ஆன்மீகம்

.
பெரியாழ்வார் திரு அவதாரம்



வாசகர்களை  மீண்டும்  இந்த வாரம் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி. கடந்த வாரம் கேரள நாட்டில் அவதரித்த குலசேகர ஆழ்வாரை பற்றி பார்த்தோம். இந்த வாரம் அடுத்த   ஆழ்வாரான பெரியாழ்வரை பற்றி காண்போம்.

பகவான் ஸ்ரீமன் நாராயணனின்  கருட வாஹனத்தின்  அம்சமான பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் திவ்ய தேசத்தில் தேசத்தில் அந்தணர் குலத்தில் முகுந்த பட்டர், பதும வள்ளி அவர்களின்  திருக்குமாரன்  ஆக  கலி  யுகம் 47  ஆண்டு அவதரித்தார்.
இவருடைய பெற்றோர் இவருக்குவிஷ்ணு சித்தர் என்று திருப்பெயர் இட்டு, சகல கலைகளையும் தக்க பருவத்தில் கற்பித்தனர். சிறு வயதில் இருந்து கண்ணனின் கதைகளை கேட்டு அந்த பகவானின் மீது தீராத பக்தி ஏற்பட்டது. அவர் ஸ்ரீமன் நாராயாணனுக்கு தொண்டு புரிவதே மனித வாழ்வின் குறிக்கோள் என்பதை புரிந்து  பகவானுக்கு தொண்டு  புரிய ஒரு  நந்தவனம் ஒன்றை ஏற்படுத்தி பகவானை வாயினால் பாடி, தூமலர்  தூவி தொழுது தினமும் பூஜை செய்து வந்தார்.
ஒரு சமயம் பாண்டிய நாட்டு மன்னன் வல்லபதேவன் இரவில் நகர் சோதனை வரும் போது  அந்தணன் ஒருவன் தனியாக திண்ணையில் படுத்து இருப்பதை கண்டு, அவரை எழுப்பி தனியாக உறங்க காரணம் கேட்டார். உடனே அந்த யாத்திரிகன் " அநித்தியமும் அழிவுக்கு உரிய இந்த சரீரத்தை நம்பி உலகில் பற்று கொண்டு  வாழ்வதால் ஜன்மம் கடைத்தேற முடியாது. " என்று கூறியதை கேட்ட  மன்னன் அதை பற்றி இன்னும் அறிந்து கொள்ள ஆசை கொண்டு அந்த யாத்திரிகனை அரண்மனைக்கு அழைத்து சென்று உபசாரம் செய்து பிறவிப்பிணி  நீங்கி அந்த பரமன் திருவடியை சேரும் வகைக்கான  விஷயங்களை கேட்டு அறிந்தான்.
அவனது நாட்டு மக்களும் பரம் பொருள்  பற்றின  உண்மை அறிய வேண்டும் என்று அந்த யாத்திரிகன்  ஆலோசனை  படி  தன்  சபையில்  ஒரு பொற்கிளியை  கட்டினான். எல்லா நாட்டிற்க்கும் செய்தி அனுப்பி அந்நாட்டு பாகவதர்களை தன் சபைக்கு வரவழைத்து முக்திக்கு வித்தாகும் அந்த பரம் பொருளை நிரூபித்து பொற்கிளி பெற்று செல்ல செய்தி அனுப்பினான்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில்  வடபத்ர சாயியாக சாயநித்து கொண்டு  இருக்கு அந்த ஸ்ரீமன் நாராயணன்  விஷ்ணு சித்தர்  கனவில் வந்து  பாண்டிய மன்னன் சபைக்கு  சென்று பரம்பொருளை நி ரூபணம் செய்து வரும் படி  கூறினார். விஷ்ணு சித்தரும் பகவானின் ஆணையை சிரமேற்கொண்டு  பாண்டிய  மன்னன் சபைக்கு சென்றார்.
விஷ்ணு சித்தரின் வருகை அறிந்த மன்னன் மிகவும் மகிழ்ந்து அவருக்கு  தக்க
மரியாதையை செய்து வரவேற்றார்.
விஷ்ணு சித்தரும் மரியாதையை ஏற்றுக்கொண்டு அந்த பகவானை பலவாறு பாடி வணங்கினார்.
ஸ்ரீமன் நாராயணனே  சர்வ லோக ரக்க்ஷகன், எல்லா வேதங்கள், சாஸ்திரங்கள் எல்லா வற்றிலிருந்தும் இருந்து  ஸ்ரீமன் நாராயணனே  பரம் பொருள்  என்று ஆதார  பூர்வமாக எடுத்து உரைத்தார். அந்நாட்டு வித்வான்களும், மன்னனும் மிக்க மகிழ்ச்சி அடைந்து அந்த பொற்கிளியை  விஷ்ணுசித்தருக்கே கொடுத்தனர்.  அதன் பின் பலர் தம் சமய நம்பிக்கைகளை கைவிட்டு பகவான் ஸ்ரீமன் நாராயணனை ஏற்று கொண்டனர்.
விஷ்ணு சித்தரை பணிந்து அவரை தனது பட்டத்து  யானை  மீது ஏற்றி மங்கள வாத்தியங்கள் முழங்க மதுரை மாநகரை வலம் வரும் போது அந்த ஸ்ரீமன் நாராயணன்  லக்ஷ்மி சமேதமாக கருட வாஹனத்தில் காட்சி அளித்தார்.
விஷ்ணு சித்தரும் மிக்க ஆனந்தமடைந்து அந்த எம்பெருமான் திருவடியை விழுந்து  வணங்கி,  அந்த பகவானுக்கே "திருபல்லாண்டு"”  பாடினார்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள்  மணிவண்ணா! உன்
சேவடி செவ்வி திருகாப்பு
அடியோமொடும் நின்னோடும்  பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் சோதி வலத்துறையும் சுடரராழியும் பல்லாண்டு
படைபோர்  புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லண்டே ! --
இப்படி அந்த பகவான்  மேல் கண்  த்ரிஷ்டி பட்டு விடுமோ என்று  அவர் பல்லாண்டு காலம் இருக்க  அந்த சர்வ ரக்க்ஷக னுக்கே அன்பொடும், பக்தியோடும் பல்லாண்டு பாடி இருக்கிறார்.
மன்னன் மிக்க மகிழ்ச்சி அடைந்து விஷ்ணு சித்தரை ஊர்வலம் அழைத்து சென்று பெரு விழா கொண்டாடினார். விஷ்ணு சித்தரும் வல்லவதேவனை ஆசீர்வதித்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர்  திரும்பி மீண்டு தன் பூமாலை சேவையில் ஈடுபட்டார்.  இப்படி அவர்  73 பாசுரம் கொண்ட "பெரியாழ்வார் திருமொழி " என்னும் திவ்ய பிரபந்ததை உலகில் உள்ள ஜீவராசிகள் உய்ய அருளினார்.  இப்படி தன் வாழ்நாளை பகவத் சேவையிலேயே  ஈடுபடுத்தி கொண்டு பல காலம் வாழ்ந்து பகவான் திருவடி அடைந்தார்.
இனி அடுத்த வாரம் இவரது திரு குமாரியான, ஆண்டாள் என்று எல்லாராலும் கொண்டாடபடும்  அந்த கோதை  நாச்சியாரின்  திருஅவதார சிறப்பை பார்ப்போம்.
அதுவரை வாருங்கள்  நாமும் அவர் காட்டிய வழியில் அந்த பகவானை வாயினால் பாடி தூமலர் தூவி தொழுது மகிழலாம்.
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.!
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!
என்றும் அன்புடன்,
ஆண்டாள்

No comments: