கடவுளின் காதுகளுக்கு


.
                                                                                                                                             அ.முத்துலிங்கம்
கிறிஸ்மஸ் வரும்போது தபால்காரர், குப்பை எடுப்பவர், பேப்பர் போடுபவர் போன்றவர்களுக்கு பரிசுகள் கொடுப்பது அமெரிக்காவில் வழக்கம். சிலர் குடும்ப மருத்துவருக்கும் பரிசு வழங்குவார்கள். இம்முறை நான் சுப்பர்மார்க்கட் மனேஜரையும் பரிசுப் பட்டியலில் சேர்த்துக்கொண்டேன். ஒருவரும் அப்படிச் செய்வதில்லை. ஆனால் நான் அவரைச் சேர்த்ததற்கு காரணம் இருந்தது.எங்கள் சுப்பர்மார்க்கட் மனேஜர் ஒரு பெண்மணி. சதுரமான முகம். திருத்தவேலைகள் கொஞ்சம் இருந்தது. என்னைவிட உயரம்; என்னைவிட அகலம்; என்னைவிட வெள்ளை. என்னைவிட வயது குறைவு. நாற்பது மதிக்கக்கூடிய உடம்பு, முப்பது வயது முகம். ஆனால் அந்த முகத்தில் எப்பவும் சிரிப்பு நிறைந்திருக்கும். அவர் ஒரு இடத்தில் நிற்பதையோ உட்கார்ந்து இருப்பதையோ காணமுடியாது. முழங்கால்கள் இடிக்க ஓடியபடியே இருப்பார். கிட்டத்தட்ட ஒரு பாதி உதை பந்தாட்ட மைதானம் அளவுக்கு பெரிய சுப்பர்மார்க்கட் அது. தினமும் பத்தாயிரத்துக்கும் அதிகமான பேர் வந்து போவார்கள். மனேஜர் பெண்மணி வாடிக்கையாளர்களுடன் தானாகப்போய் சிரித்து உரையாடுவார். அவர்கள் கேட்கும் உதவிகளைச் செய்வார். அநேகமான சுப்பர்மார்க்கட்டுகளில் இப்படியான ஒருவரைக் காணமுடியாது.
என் மனைவி சமையலறையில் வைத்துப் பாதுகாத்த வட்ட மூடி கொண்ட சதுரப் போத்தல் ஒன்று உடைந்துவிட்டது. அந்தப் போத்தல் பல சைஸ்களில் கிடைக்கும். அதே அளவான போத்தல் ஒன்றை வாங்குவதற்காக நான் சுப்பர்மார்க்கட்டில் தேடிக்கொண்டிருந்தேன். கண்ணாடி சப்பாத்தை வைத்துக்கொண்டு சரியான காலைத் தேடிய அரசகுமாரன்போல நான் மூடியை வைத்துக்கொண்டு ஒரு போத்தலைத் தேடினேன். எங்கிருந்தோ திடீரென்று பாய்ந்து வந்தார் அந்த பெண்மணி.  மூடியை வாங்கி அவராகவே தேடினார். பின்னர் பொறுங்கள் என்று விட்டு உள்ளே போய் பத்து நிமிடம் கழித்து சரியான அளவு போத்தலை தேடி எடுத்துவந்து தந்தார். இவர் ஓர் அபூர்வமான மனேஜர் என்று உடனேயே முடிவுகட்டினேன். அதுதான் முதல் சந்திப்பு.
அதன் பின்னர் சுப்பர்மார்க்கட் போகும்போதெல்லாம் நேரம் கிடைக்கும்போது அவருடன் பேசுவதுண்டு. அவர் பிரேஸில் நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்காவுக்கு வந்து இருபது வருடம் ஆகிறது. இருபது வருட காலமாக அதே சுப்பர்மார்க்கட்டில் அதே வேலையை செய்கிறார். அவருடைய 14 வயது மகன் பள்ளிக்கூடத்தில் ஐஸ் ஹொக்கி விளையாடுகிறான். தன் வருமானத்துக்கு பொருத்தம் இல்லாதமாதிரி செலவு வைக்கும் விளையாட்டு மகனுடையது என்பார். வாடிக்கையாளருக்கு ஏதாவது சாமான் அகப்படாவிட்டால் அவராகவே வந்து எடுத்து தருவார். ஒரு நாளைக்கு சுப்பர்மார்க்கட்டில் தான் இங்குமங்குமாக பத்து மைல் தூரம் நடப்பதாகச் சொல்லுவார். ஆனால் அவர் முகத்தில் என்றைக்கும் களைப்பை காணமுடியாது.
