எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்


.;
எனது இலங்கைப் பயணம் -பகுதி 7


பாடசாலை சென்று காரை நிறுத்திவிட்டு அதிபரின் அறையை கோக்கி சென்றோம். அங்கே உப அதிபருடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது. இரண்டு இராணவத்தினர் பாடசாலைக்குள் வந்தார்கள் எமது வாகனத்தின் சாரதியை அழைத்து கதைத்தார்கள் பின் உதவி அதிபர் சென்று உரையாடிவிட்டு வந்தார் எங்களைப்பற்றிய விபரங்கள் கேட்டார்களாம் அதன் பின் எம்மோடு எதுவும் கதைக்காமலே சென்று விட்டார்கள். 300 பிள்ளைகள் படிக்கின்றார்கள் என்று அறிந்தேன். கீழ் வகுப்பொன்றில் வெள்ளை உடைகள் அணிந்த குழந்தைகள் தரையில் அமர்ந்திருந்தார்கள் அவர்களின் அருகே புத்தகப்பைகள் இருக்கின்றது நிலத்தில் கொப்பியை வைத்து எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.





 ஆசிரியை எழுந்து நின்றார் உப அதிபர் அவரை அறிமுகம் செய்துவைத்தார். நான் வணக்கம் கூறிவிட்டு நீங்கள் அமருங்கள் என்று கூறிவிட்டு வெளியேறும்போதும் அவர் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தார் அருடைய சிரிப்பு ஏதோசொல்வது போல் இருந்தது. நான் உப அதிபரை பார்த்தேன் அவர் கூறினார் ஆசிரியர் இருப்பதற்கு கதிரையில்லை அதுதான் நிற்கிறார் என்றார் அதிர்ந்து விட்டேன். ஆசிரியருக்கு கதிரை இல்லையா என்றேன்? ஆறு வகுப்பு ஆசிரியர்கள் நின்றுதான் படிப்பிக்கின்றார்கள் என்றார். குழந்தைகள் இருப்பதற்கு கதிரை மேசையில்லை ஆசிரியர் அமர்வதற்கு கதிரையில்லை சப்பாத்தில்லை மாற்றுச் சீருடையில்லை எழுதுவதற்கு கரும்பலகையில்லை. ஒன்றுமே இல்லையா ? இருக்கிறது எல்லாம் பற்றாக் குறையாக இருக்கிறது. சமாளிக்க வேண்டும். எப்படிச் சமாளிப்பதென்றுதான் தெரியவில்லை. கல்வி அதிகாரிகள் தான் என்ன செய்ய முடியும்? அதிபர்தான் என்ன செய்யமுடியும். இன்று அதிபர் இதுவிடயமாக கதைப்பதற்குதான் சென்றுள்ளதாக கூறுகின்றார் உப அதிபர். இத்தனை சோகத்தின் மத்தியிலும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆர்வம் மட்டும் தாராளமாக இருக்கிறது. படிக்க வேண்டும் என்ற உத்வேகம் இருக்கிறது. தொடர்ந்து பல வகுப்புக்களுக்கு செல்லுகின்றோம் பல வகுப்புகளில் மாணவர்கள் நிலத்தில்தான் இருக்கின்றார்கள். இருப்பதற்காவது ஒரு இடம் இருக்கின்றதே என்ற நிம்மதி என்று கூறுகின்றார் ஒரு ஆசிரியை அவரும் நின்று கொண்டுதான் பாடம் சொல்லிக் கொடுக்கின்றார்.



சுற்றிப்பார்க்கிறேன் வேலி இல்லாத பாடசாலை வளவு எல்லை போன்று இடையிடையே கம்பிக் கட்டைகள் நடப்பட்டிருக்கிறது அதன் வெளிப்பக்கமாக கண்ணி வெடி அபாயம் என்ற சிவப்பு நிற அட்டைகள் குத்தப்பட்டுள்ளது. அபாயத்தின் மத்தியில் அமைதியாக அந்தக்குழந்தைகள் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
அவசரமான உதவிஎன்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறேன். ஒரு இரண்டு நிமிசம் தாருங்கள் என்று கூறிவிட்டு உப அதிபரும் நான்கு ஆசிரியர்களும் உரையாடிவிட்டு வருகின்றார்கள். நீங்கள் உதவுவதாக இருந்தால் ஆசிரியர்களுக்கான கதிரைகளும் நான்கு வகுப்பில் பிள்ளைகள் கதிரை மேசை இல்லாமல் இருக்கின்றார்கள் அவர்களுக்கான கதிரை மேசைகளும் உடனடித் தேவையாக உள்ளது என்கின்றார். அரசாங்கம் ஏன் தரவில்லை என்று கேட்டேன் எங்கும் ஒரே பதில்தான் எல்லா இடமுமே அழிந்து போனவைதான். கிடைக்கும் பணத்தில் எல்லாப் பாடசாலைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக செய்கின்றார்கள் இவைகள் எப்போது எமக்கு கிடைக்குமோ தெரியாது என்கின்றார். நம்பிக்கையோடு இருக்கின்றோம் நம்பிக்கை மட்டும்தான் என்று கூறிவிட்டு சிரிக்கின்றார். பின்பு வேறு தேவைகளைப் பற்றி கேட்டபோது சோலாப்பவர் லைற் இருந்தால் மாலை நேரத்தில் பெரிய வகுப்பு பிள்ளைகளை படிப்பிக்கலாம் என்கிறார் ஒரு ஆசிரியர். யார் இரவில் படிப்பிப்பார்கள் என்ற கேள்வியை கேட்டுவிட்டேன். உப அதிபர் கூறுகின்றார் ஆசிரியர்கள் குறைவு அந்த சேர் யாழ்ப்பாணத்தில இருந்து வந்து படிப்பிக்கிறேர் இங்க இருந்து தான் படிப்பிக்கிறேர். மேலதிக கிளாஸ் வைத்தால் பிள்ளைகளை ஓரளவு முன்னேற்றலாம் அதுக்கு வெளிச்சம் வேணும் சரியான விலை உங்களால செய்ய முடிஞ்சால் உதவியாக இருக்கும் தயக்கம் தெரிய கூறுகின்றார். அந்த ஆசிரியரை கைகூப்பி வணங்கினேன் சேவையின் முழு உருவமாக அந்த ஆசிரியர் எனக்குத் தோன்றினார். போக்கு வரத்து இல்லாத கண்ணிவெடிகள் நிறைந்த பகுதியில் ஒரு யாழ்ப்பாண ஆசிரியன் மனமுவந்து தங்கியிருந்து கற்பிக்கின்றார் என்றால் அது சேவை இல்லாமல் வேறு என்ன சொல்லமுடியும். என்னை அழைத்துச் சென்ற அந்தக் கிராமத்து மக்கள் ஆவலோடு பார்த்துக்கொண்டு நிற்கின்றார்கள். அவர்களில் ஒருவரை அழைத்துக்கொண்டு கிளிநொச்சி சென்று நான்கு வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மேசை கதிரைகள் வாங்கி லொறியில் ஏற்றிஅனுப்பி வைக்கிறேன். மனம் சற்று லேசாகின்றது. அந்தக் குழந்தைகளின் ஆனந்தம் கண்ணில் தெரிய மனம் நிறைகிறது. அவர்கள் கேட்ட மற்றைய தேவைகளையும் நிட்சயமாக ஓரிரு வாரங்களுக்குள் செய்து தருகின்றேன் என்று உப அதிபருக்கு தொலைபேசியில் அழைத்து உறுதிகூறுகின்றேன். அந்தக் கிராமத்து மனிதர் நன்றியோடு கூறுகின்றார் ஜயா எங்கட வயல் விளைஞ்சுதெண்டால் நாங்கள் கொஞ்சம் மூச்சுவிடுவம் அது வரைக்கும்தான் என்று வயல் மேல் வைத்த நம்பிக்யையோடு பேசுகின்றார்.



கொழும்பு போக முன்பாவது இவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுக்வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவுஸ்ரேலிய நண்பர்கள் சிலருடன் தொடர்பு கொள்கின்றேன் அவர்களும் உதவ முன்வந்தார்கள் 550 டொலர்கள் பெறுமதியான அந்த சோலர் லைற்ரை ஒருவர் ஏற்றுக்கொண்டு வாங்கிக் கொடுக்க உதவினார்;. வேறு சில நண்பர்கள் செய்த உதவி முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கப்பட்டது அங்கு சென்ற பகுதி எழுதும் போது அவற்றை குறிப்பிடுவேன்.
அதனைத்தொடர்ந்து கிளிநொச்சில் சிலரை சந்தித்துவிட்டு வவுனியா ஊடாக மடுவை நோக்கி சென்றேன். அடுத்தவாரம் வவுனியாவில் சந்தித்த சில விடயங்களையும் மடுமாதா ஆலயத்தைப் பற்றியும் தருகின்றேன்.





இந்தக் கட்டுரையின் 7 வது பாகம் இதுவாகும் இதன் முன்னைய பகுதிகளைப் பார்வையிடுவதற்கு இடப்பக்கத்தில் உள்ள மேலும் சில பக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் எனது இலங்கைப் பயணம் என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள்.


1 comment:

kirrukan said...

[quote]ஒரு யாழ்ப்பாண ஆசிரியன் மனமுவந்து தங்கியிருந்து கற்பிக்கின்றார் என்றால் அது சேவை இல்லாமல் வேறு என்ன சொல்லமுடியும்[/quote]

ஓரிஜினல் யாழ்ப்பாணத்தானாக இருக்கும்...அதுதான் புலத்துக்கு வராது வன்னியில் சேவை செய்கிறார்