மனதைக் கனக்க வைக்கும் வெள்ளக் காட்சிகள்

மனதைக் கனக்க வைக்கும் வெள்ளக் காட்சிகள்



மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் 3723 குடும்பங்களைச் சேர்ந்த 14,239 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாடசாலை மற்றும் பொது இடங்களில் தங்கியிருப்பதாக மூதூர் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. இம்மக்கள் 28 முகாம்களில் தங்கியுள்ளனர்.





மூதூர் பிரதேசத்தில் கடந்த பல தினங்களாக தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பெருந்தொகையானோர் குடியிருப்புகளில் நீர் தேங்கிய நிலையிலும் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் கோவிலடி, சிப்பித்திடல், முள்ளியடி, கள்ளிமேடு, பத்தினிபுரம், பாலம்போட்டாறு, முள்ளிப்பொத்தானை, 96வது மைல்கல். கல்மெடியாவ போன்ற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டுள்ளது.

சில இடங்களில் 2 அடிக்கு மேலாக வெள்ளம் பாய்வதாக திருமலையிலிருந்து எமது சிறப்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். தம்பலகாமம் கிண்ணியா வீதி, கிண்ணியா வான்அல வீதி என்பன போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளன.

படுவான்கரைப் பிரதேசமே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது
 


வெள்ளம் காரணமாக 14 பிரதேச செயலகப் பிரிவுகளும் பாதிக்கப்பட்டாலும் படுவான்கரைப் பிரதேசமே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அடைமழையினால் குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டதையடுத்து இவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது. இதனாலேயே படுவான்கரைப் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியதுடன், அதனுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.

வெள்ளத்தில் தவிக்கும் மக்கள்

கந்தளாய் குளத்தில் 116,000 கன அடி நீர் சேர்ந்துள்ளதால் 10 வான்கதவுகளும் ஒரு அடிக்கு இன்று காலை 10.00 மணியளவில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக இப்பகுதிகள் மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது

ஜின்னாபுரம் பகுதியில் பண்ணை குளம் நிரம்பி வழிவதால் புல்மோட்டை 3வது மைல்கல் வீதியிலும் வெள்ளம் பாய்கின்றது. இப்பகுதிகள் ஊடாக வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை தோன்றி உள்ளது. மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் மூதூர் கிழக்கு பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சின்னக்குளம் நிரம்பி உள்ளது.

No comments: