.
ஐவர்
ஐவர்
ரமணாவும் திருவும் நண்பர்கள். தனக்கு மனைவியை ரமணா தான் தேர்வு செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு அவர்கள் இறுக்கமாகிறார்கள். ரமணாவுக்கு திருமணம் முடிந்து முதலிரவில் இருக்கும் போது திருவுக்கு அடிப்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாக தகவல் வர மனைவியை விட்டு விட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறான்.
அவன் நடவடிக்கை மனைவியை எரிச்சலூட்டுகிறது. நண்பர்களை பிரிக்க சதி செய்கிறாள். தம்பியை விட்டு திரு மேல் திருட்டு பழி சுமத்தி கணவனிடம் இருந்து விலக்குகிறாள். ஆத்மார்த்த நண்பன் மனமாற்றத்தால் திரு நொறுங்கி குடிகாரன் ஆகிறான்.
அவன் நிலையை அறியும் நான்கு இளைஞர்கள் போதையில் இருந்து மீட்டு நண்பனிடம் சேர்த்து வைக்க போராடுவது கிளைமாக்ஸ்....
திருவண்ணாமலையில் ஊதாரியாக சுற்றும் நான்கு இளைஞர்களுடன் படம் துவங்குகிறது. அவர்களில் ஒருவன் வயிற்றில் பெரிய கட்டியுடன் ஆஸ்பத்திரியில் துடிக்க ஆபரேசனுக்கு பணம் இன்றி மற்ற மூவரும் தவிக்கின்றனர்.
அப்போது ரமணா தானே முன் வந்து பண உதவி செய்கிறான். பழைய பகை இருந்தும் அதை மறந்து உதவிய ரமணா நால்வர் மனதிலும் உயர்கிறான். அவனை வீட்டில் போய் பார்க்கும் போது திருவை பிரிந்ததும் அதனால் குடிக்கு அடிமையானதையும் அறிகின்றனர்.
அவர்களை சேர்த்து வைக்க நால்வரும் எடுக்கும் முயற்சிகள் அழுத்தமானவை. நான்கு இளைஞர்களாக வரும் விஜய் ஆனந்த், இலா, பேரரசன், ஹிசைன் தனித்தனியாய் வீட்டுக்கு மூத்த குடிமகனை அழைத்து வந்து மரியாதை செய்தல், குடிக்க அம்மா மோதிரத்தை கழற்றுதல், இன்னொருத்தன் மனைவி மேல் ஜொள் விடுதல், வயிற்று வலியால் துடித்தல் என வித்தியாச நடத்தைகளில் வலுவூட்டுகின்றனர்.
எல்லோருக்கும் உதவும் மனதுக்காரர் ரமணாவாக வரும் ஸ்ரீமன் நட்பில் ஆழம் காட்டுகிறார். திருவாக வரும் ஹாரிஸ் நடிப்பில் முதிர்ச்சி. புதுப்பெண்ணாக வரும் ஜெயஸ்ரீ நட்பில் தீ வைத்து சீறுகிறார்.
ரமணா-திருவின் நட்புக்கு அழுத்தமான காட்சி பதிவு இல்லாதது குறை. கார்த்திகை தீப திருவிழா காட்சிகள் கண்கொள்ளா பிரமாண்டம். மல்லிகா கிளுகிளுப் பூட்டுகிறார்.
கவி பெரியதம்பி இசையில் “நீ மட்டும் மாறிட்டியேடி”, “கொத் தவரக்கா செடியிலே” பாடல்கள் ரசனை. நட்பின் வீரியத்தை காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் என்.ப்ரியன். இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.
நன்றி தினக்குரல்
No comments:
Post a Comment