமானால் தங்கள் பிரியப்பட்டவர்களை கண்டு பிடிக்கலாமே என்கிற நப்பாசையில் வவுனியாவுக்குச் சென்றார்கள்.

வவுனியா காவல்துறையினர் மக்களை அப்படியான ஒரு தரவு மைய வசதி; அங்கில்லை எனக்கூறித் திருப்பி அனுப்பியதுடன் இது ரி.என்.ஏயின் தேர்தல் விளையாட்டு எனவும் குறிப்பிட்டார்கள்.

நீண்டதூரம் பயணம் செய்து வந்து முற்றாக ஏமாற்றமடைந்த உறவினர்கள், இதன் விளைவாக ரி.என்.ஏ யைப் பற்றி கசப்பாக புகார்கள் கூறினார்கள்.கட்சியின் நன்மதிப்பு தேய்வடைந்தது.அதற்கும் மேலாக ரி.என்.ஏ ஒரு தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டது, கட்சியால் உண்மையை பகிரங்கமாகத் தெரிவிக்க முடியாமலிருந்தது,அப்படித் தெரிவித்தால் அது அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு குழி பறிப்பதாக ஆகிவிடக் கூடும்.

காயப்பட்டவனை எள்ளிநகையாடுவதைப் போலிருந்தது அரசாங்கம் இந்த விடயத்தில் செலுத்திவரும் அரைகுறை ஆர்வமுள்ளதான நடைமுறை. கட்சி இதைப்பற்றி வாய்மூலமாகவும் எழுத்து மூலமாகவும் நடந்தவைகளைப் பற்றி அரசாங்கத்துக்கு முறைப்பாடுகளைத் nதிவித்த போதிலும் அங்கிருந்து நன்மையளிக்கத் தக்கதான எந்தப் பதிலும் கிட்டவில்லை.சூழ்நிலையை மேலும் கலக்குவதுபோலிருந்தது மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு திகதியை நிச்சயிப்பதில் அரசாங்கத்தின் மந்தமான கணணோட்டம். ரி.என்.ஏ யின் சில அங்கத்தவர்கள் இந்த விடயத்தில் அரசாங்கம் காட்டி வரும் இதயசுத்தியற்ற தன்மையைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கத தொடங்கினார்கள்.கடந்த தடவை எழுப்பப்பட்ட விடயங்களுக்கு பூரணமற்ற பதில்களைத் தந்தது மட்டுமன்றி, தரவு மையம் பற்றிய புனைகதையையும் அவிழ்த்து விட்டது, அரசாங்கம் ஒரு பக்கத்தில் வெறுமனே காலங்கடத்திக் கொண்டு மறுபக்கத்தில் சர்வதேசப் பிரச்சாரங்களுக்காக பேச்சுவார்த்தைகளைப் பயன் படுத்துகிறது என அவர்கள் நினைத்தார்கள்.

பேச்சுவார்த்தைகள் தொடரவேண்டுமென ரி.என்.ஏ யில் விரும்பியவர்கள்,பிரதான நீரோட்டத்தில் உள்ள செல்வாக்கான தமிழ் ஊடகங்களால் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான உதவியற்ற எதிர்மறையான பிரயோகங்களால் தீவிரமாகத் தாக்கப் பட்டார்கள். அந்தச் சக்திகள் அரசாங்க – ரி.என்.ஏ பேச்சுவார்த்தைகளில் உண்மையாக நடந்த நிகழ்ச்சிகளை முற்றாகக் கவனத்தில் கொள்ளாமலோ அல்லது தவறாக வெளியிட்டதாலோ பேச்சுவார்த்தைகளுக்கு வெறு;பை வார்த்தனர்.

தொடரும்

நன்றி தேனீ








No comments: