தமிழ்சினிமா

1. தென்மேற்கு பருவக்காற்று

2. பொங்கலுக்கு வருமா காவலன்?

3. நடிகை தற்கொலை...


1. தென்மேற்கு பருவக்காற்று

 ஆட்டாம் புழுக்கைகளும், காட்டாமணக்குகளும் மலிந்து கிடக்கும் தமிழ்சினிமாவில் நேர்மையாகவும், கூர்மையாகவும் ஒரு படம்! கூடல் நகரில் கோட்டை விட்டாலும், தென்மேற்கை மட்டுமல்ல, தமிழ் பேசும் அத்தனை ஊரையும் தன் வசப்படுத்தியிருக்கிறார் சீனு ராமசாமி. நமது அதிகபட்ச வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். 'இந்த படத்தை ஓட வைங்க மக்களே...'



ஒரு பக்கம் கடும் வறட்சி. அதே ஊரின் இன்னொரு பக்கம் பசுமையின் திரட்சி. இந்த பூகோள அதிசயத்திற்குள் ஒரு புதையலையும் செருகி கதை சொல்லியிருக்கிற விதம் ஆஹா..! அந்த புதையல்தான் அம்மா சரண்யாவின் அழகான பாசம், உழைப்பு, கோபம் எல்லாமே!

கிடையிலிருந்து ஆடுகளை திருடும் கும்பல் ஒன்றை, ஆட்டுக்கு சொந்தக்காரனான ஹீரோ விரட்டுகிறான். கையில் சிக்கிய அந்த ஒருவன், திருடனல்ல... திருடி! ஆட்டை திருட வந்தவள், இவனின் மனசையும் ஆட்டையை போட்டுவிட்டு ஓடுகிறாள். ஆடு தேடுகிற சாக்கில் அடுத்த நாள் அவளையே தேடிப்போகும் அவன் மெல்ல மெல்ல அவளை தன் வசப்படுத்த, காதல் கைகூடுகிற நேரத்தில் கத்தி, குத்து, ரத்தம் என்று தேனிக்கே உரிய சம்பிரதாயங்களில் அரைபடுகிறது காதல். தமிழ்சினிமா இதுவரை பார்க்காத ஒரு அம்மா சென்ட்டிமென்டுடன் கதை முடிய, விழியோரத்தில் துளிர்க்கும் ஒற்றை துளி கண்ணீர் அவரவர் அம்மாவை நினைவுபடுத்தும்!

இந்த படம் ஆயிரம்கால் மண்டபம் எனில், அதில் தொள்ளாயிரம் கால்களின் பலத்தை உள்ளடக்கியது சரண்யாவின் நடிப்பு. அந்த கரிசல் மண்ணில் அவர் ஏர் ஓட்டுவதை கண்டால் ஆண் விவசாயிகளே ஆச்சர்யப்படுவார்கள். "ஏய்... கருவாச்சி. நில்லுடி. வாழத்தானே வந்தே? உள்ள போ" என்று சரண்யா கோபப்படுகிறாரே, என்ன ஒரு திருப்பம்! வெகு இயல்பாக மகனுக்கு பெண் பார்ப்பதும், வரதட்சணை பேசுவதும், வெற்றிலை மாற்றிக் கொள்வதும், சரண்யாவுக்கு தேனி பகுதியில் ஒரு ரேஷன் கார்டே போட்டுக் கொடுக்கலாம்.

படிய வாரிய தலை. பளிச்சென்ற விபூதி. கிராமத்து ஹீரோன்னா பரட்டையாதான் திரியணுமா? இலக்கணத்தை உடைத்திருக்கிறார் புதுமுகம் விஜய் சேதுபதி. அம்மாவா, காதலியா என்ற தடுமாற்றத்தை அப்படியே உணர வைக்கிறார். தனக்கு சொல்லாமலே ஊரைவிட்டு கிளம்பும் வசுந்தாராவுக்கு இவர் டாடா காட்டுவதெல்லாம் ரொம்பவே புதுசு. இனிமேல் ஊர்ல பாதிபேர் சட்டையை கழட்டிட்டு திரிஞ்சா ஆச்சர்யமில்லை!

பேருதான் பேச்சி. ஆனால் படத்தில் வசுந்தரா பேசுகிற வசனங்களை உள்ளங்கையில் எழுதி ஒரே மூச்சில் ஒப்பித்து விடலாம். அதனாலென்ன. இவர் கண்கள் பேசுகிற பேச்சு இருக்கே, அது பக்கம் பக்கமாக எழுத வேண்டியதை பளிச் பளிச்சென்று புரிய வைக்கிறது. வசுந்தரா மேல் அடிவிழக் கூடாது என்று சேதுபதி தடுக்க, அவன் போகிற திசையெல்லாம் வசுந்தராவின் கண்கள் அலைபாய்வது அற்புதமான விஷ§வல் கவிதை! (இந்த காட்சிக்காக ஒளிப்பதிவாளர் செழியனுக்கு தனி சபாஷ்)

திருட்டு கல்யாணத்திற்கு தயாராகும் ஹீரோ, ஒவ்வொரு பஸ்சாக ஏறி இவரை தேடிக் கொண்டிருக்க, இவரோ அவன் வீட்டுக்கே போய் வருங்கால மாமியாரிடம் 'உன் புள்ளைய நீயே வச்சுக்கோ. எனக்கு அவன் உசிரு ரொம்ப முக்கியம்' என்று பின்வாங்குவது அதிரடியான திருப்பம்!

தண்ணி பாக்கெட்டும் ஒரு ரூவா. ஒண்ணுக்கு அடிக்கவும் ஒரு ரூவாவா? என்று சதாய்க்கும் தீப்பெட்டி கணேசன் நாட்டு நடப்பை புட்டு புட்டு வைப்பதெல்லாம் வெடிச்சிரிப்பு. எங்க தலைவர் கமல்ஹாசன் ஓட்டை வேற யாரோ போட்டுட்டு போயிட்டானாம்ல? என்று கேட்கிற தீப்பெட்டியின் பொறி ரொம்பவே எக்குதப்பு!

வில்லனாக நடித்திருக்கும் அருள்தாஸ், குமார், "நமக்காகதான்யா செயிலு கட்டி போட்டுருக்கான். சந்தோஷமா போயிட்டு வாய்யா..." என்று வாழ்த்தி அனுப்பும் அந்த கிழவி இப்படி எல்லாருமே அவரவரர் பங்குக்கு அல்டிமேட் ஆகியிருக்கிறார்கள்.

தென்மேற்கு பருவக்காற்றையும், அந்த சிலுசிலுப்பையும் தியேட்டருக்குள் பரவ செய்கிறது செழியனின் மிக மிக இயல்பான ஒளிப்பதிவு. இருட்டில் ஆடு திருடுகிற காட்சிகள் அப்படியே நேரில் பார்ப்பது போன்ற லைட்டிங்! காட்சிகளை நீட்டி கலவரப்படுத்தாமல் பொருத்தமான இடத்தில் மட்டும் கத்தரிக்கு வேலை கொடுத்திருக்கிறார் எடிட்டர் காசி.விஸ்வநாதன். அளவான கச்சிதமான பின்னணி இசை. ஏண்டி கள்ளச்சி என்னை தெரியலையா, கள்ளிக்காட்டில் பிறந்த தாயே என்று எந்நேரமும் முணுமுணுக்க வைக்கிற பாடல்கள், இந்த ஆண்டின் மிக முக்கியமான புதுவரவு இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன். ஒவ்வொரு வரியையும் ஆத்மாவின் ஓசையாக இறக்கி வைத்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

வருஷ கடைசியில் கிடைத்த பரிசாக ஜொலிக்கிறார் இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி. கமர்ஷியல் குப்பைகள் இவர் மேல் படியாமல் பார்த்துக் கொள்வது இப்படத்தின் வெற்றியில்தான் இருக்கிறது! செய்வீர்களா ஜனங்களே...

-ஆர்.எஸ்.அந்தணன்


2. பொங்கலுக்கு வருமா காவலன்?


-திடுக்... திகில்...திருப்பம்!

வருமா காவலன்?



விஜய் ரசிகர்களை ஆவலோடு எதிர்பார்க்க வைத்திருக்கிற இந்த படம், பொங்கலுக்கு வருமா என்ற கேள்விக்கு இந்த நிமிடம் வரைக்கும் கிடைக்கிற பதில் ஊசலாட்டம்தான்! நாலாபுறமும் வந்து மோதுகிற பிரச்சனையால் விழி பிதுங்கியிருக்கிறார் விஜய்யும், இப்படத்தை வெளியிடப் போகும் ஷக்தி சிதம்பரமும்.

இதற்கிடையில் 75 பிரிண்டுகளுக்கு மேல் வெளியிடப்படும் படங்களுக்கு பதினைந்து சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கமே முன்வந்து அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது. ஒருவேளை இது அமல்படுத்தப் பட்டால் 37 கோடிக்கு வாங்கப்பட்ட விஜய் படம் பெரும் சிக்கலுக்குள்ளாகும் என்கிறார்கள்.

இந்த ஒரு படம் மட்டுமல்ல, பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் சிறுத்தை, ஆடுகளம், இளைஞன் ஆகிய மூன்று படங்களும் கூட கிடைத்த லாபத்தில் குறிபிட்ட பகுதியை கேளிக்கை வரியாக செலுத்த வேண்டி வரும். இப்பவே சிறுத்தை படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் ஒவ்வொரு ஏரியாவுக்கும் இருபது லட்ச ரூபாயை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்களாம்.

காவலன் படம் பொங்கலுக்கு வரப்போவதில்லை என்று கோடம்பாக்கத்தில் முணுமுணுப்பு எழுந்ததற்கு காரணம்? இப்படத்தை என்எஸ்சி என்ற மிகப்பெரிய ஏரியாவில் ரிலீஸ் செய்யப் போகும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்னும் தியேட்டர்களையே கமிட் செய்யவில்லையாம்.

ஒரு தடவ முடிவெடுத்துட்டா அவரு பேச்சை அவரே கூட கேட்காம போகட்டும். அது பிரச்சனையில்ல. இப்போ அடுத்தவங்களும் கேட்காம போயிட்டாங்களே... அதுதான் பிரச்சனை!

3. நடிகை தற்கொலை...


சக நடிகைகள் அதிர்ச்சி
சினிமாவை விட டி.வி ரசிகர்களின் மனங்களுக்கு ரொம்ப அருகாமையில் இருந்தவர் ஷோபனா. இவரும் வெண்ணிற ஆடை மூர்த்தியும் இணைந்து நடித்த பல சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்திருக்கின்றன. ஆனால் அதே ரசிகர்களை குலுங்கி குலுங்கி அழ வைக்கிற மாதிரி, தற்கொலை செய்து கொண்டார் ஷோபனா. இந்த தற்கொலைக்கான காரணம் புரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது உறவினர்களும் ரசிகர்களும்..

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனது அம்மா வைரம் என்பவருடன் குடியிருந்தார் இவர். நேற்று காலை மகளை வீட்டில் விட்டுவிட்டு வங்கிக்கு போயிருந்தார் வைரம். திரும்பி வந்தபோது கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டு மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தாராம் ஷோபனா. உயிர் போவதற்குள் அவரை கீழே இறக்கியிருக்கிறார்கள். ஆனால், உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் அநியாயமாக இந்த மண்ணை விட்டு பிரிந்து விட்டார் ஷோபனா. சாவதற்கு முன் ஒரு கடிதம் கூட அவர் எழுதி வைக்கவில்லை என்பதுதான் வேதனை.


இந்த சாவு இவருடன் நடித்த சக நடிகைகளை அதிர வைத்திருக்கிறது.

வங்கிக்கு கிளம்புகிற நேரத்தில் சிரித்துக் கொண்டே என்னை அனுப்பி வைத்தவள் இப்படி செய்வாள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லையே என்று அவரது அம்மாள் வைரம் அழுதது பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சிக்கன் குனியா நோய் வந்ததாம் அவருக்கு. இதன் காரணமாக அவர் வலியில் துடித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுதான் இந்த சாவுக்கு காரணம் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை.

உண்மையை காவல்துறைதான் கண்டறிய வேண்டும்!






நன்றி தமிழ்சினிமா.கொம்

No comments: