இருபதாவது ஆண்டாக பொங்கல் விழா-யாழ். எஸ்.பாஸ்கர்

.

இருபதாவது ஆண்டாகத் தைத்திருநாளுக்கு விழா எடுக்கிறது விக்ரோறியத் தமிழ்க் கலாச்சாரக் கழகம் என்ற  சாந்தினி புவனேந்திரராஜாவின் கட்டுரைக்கு பதிலாக வந்த குறிப்பை இங்கு தருகின்றோம்  

இருபதாவது ஆண்டாக பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறது விக்ரோறிய கலாசாரக்கழகம் என்ற இந்தச் சிறுகட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி விக்ரோறிய தமிழ் கலாசாரக் கழகத்தினரால் இவ்வருடம் கொண்டாடப்படுவது இருபதாவது பொங்கல்விழா அல்ல. உண்மையில் அது 18 ஆவதாகும்.
விக்ரோறிய தமிழ்கலாசாரக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதே 1993 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலேதான். 1994 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக அந்தக் கழகத்தினரால் பொங்கல்விழா ஆரம்பிக்கப்பட்டிருக்க முடியும். எனவே இவ்வாண்டு நடைபெறுவது 18 ஆவது பொங்கல்விழாவே. கட்டுரையாளர் இருபதாவது பொங்கல்விழா என்று பத்திரிகை மற்றும் இணையத்தளங்களில் எழுதுவது தவறானது மட்டுமல்ல குறிப்பிட்ட கழகத்தினரின் வரலாற்றையும் திரிபுபடுத்துவதுமாகும்.மெல்பேணில் பொங்கல்விழா ஆரம்பிக்கப்பட்டமை பற்றிய உண்மையான சில தகவல்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமென நினைக்கின்றேன்.
மெல்பேணில் முதன்முதல் பொங்கல்விழாவை நடாத்தியவர்கள் இளம்தென்றல் கலை மன்றத்தினர். 1991 ஆம் ஆண்டு முதல் 1993 ஆண்டுவரை மூன்று வருடங்கள் மிகவும் சிறப்பாகவும், பிரமாண்டமான அளவிலும் அந்த விழாக்கள் நடாத்தப்பட்டன. மூராபின் என்னும் நகரிலும் அதனை அண்டிய இடங்களிலும் தமிழ் இளைஞர்கள் பலர் அப்போது தங்கியிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இளம்தென்றல் கலைமன்றம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பினால் 1991 ஆம் ஆண்டு கொலிங்வூட் நகரமண்டபத்தில் முதன்முதலாக பொங்கல்விழா நடாத்தப்பட்டது. “பண்டாரவன்னியன்”; என்ற வரலாற்று நாடகமும், இசைநிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிகளும் இந்த விழாவில் இடம்பெற்றன.
இரண்டாவது பொங்கல்விழா 1992 ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது. அதுவும் கொலிங்வூட் நகர மண்டபத்திலேயே நடைபெற்றது. அதில், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் நெறியாழ்கையில், “மாவீரன் எல்லாளன்” என்ற வரலாற்று நாடகமும், “மெல்பேண் கந்தையா” என்ற நகைச்சுவை நாடகமும் அரங்கேறின. மற்றும் மிகப்பெரிய அளவில் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. “இருபதாவது பொங்கல்விழா” என்ற கட்டுரையை எழுதியவரின் பிள்ளைகளின் நடனம் ஒன்றும், மாவீரன் எல்லாளன் நாடகத்தின் அரசவைக் காட்சியில் இடம்பெற்றிருந்தமையையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அடுத்த வருடம் 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் நெறியாழ்கையில் பிரபல எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் “வலை” என்ற நாடகம் அரங்கேறியது. மெல்லிசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
இளம் தென்றல் கலை மன்றத்தினரின் பொங்கல் விழாக்களிலே இடம்பெற்ற நாடகங்களில் முல்லை சிவா, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, நான் (யாழ். எஸ். பாஸ்கர்). கிருஸ்ணமூர்த்தி, வசந்தன், வித்தியானந்தன், கணேசர், கிங்ஸ்லி, அன்ரன் ஞானசீலன், செல்வராஜா, தமிழரசன், ஜெயரெத்தினம், திருமதி. தியாகராஜா, நளாயினி, கணபதிப்பிள்ளை, ரமேஸ் முதலிய பலர் நடித்திருந்தனர்.
இசைநிகழ்ச்சிகளில் பிரபல மிருதங்கக் கலைஞர் திரு. யோகன் கந்தசாமி திருமதி. சுமதி சத்தியமூர்த்தி, வைத்திய கலாநிதி. ரமா ராவ், நகுலேஸ், நித்தியா, சகாயநாதன், வித்தியானந்தன், ஆஸா, இன்னும் பலர் பங்குபற்றியிருந்தனர்.
பல்வேறு காரணங்களால் 1994 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவை இளம்தென்றல் கலைமன்றத்தினால் நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாது போனதைக் கேள்விப்பட்ட விக்ரோறிய தமிழ் கலாசாரக்கழக உறுப்பினர் ஒருவர் 1993 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் எம்மைத் தொடர்புகொண்டு அதுபற்றிக் கேட்டார். நாங்கள் நடாத்தவில்லையென்றால் அப்போதுதான் புதிதாகத் தொடங்கப்பட்ட தமது கழகத்தின் சார்பில் தாங்கள் அதனை நடாத்தப்போவதாகத் தெரிவித்தார். எங்களுக்கு நடாத்தும் உத்தேசம் இல்லையென்றும், அவர்கள் நடாத்தலாம் என்றும் நாங்கள் கூறினோம். அதன்படி, அவர்கள் 1994 ஆம் ஆண்டு முதல் பொங்கல் விழாவைத் வருடாவருடம் தொடர்ந்து நடாத்திவருகிறார்கள்.
எனவே, இந்தவருடம் நடைபெறுவது 20 ஆவது விழாவாக இருந்தால் முதலாவது விழா 1992 ஆம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் 1993 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில்தான் கழகமே ஆரம்பிக்கப்பட்டது. பதிவுகள் தவறாகக்கூடாது என்பதனாலேயே இந்த விபரங்களை அறியத்தருகின்றேன்.

யாழ். எஸ்.பாஸ்கர்

1 comment:

சாந்தினி புவனேந்திரராஜா said...

உங்கள் தகவல்களுக்கு நன்றி யாழ் பாஸ்கர். தவறான தகவல்களை ஊடகங்களுக்கு எழுதுவது தவறானது மட்டுமல்ல, குறிப்பிட்ட கழகத்தின் வரலாற்றைத் திரிபு படுத்துவதுமாகும் என்று எழுதியுள்ளீர்கள். விக்ரோறியத்தமிழ்க்கலாச்சாரக் கழகத்தினரால் கொடுக்கப்பட்ட தகவல், மற்றும் தரவுகளுக்கமையவே இக்கட்டுரையை எழுதினேன். இக்கட்டுரை அவர்களுக்கு அனுப்பப்பட்டுச் சரிபார்க்கப்பட்ட பின்னர் தான் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. அவர்களாலும் அனுப்பப்பட்டது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அத்துடன் எந்தஅமைப்பு எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது, எந்த அமைப்பு எந்த விழாவைக் கொண்டாடியது என்பது பற்றிய விபரங்கள் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமும் இல்லை. அவசியமும் இல்லை. இக்கழகத்தினால் எனக்குக் கொடுக்கப்பட்ட தகவல்கள் தவறானவையாக இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல, இது எனது தவறும் அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சாந்தினி புவனேந்திரராஜா