உலகச்செய்திகள்

இந்திய சந்தை வேண்டும்
ஒபாமா வருகையையொட்டி இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சுமார் ரூ.44 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தக உடன்பாடுகள் எட்டப்பட்டன.

‘இந்திய சந்தைகள் எங்களுக்கு தேவை. எங்களது பொருட்களுக்காக இந்திய சந்தைகளை திறந்துவிடுங்கள்’ என்று ஒபாமா இந்திய தொழிலதிபர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நவம்பர் 6 சனிக்கிழமை மும்பையில் நடைபெற்ற அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் மற்றும் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசினார்.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம், ஜிஇ மின் கருவிகள் உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் 20 ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன என்றும், இதன் வர்த்தக மதிப்பு ரூ.44 ஆயிரம் கோடி என்றும் அப்போது ஒபாமா குறிப்பிட்டார்.

2009 - 10ம் ஆண்டில் இரு நாடுகளிடையேயான வர்த்தகம் 36.6 பில்லியன் டாலர் என்ற அளவில் இருப்பதை சுட்டிக்காட்டிய ஒபாமா, அடுத்த ஐந்தாண்டுகளில் இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

இந்திய சந்தைகள் அமெரிக்காவுக்கு அவசிய தேவை என்று பகிரங்கமாக கூறிய ஒபாமா, எங்களது பொருளாதாரம் திறந்ததாக இருக்கிறது; எனவே, எங்களுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் பொருளாதாரமும் திறந்துவிடப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். குறிப்பாக, இந்தியாவின் நிதிச்சந்தைகள், சில்லரை வர்த்தக கட்டமைப்பு மற்றும் இதர பல் வேறு துறைகளை அமெரிக்காவின் வசதிக்காக முழுமையாக திறந்துவிட வேண்டுமென்று ஒபாமா ‘வேண்டுகோள்’ விடுத்தார்.

உலக முதலாளித்துவம் அடைந்துள்ள கடும் நெருக்கடியால் அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சி பெற முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க பெரும் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு இந்திய சந்தைகள் மிகவும் அவசியம் என்பதை தொழிலதிபர்களின் கூட்டத்தில் மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, இந்தியா மிக வேகமாக வளரும் ஒரு சக்தி என்றும், உலக அரங்கில் இந்தியாவுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்றும் கூறினார். இந் தியா, சீனா, பிரேசில் மற்றும் இதர சில நாடுகள் உண்மையான போட்டியை ஏற்படுத்தியுள்ளன என்றும், இந்த நாடுகளுடன் அமெரிக்காவும் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் ஒப்புக் கொண்டார்.

இந்தியப் பயணத்தை துவக்குவதற்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒபாமாவின் கட்சி பெரும் சரிவை சந்தித்தது. இது, இந்தியா போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தை பெருமளவிற்கு அதிக ரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஒபாமாவுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் மிக கடுமையாக அதிகரித்துள்ள வேலையின்மையை கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் ஒபாமாவுக்கு உள்ளது. இந்தப் பின்னணியில் தனது இந்திய பயணத்தை முழுமையாக “பயன் படுத்திக் கொள்ள’ அமெரிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே மும்பை தொழிலதிபர்களிடம் அவர் மேற்கண்டவாறு பேசினார்.

மாணவர்களுடன்

நவம்பர் 7 ஞாயிறன்று காலை மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரி மாணவர்களு டன் ஒபாமா கலந்துரையாடினார். அப்போது, காஷ்மீர் பிரச் சனை, ஆப்கன் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் அமெரிக்கா தன்னைத் தானே வலிந்து திணித்துக் கொள்ளாது என்றும், காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் நிலைபாட்டை ஆதரிப்பதாகவும், இது தொடர்பாக இரு நாடு களும் தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும் என்றும் ஒபாமா கூறினார்.

தலிபான்கள், அல்கொய்தா, லஷ்கர் - ஏ - தொய்பா போன்ற பல்வேறு அமைப்புகள் கடுமையாக ஒடுக்கப்பட வேண்டியுள்ளது என்றும், இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையே தீர்வு என்றும், நியூயார்க்கில் நடந்ததுபோல மும்பையிலும் நடந்த பயங்கரவாதத்தை உலகம் பார்த்தது, இதை எதிர்கொள்ள ராணுவ தீர்வு அவசியம் என்றும் ஒபாமா கூறினார்.

நன்றி தேனீ

No comments: