.
அதிகாலைத் துயிலெழுந்து
ஏருழவன் நடப்பதனால்
பயிர்களெனும் உணவதுவும்
பாருக்குக் கிடைக்கிறது!
கதிரவனை வரவேற்று
கைகூப்பித் தொழுதிட்டு
தரும்கதிரால் உயிர்ப்பெருக்கம்
உற்பத்தி எனப்பெருக..
வாழ்கின்ற மக்களெல்லாம்
வயிறாற பசியாற..
வழங்குகின்ற உழவனுக்கோர்
உன்னதத் திருநாளாம்..
தைப்பொங்கல் குலவியிட்டு
தரணியெங்கும் மகிழ்ச்சிபொங்க..
புதுப்பானை அலங்கரித்து
பொங்கலிடும் நன்னாளாம்!
தமிழருக்கோர் அடையாளம்!
உழவருக்கோப் பெருநாளாம்!
உடனுழைத்த விலங்குகட்கும்
நன்றிசொல்லும் எழிற்கோலம்!!
கிராமங்கள் யாங்கணுமே
உற்சாகம் ஊர்வலமாம்!
காக்கின்ற கடவுளுமே
கனிந்துருகும் பொன்னாளாம்!
மாக்கோலம் தான்வரைந்து
மாதர்களின் திறம்சொல்லும்!
மழலைகளின் கூக்குரலால்
மகிழ்ச்சியலை தான்பொங்கும்!!
காவிரிமைந்தன், (மு.இரவிச்சந்திரன்) ருவைஸ், அபுதாபி
No comments:
Post a Comment