விக்டோரியா மாகாணத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கிவிட்டன


.
விக்டோரியா மாகாணத்தின் வடபகுதியில் உள்ள மற்றொரு நகரம் எப்போதும் வேண்டுமானாலும் வெள்ளத்தில் மூழ்கலாம் என்பதால் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள், மூன்று நாட்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறும்படி அப்பகுதி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.



விக்டோரியா மாகாணத்தில் ஹோர்ஷம் நகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாகாணத்தின் வடபகுதியில் உள்ள கெரங் என்ற நகர் அருகில் ஓடும் லாடன் ஆற்றில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.

இதனால்  வெள்ளம் நகருக்குள் புகும் வாய்ப்பிருப்பதால் மூன்று நாட்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு, வீடுகளைக் காலி செய்யும் படி அப்பகுதி அதிகாரிகள் மக்களின் மொபைல் போன்களுக்கு குறுந்தகவல் அனுப்பி எச்சரிக்கை செய்துள்ளனர்.

தற்போது நகருக்கு வெளியே ஆற்றின் உபரி வெள்ளத்தைத் தடுக்கும் தடுப்பணையைத் தாண்டிய நீர்மட்டம், புறநகருக்கு வெளியே வரை வந்துள்ளது. எனினும் இது  வரை அதன் நீர்மட்டம் அதிகரிக்காமல் இருக்கிறது இருப்பினும் எந்நேரமும், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்பிருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடுகளைக் காலி செய்வதற்கு இதுவரை ஆயிரம் பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். அதேநேரம், ஹோர்ஷம் நகரின் அருகிலுள்ள டிம்பூலா பகுதியில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அப்பகுதியில் 18 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.

இதற்கிடையில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் 20 நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து வெள்ள நீரை வெளியேற்ற அரசு அனுமதித்துள்ளது. 18 சுரங்க நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. பல சுரங்கங்களில் நீர் வெளியேற்றப்பட்டு ரயில் பாதைகள் செப்பனிடப்பட்டு வருகின்றன.

குயின்ஸ்லாந்து மாகாணத் தலைநகர் பிரிஸ்பேனில் வெள்ளத்திற்குப் பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. அதில் 13 வயது சிறுவன் ஒருவன் தன் தம்பியைக் காப்பதற்காக தன் உயிரை விட்ட நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்துள்ளது.

ஜோர்டான் ரைஸ் (13) தன் தம்பி பிளேக் மற்றும் பெற்றோருடன் காரில் சென்று கொண்டிருந்த போது கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதிகரித்துக் கொண்டே இருந்த வெள்ளத்தில் மீட்புப் படையினர் அக்காரில் உள்ளவர்களை மீட்பதற்கு முயன்றனர்.

அப்போது தன் தம்பியை மட்டும் உயரத் தூக்கி அவனைக் காப்பாற்றிய ரைஸ் தன் அம்மாவுடன் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போனான். இருவரது இறுதிச் சடங்கும் டூவூம்பா நகரில் நடந்தது. அதில் 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

ரைசின் தந்தை ஜான் டைசன் கூறு கையில், ‘நான் அவர்களோடு சேரும் வரையில் என் இதயத் தீ அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும்’ என்று பொங்கி வரும் துக்கத்துடன் கூறினார்.



No comments: