உறவியல் - மஷூக் ரஹ்மான்

.

நண்பர்களுக்கு தினமும் குட் மார்னிங் ஃ குட் நைட் SMS… நம் வீட்டாருக்கு?

சின்ன விஷயம்தான்! அதிகம் பழக்கமாகி விடுவதாலோ என்னவோ… நெருங்கிய உறவுகளிடம் பெரிய தூரத்தை ஏற்படுத்தி விடுகிறோம். ஒரே பணியிடத்திலோ அல்லது பேருந்திலோ சந்திக்கும் யாரோ நபர்களுடன் அதிகம் நெருக்கமாகும் நாம்… எப்படி ஒரே வீட்டில் இருக்கும் உறவுகளிடம்; இடைவெளி ஏற்படுத்துகிறோம் அல்லது இடைவெளி ஏற்பட்டதாக உணர்கிறோம்?

என்ன, பதில் யோசிச்சீங்களா?யோசனையே ஒரு பதில்தான். இந்த நிலை ஏற்படுவதற்கு குறிப்பாக இரண்டு காரணங்கள் இருக்கு. ஒன்றுஇ அதிக நேரத்தை யாரோடு செலவிடுகிறோம் என்பது. இரண்டு, நெருங்கிய உறவுகளுக்குள் இது போன்ற சின்னச் சின்ன பரிமாற்றங்கள் இல்லாமல் இருப்பது. அப்படி இருப்பது போலித்தனம் என்று நினைப்பது.

நீங்கள் இந்த இரண்டு வகையிலும் இல்லை என்றால் சந்தோஷம்!

இன்றைய வேலைச் சூழல் ஒரு புறம் ஆட்டி வைத்தாலும்… பலர் எப்போதும் போல இனிமையாகவும் எளிமையாகவும் தங்கள் வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்க முடியும். இப்படிப் பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிகம் உரையாடும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள் என்பது உண்மை.

அவனும் கார்ப்பரேட் கம்பெனியில்தான் பணிபுரிந்தான். மனைவி, ஒரு குழந்தை என இன்றைய தலைமுறைக் குடும்பம். அவளும் பணியில் இருப்பவள்தான். ஒரே அலுவலகத்தில் அருகருகே பணிபுரிந்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பின்பு, அது இரவு நேரப் பணி என்பதால் அதனை ராஜினாமா செய்துவிட்டு கொஞ்சம் அளவான சம்பளமாக இருந்தாலும் குழந்தைக்காக 9-6 வேலையில் சேர்ந்து கொண்டாள் அவள். அது அவளது விருப்பமே. ஒரு பிரபல தேநீர் விளம்பரத்தில் வருவதுபோல், இவர்களுக்கும் கொஞ்சம் பாசத்தைப் பகிர்ந்து கொள்ள கொஞ்சம் நேரம் தேவைப் பட்டது, இடைவெளி அதிகரித்ததால்

அவன் வேலைச் சூழலை அறிந்திருந்த அவள், ஏதேனும் ஒரு வகையில் தங்கள் குடும்பத்தில் மீண்டும் கலகலப்பையும் சந்தோஷத்தையும் உண்டாக்க யோசித்தாள். திருமணத்திற்கு பிறகு இருவருமே தம் பெற்றோருடன் பேசாமல் இருந்தாலும். குழந்தை பிறந்தது முதல் அவளின் பெற்றோர் மட்டும் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் தன் பெற்றோரை தம் வீட்டிற்கு அழைக்க வேண்டி அவனுக்கு அலுவலக மின்னஞ்சல் மூலம் அனுமதி கேட்டாள். அவன் “ஓ…..கே….” என இரண்டே எழுத்துக்களில் தன் மொத்த சலிப்பையும் வெளிப்படுத்தியிருந்தான். மறுநாள் சேவலுக்கு குட்நைட் சொல்லியபடியே வீட்டில் நுழைந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி! அவனுடைய பெற்றோர் வந்து அமர்ந்திருந்தனர். தன் குழந்தையை அள்ளிக் கொண்டு அவர்கள் காலில் விழுந்து வணங்கினான். பிறகு சமையலறையில் தன் மனைவியிடம் அவள் பெற்றோர் பற்றிக் கேட்டான், அவர்கள்தான் ஹாலில் இருப்பதாக அவள் சொன்னதும் அவனுக்கு உச்சி குளிர்ந்தது. வேலைப் பழுவையே மறந்து பேசிக் கொண்டிருந்தான்.

மதியம் அவனுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை அவள் செய்திருந்தது இன்னொரு ஆச்சர்யம் அவனுக்கு. தன் பெற்றோரிடம் கண்ணியமாகவும் பாசமாகவும் அவள் பழகுவதைப் பார்த்த அவன், திருமணத்திற்கு பிறகு இப்போதுதான் முதன் முறையாக அவளுக்கு என்ன வேண்டுமென்று ஆசையாய் கேட்டான். இதேபோல தினமும் தன்னிடமும் தங்கள் குழந்தையிடமும் நேரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றாள். அன்று முதல் நிலைமையே மாறியது. வீட்டிற்கு வந்ததும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்களுடன் நேரத்தைச் செலவு செய்தான். தனிமையை அனுபவித்த அவளுக்கும் குழந்தைக்கும் நல்ல துணையும் வழிகாட்டியுமாக அவன் பெற்றோர் இருந்ததுடன் அவளின் பெற்றோரையும் அழைத்து எல்லோரும் சேர்ந்தே இருந்தார்கள். ஒருமுறை அவள் தன்னிலை விட்டு இறங்கி அவன் பெற்றோரைச் சந்தித்ததே அவள் குடும்ப மலர் பூக்க காரணம்.

நீங்களும் வீடு திரும்பியதும் உங்கள் அனுபவங்களை, வெளியில் நடந்த விஷயங்களை வீட்டிலுள்ளவர்களோடு பகிர்ந்து பாருங்கள்... குறிப்பாக வீட்டிலுள்ள பெரியவர்களிடம். நல்ல தீர்வுகளும் கிடைக்கும்இ நிம்மதியும் நிலைக்கும்.

ஒருவர் நம்மிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்வதோ அல்லது ஆலோசனை கேட்பதோ, நம் மீது உள்ள மதிப்பினாலும் அன்பினாலும்தான். இப்படி, நம் உறவுகள் நம்மை நாடும்போது உதாசீனப் படுத்தாமல் இருந்தாலே உறவியல் ஈக்வேஷன் பேலன்ஸ் ஆகிடுமே! இன்னும் பேசுவோம்…

உறவியல் ஈக்வேஷன்: கூடடையும் குருவிக்கும் குறிக்கோள் உண்டு
கூடும்வரை குடும்பத்தோடு பகிர்தல் நன்று!

No comments: