தமிழ் சினிமா

.
சிறுத்தை

 பின் சீட்டுக்காரர் சிரிக்கிற சிரிப்பில் பிடறியெல்லாம் எச்சில்! இந்த சாரல் மழையை தியேட்டர் முழுக்க பரப்பி, பொங்கலை சி(ரி)றப்பித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சிவா. (தமிழுக்குதான் இவரு புதுசு. ஆந்திராவுல ஏற்கனவே ஹிட் அடித்தவர்) அவ்வப்போது இது தெலுங்கு படத்தின் தழுவல்ப்பா என்பதை சொல்லாமல் சொல்கிறது சில காட்சிகள். அந்த இடங்களில் மட்டும், கட்டாய இன்டர்வெல்லுக்கு தள்ளப்படுகிறான் ரசிகன்.


தானுண்டு தன் ஜேப்படி வித்தை உண்டு என்று தொழில் நடத்திக் கொண்டிருக்கும் பிக்பாக்கெட் கார்த்தியிடம் வந்து சேர்கிறது குழந்தை ஒன்று. வார்த்தைக்கு வார்த்தை அது அப்பா அப்பா என்று இவரை கொஞ்ச, குழந்தையின் நிஜ அப்பா யார் என்பதும், அவரும் தன்னை போல உருவ ஒற்றுமையுள்ள காவல் துறை அதிகாரி என்பதும் தெரிய வருகிறது திருடனுக்கு.

இந்த வழக்கமான ஆள்மாறாட்ட கதையை வழக்கம் போலில்லாமல் மாற்றி சொல்லி ஸ்கிரீன் பிளே(ட்டை) திருப்பி போடுகிறார் டைரக்டர். சிரித்த வாய் சிரித்தபடி தியேட்டருக்குள்ளிருந்து வெளியேறுகிறான் ரசிகன். கதையை போலவே கொடுத்த காசும் டேக் இட் ஈசியாகிறது!

கார்த்தியின் முகமும், அந்த சிரிப்பும் தமன்னாவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே பிடித்து போகிறது. அவர் என்ட்ரி கொடுத்தாலே ஜில் ஆகிறான் ரசிகன். ஃபிரண்டு விஷயத்துல கணக்கு பார்க்க மாட்டேன். கணக்கு விஷயத்தில் ஃபிரண்டையே பார்க்க மாட்டேன் என்று இவர் சந்தானத்தை சதாய்த்தாலும், இரண்டு பேரும் சேர்ந்து ஒரு காலனிக்கே மொட்டை போடுகிற காட்சியும் பணத்தை பங்கு போட்டுக் கொள்கிற காட்சியும் ரகளை! நகை அணிந்த பெண்களை கூட விலைப்பட்டியலோடுதான் கற்பனை செய்கிறார் மனுஷன். (அந்த கற்பனையே புதுசுப்பா) 'கண்ணா லட்டு திங்க ஆசையா?' என்ற விளம்பர வாசகத்தை கூட பொறுத்தமான இடத்தில் நுழைத்து கைதட்டல் வாங்குகிறார்கள்.

ஒரு கார்த்தி இப்படியென்றால் இன்னொரு கார்த்தியை நினைத்தாலே தொற்றிக் கொள்கிறது மிடுக்கு. சாகும்போது கூட கண்ல பயம் தெரியக்கூடாது என்கிற கொள்கை அவருக்கு. ரவுடியின் தம்பியை கதற கதற ஜீப்பில் கட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போகிற காட்சி எல்லா மொழி ரசிகனுக்குமான இஞ்சி மரபா!

மொழு மொழு வயிறு, மொசைக் இடுப்பு என்று தமன்னாவை சென்ட்டி மீட்டர் சென்ட்டி மீட்டராக காட்டி சூடேற்றுகிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். கார்த்தியை வளைக்க தமன்னா போடும் திட்டத்தில் பெருமளவு பங்கு வகிக்கிறது இந்த இடுப்பு! செகன்ட் ஆஃபில் எங்கம்மா போனீங்க என்று ரசிகனை ஏங்கவும் வைக்கிறது இவரது விடுப்பு!

சந்தானத்தின் ஒவ்வொரு ஜோக்குக்கும் சரணாகதியாகிறார்கள் ரசிகர்கள். டேய்... வாழ்க்கையில நான் எத்தனையோ இடத்துல திருடியிருக்கேன். மெடிக்கல் ஷாப்புல திருட வச்சிட்டீயேடா என்று வேதனைப்படுகிறாரே, அந்த வசனத்தை எங்கே கேட்க விட்டார்கள்? வெடிச்சிரிப்பய்யா அது. ஆளாளுக்கு டேய்ய்ய்ய்னு கத்துறீங்களே. அது என்ன ரவுடிகளோட ரிங் டோனா? என்று சந்தானம் சதாய்க்கிற போதும் இதே ரீயாக்ஷன்தான் தியேட்டரில்.

அப்புறம் வில்லன் வகையறா... அவர்களின் காட்டுவாசி தேகம், கர்ணகொடூர பாவம் என்று நகர்கிறது பிற்பாதி. முரட்டு போலீஸ் அதிகாரிக்கு பதிலாக காமெடி ஹீரோ என்ட்ரி ஆனதும், வில்லன்களும் காமெடி பண்ண ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இசை வித்யாசாகர். துண்டு துண்டாக வரும் அந்த அம்மா பாட்டு அழகான மெலடி. அப்புறம் எல்லாமே கமர்ஷியல் கட்டாயம்.

உறுமும் என்று உள்ளே போனால், புல்லாங்குழல் வாசிக்கிறது புலி!

-ஆர்.எஸ்.அந்தணன்

நன்றி தமிழ்சினிமா.கொம்

No comments: