.
60,000 குடும்பங்கள் பாதிப்பு: 2.5 இலட்சம் பேர் இடம்பெயர்வு: ஒருவர் உயிரிழப்பு
(ஸாதிக் ஷிஹான்)
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதுடன் இரண்டரை இலட் சத்துக்கும் அதிகமான மக்கள் இடம் பெய ர்ந்துள்ளதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரக்காப்பொல என்ற இடத்திலேயே இவர் உயிரி ழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 7.00 மணி தொடக்கம் நேற்றுக்காலை 7.00 மணி வரையான 12 மணி நேரத்திற்குள் பெய்த பெருமழையினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களின் இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பித மடைந்தன.
கொழும்பில் மாத்திரம் 440 மி. மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ள தாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. கடந்த பதினெட்டு வருடங்களுக்குப் பின்னர் கொழும்பில் பதிவான அதிகூடிய மழை வீழ்ச்சி இதுவாகும் என்று வானிலை அவதான நிலைய பணிப்பாளர் நாயகம் ஜி.பி. சமரசிங்க தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பெய்த அடைமழையினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டதுடன் வீதிகள் நீரில் மூழ்கியதினால் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டதோடு பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.
இந்த கடும் மழையினால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் அருகிலுள்ள சனசமூக நிலையங்கள், பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள துடன் அவர்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் விநியோகிக்கப்பட்டன.
அதிக மழைநீர் தேங்கியிருந்த பிரதேசங்களில் சிக்கித் தவித்த மக்களை உடனடியாக பாதுகாப்பாக மீட்டெடுக்கவென பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் விமானப் படையினரும், கடற் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விமானப் படையின் ஹெலிகொப்டரும், கடற்படையின் பத்து படகுகளும் மீட்புப் பணிகளுக்காக முழுமையாக ஈடுபடுத்தப்பட்டதாக விமானப் படை, கடற்படை பேச்சாளர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களுக்குத் துரித கதியில் தேவையான நிவாரணங்களை உடனுக்குடன் எவ்வித தடையுமின்றி வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கவும், சமைத்த உணவுகளை வழங்கவும் முதற்கட்டமாக 200 இலட்சம் ரூபா நிதியை தனது அமைச்சு ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேவைப்படும் பட்சத்தில் இந்த மக்களுக்குத் தேவையான மேலதிக நிவாரணங்களை வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கத் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மாவட்டமே கூடுதல் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், கொழும்பு மாவட்டத்திற்கென 10 மில்லியன் ரூபாவும், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கென தலா ஐந்து மில்லியன் ரூபாவுமே முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி கொழும்பில் முதற் தடவையாக 493.7 மி. மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இது நடந்து 18 வருடங்களின் பின் 440 மி.மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது 330 மி.மீற்றர் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியிருந்ததுடன் சுமார் ஆறு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் இம்முறை வரலாற்றில் இரண்டாவது தடவையாக 440 மி.மீற்றர் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை குறைவாகவே காணப்படுவதாக தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கால்வாய்கள், வாவிகள், வடிகான்கள் சுத்திகரிக்கப்பட்டதே காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.
மீட்புப் பணிகள்...
அதிக மழை நீர் தேங்கியிருந்த பிரதேசங்களிலுள்ள வீடுகள், கட்டடங்களில் சிக்கித்தவித்த மக்களை உடனடியாக பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பணிகளை 2000 இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் மேற்கொண்டனர். அத்துடன் இவர்களுக்கு உதவியாக விமானப்படை மற்றும் கடற்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
விமானப் படை
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் நிலைமைகளை ஆராய்ந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவென விமானப்படைக்குச் சொந்தமான “பெல்-212” ஹெலிகொப்டர் உடனடியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக விமானப் படைப் பேச்சாளர் குறூப் கெப்டன் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
வானிலிருந்து அவதானித்ததுடன் தேவையான நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடற் படை
பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பொருட்டு அறுபது கடற்படை வீரர்கள் அடங்கிய ஒன்பது கடற்படைக் குழுக்களும் பத்து கடற் படை படகுகளும் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை அண்மித்த பகுதிகள், பெலவத்த, பிலியந்தல, நுகேகொடை, குருபெந்த மிரிஹான, கிரேன்ட்பாஸ் ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
தேவைப்படும் பட்சத்தில் மேலதிக படகுகளை சேவையில் ஈடுபடுத்த தயார் நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மின்சாரம் துண்டிப்பு
கடும் மழை காரணமாக கொழும்பு உட்பட அதனை அண்டிய பிரதேசங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டதுடன் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
கலனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் உட்பட உப மின் நிலையங்கள் மழை நீரில் மூழ்கியதால் பாதுகாப்புக் கருதி நேற்று முன்தினம் இரவு தொடக்கம் வட கொழும்பு மற்றும் கொழும்பு 04, 07, 12, 13, 14 பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
இதேவேளை சில பிரதேசங்களில் மின் கம்பிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் செயலிழந்ததுடன் அதனை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
நன்றி தினகரன்
No comments:
Post a Comment