மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.
31. என் திருப்பணி

வேதத்தின் பால் நான் செலுத்துகின்ற அன்பிற்கு, மனித சமூகத்தின்பால் நான் செலுத்துகின்ற அன்பு மட்டுமே ஈடு இணையாகும். நினைவிற் கொள்ளுங்கள்: என்னுடைய திருப்பணி, சரியாக நான்கு கூறுபாடுகளைக் கொண்டது!
அவை:
வேதத்தைப் பேணி வளர்த்தல் (வேதபோஷணம்)
வித்வான்களைப் பேணி வளர்த்தல் (வித்வத்போஷணம்)
அறத்தைப் பாதுகாத்தல் (தர்மரசஷணம்)
அன்பர்களை பாதுகாத்தல் (பக்தரசஷணம்)

இந்த நான்கையும் நோக்கித்தான் நான் என்னுடைய அருளையும் ஆற்றலையும் பரப்பித் செலுத்துகின்றேன். இவற்றின் மையத்தில்தான் நான் என்னையே நிறுவிக் கொள்கின்றேன்!


32. அரசியலும் மாணவர்களும்
நீங்கள் மாணவர்களாக இருக்கும் போதே குழப்பம் நிறைந்த வாழ்வில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்! எவ்வாறு பிறருக்குத் துன்பந்தராமல் வாழுவது, அதேபோல் நாமும் எவ்வாறு துன்பமுறாமல் வாழுவது என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள். தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு உங்கள் காலத்தை வீணடிக்காதீர்கள்: உட்கட்சி வேறுபாடுகள், பெரியவர்களின் போலி நடிப்புகள் குறித்து சண்டை போட்டு உங்களின் பொன்னான நேரத்தைப் பாழடிக்காதீர்கள். அவை உங்களை மோசமான முன்னுதாரணங்களாக ஆக்கிவிடும். அத்தகையோரின் மட்டமான நடத்தையினைப் பின்பற்றி அவாகளைப் போல் போலியாக நடப்பதனைக் கட்டாயம் தவிர்த்து விடுங்கள். ‘பாலிடிக்ஸ்’ எனப்படும் அரசியல், ‘டிக்ஸ்’ எனப்படும் பல்வேறு வகைப்பட்ட தந்திரங்கள், நெழிவு சுழிவுகள் கொண்டது. அது சில தனி நபர்களைத் தொற்றிக் கொள்ளும்: அவர்களின் வாழ்க்கையையே அது துன்பமாக்கிப் பாழடிக்கும். அந்தத் தொற்றுநோயை அவர்களிடமிருந்து நீங்கள் பெற்று விடாதீர்கள்! தூய்மையாக இருங்கள்! மனநிறைவுடன் இருங்கள்! நீங்கள் அரசியல் பற்றி, அதன் சிக்கல்கள், நெளிவுசுழிவுகள், குழப்பங்கள் பற்றிப் புரிந்துகொள்ள இயலாத மிகக் குறைந்த இளவயதுடையவர்கள்! அவர்கள் தங்களின் தேவைக்காகவே உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். நீங்கள் அவர்களின் கைகளில் வெறும் கருவிகளாகவும், கையாள் ஆகவுமே பயன்படுவீர்கள்! தைரியமாக – அஞ்சாது - இருங்கள்: அத்தகையயோரின் பலிகடாக்களாக ஆவதற்கு மறுத்துவிடுங்கள். செய்வதற்கு வேறுசிறந்த வேலைகள் எங்களிடம் நிறைய இருக்கின்றன என்று அவர்களிடம் கூறுங்கள்!

33. உங்கள் மூலமாகவே உயர்வு
எதனையும் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு மாணவர்களுக்குக் கட்டாயம் தேவை. அவர்கள் உடல் உழைப்பைக் கட்டாயம் மதிக்க வேண்டும். தங்களிடம் உள்ள குறைபாடுகளினால் ‘பிறரிடம் இருந்து உதவி தேவை’ என்றுள்ள நபர்களுக்கு விருப்பத்தோடு சேவை செய்ய மாணவர்கள் என்றும் தயாராய் இருக்க வேண்டும். உங்களிலும் மூத்தோர்களுக்கு மரியாதை தாருங்கள். அவர்களுக்குப் பணிபுரிகின்ற, மரியாதை தருகின்ற, அவர்களைப் மகிழ்ச்சிப்படுத்துகின்ற எந்த ஒரு வாய்ப்பினையும் நழுவவிட்டுவிடாதீர்கள். எவையெல்லாம் உங்களுக்கு உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தருகின்றவோ அவற்றை வரவேற்றிடுங்கள். ஆனால், கொச்சையான பொழுது போக்குகளில் ஈடுபட்டு உங்களின் தரத்தை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். எந்தவிதக் குறிக்கோளும் இல்லாது தெருக்களில் அலையாதீர்கள்: அல்லது அடிக்கடி திரையரங்குகளில் சுற்றாதீர்கள். விரும்பத்தகாத கூட்டாளிகளுடன் கலந்து உறவாடுவதை தவிருங்கள்! கெட்ட பழக்க வழக்கங்களை விளையாட்டுக்குக் கூடப் பழகிக் கொள்ளாதீர்கள். இந்த நாடனாது உங்கள் மூலமாகத்தான் மிக உயரிய உச்சநிலைக்கு உயர்த்தபட வேண்டும். இப்பொழுது உள்ள தலைவர்கள் மூலமாக அன்று, இதனை செஞ்சில் நிறுத்துங்கள்!

34. தேசிய குணம்
மற்றொன்றையும் கருத்தில் கொள்ளுங்கள்! வேறுநாடுகளில் உள்ள மக்கள் யார் ஒருவர் அஞ்சாமையடனும், அறிவு பூர்வாகவும், நல்லவராகவும் உள்ளாரோ அவருடன் மகிழ்ச்சியாக ஒத்துழைப்பார்கள். ஆனால் இங்கோ, தேசிய குணமே ஒருவர்மேல் ஒருவர் பொறாமைப்படுவதுதான்! மேலும், அவர்களுக்கு ஒத்துழைப்பும் உதவியும் தர மறுப்பதுதான்! சிறு பையன்களாகிய நீங்கள் கட்டாயம் உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ள வேண்டியது இதுதான். ‘இந்தப் பெரியவர்கள் - மூத்தவர்கள் - இருக்கின்றார்களே அவர்கள் தாங்கள் செய்வது தவறுதான் என்று நன்கு அறிந்த வைத்திருந்தும் அது போன்ற செயல்களைத் தான் செய்கின்றார்கள். என்ன பரிதாபம்? ஆனால், நாம் வளரவேண்டும். நாங்கள் எங்கள் சொற்களைப் பொய்யாக்க மாட்டோம்: அதனை எங்கள் செயல்களின் மூலம் நிரூபித்துக் காட்டுவோம். நாங்கள் எல்லோரும் சேர்ந்து இணக்கமாகவும் அன்போடும் செயல்படுவோம்!’ இத்தகைய கடமை உணர்வுகளை நீங்கள் வளர்த்துக் கொண்டால், இந்த நாடு செழித்தோங்கும்: இல்லையென்றால் பாழாகிப் போகும். இந்த எச்சரிக்கை மணியானது எப்பொழுதும் உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கட்டும்.

35. கண்ணீரை வரவழைக்கலாமா?
மேலும் ஒரு செய்தி உங்கள் பெற்றோர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கும் எந்த ஒரு செயலையும் செய்து விடாதீர்கள். அவர்களை மதியுங்கள்: அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடவுங்கள்! அவர்களை நவநாகரிகம் அற்றவர்கள் - பழம் பஞ்சாங்கம் - என்று அவமதிக்காதீர்கள். பழமை என்பது பொன் போன்றது. (Old is gold)  உலகத்தைப் பற்றியும், அதன் தந்திரங்கள் பற்றியும் தாங்கள் பெற்ற நீண்ட கால அனுபவங்களில் இருந்து அவர்கள் பேசுகின்றனர்.

No comments: