“இன்னும் ஒரு பசு - திபெத்திய நாடோடிக்கதை


.ஒரு கிராமத்தில் இரண்டு சகோதரர்கள். அண்ணனிடம் 99 பசுக்கள் இருந்தன. ஆனால் தம்பியிடம் ஒரே ஒரு பசுதான் இருந்தது.
அந்தத் தம்பிக்கு அந்த ஒரு பசுவே போதுமானதாக இருந்தது. அதில் பால் கறந்து வீட்டில் எல்லோருக்கும் கொடுத்தான். மிஞ்சியதை வியாபாரம் செய்தான். தன்னுடைய நிலத்தில் கஷ்டப்பட்டு உழைத்தான். பலன் கிடைத்தது. சந்தோஷமாக வாழ்ந்தான்.


ஆனால் 99 பசுக்களை வைத்திருந்த அவனுடைய அண்ணன் சந்தோஷமாக இல்லை. அவன் எப்படியாவது இந்தப் பசுக்களை நூறாக மாற்றிவிடவேண்டும் என்பதற்காக ஏதேதோ தந்திரங்கள் செய்தான். எதுவும் நடக்கவில்லை. நிம்மதி இழந்து தவித்தான்.
ஒருநாள் அண்ணன் தம்பியைப் பார்க்க வந்தான். ‘தம்பி, உன்கிட்ட இருக்கிறது ஒரே ஒரு பசுதான். திடீர்ன்னு அது தொலைஞ்சுபோயிட்டா நீ என்ன செய்வே?’
’கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும். அப்புறம் மறந்துடுவேன்’ என்றான் தம்பி. ‘எனக்கு அது ஒரு பெரிய இழப்பாத் தோணாதுன்னு நினைக்கறேன்!’
‘உண்மைதான் தம்பி. நீ ஒரு பசுவை வெச்சிருக்கறதும், பசுவே இல்லாம இருக்கிறதும் கிட்டத்தட்ட ஒண்ணுதான்!’ என்று கிண்டலாகச் சொன்னான் அண்ணன். ‘ஆனா என்னைப் பாரு, 99 பசுக்களை வெச்சுகிட்டுக் கஷ்டப்படறேன். என்கிட்ட இன்னும் ஒரே ஒரு பசு இருந்தாப் போதும், நூறு பசுக்களுக்குச் சொந்தக்காரன்னு ஊர்ல எல்லோரும் என்மேல பெரிய மரியாதை செலுத்துவாங்க. இல்லையா?’
‘ஆமாம்ண்ணா’ என்றான் தம்பி. ‘வேணும்ன்னா, நீ என்னோட பசுவை எடுத்துக்கோயேன்!’
பல ஜென் மாஸ்டர்கள் இந்த நாடோடிக் கதையை மனித மனத்தின் இயல்புக்கு உதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள்: ‘நம்மிடம் நிறைய இருந்தால், மனது இன்னும் நிறைய நிறைய வேண்டும் என்று விரும்பும், குறைவாக இருந்தால், அதையும் விட்டுக்கொடுத்துவிடுவதற்குத் தயாராக இருக்கும்! அந்த மனதுதான் சொர்க்கம்!

No comments: