மக்களின் பங்களிப்புடன் உணவுப் பொருட்களின் விலை உயர்வை தடுத்துவிடலாம்

.
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் நாட்டின் பல பகுதிகள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் வட மத்திய மாகாணத்தின் பல பிரதேசங்களிலும், நெல் விளைச்சல் நிலங்களுக்கும், மக்களின் உடமைகள், வீடுகள், இருப் பிடங்களுக்கும் இலட்சக்கணக்கான கோழிகளுக்கும், ஆயிரக் கணக்கான கால்நடைகளுக்கும், பல மனித உயிர்களுக்கும் ஏற்பட்ட இழப்பு குறித்து, நாம் பத்திரிகைகளிலும், இலத்திரனியல் ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி சேவைகளிலும் அறிந்து வேதனைப்பட்டோம்.எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதனால் எதுவுமே நடக்கப் போவதில்லை. இந்த இழப்புக்களிலிருந்து மக்களை மீட்டெடுத்து மீண்டும் அவர்களின் வாழ்க்கையில் சகஜ நிலையை ஏற்படுத்தி, அவர்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நஷ்டஈடுகளை வழங்குதல் போன்ற நற்பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த ஆளுமையின் கீழ் இப்போது துரித கதியில் மேற் கொண்டு வருகிறது.

சகல மீட்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் அரசாங்கமே செய்து கொடுக்க வேண்டும் என்ற சுயநல நோக்கத்தை இனிமேலாவது எங்கள் மக்கள் மறந்து, அரசாங்கத்தின் இந்த புனர்வாழ்வு, மீள்வாழ்வு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தங்களின் பூரண ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டிய ஒரு நெருக்கடியான சூழ்நிலை இன்று நாட்டில் உருவாகியிருக்கிறது.

இன்றைய பெருவெள்ள இழப்புகளையும், அதனால் மக்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் ஒருசாரார் அரசியல் இலாபம் திரட்டுவதற்கு மக்கள் இடமளிக்கலாகாது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது. அது அரசாங்கத்தின் தவறான கொள்கையினால் ஏற்பட்டது என்று, அன்று எவரும் குற்றம் சாட்டினார்களா? இல்லை. அதுபோன்று, தற்போதைய வெள்ள பாதிப்புக்கு இயற்கை அன்னையே பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளாள். அதற்கும், அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

அவ்விதம் எமது நாட்டு மக்களும் தங்கள் சமூக பொறுப்புக்களை உணர்ந்து அரசாங்கத்தின் புனர்வாழ்வு புனர்நிர்மாண நடவடிக்கைகளுக்கு நிச்சயம் தங்களின் பூரண பங்களிப்பை அளிக்க வேண்டும். இந்த விடயத்தில் மக்கள் தாங்கள் எந்த அரசியல் கட்சியை ஆதரிக்கிறோம் என்பதை மறந்து, தேசப் பற்றுடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும்.

இல்லையானால், அடுத்த சில மாதங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் பாதிப்பு காரணமாக இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும், ஏனைய உப உணவுப் பொருட்களான காய்கறிகள், வெங்காயம் போன்றவற்றிற்கு தட்டுப் பாடு ஏற்படவும், அவற்றின் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இத்தகைய பிரச்சினைகள் அடுத்த சில மாதங்களில் ஏற்படலாம் என்பதை தனது தூரதரிசன கொள்கையின் மூலம் புரிந்து கொண்டுள்ள அரசாங்கம், அத்தகைய விலையுயர்வு, உணவு பண்டங்களுக்கு ஏற்படக்கூடிய தட்டுப்பாடு போன்ற சுமையை மக்கள் மீது விதிக்க விரும்பவில்லை. அதற்காக, அரசாங்கம் ஏற்கனவே, நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த விடயத்தில் பொதுமக்கள் மட்டுமன்றி எமது நாட்டின் வர்த்தகர்களும் சுயலாபத்தையும் அரசியல் செல்வாக்கையும் அடைய வேண்டும் என்ற நாட்டுப்பற்றற்ற சுயநல கொள்கைகளை கடைப்பிடைத்து செயற்கையான உணவுத் தட்டுப்பாட்டையும் இந்த பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்துவதற்கும் முயற்சி செய்யலாகாது.

எனவே, எமது நாட்டின் விவசாய குடிமக்கள் கடந்த கால துன்பங்களையும் அடைந்த நஷ்டத்தையும் பற்றி வேதனைப்படுவதை மறந்து மீண்டும் பூமாதேவியின் கருணையுடன், நெல் சாகுபடியையும், காய்கறி போன்ற பொருட்களின் பயிர்ச்செய் கையையும் ஆரம்பித்து, அடுத்து சில மாதங்களில் ஏற்படலாம் என்று பலரும் அஞ்சிக் கொண்டிருக்கும் உணவுத் தட்டுப்பாட்டையும், அவற்றின் விலையுயர்வையும் தடுத்து விடுவதற்கு அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்குவது அவர்களின் தலையாய கடமையாகும்.

மக்கள் தேசப்பற்று உணர்வுடன் நடந்து கொண்டால், நிச்சயம் எங்கள் நாட்டில் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடோ, விலை யுயர்வோ ஏற்படாது. அதன் மூலம் எங்கள் நாட்டை பொரு ளாதார ரீதியில் அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் இலட் சியக் கனவு வெற்றியடையும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது.

நன்றி தினகரன்

No comments: