தண்டனை

.

விமானத்தில் ஒரு முறை பறந்து கொண்டிருந்தபோது அது பாதி வழியில் பழுதாகி மேலே பறக்க முடியாமல் கீழே அகப்பட்ட விமான நிலையம் ஒன்றில் இறங்கியது. முதலில் இரண்டு மணித்தியாலத்தில் விமானம்  சரியாகிவிடும் என்று சொன்னார்கள். பின்னர் ஆறு மணி நேரம் என்றார்கள். பழுதுபார்க்கப்பட்ட விமானத்தில் ஏறி மூன்று மணிநேரம் ஓடுதரையில் காத்திருந்த பின்னர் மீண்டும் இறக்கப்பட்டோம். ஒரு முழு நாள் ஆனது. விமானக் கம்பனி பயணிகளுக்கு தங்க இடமும் உணவும் ஏற்பாடு செய்து, ஒரு புது விமானம் வருகிறது காத்திருங்கள் என்றது. எல்லா பயணியரும் கோபத்தின் உச்சிக்கு போய் பழுதுபட்ட விமானத்தில் மீண்டும் பறப்பதற்கு  தயாராக இருந்தார்கள். காத்திருப்பது ஒருவருக்குமே பிடிப்பதில்லை. அது பெரிய தண்டனை.

ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்து நான் அங்கே போனபோது நடந்த ஒரு சம்பவம். அந்த நாட்டில் அப்பொழுது கிட்டத்தட்ட மூன்று வருடங்களைக் கழித்துவிட்டேன். எங்கள் வீடு காட்டுப் பகுதியில் நாலு தூண்களுக்கு மேல் தனியாக நின்றது. நான் வேலை செய்த கம்பனி காட்டு மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. கம்பனியில் கணிசமான அரசாங்க முதலீடு இருந்தபடியால் அது ஒரு முற்றுமுழுதான அரசாங்க நிறுவனமாக மாறுவதற்கு முயன்றுகொண்டிருந்தது.
ஒருநாள் பின்னேரம் ஏழுமணியளவில் நான் வெளிவராந்தாவில் உட்கார்ந்து ஓய்வெடுத்தேன். மனைவியும் பிள்ளைகளும் உள்ளே இருந்தார்கள். வெளியே எரிந்த மின்விளக்கை அணைத்திருந்தேன் ஏனென்றால் ஆப்பிரிக்காவின் அத்தனை பூச்சிகளும் என்னைச் சுற்றி மொய்த்துவிடும். காடு எழுப்பும் ஒலி நேரத்துக்கு நேரம் மாறுபடும். ஆறு மணிக்கு ஒரு சத்தம், ஏழு மணிக்கு ஒரு சத்தம், நடு இரவு ஒரு சத்தம் என்று வித்தியாசமாக இருக்கும். அந்த ஒலிகளை தனித்தனியாக இனம் பிரித்து இது இன்ன பூச்சியின் சத்தம், இது இன்ன பறவையின் சத்தம், இது இன்ன மிருகத்தின் சத்தம் என்று ஊகிப்பது எனக்கு பிடித்த விளையாட்டு. அதைத்தான் செய்துகொண்டிருந்தேன்.

அப்பொழுது பார்த்து திடீரென்று ஒரு வாகனம் வந்து நின்றது. அந்த நேரத்தில் ஒருவரும் காட்டுக்கு அண்மையில் இருக்கும் என் வீட்டிற்கு  வருவது கிடையாது. அது அரசாங்க முத்திரை பதித்த வாகனமாயிருந்தபடியால் ஆச்சரியம் இன்னும் கூடியது. சீருடை அணிந்த சேவகன் ஒருவன் வந்து ஒரு தந்தியை கொடுத்துவிட்டு போனான். வழக்கமாக இப்படி, இந்த நேரத்தில்  தந்தி விநியோகிப்பதில்லை. இது விபரீதமாகப் பட்டது. ஏதோ முக்கியமான சமாச்சாரம் என்று நினைத்துக்கொண்டு உறையை பிரிப்பதற்காக வீட்டின் உள்ளே போனேன். மின்விளக்கு வெளிச்சத்தில் என் கை உதறுவதைக் கண்டேன். என் மனைவி மகளைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு என் பக்கத்தில் நின்றாள். என் மகன் காலைப் பிடித்துக்கொண்டு கீழே நின்றான். ஒரு சொல் ஒருவரும் பேசாவிட்டாலும் அந்த தந்திக்குள் எங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் ஏதோ வார்த்தைகள் இருப்பது அந்தக் கணம் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

அந்த நாட்டு ஜனாதிபதியின் அரண்மனையிலிருந்து தந்தி வந்திருந்தது. மூன்றே மூன்று வார்த்தைகள்தான். 'அரண்மனைக்கு உடனே வரவும்.' என் முகம் எப்படி மாறிப்போனது என்பது எனக்கு தெரியாது. ஆனால் மனைவியின் கண்களில் முன்னெப்பொழுதும் தோன்றாத பீதி தெரிந்தது. என்ன என்ன என்று கேட்டார். என்னால் பதில் சொல்லமுடியவில்லை. நிச்சயமாக அரசமாளிகை இரவு விருந்துக்கு என்னை கூப்பிடவில்லை. தங்க மாலை போட்டு விருது வழங்கவும் அழைக்கவில்லை. என்னைப் போன்றவர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து தந்தி வந்தால் அதன் பொருள் ஒன்றுதான். நீங்கள் சிறைக்கு செல்கிறீர்கள். அல்லது நாடு கடத்தப் படுகிறீர்கள். நான் என்ன நடந்திருக்கும், எதற்காக இந்த தந்தியை அனுப்பியிருக்கிறார்கள் என்று மூளையை ஆசுவாசப்படுத்தி யோசிக்க ஆரம்பித்தேன்.
எங்கள் கம்பனிக்கு ஒரு தலைமையதிகாரி இருந்தார். என்னிலும் பார்க்க இருபது வயது கூடியவர். அஞ்சாநெஞ்சர். நுட்பமாகச் சிந்தித்து செயலாற்ற தெரிந்தவர். தொடர்ந்து 12 மணி நேரம் களைக்காமல் வேலை செய்யக்கூடியவர் ஆனால் அதே சமயம் கேளிக்கை பிரியர். நான் கம்பனியில் சேர்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக தன் வேலைகளை எல்லாம் என் பக்கம் தள்ளிவிட்டு கம்பனி விசயமாக பயணம் செய்வதை தன் முழுநேர கடமையாக மாற்றினார். மாதத்தில் இருபது நாட்கள் அவர் வெளிநாட்டில் சுற்றினார். அந்த நாட்களில் அவர் வேலையையும் நான்தான் பார்க்கவேண்டும்.

ஒரு வாரத்திற்கு முன்பு ஜனாதிபதிக்கு வேண்டிய ஒருவர் அவரிடமிருந்து ஒரு கடிதத்தை கொண்டு வந்தார். கையெழுத்து இல்லாத, தட்டச்சு செய்த இரண்டு வரிக் கடிதம். அதை நீட்டி ஒரு காரியம் ஆகவேண்டுமென்று சொன்னார். அவர் கேட்டது கம்பனி விதிகளுக்கு அப்பாற்பட்டது ஆகவே நான் மறுத்துவிட்டேன். என்னுடன் வேலை செய்தவர்கள் அவர் பலம் வாய்ந்தவர் என்றும், அவரைப் பகைக்க கூடாது என்றும் அறிவுறுத்தினர். நான் அதை உதாசீனம் செய்தேன். அப்பொழுது எனக்கு வயது இப்பொழுது இருக்கும் வயதில் சரி பாதி. மூளையும் சரி பாதி. 'கோழியும் அவங்கட, புழுங்கலும் அவங்கட' என்பதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. அதன் விளைவுதான் இந்த தந்தி என்பது ஊகிக்கக்கூடியதாக இருந்தது.
மனைவி இப்பவே புறப்பட வேண்டுமா என்று கேட்டார். தந்தியின் வாசகம் மிகத் தெளிவாக இருந்தது. அரண்மனைக்கு உடனே வரவும். அரண்மனை மூன்று மணி தூரத்தில் இருந்தது. காட்டுப் பாதையில் இரவில் தனியாக பிரயாணம் செய்யவேண்டும். இப்பொழுது புறப்பட்டால் இரவு ஒரு மணிக்கு அரண்மனை போய்ச் சேரலாம். ஜனாதிபதி என்னை எதிர்பார்த்து அந்த நேரம் காத்திருக்கப் போகிறாரா? அடுத்த நாள் காலை நாலு மணிக்கு புறப்படுவதென தீர்மானித்தேன்.
நான் அன்றிரவு தூங்கவில்லை. புறப்படுவதற்கு முன்னர் மனைவி என்னென்ன செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டேன். என்னை சிறையில் அடைத்தார்கள் என்றால் எந்த வழக்கறிஞரை தொடர்பு கொள்ளவேண்டும், அவரிடம் என்ன விவரங்கள் சொல்லவேண்டும் போன்ற குறிப்புகளை எழுதினேன். என்னை நாடு கடத்தினால் எந்த தூதரகத்தை அணுகவேண்டும் போன்ற விவரங்களையும் குறித்து வைத்தேன். என்ன என்ன சாமான்களை சூட்கேசுகளில் அடைக்கவேண்டும் என்ற முடிவை அவரிடமே விட்டுவிட்டேன்.

அடுத்த நாள் அதிகாலை நாலு மணிக்கு புறப்பட்டு சரியாக ஏழு மணிக்கு அரண்மனை வாசலை அடைந்தேன். காவல்காக்கும் ராணுவ வீரர்கள் என்னையும் தந்தியையும்  பார்த்த பின்னர் உள்ளே விட்டார்கள்.  அரண்மனை இன்னும் திறக்கப் படவில்லை. வெளியே காணப்பட்ட பளிங்கு இருக்கை ஒன்றில் அமர்ந்து காத்திருக்கத் தொடங்கினேன். எட்டு மணிக்கு அரண்மனை சுறுசுறுப்பானது. ஜனாதிபதியின் அந்தரங்கக் காரியதரிசி வந்தாள். முப்பது வயது மதிக்கத்தக்க பெண். கழுத்து நீண்டு, தலை நிமிர்ந்து நாடியும் செவியும் ஒரே நேர்கோட்டில் இருந்தன. அவளிடம் என் தந்தியை காட்டினேன். அவள் அதைப் படிக்கவில்லை. ஆழப் புதையும் கம்பளம் விரித்த ஓர் ஆடம்பரமான அறையைக் காட்டி அங்கே தங்கச் சொன்னாள். ஜனாதிபதி வந்ததும் முதல் ஆளாக என்னை அழைப்பார் என்று நினைத்தேன். இன்னும் பலர் ஒவ்வொருவராக வந்து வெவ்வேறு ஆசனங்களில் அமர்ந்துகொண்டார்கள். சிலர் உள்ளே போனார்கள். சிலர் வெளியே வந்தார்கள். இரண்டு வெளிநாட்டு தூதுவர்கள் வந்து அவர்களும் காத்திருந்தார்கள். தொழிலதிபர்கள் மாத்திரம் உடனுக்குடன் உள்ளே போய் வெளியே வந்தார்கள். ஆட்கள் போவதும் வருவதுமாய் ஒரு ரயில்வே ஸ்டேசன் போல அந்த அறை அமளியுடன் காணப்பட்டது. என்னை ஒருவரும் அழைக்கவில்லை. அதே சொகுசு நாற்காலியில், அதே இடத்தில், அதே உடல் வளைவுகளுடன் நான் காத்திருந்தேன்.
எனக்கு பாத்ரூமுக்கு வந்தது, நான் போகவில்லை. சரியாக அந்த நேரம் பார்த்து அழைக்கப்பட்டால் நான் என்ன செய்வது. தண்ணீர் தாகமெடுத்தது. சற்று தள்ளி கேட்டுக்கு வெளியே ஒரு கடையில் குளிர்பானம் விற்றார்கள். சிலர் போய் குடித்துவிட்டு வந்தார்கள். நான் குடிக்கவில்லை. எனக்கு பசித்தது. சிறைக்கூடத்தில் என்ன உணவு தருவார்கள் என்று யோசனை போனது. அன்று அந்த நாற்காலியில் உட்கார்ந்து என் மனம் யோசித்த அவ்வளவையும் எழுதினால் அது பெரிய நாவலாக விரிந்திருக்கும். ஓர் அரண்மனையில் ஜனாதிபதியை சந்திக்க காத்திருக்கும் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை.

மறுபடியும் அந்தரங்க காரியதரிசியிடம் சென்றேன். அவள் எனக்கு வட்டமான பின்பக்கத்தை காட்டிக்கொண்டு நின்றாள். உடம்பை ஒட்டிப் பிடித்த கட்டையான ஸ்கேர்ட். உயரமான சப்பாத்து. அவளிடம் கை கொடுக்கும்போது சிலர் இடது கையினால் வலது முழங்கையை தொட்டுக்கொண்டு கொடுத்தார்கள். பழுதுபட்ட திசைகாட்டி முள்போல அவள் சுழன்றுகொண்டு வேலைசெய்தாள். எங்கே நடமாடுகிறாள் என்பதை அவளின் சப்பாத்தின் ஒலியை வைத்து சொல்லிவிடலாம். அந்த ஒலியில் அதிகாரம் இருந்தது. கழுத்திலே மெல்லிய ஸ்கார்ஃபை பூப்போல கட்டியிருந்தாள். ஒரு தோடம்பழத்தை உரித்து நடுவிலே ஓட்டைபோட்டு உறிஞ்சிக்கொண்டிருந்தாள். என்ன தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை, ஒரு நிமிடம்கூட இனிமேல் தங்கமுடியாது என்று எனக்கு தோன்றியது.  அவளிடம் நான் வாய் திறக்கக்கூட இல்லை. என்னைப் பார்த்ததும் தோடம்பழத்தில் புதைந்திருந்த சொண்டை வெளியே எடுத்து 'ஜனாதிபதிக்கு நீங்கள் வந்திருப்பது தெரியும். அவர் அழைப்பார்' என்றாள். சொண்டு மறுபடியும் தோடம்பழத்திற்குள் போய்விட்டது.
என்ன நடக்கிறது இங்கே? சிறைக்கூடத்தை தயார் செய்கிறார்களா அல்லது பிளேன் டிக்கட் ஏற்பாடு செய்கிறார்களா? என்னை முதலில் அனுப்பிவிட்டு பின்னர் மனைவியையும் பிள்ளைகளையும் அனுப்புவார்களா? இதற்கெல்லாம் ஒரு முறை இருக்கவேண்டுமே? அப்பொழுது பார்த்து இரண்டு பொலீஸ்காரர்கள் வந்தார்கள். நான் என்னை தயார்படுத்திக்கொண்டேன். அவர்கள் இருவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி காரியதரிசியிடம் போய் பேசிவிட்டு என்னை நோக்கி வந்தார்கள். ஒரு நிமிடம் தாமதமாகியிருந்தால் நான் எழும்பி கைகளை நீட்டியிருப்பேன். அவர்கள் என்னை கவனிக்கவில்லை, வந்த மாதிரியே வெளியே போனார்கள். சுவர்க்கடிகாரத்தை பார்த்தேன், அது ஏழுதரம் அடித்தது.  நான் கண் விழித்தபோது எனக்கு முன்னால் இரண்டு கறுத்த வழுவழுப்பான தொடைகள் தெரிந்தன. காரியதரிசிப் பெண் என்னை குனிந்து பார்த்து 'நீங்கள் போகலாம்' என்றாள். நான் ஒன்றுமே கேள்வி கேட்கவில்லை. உடனே எழுந்து புறப்பட்டேன்.

மூன்று வார்த்தைகளில் வரச் சொன்னார்கள், இரண்டு வார்த்தைகளில் வீட்டுக்கு போகச் சொன்னார்கள். நான் காத்திருந்த இந்த 12 மணித்தியாலத்தில் என்னைக் கூப்பிட்டு விசாரிக்கவேண்டிய பிரச்சினைக்கு என்ன நடந்தது. தானாகவே தீர்ந்துவிட்டதா?  ஜனாதிபதியின் உணவருந்தும் வேளை நெருங்கிவிட்டதால் என்னை போகச்சொல்லி  மறுபடியும் நாளை வரச்சொல்வார்களா? திரும்பிப் போகும் வழியெல்லாம் இதைத்தான் யோசித்தேன். இரண்டு வருட சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நான் தயாராக இருந்தேன் ஆனால் இந்தக் காத்திருத்தல் மட்டும் வேண்டாம்.

சரியாக இரவு 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். நான் பார்த்த காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. இரண்டு சூட்கேசுகள் நிறைய அடைக்கப்பட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மனைவி பயண ஆடைகள் தரித்து புறப்பட தயாராக இருந்தார். என் குழந்தைகளும் நல்ல ஆடைகள் உடுத்திக் காணப்பட்டனர். மகள் பொம்மையை கட்டிப்பிடித்தபடி வாசலிலேயே தூங்கிவிட்டாள். என்னுடைய மகன் பள்ளிப் புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி கயிற்றினால் கட்டி முக்காலிபோலச் செய்து அதற்குமேல் உட்கார்ந்திருந்தான். கறுப்பு கால்சட்டை, வெள்ளை  சேர்ட் அணிந்து ஏதோ பள்ளிக்கூடம் போகப் புறப்பட்டதுபோல அமைதியாக இருந்தான். அவனுடைய முதல் கேள்வி 'கே.எல்.எம் பிளேனிலா பறக்கப் போகிறோம்?' நான் இல்லை என்றேன். மனைவி சூட்கேசுகளை உள்ளே வைக்கட்டா என்றார். ஓம் என்றேன். பிள்ளைகளின் உடுப்பை களையட்டா? ஓம் என்றேன். சப்பாத்துகளை கழற்றட்டா? ஓம் என்றேன்.

அவர்கள் காத்திருந்த அந்த 12 மணி நேரத்தைப் பற்றி யோசித்தேன். மனைவி காலையிலேயே சூட்கேசுகளை அடுக்கி வாசலிலே வைத்துவிட்டதாகச்  சொன்னார். அன்று வீட்டிலே சமைக்கவில்லை. முதல்நாள் மிச்சமிருந்த உணவை சாப்பிட்டிருந்தார்கள். எந்த நிமிடமும் ஒரு பொலீஸ் வண்டி வரக்கூடும் என்று எதிர்பார்த்ததாகச் சொன்னார்கள். வீட்டினுள் தொட்டியில் வளர்த்த பூக்கன்றுகளுக்கு கடைசித் தரமாக நிறையத் தண்ணீர் ஊற்றி அது தரையில் ஓடிக்கொண்டிருந்தது.. அவர்கள் அனுபவித்த வேதனையை நினைத்தபோது பெரும் துயரம் எழுந்து என்னை மூடியது.

நோர்மன் மெய்லர் எழுதிய The Executioner's Song என்ற புத்தகம் ஒரு கொலையாளியின் கதையை சொல்கிறது. . கரி கில்மோர் என்பவன் ஒரு ஹொட்டல் மனேஜரை கொலைசெய்து விடுகிறான். அவனுக்கு அமெரிக்க நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. கொலையாளியை சுட்டு கொல்லவேண்டும் என்பதுதான் தீர்ப்பு. நாலு பேர் துப்பாக்கிகளை தூக்கி குறிவைத்து சுடத் தயாராகி, கட்டளைக்காக காத்திருக்கிறார்கள். அப்பொழுது கரி கில்மோர் சொல்கிறான் 'Let's do it.' 'இதை முடித்துவிடுவோம்' என்கிறான். இறப்பதிலும் பார்க்க காத்திருப்பது அவனுக்கு கூடிய தண்டனையாகப் படுகிறது.

நான் என் வாழ்க்கையில் மேற்கொண்ட அநேகவிதமான பயணங்களிலிருந்தும், வசித்த நாடுகளிலிருந்தும், சந்தித்த மனிதர்களிலிருந்தும் பல விசயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். அவற்றிலே நான் கண்ட உண்மை என ஒன்றிருக்கிறது. தண்டனைகளில் ஆகக் கொடுமையானது காத்திருக்க வைப்பதுதான். என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாமல் காத்திருக்க வைப்பது இன்னும் கொடூரமானது. ஜனாதிபதிகளுக்கு அது தெரியும்.

நன்றி அ முத்துலிங்கம்

No comments: