யதார்த்தத்துக்கு அமைவான அரசியல் தீர்வு

.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இச் செய்திகளை இருதரப்பும் மறுக்காத நிலையில் அவை சரியான செய்திகள் எனக் கருத முடியும்.

அரசாங்கத்துடன் கூட்டமைப்புத் தலைவர்கள் மேற்கொள்ளவுள்ள பேச்சுவார்த்தையின் பிரதான பேசுபொருள் இனப்பிரச்சினைக்கான தீர்வாகவே இருக்கும் என் பதில் சந்தேகம் இல்லை. இவ்விடயம் தொடர்பாகக் கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததாலேயே இனப்பிரச்சினை இன்று சிக்கலான நிலைக்கு வந்திருக்கின்றது.

முன்னைய பேச்சுவார்த்தைகளும் எட்டப்பட்ட உடன்பாடுகளும் தோல்வி அடைந்ததற்கான பொறுப்பை யார் ஏற்க வேண்டும் என்பது பற்றிய விவாதம் இன்று வரை தொடர்கின்றதேயொழிய அத்தோல்விகளிலிருந்து எந்தத் தரப்பும் பாடம் கற்றுக் கொண்டதாக இல்லை.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய கடப்பாடு தமிழ்த் தலைவர்களுக்கு மாத்திரமன்றி ஆட்சியாளர்களுக்கும் உண்டெனினும், இனப்பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற வகையில் தமிழ்த் தவைர்களுக்குக் கூடுதலான பொறுப்பும் கரிசனையும் இருக்க வேண்டி யது அவசியம்.

பேச்சுவார்த்தைகள் உட்பட முன்னைய தீர்வு முயற்சிகள் தோல்வியடைந்ததில் தங்களுக்கும் பொறுப்பு உண்டா என்பதையிட்டுத் தமிழ்த் தலைவர்கள் நிதானமாகச் சிந்திப்பது நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு அவசியமானது. தமிழ்த் தலைவர்கள் தரப்பில் தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன.

இப்போது அவை பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அத் தவறுகள் மீண்டும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதே இன்றைய தேவை. நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை பயனுறு வகையில் அமைவதற்கு இது அவசியமானது.

சரியான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பது மாத்திரம் தீர்வுக்கான பயனுறு பங்களிப்பாக அமையாது. இறுதித் தீர்வுக்கான சரியான திட்டத்தை முன்வைக்கின்ற அதே வேளை அத்திட்டத்தை றடைமுறைப்படுத்துவதற்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகின்றதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சக்திவலுச் சமநிலையைக் கவனத்தில் கொள்ளாத எந்த முயற்சியும் எதிர் பார்க்கும் பலனைத் தருவதில்லை. பேரினவாத சக்திகள்,  ஜனநாயக சக்திகள்,  இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை ஆதரிக்கும் சக்திகள் எனப் பல் வேறு சக்திகளின் வலுவே யதார்த்தத்தின் அடிப்படை ஆகின்றது. எனவே யதார்த்தத்துக்கு அமைவான அணுகுமுறைக்கு ஊடாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளின் விளைவாகச் சிங்களக் கடுங்கோட்பாட்டுச் சிந்தனையாளரின் கை முன்னரிலும் பார்க்க இப்போது ஓரளவு மேலோங்கியிருக்கின்றது என்ற கசப்பான உண்மையையும் அரசியலமைப்புத் திருத்தம் சம்பந்தப்படும் தீர்வுக்குச் சிங்கள மக்களின் ஆதரவும் அவசியம் என்பதையும் ஏற்றுக்கொண்டு தீர்வு முயற்சியை முன்னெடுக்க வேண் டிய நிலையில் தமிழ்த் தலைவர்கள் உள்ளனர். இறு தித் தீர்வை வலியுறுத்துகின்ற அதேவேளை யதார்த்தத்துக்கு அமைவான உடனடித் தீர்வை ஏற்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். இநுதித் தீர்வைப் படிப்படியாக அடைவதற்கும் தமிழ் மக்களின் வாழ்புல உரி மையை உறுதிப்படுத்துவதற்கும் இது அவசியமானது.


நன்றி தினகரன்

No comments: