மீண்டும் மீண்டும் கொல்லும் நினைவுகள் -கவிதை

.
                                                                                               சித்தாந்தன்

காகங்கள் வந்தமரும் மின்சாரக் கம்பிகளின்

சாமாந்தர வெளியில்
எனக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது
இன்றைய இரவு



காலடிகள் வற்றிய படிக்கட்டுக்களில்
தொலைந்த நண்பனின் காலடியோசை கேட்டபடியிருக்கின்;றது


இன்னும் உலரவில்லை நேற்றைய இரவு பருகிய
மதுக்குவளைகள்
அறையை நிறைத்திருக்கும் சிகரட்டின் மணம்
தீர்ந்து போகாத கதைகளை நினைவூட்டுகின்றது



நிச்சயமின்மையின் பாதையில் அவன் பயணிக்கையில்
அவனிடமும் நம்பிக்கைகள் இருக்கவில்லை
துரத்தப்பட்ட ஒரு சிறுவனைப் போலவேயிருந்தான்



அவனின் பாதைகளில் யாரேனும்
தொடரவில்லை
கைகளால் எடுத்து தன் கண்களை அவன் குத்திக்கொண்டபோது
ஒரு பகலும் ஓராயிரம் இரவுகளும் குருடாகின



மந்தைகள் இல்லாத புல் வெளியில் வெறுமனே
ஒற்றையாக கைத்தடி இருந்தது
திசைகளை நினைவு கூரத்தயங்கும் எவரும்
அதைப் பொருட்படுத்தவில்லை



மேய்ப்பனின் புன்னகையை தான் கண்டதாகக்கூறும்
வழிப் போக்கன் என்னிடம் வர அஞ்சுகின்றான்
அவன் வராதே இருக்கட்டும்
இந்த இரவை நான்
காலியாகக் கிடக்கும் மதுக்குவளைகளுடனும்
சாம்பலில் புதைந்திருக்கும் சிகரட்டின் அடிக்கட்டைகளுடனும்
கழிக்கின்றேன்
அகற்ற முடியா நினைவை உறைந்த படமாக
சுவரில் மாட்டிவைக்க நான் தயங்குகின்றேன்



வேண்டாம் நினைவுகள்
கொல்லப்பட்டவனை மீண்டும் மீண்டும் கொல்லும்
நினைவுகள்

1 comment:

Ramesh said...

'அகற்ற முடியா நினைவை உறைந்த படமாக
சுவரில் மாட்டிவைக்க நான் தயங்குகின்றேன்'

கவிதை மிக மிக நன்று. இப்படியான கவிதைகளை கொண்டவந்தால் உங்களுக்கும் நல்லது வாசகர்களான எங்களுக்கும் நல்லது.