சினிமா

1.  பாடகி சுவர்ண லதாவுக்கு திரையுலகம் அஞ்சலி
2.  பாஸ் என்கிற பாஸ்கரன்
3. நீயும் நானும்



1. பாடகி சுவர்ண லதாவுக்கு திரையுலகம் அஞ்சலி

போவோமா ஊர்கோலம் தொடங்கி போறாளே பொண்ணுத்தாயி, குச்சி குச்சி ராக்கம்மா என்று ஏராளமான பாடல்களை பாடி திரைப்பட ரசிகர்களின் இதயத்தையெல்லாம் தன் தேனிசைக் குரலால் நிரப்பிய சுவர்ணலதா திடீரென்று காலமாகிவிட்டார். அவருக்கு வயது 37

கடந்த சில நாட்களாக நுரையீரல் சம்பந்தமான நோயால் அவதிப்பட்டு வந்தாராம் சுவர்ணலதா. ஞாயிறன்று காலை பத்து மணிக்கு வட பழனியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்தார். இன்னும் திருமணம் செய்து கொள்ளாத சுவர்ணலதா கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்.



நு£ற்றுக்கணக்கான பாடல்கள் பாடிய இவர் போறாளே பொண்ணுத்தாயி பாடலுக்கு தேசிய விருதும் பெற்றிருக்கிறார். பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனுடன் ஏராளமான வெளி நாடுகளுக்கு சென்று மேடைகளில் பாடியும் வந்தார் சுவர்ணலதா. அவரது மறைவினால் அதிர்ச்சியுற்ற திரையுலகம் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது.


 பாஸ் என்கிற பாஸ்கரன்



நண்பேன்டா....

இந்த ஒற்றைச்சொல்லில் உயிர் கொண்டிருக்கிறது படம். கிழிய கிழிய அடி. பிழிய பிழிய அழு என்கிற சினிமா சென்ட்டிமென்ட்டை வீசி கடாசிவிட்டு 'வாங்க மக்களே' என்று தோளில் கை போட்டுக் கொள்கிறார் டைரக்டர் ராஜேஷ். அந்த இரண்டே முக்கால் மணி நேரமும் தியேட்டரே அதிரடி சிரிப்பால் பேயாட்டம் போடுகிறது.

வெட்டியாக சுற்றுவதையே வேலையாக பார்க்கும் ஆர்யாவுக்கு காதல் மட்டும் கரெக்டாக வந்து விடுகிறது. பல வருடங்களாக பரிட்சை எழுதிக் கொண்டிருக்கும் ஆர்யாவுக்கும், லெக்சரர் நயன்தாராவுக்கும் 'பிட்' அடிக்கிற விஷயத்தில் பிரச்சனை வந்து அதுவே காதலாகி விடுகிறது. குடிகாரன் பாக்கெட்டில் குவார்ட்டர் விழுந்த மாதிரி, அவரே புது அண்ணியின் தங்கச்சியாக வந்து அமைய ஆர்யா காட்டில் அடை மழை. உருப்படியா வேலை பார்க்காதவனுக்கு என் பொண்ணை தர முடியாது என்று நயன்தாராவின் அப்பா மறுக்க, அதற்கு ஆர்யாவின் குடும்பமும் சப்போர்ட். ஐயோ பாவம். வீட்டை விட்டே வெளியேறுகிறார் ஆர்யா.

பெட்டி படுக்கையுடன் அவர் போய் சேர்கிற இடம், அதே ஊரில் அமைந்துள்ள சந்தானத்தின் சிகையலங்காரக் கடை. கத்தி நடமாடுகிற இடத்தில் கூடவே ஒரு சுத்தியும் சேர்ந்து கொண்டால் என்னாகும்? ரகளையாகிறது ஏரியா. இரண்டு பேரும் சேர்ந்து ஒரு பிசினஸ் செய்யலாம் என்று பிளான் போட்டு டுட்டோரியல் சென்ட்டர் ஆரம்பிப்பதும், அதற்கு அந்த ஊர் தாதா ராஜேந்திரன் பண உதவி செய்வதும், பரிகாரமாக பத்தாங் கிளாஸ் பாஸ் பண்ணவே முடியாத அவரது மகனை இவர்கள் பாஸ் பண்ண வைக்க போராடுவதுமாக திணற திணற சிரிக்க வைக்கிறார்கள். கடைசி பத்து நிமிஷம் ஜீவாவும் கெஸ்ட் ரோல் அடையாளத்தோடு உள்ளே குதிக்கிறாரா... பிரளயமே நடக்கிறது தியேட்டரில்.

சந்தானம் பேசுகிற ஒவ்வொரு டயலாக்குக்கும் குறைந்தபட்ச அஹ்ஹஹ்ஹா நிச்சயம். 'வருஷம் முழுக்க பேசணும். அதுவும் ஃப்ரீயா பேசணும்' என்று செல்போன் கடையில் ஆர்யா விரும்ப, 'அதுக்கு நீ நேராதான் போய் பேசணும்' என்கிற சந்தானத்தின் பதில் சர்வ நாஸ்தி. குடித்துவிட்டு சித்ரா லட்சுமணனின் பாராட்டு விழாவில் புகுந்து கலாய்க்கிற காட்சி பயங்கரம்ப்பா. 'ஒரே ஒரு சுத்துற நாற்காலிய வச்சுருக்கிற உனக்கே இப்படின்னா, நாலு சுத்துற நாற்காலியை போட்டு கத்தியை வைக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்' என்று அவர் குடிபோதையில் குமுறுவது அல்டிமேட் டச்! 'அலைபாயுதே மாதவன்னு நினைச்சா அரண்மனைக்கிளி ராஜ்கிரணா இருக்கியே.... கமல்ஹாசன் மாதிரி புரியாமலே பேசுறியே...' என்று சினிமா ஏரியாக்களிலும் 'கத்தி' வைத்திருக்கிறார் சந்தானம். (பார்த்துங்ணா...)

மூக்கு நுனியில் கோபமும், நாக்குக்கு அடியில் நக்கலுமாக ஆர்யாவுக்கு இது புது கேம். மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார். கப் அண்டு சாசர் மாதிரி ஆர்யா-சந்தானம் காம்பினேஷன் செம ஜோர். டுடோரியல் சென்ட்டரில் டீச்சர் பணிக்கு ஷகிலாவை அழைத்து வரும் சந்தானத்திடம், சூழ்நிலை தெரியாமல் 'இவங்கள ஏண்டா இங்க அழைச்சிட்டு வந்தே?' என்று ஆர்யா ஹஸ்கி வாய்சில் கேட்கிற போது புரிஞ்சு சிரிக்குதுய்யா பொதுஜனம். எந்த வேலையை சொன்னாலும் அதில் ஒரு ரிஸ்க் வைக்கும் ஆர்யா கடைசியில் நயன்தாராவை கை பிடிக்கிற வரை வைக்கிற ஸ்டெப் எல்லாமே ஆனந்த கூத்து.

நயன்தாராவை பார்க்கிற போதெல்லாம் எப்பிடி இருந்த பொண்ணு இப்பிடியாருச்சே என்று கவலை கவலையா வருது. 'போதும் நீங்க டுட்டோரியல் நடத்துற லட்சணம். நீ சொன்ன மாதிரியே நான் வாங்குற பதினைஞ்சாயிரம் சம்பளத்துல உன்னையும் வச்சு காப்பாத்துறேன்' என்று ஆர்யாவின் கண்ணோடு கண் நோக்கி நயன் அடிக்கிற டயலாக்குக்கு சொர்க்கத்தையே எழுதி வைக்கலாம்.

அண்ணனாக நடித்திருக்கும் சுப்புவுக்கு அசத்தல் வேலை. மாட்டு டாக்டர்! கல்யாண வயசை மிஸ் பண்ணிவிட்டு விஜயலட்சுமியிடம் வழியும் காட்சிகள் பேரிளமை ஆல்பம்! முதலிரவு தள்ளிப் போக, ஒரு பார்வையிலேயே எரிச்சலை காட்டுவதும் அற்புதம்.

கொடூர வில்லனாகவே அறியப்பட்ட நான் கடவுள் ராஜேந்திரன், இதிலும் அப்படி ஆகிவிடுவாரோ என்று பதற வைத்து சுபம் போடுகிறார் டைரக்டர். (அப்பாடி...!) பாஸ் பண்ணவே மாட்டான் என்று நினைத்திருந்த மகன் பாஸ் ஆகிவிட்டான் என்று தெரிந்ததும், பின்னால் நிற்கும் ஒரு மாணவர் கூட்டத்தையே பார்த்து 'நீங்களும் பாஸ்தாண்டா ஓடுங்க' என்கிறாரே, சூப்பர்.

இந்த படத்திலேயே ஒரு அற்புதமான சென்ட்டிமென்ட் கலவை அந்த கூலிங்கிளாஸ் டீச்சர்தான். பார்வையில்லாத அவர், யாருமே இல்லாத வகுப்பறையில் கிளாஸ் எடுக்க அதிர்கிற மக்கு மாணவன் மனம் திருந்துவதும், மற்ற மாணவர்களை மிரட்டி அழைத்து வருவதும் ரியலி குட்!

யுவனின் இசையும் ஷக்தி சரவணனின் ஒளிப்பதிவும் வழக்கம் போலவே கிரேட்.

டுட்டோரியலை வைத்து ஒரு 'ஹிட்'டோரியல்!

-ஆர்.எஸ்.அந்தணன்


 நீயும் நானும்


பசங்க, ரெட்டச்சுழி... பின்னே இந்த நீயும் நானும்! சிறிசுகள் ஓட, அவர்களின் பின்னே ஏர் பூட்டிய மாதிரி ஓடுகிறது படமும். நடுவே கொஞ்சம் காதலையும் கலந்து யூத்துகளின் கன்னத்திலும் லேசாக 'இச்' கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.வி.சோலைராஜா.

பள்ளி ஒன்றிற்கு நடன ஆசிரியராக வருகிறார் சஞ்சீவ். அங்கே சற்றும் எதிர்பாராத மழலை மேதை ரின்சனை சந்திக்கிறார். பேப்பர் போடுவதில் ஆரம்பித்து, இரவில் கொசுவர்த்தி சுருள் விற்கிற வரைக்கும் ட்வெண்ட்டிபோர்ஸ் ஹவர் உழைப்பாளியான அந்த பையனின் ஒரே லட்சியம் பணம் சேர்த்து எப்படியாவது விட்டுப்போன படிப்பை தொடரவேண்டும் என்பது. சஞ்சீவியின் புண்ணியத்தில் அவர் ஸ்கூலிலியே சேர்கிறான் இலவசமாக. பள்ளியின் கரஸ்பான்டட் சம்பத் மகன் சச்சினுக்கும் ரின்சனுக்கும் நடனப் போட்டி வருகிறது. இந்த போட்டியில் வென்றால் ஆறு லட்சம் பணம் கிடைக்கும். அம்மாவுக்கு ஆபரேஷன் செய்து அவரை காப்பாற்றலாம் என்பது ஏழை ரின்சனின் எண்ணம். ஆனால் தனது ஸ்கூலில் இருந்து தனது மகன் சச்சினைதான் தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என்கிறது முதலாளி சம்பத்தின் குடும்பம். முடியாது என்று மறுக்கும் சஞ்சீவி அந்த பள்ளியில் இருந்து விலகி, ரின்சனுடன் கார்ப்பரேஷன் ஸ்கூலில் தஞ்சமடைகிறார். குப்பத்து மாணவர்களையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டு ஆறு லட்சத்தை அள்ளிக் கொண்டு போவதுதான் க்ளைமாக்ஸ். அப்படின்னா காதல்...? அது தனி லக்கேஜுங்க!

டான்ஸ் மாஸ்டராக சஞ்சீவி. மனிதருக்கு துறுதுறு முகம். நடனத்திலும் மாஸ்டராக இருப்பார் போலிருக்கிறது. காதல், பைட் என்று சினிமாவுக்கு தேவையான பிற விஷயத்திலும் எபவ் ஆவரேஜ்தான். அதற்காக வந்து ரெண்டே நாளில் கரஸ்பான்டன்டின் உறவு பெண்ணையே லு£ட் அடிப்பதெல்லாம் நம்பிக்கை துரோகம் சாமி. ஹீரோயின் சேத்னாவின் லோ-ஹிப், ரொம்ப அபாயகரமான அழகு. பல நேரங்களில் நடிப்பை விட இந்த 'லோ லோ'வைதான் அதிகம் நம்பியிருக்கிறார் அவர்.

குழந்தைகள் அதிகம் பேசினால் ஒருவித எரிச்சல் வரும். தமிழ்சினிமா குழந்தைகள் பல படங்களில் அப்படிதான் இருக்கிறார்கள். ஆனால் ரின்சன் அப்படியல்ல. நெஞ்சை அள்ளுகிறான். எப்படியாவது இவன் ஜெயிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை அநேகமாக எல்லா ரசிகர்களுமே செய்திருப்பார்கள். நடனத்திலும் குட்டி பிரபுதேவாவாக சுழன்றிருக்கிறான். இவனது எதிர் கோஷ்டி ஹீரோ சச்சினின் நடனமும் சளைத்ததல்ல ரின்சனின் நடனத்துக்கு.

மனதை கவரும் இன்னொரு நபர் அந்த ஊனமுற்ற வாலிபர்தான். கால்கள் இரண்டையும் எட்டு போல் வளைத்து வினாடியில் தோளில் போட்டுக் கொள்வதும், பேய்த்தனமாக ஆடுவதும் பிரமிப்பு பிரமிப்பு. நம்பிக்கையூட்டும் வசனங்களை இவர் வாயை திறந்து கூட பேசியிருக்க அவசியமில்லை. பார்த்தாலே புரிய வைக்கிறார்.

போட்டியை அறிவித்த பின் ரிகர்சல், ஆட்டம் என்று போகாமல் சஞ்சீவும், சேதனாவும் ஆள் பிடிக்க அலைவதும், அந்த குப்பத்து சிறுவர்களின் லோ-கிளாஸ் பேச்சுகளும் அருவருப்பு. அதிலும் இந்த ஆட்டத்தை கலைக்க வரும் அடியாட்களுக்கு இவர்கள் தரும் பதிலடி அருவறுப்பின் உச்சம். சிங்கமுத்து, அல்வா வாசு காமெடிகள் ரசிக்க வைக்கின்றன.

புருவ மத்தியில் கொஞ்சம் சிரிப்பை நிறுத்தி மையமாக முடிவெடுக்கும் சம்பத், நிஜமாகவே மிரள வைத்திருக்கிறார். ஹீரோயினின் முறைப் பையன் வதன் சர்ர்ர்ரியான சைக்கோ! ட்ரெட் மில்லில் ஏறி ஓடி பொசுக்கென்று அதிலேயே விழுந்து கிடப்பது செம காமெடி.

ஸ்ரீராம் விஜய்யின் இசையும், பிரேம் சங்கரின் ஒளிப்பதிவும் திருப்தி.

நீயும் நானும் போட்டா போட்டி!

-ஆர்.எஸ்.அந்தணன்

நன்றி தமிழ்சினிமா.கொம்

No comments: