.
முருகப் பெருமானை பிரம்மமாக வழிபடுவது பக்குவ நிலை அடைந்தவர்களுக்கே சாத்தியம்
கந்த சஷ்டி விரதம் என்பது அனைத்துத் தெய்வங்களுக்காகவும் ஒரே நேரத்தில் அனுஷ்டிக்கும் விரதமாகும். முருகனை வணங்குவது அனைத்துத் தெய்வங்களையும் வணங்குவதற்கு சமனானதாகும். தத்துவ ரீதியாக நோக்கும்போது முருகப் பெருமான் மூலப்பரம் பொருள் அவரை பிரம்மமாக வழிபடுவது உரிய பக்குவ நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். ஏனையவர்கள் முருகனை தெய்வமாகவே வழிபட முடியுமென சைவ சித்தாந்த சுரபி ஏரம்பு சோதிலிங்கம் தெரிவித்தார்.
திருகோணமலை அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் நிகழ்த்தும்கந்த சஷ்டி விரத தொடர்சொற்பொழிவின் முதலாவது உரையை கடந்த சனிக்கிழமை "மாயையின் மகனுமன்றோ வரம்பிலா அருள் பெற்றுய்தான்' என்னும் தலைப்பில் நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் அவர் தனது சொற்பொழிவில்;கொடியவனாக இருந்த சூரனை தேவர்களின் வழிபாட்டுக்கு உரியவனாக்குவதே கந்தபுராணத்தின் மெய்க்கருத்தாகும்.
சூரபத்மனை கொடிய அசுரன் என்றும் அவனைக் கொன்று தேவர்களைக் காப்பதே முருகப் பெருமான் அவதாரம் எடுத்ததன் நோக்கம் என்றும் நாம் கூறிக்கொண்டு வருகின்றோம். ஆனால், முருகப் பெருமான் அவதாரத்தின் நோக்கம் சூரபத்மனைக் கொல்வது அல்ல. கொடியவனாக இருந்த அவனை தேவனாக்கி வழிபாட்டுக்குரியவனாக்குவதேயாகும்.குக்குடம் வாழ்க, ஏறிய மஞ்ஞை வாழ்க, யானை தன் அணங்குவாழ்க, வள்ளி வாழ்க என்று வள்ளி தெய்வானை ஆகியோருக்கு முன்னிலையில் சூரபத்மனை தேவர்கள் வழிபடச் செய்வதே கந்தபுராணம் சொல்லும் கருத்தாகும். இந்துக்கள் அனுட்டிக்கும் ஏனைய விரதங்களை விட கந்தசஷ்டி விரதம் சிறப்பாக அமைவதற்கு முருகப் பெருமானின் தனித்துவமே காரணமாகும்.
விரதங்களுள் சிவனை, விஷ்ணுவை, அம்மனை, விநாயகரை நோக்கி அனுட்டிக்கும் விரதங்கள் தனித்தனியே உண்டு.ஆனால், கந்தசஷ்டி விரதம் என்பது அனைத்துத் தெய்வங்களையும் நோக்கி ஒரு சேர அனுஷ்டிக்கும் விரதமாகும். முருகப் பெருமான் சிவனுடைய மகன், சக்தியின் மகன், விஷ்ணுவின் மருகன், விநாயகரின் தம்பி, இவை தவிர இந்திரனின் மருகன். இதனால், முருகனை வணங்குவது அனைத்துத் தெய்வங்களையும் வழிபடுவதற்குச் சமானமாகும்.தத்துவ ரீதியாக நோக்கும்போது முருகப் பெருமான் மூலப்பரம்பொருள். ஆன்மாக்கள் ஈடேறும் பொருட்டு, உலகம் உய்யும் பொருட்டும் இங்கே வந்து உதித்தவர். "அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய் பிரம்மமாய் சோதிப் பிழம்பதாய்' என்று கச்சியப்ப சுவாமிகள் கூறியுள்ளார். முருகப் பெருமானை பிரம்மமாக வழிபடுவதுகுரிய பக்குவநிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். ஏனையோருக்கு முருகப் பெருமானை தெய்வமாக வழிபடுவதே சாத்தியமானதாகும் என்றார்.
நன்றி தினக்குரல்
2 comments:
எப்படி அந்த பக்குவ நிலையை அடைது என்று சித்தாந்த சுரபி ஏரம்பு சோதிலிங்கம் சொன்னால் நல்லாயிருக்கும்
எப்படி அந்த பக்குவ நிலையை அடைவது என்று சித்தாந்த சுரபி ஏரம்பு சோதிலிங்கம் சொன்னால் நல்லாயிருக்கும்
Post a Comment