ஒருநாள் நான் சாமான் வாங்கப்போன நேரம் இவர் ஓர் உயரமான தட்டுக்கு முன்னால் நின்று அங்கே அடுக்கியிருந்த சாமான்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். ஏதோ சரியில்லை என்று எனக்கு பட்டது. நான் அங்கு நிற்பது அவருக்கு தெரியாது. வசை பாடுவது போன்ற தொனியில் ஏதோ உரத்துச் சொன்னார். அது ஆங்கிலம் அல்ல. என்னைக் கண்டதும் வழக்கம்போல சிரித்து ஒருவரை திட்டவேண்டும் என்றால் ஆங்கிலம் போதாது, போர்த்துக்கீசிய மொழிதான் அதற்கு ஏற்றது என்றார். நான் ’அப்படியா? ஒரு காலத்தில் போர்த்துக்கீசிய மொழி பேசியவர்கள் எங்கள் தேசத்தை 150 வருடங்களாக ஆண்டார்கள்’ என்றேன். ’போர்ச்சுக்கல் போன்ற ஒரு சிறிய தேசம் உங்கள் நாட்டை ஆண்டதா?’என்று வியப்புடன் கேட்டார். ஆம் என்றேன். ’உங்கள் மொழி வசைக்கு ஏற்றது என்று சொன்னீர்கள். அப்படியென்றால் அவர்கள் எங்களை ஆண்டபோது அந்த மொழியின் முழுச் சாத்தியமும் அவர்களுக்கு கிட்டியிருக்கும்’ என்றேன். சிரித்தார். ‘எப்பொழுது ஆண்டார்கள்?’என்றார். ‘350 வருடங்களுக்கு முன்னர். அப்போது எங்கள் நாட்டில் போர்த்துக்கீய மொழி பேசுபவர்கள் பலர் இருந்தார்கள். இப்பொழுதும் எங்கள் மொழியில் போர்த்துக்கீய வார்த்தைகள் கலந்திருக்கின்றன’ என்றேன். அவர் நம்பவில்லை. ‘எனக்குத் தெரியாதே. உங்கள் நாடு என்ன?’ என்றார். நான் ’இலங்கை’ என்று சொன்னேன். ’இலங்கையா? அது எங்கே இருக்கிறது?’ இது நான் எதிர்பார்த்ததுதான். ‘சுப்பர்மார்க்கட்டில் இருந்து நேராகப் போய் இரண்டு இடது பக்கம் திரும்பினால் வந்துவிடும்’ என்றேன். அவர் சிரித்தார். நானும் சிரித்தேன்.
நான் கிறிஸ்மசுக்கு முதல்நாள் சாமான் வாங்கப் போனபோது அந்தப் பரிசை அவரிடம் கொடுத்தேன். வண்ணக் கடுதாசியால் சுற்றி அலங்கரித்த சதுரமான பெட்டி. அவர் திகைத்துப் போனது தெரிந்தது. ஏதோ முனிவர் வந்து சாபமிட்டதுபோல கல்லாகிப்போய் நின்றார். அவருடைய சதுர முகத்தில் கண்கள் இரண்டு மடங்கு பெரிதாகின. ‘எனக்கா? எனக்கா?’ என இரண்டு தடவை கேட்டார். ‘கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும், நிறைந்த மகிழ்ச்சியும் உங்களுக்கு’என்றேன். அவர் உணர்ச்சி வசப்பட்டு கண்களை மூடி தன் நெஞ்சைத் தொட்டு கைகளை மேலே காட்டி ‘உங்கள் உதட்டில் இருந்து கடவுளின் காதுகளுக்கு’ என்றார். சிறிது நேரத்தில் சமநிலை அடைந்து நன்றி என்றார். கைகளை நீட்டி என் கைகளைப் பிடித்து குலுக்கினார். நான் திரும்பி சில அடி வைத்த பிறகு ஏதோ நினைவுக்கு வந்து முழங்கால்கள் ஒன்றையொன்று இடிக்க வேகமாக ஓடி வந்து மோதி என்னைக் கட்டிப்பிடித்து மீண்டும் நன்றி என்றார். என் நெஞ்சு எலும்பு இரண்டு முறிந்தது போலிருந்தது.
புது வருடம் பிறந்து நான் மீண்டும் சுப்பர்மார்க்கட் போனபோது மனேஜரைக் காணவில்லை. அதற்கு அடுத்த தடவையும் அவர் என் கண்ணிலே படவில்லை. எங்கேயிருந்தாலும் அவர் அவசரமாக ஓடிக்கொண்டிருப்பார். சுப்பர்மார்க்கட் கலகலப்பாக இருக்கும். அவர் இருக்கும் இடத்தில் வெளிச்சம் கூடும். ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை. அங்கு வேலை செய்யும் கடைநிலை ஊழியர் ஒருவரிடம் விசாரித்தேன். அவருக்கும் தெரியவில்லை. சுப்பர்மார்க்கட்டில் ஆள்குறைப்பு செய்திருக்கிறார்கள். ஒருவேளை அவர் வரமாட்டாரோ என்னவோ என்றார். அப்படியிருக்குமா என்று யோசித்தேன். இருக்காது. அவரைப்போல விசுவாசமான ஊழியர் கிடைப்பாரா? 20 வருடங்கள். நாளுக்கு பத்து மைல் வீதம் 60,000 மைல்கள் அந்த சுப்பர்மார்க்கட்டில் நடந்திருப்பார். இரண்டுதரம் பூமியை சுற்றி நடக்கும் தூரம். வீட்டுக்கு வந்தபிறகும் மனம் அமைதியாகவில்லை.
இரண்டு நாள் கழித்து மீண்டும் சுப்பர்மார்க்கட் போனபோது மனேஜர் பெண்மணி தூரத்தில் நிற்பது தெரிந்தது. ஓர் எல்லையில் இருந்து மறு எல்லைக்கு அவர் ஓடவில்லை. அவர் தலை முடியில் ஒரு பூ குத்தியிருந்தது. ஒலிம்பிக் ஓட்டக்காரர் ஒரு நீண்ட ஓட்டத்துக்கு பிறகு ஓய்வெடுப்பதுபோல நின்று ஒரு பெண் வாடிக்கையாளருடன் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பெண்ணின் தள்ளுவண்டியின் பாதியில் இரண்டு குழந்தைகள் உட்கார்ந்திருந்தார்கள். மீதியில் சாமான்கள் நிறைந்திருந்தன. மனேஜர் பெண்மணியை நான் கடந்து சென்றபோது பேச்சை நிறுத்தாமல் ஒரு வாய் செய்யக்கூடிய ஆகப்பெரிய முறுவலை எனக்காகச் செய்தார். அப்பொழுதுதான் கவனித்தேன். அவர்கள் இருவரும் ஆங்கிலத்தில் பேசவில்லை, இன்னொரு மொழியில் பேசினார்கள். அது போர்த்துக்கீய மொழி என்று நான் ஊகித்தேன். அந்த மொழி அவர்களுக்கு கூடிய நெருக்கத்தையும் அன்னியோன்யத்தையும் கொடுத்தது.
நான் என்னுடைய வண்டியைத் தள்ளி அவர்களைக் கடந்தபின்னர் என் உள்நெஞ்சில் ஒரு சின்ன வலி ஏற்பட்டது. வெளி நெஞ்சு வலி எப்போவோ மறைந்துவிட்டது.
Nanri-Solvanam

No comments: