வேந்தனார் நூல் வெளியீட்டு விழா - ஆதி

.
அமரர் வித்துவான் வேந்தனார் அவர்கள் எழுதிய தன்னேர் இலாத தமிழ், கவிதைப் பூம்பொழில், குழந்தை மொழி ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா சென்ற 06/11/10 சனிக்கிழமை ஹோம்புஸ் ஆண்கள் பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பொதுவாகவே நூல்வெளியீட்டு விழாக்களில் பார்வையாளர் தொகை குறைவாக இருப்பினும் ஹோம்புஸ் மண்டபத்தில் அண்மைக்காலத்தில் நடைபெற்ற இரு நூல் வெளியீடுகளும் மண்டபம் நிறைந்த சனத்திரள் கொண்டதாக அமைந்தது நோக்குதற்குரியது.

வேந்தனாரின் மகளும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளருமான திருமதி கலையரசி சின்னையா அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற நூல்வெளியீட்டு விழாவிற்கு வேந்தனார் குடும்பத்து நண்பரும், பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான திரு ஆ.சி.கந்தராஜா அவர்கள் தலைமை தாங்கினார்கள். திருமதி வேந்தனார் அவர்கள் மங்கள விளக்கை ஏற்றி வைக்க, விழா குறித்த நேரத்திற்கு தொடங்கியது. வேந்தனார் அவர்கள் தமிழ்த்தாயைப் போற்றிப் பாடிய பாடலே தமிழ் மொழி வாழ்த்தின்போது இசைக்கப்பட்டது. செல்வி பார்கவி மோகனசுந்தரம் மிக அழகாக வேந்தனாரின் தமிழ்மொழி வாழ்த்தைப் பாடினார். தொடர்ந்து அமரர் வேந்தனார் அவர்களுக்கும், தாயகத்தில் போரில் உயிர்நீர்த்தவர்களுக்குமாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி நடைபெற்றது. சிறப்புரையாற்ற வந்த மூத்த எழுத்தாளரும் வேந்தனாரின் மாணவருமான திரு எஸ்.போ அவர்களையும், நூல் அறிமுகம் செய்ய வந்தவர்களையும் ஒவ்வொருவருவராக தலைவர் மேடைக்கு அழைக்க, சபையோர் கரவொலி எழுப்பி தம் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

விழாவில் கலந்துகொண்டோரில் வேந்தனாரின் மாணவர்களும், மாணவர்களின் குடும்பத்தினரும், அமரர் வேந்தனார் இளங்கோ அவர்களின் நண்பர்களும், அமரர் இளங்கோ சேர்ந்து பணியாற்றிய தமிழ்ப் பாடசாலை நிர்வாகிகள், ஆசிரியர்கள் என பலதரப்பட்டவரும் அடங்குவர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் சம்பிரதாய பூர்வமாக வரவேற்க வந்த திருமதி கலையரசி சின்னையா அவர்கள், இந்நூல்களைத் தொகுப்பதில் ஏற்பட்ட தடைகளையும், நூல்களையும், ஆக்கங்களையும் தந்துதவியோரையும் நினைவு கூர்ந்து, நாற்பது ஆண்டுகளாக செய்யமுடியாமற் போன ஒன்று இன்று நிறைவடைந்திருப்பதை சற்று நெகிழ்வோடு குறிப்பிட்டார். அவரின் வரவேற்புரை சற்று விரிவாகவும், விளக்கமாகவும் அமைந்தது எனலாம். தொடர்ந்து தலைமையுரையாற்றிய பேராசிரியர் கந்தராஜா அவர்கள் தனது சிறு வயதில் ஒரு பேச்சுப் போட்டிக்காக வித்துவான் வேந்தனாரைத் தேடி தான் சென்ற காலம் முதல் அவரோடு தனக்கிருந்த தொடர்பினையும், தனது பள்ளிப்படிப்பிற்காக, வித்துவான் வேந்தனார் எழுதிய கும்பகர்ணன் வதைப்படலத்தில் தான் படித்தவற்றையும் நினைவு கூர்ந்து அமரரின் எளிமையையும், எழிதில் எல்லோரும் புரியும் வண்ணம் எழுதும் அவரின் ஆற்றலையும் வியந்து பேசினார்.

முதல் பேச்சாளராக கலந்து கொண்டு பேசிய மூத்த எழுத்தாளரும் அமரர் வேந்தனாரின் மாணவருமான திரு எஸ்.பொன்னுத்துரை அவர்கள் 62 ஆண்டுகளுக்கு முன்னர் 1948இல் யாழ் பரமேஸ்வராக் கல்லூரியில் தான் படிக்கவந்த வேளை அமரர் வேந்தனாரைச் சந்தித்தது தொடக்கம், அவருடனான தனது இலக்கியத் தொடர்புகளை குறிப்பிட்டுச் சொன்னார். வேந்தனார் வெறுமனே தனது ஆசிரியர் மட்டுமன்றி தன்னைக் கவர்ந்துகொண்டவர் (ஆகர்சித்தவர்) என்றும் புகழாரம் சூட்டினார். அக்காலத்தய இலக்கியச் சண்டைகளை நினைவு கூர்ந்த எஸ்.போ அவர்கள் அன்று இடம்பெற்ற விவாதங்கள் எல்லாம் காரம் மிக்கதாகவும், சாரம் மிக்கதாகவும், சுவையுள்ளதாகவும், தனிமனித குரோதமற்ற கருத்துச் சண்டைகளாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டார். கண்ணகை வழிபாட்டின் மூலமான சிலப்பதிகாரத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைகவேண்டும் என்பதற்காகவே திருநெல்வேலியில் குடிகொண்ட பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களுடம் கருத்துமோதல் செய்தவர் வேந்தனார் என்று பேசிய எஸ்.போ அவர்கள் வேந்தனாரிடம் தான் படித்திருந்தபோதும் அவரின் கவியுள்ளத்தைத் தனக்குக் காட்டியவர் தனது நண்பர் இரசிகமணி கனக செந்திநாதன் என்று அவரையும் நன்றியோடு நினைவு கூர்ந்தார். தமிழ் மாணவர்கள் இலக்கியத்தைப் வெறுத்து ஒதுக்கி ஓடக்கூடாது. இலக்கியத்தை விளங்கிக்கொண்டு அதனைச் சுவைத்து தமிழ் உணர்ச்சி பெறவேண்டும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்திக்கொடுத்தது வேந்தனார் அவர்களின் உரைகள் தான் என்றும் திரு எஸ்.போ அவர்கள் குறிப்பிட்டார்.

திரு தனபாலசிங்கம் அவர்கள் அமரர் வேந்தனாரின் தன்னேர் இலாத தமிழ் என்ற நூல் பற்றியும் வைத்திய கலாநிதி ஜெயமோகன் அவர்கள் குழந்தை மொழி கவிதை நூல்பற்றியும், திரு திருநந்தகுமார் அவர்கள் கவிதைப் பூம்பொழில் நூல் பற்றியும் அறிமுகம் செய்து பேசினர்.

தொடர்ந்து வானொலி மாமா மகேசன், திருமதி பாலம் லட்சுமணன் உள்ளிட்ட பெரியார்களுக்கு வேந்தனாரின் நூல்கள் சிறப்புப் பிரதிகளகா வழங்கப்பட்டன. மூன்று நூல்களையும் வாங்குவோருக்கு அமரர் வேந்தானர் அவர்களைப் பற்றிய தமிழ் அறிஞர்களின் கருத்துகளைத் தொகுத்து அவரின் மகன் இளஞ்சேய் வேந்தனார் வெளியிட்ட வேந்தனார் என்ற நூலும் வழங்கப்பட்டது.

வேந்தனாரின் குழந்தைப் பாடல்களை சிறுவர்கள் பாடினர். சில பாடல்களுக்கு நடனங்களும் நடைபெற்றன. நூல்வெளியீட்டில் கிடைத்த பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளிகளை திருக்கேதீச்சரத்தில் இயங்கும் சிவன் அருள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. அதன் தலைவர் வைத்திய கலாநிதி நமசிவாயம் அவர்கள் நேரில் நிதியைப் பெற்றதோடு சிவன் அருள் இல்லத்தின் தோற்றம், பணிகள் என்பவற்றை ஒளிப்படக்காட்சிகள் மூலம் விளக்கினார். நிறைவாக திருமதி கலையரசி சின்னையா அவர்கள் நன்றி கூற விழா நிறைவுற்றது.

ஆதி
படபிடிப்பு ராஜ்No comments: