பொருத்தம் -- சிறுகதை --சோனா பிறின்ஸ் --

                           பொருத்தம்


 "பிள்ள! அரிசி ஊறப் போட்டிருக்கன் கொஞ்சம் இடிக்கிறியா?" என்ற அம்மாவின் வேண்டுகோள் கவிதாவைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
மனதிற்குள் சலிப்படைந்தவளாய்.      "என்னம்மா! எப்ப பார்த்தாலும் அரிசி இடி, மிளகாய் இடி, அதுவும் இல்லையானால் வேலைக்குப் போவதற்கு முன்னால் மீன்குழம்பு வைப்பதற்கு மிளகாய், மல்லி, சீரகம், மிளகு, சேர்த்து அம்மியில 
அரைச்சு  வெச்சிட்டு போ பிள்ளைதானா ? எனக்கு மூத்தவவும் , இளையவவும் ,இருந்தவதானே , அவங்களிட்ட கேட்காமல் என்னிடம் மட்டும்தான் கேட்பீங்கள்.  நான்மட்டும்தான் இந்த வீட்டில வேலைக்காரியா? உங்களுக்கு ஒரு வேலைக்காரி வேணும் எண்டுதான் என்ன பெத்தீங்களா அம்மா? சொல்லுங்கோ "என்று  அன்போடும் சலிப்போடும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் கவிதா.


"என்ன பிள்ள இப்பிடிப் பேசுறே? அதுகளிட்ட கேட்டா செய்யுதுகளா?  நீதானே நான் எதுகேட்டாலும் செய்வாய்  பேசுறத விட்டிட்டு போய்
இடிபிள்ள . செக்கல்படப்போகுது  அதுக்குள்ள மாவை வறுத்து வைக்க வேணும்." என்று கூற,  "ம்..ம்...எல்லாம்  செய்யவும் வேணும் அதுக்குள்ள, சரியாக ஆறு மணி எண்டால் அம்மம்மா வாசல்ல வந்துவிடுவா "கவிதா ஆறு மணியாச்சு உள்ளவா பிள்ள, செக்கல்படுது  வெளியில நிற்காத என்று பழைய பஞ்சாங்கம் பாடத்தொடங்கிவிடுவா 
என எண்ணியவளாக,அம்மாதன்மேல் வைத்திருக்கும் அபிப்பிராயத்தை கட்டிக் காக்க வேணும் என்றதோரணையில்,தலைகீழாக வைக்கப்பட்டிருந்த உரலை நிமிர்த்தியவளாக அதனைக் கழுவிவிட்டு அரிசியை இடிக்கத்தொடங்கினாள். 

அந்தவேளை பார்த்து  வாசற்கதவில் யாரோவந்து பேசிக்கொள்வதும்  அவர்களை அம்மாவும், அண்ணாவும், உள்ளே  அழைத்துக் கொண்டு
போவதும் மெதுவாகக் கேட்டது.ஏன் வந்திருப்பார்கள்? என எண்ணியவளாக அம்மா சொன்ன வேலைகளை எல்லாம் முடித்து வைத்துவிட்டு, பின் குளித்துவிட்டு அம்மா பசிக்குது என்ன இருக்குது? என்று கேட்டவண்ணம் குசினிக்குள் நுழைந்தவள் அம்மா ஏற்கெனவே தயாராக வைத்திருந்த உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தாள். சிலநிமிடங்கள் கழித்து அருகில் அம்மாவின் காலடி ஓசை கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். "இந்தவரனும்சரிவரவில்லையம்மா"என்றதாயிடம் தனது  வெறுப்பைக் கண்களில் காட்டியவளாய் "அம்மா!உங்களிட்ட எத்தனை தடவை சொல்றது எனக்கு வரன் பார்க்க வேண்டாம் என்று?  வாறவனுக்கு சமைச்சுப் போட்டு ,துணி துவைச்சுப் போட்டு, 
பராமரிக்கிறதிலும்பார்க்கஎன்னப்பெத்து ஆளாக்கிய உங்களை வெச்சுப் பராமரித்தாலே போதும் என்று கேட்கவே மாட்டியள்."  என்று கத்தினாள். "என்ன கவிதா செய்யிறது உனது அக்காவிற்கு அவங்களாக கேட்டு வந்தாங்க, சுலபமாக முடிஞ்சுபோச்சு. உனக்குத்தானே இப்படி நாலு இடத்திலேயும் நாங்களாகக் கேட்டுக் கொண்டு திரிய வேண்டிக்கிடக்கு . உனது தங்கச்சியும் கல்யாண வயசில இருக்கிறா, நீ செஞ்ச பிறகுதானேஅவளோடகல்யாணத்தையும் செய்யலாம் .  
ஏற்கெனவே  அவவை  விரும்பின பெடியனும் கல்யாணத்திற்கு அவசரப்படுத்துது ,எங்கட நிலைமையைப் புரிஞ்சிக்காம கல்யாணம் வேண்டாம் அது ,இது,  என்று  சொல்லிக்கொண்டிருக்கிறாயே?"   என்றாள்அம்மா. "அம்மா! எனக்காக யாரும் காத்துக் கொண்டிருக்கத்தேவையில்லை நல்லாத் தங்கச்சியின்ர  கல்யாணத்த தடல்புடலாச் செய்யுங்கோ. நான் தடை விதிக்கல்ல, எல்லோருக்கும் எழுதினதின்படிதானே நடக்கும்."எனக் கண்கலங்கியவாறு கூறிவிட்டு சாப்பாட்டைப் பாதியிலே நிறுத்திவிட்டுக் கையலம்ப எழுந்தாள்
"எப்ப பாரு நீ இப்படித்தான் கதைப்பாய்" என்று கூறியவாறு கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு நகர்ந்தாள் அம்மா.படுக்கையில் வந்து விழுந்த கவிதாவிற்கு என்ன நிம்மதியில்லாத வாழ்க்கை எண்ணம் ஏற்படத்தொடங்கியவாறு, தூக்கத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்த வேளை, திடீரென சரவணனின் நினைவு வந்தது. எல்லோரும் என்னை ஒதுக்கினாலும் எனக்கு என் சரவணன் இருக்கின்றார். அவரது நட்பு மட்டும் எனக்குப் போதுமென எண்ணியவாறு நித்திராதேவியின் அரவணைப்பில் தூங்கிப்போனாள்.

அலாரம் அடித்ததைக் கேட்டு துள்ளிஎழுந்தவளாய் நேரத்தைப் பார்த்தாள். அடடா முதல்தடவை அலாரம் அடித்தது கூடக் கேட்கவில்லையே, என்று அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அலுவலகம் புறப்பட்டாள். எதிரே இட்லியுடனும், சாம்பாருடனும் வந்து நின்ற தாயிடம் " அம்மா! எனக்கு நல்லா நேரம் போயிட்டுது, வழியில ஏதும் வாங்கிச் சாப்பிடுறன். இதை நீங்களே சாப்பிடுங்கோ". எனக் கூறியவாறு அலுவலகம் செல்வதற்கு தொடர்வண்டியைப் பிடிப்பதற்காக விரைந்து நடந்து கொண்டிருந்தாள். அங்கே அவளது விழிகள்
சரவணனைத் தேடின. அவனைக் காணவில்லை, ஒரு வேளை முதல் போன தொடர்வண்டியில் போயிருப்பான் என எண்ணியவளாய், இன்னும் ஒருசில நிமிடங்களில் வரவிருக்கும் தொடர்வண்டியை எதிர்பார்த்துக் கொண்டு நின்றாள். அந்த வேளை மூச்சு வாங்க ஓடிவந்த சரவணனைப் பார்த்து ஆச்சர்யக் குறியை முகத்தில் படரவிட்டவளாய் "என்ன சரவணா! ஏன் இன்று தாமதம்?" என சரவணனிடம் கேட்டாள்.
"அதுவா? இரவு தூங்கக் கொஞ்சம் நேரமாயிட்டுது. அதனால எழுந்திருக்கவும் நேரமாயிட்டுது கவிதா" என்றான். "நானும் அப்படித்தான், அது சரி எனக்குத்தான் வீட்டில வழமை போல வராத வரன் பார்க்கிற படலம் என்று நான் தூங்கவில்லை, உங்களுக்கு என்ன நடந்ததது சரவணன் ? எனக் கேட்டவளிடம் "எல்லாம் நீதான் காரணம். எங்கே என்னைத் தூங்க விடுறாய்? சாப்பிடவிடுறாய்? அமைதியாக அலுவலக வேலைகளைத்தான் பார்க்க விடுறாய்? எப்போதுமே உன் நினைவிலே நான் அவஸ்தைப்படுகிறேனே, என்று சொல்ல வேண்டும் போல் வந்த வார்த்தைகளை மறைத்தவனாய் "என்னவோ தெரியவில்லைக் கவிதா! கொஞ்ச நாட்களாக என்னைத் தூக்கம் நெருங்குதில்லை "என்றான்." ஓ!அப்படியா, டாக்டரிடம் போய்ச் சோதிச்சீங்களா சரவணன்?" என்றவளிடம், டாக்டரே நீதானே, உனக்கே தெரியவில்லையே என்று சொல்ல வந்த வார்த்தைகளை மறைத்தவாறு , " டாக்டருக்கு என்ன தெரியவா போகிறது ? எதோ பார்க்கலாம் " என்று சொல்லவும் தொடர்வண்டி வந்து தரிக்கவும் இருவரும் அதில் ஏறிப் பயணமானார்கள்.
அலுவலகத்தில் இடை இடையே வந்து போய்க் கொண்டிருந்த கவிதாவின் எண்ணங்களை ஒருவாறு ஒதுக்கி வைத்து விட்டு வேலையைப் பார்க்க முனைந்த சரவணன் தோற்றுப் போய்க் கொண்டிருந்தான் .எப்படி அவளிடம் தனது விருப்பத்தைச் சொல்வது ? அவளைப் பார்த்ததும், அவள் தனக்கு அருகில் வந்து அமர்ந்ததும் ஒரு இனம் புரியாத உணர்வு , ஒரு இன்பம் தனக்குள் உருவாகுவதை அவன் நாளாக நாளாக உணர்ந்து கொண்டு வந்தான். அவளிடம் அப்படி என்னதான் இருக்கிறது ? என்னை இப்படி ஈர்த்துக் கொள்வதற்கு . அவள் ஒன்றும் பெரிய அழகி என்றும் இல்லையே என எண்ணிக் கொண்டவன் ஒருவாறாக அவற்றிற்கு தடைபோட்டவனாய் , அலுவலகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான் .
மாலையில் இருவரும் சந்திக்கும் போது," கவிதா இன்று என்ன வேலை வீட்டிலஇருக்கு? ?" எனக் கேட்டான். "போனால்தான் தெரியும் சரவணன், அரிசி இருக்குதோ ,இல்லை மிளகாய் இருக்குதோ தெரியாது இடிப்பதற்கு " என்று கூறிச் சிரித்துவிட்டு, "வேறொன்றும் இல்லை சரவணன் இன்றைக்கு மகளிர் அணிகளுடன் சேர்ந்து எங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக கச்சேரிக்கு முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் ஒன்றை நான் ஒழுங்குபடுத்தினனான், அதற்குப் போகவேணும்" என்றாள்.
"ஒ! அப்படியா கவிதா, நான் வரக் கூடாதா? பொதுவான ஆர்ப்பாட்டமாக வைத்திருந்தால் நானும் கலந்து கொண்டிருப்பேனே, எதற்கு மகளிர் அணிகள் மட்டும்?" என்று இன்னொரு தடவை அவளைப் பார்க்கும் சந்தர்ப்பம் பறிபோகிறதே என்ற ஆதங்கத்தில் கேட்டான்.
"யாரும் உங்களைத் தடுக்கவில்லை சரவணன். இப்ப என்ன, ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு வாங்கோ" எனக் கூறிச் சிரித்தாள். பின்பு இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டு விடைபெற்றுக்கொண்டார்கள். வீடு வந்தவளுக்கு, வழமைக்கு மாறாக வீடு அமைதியில் இருப்பதைக் காண என்னவோ நடக்கப் போகிறது என்பது ஓரளவிற்குப் புரிந்து கொண்டது.
உள்ளே நுழைந்தவளைப் பார்த்து "நில்லு கவிதா! இண்டைக்கு நீ எங்கேயும் போகக்கூடாது"என்றாள் தாய். வழமைபோல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்தவளாய் "ஏன் அம்மா? " என்றாள். "இதோபார்! உன் திருமணத்திற்கு இதுவும் ஒரு தடை என்றாள். "எது" என்ற கேள்வியுடன் தாயைத் திரும்பிப் பார்த்தாள். " என்ன பார்க்கிறாய் கவிதா? நீ இப்படி தெருத் தெருவா ஆர்ப்பாட்டம் செய்யிறதையும் மாப்பிள்ளை வீட்டார் சொல்லி தட்டிக் கழிக்கிறாங்க. இவவுக்கு தெருவில ஆர்ப்பாட்டம் செய்ய இருபத்திநாலு மணித்தியாலமும் போதாது. இவ எங்க குடும்பத்தைப் பார்க்கப் போகின்றா? எங்களுக்கு குடும்பப் பெண்தான் வேணும் என்று சொல்லுதுகள்"  என்றாள். திடுக்குற்றவளாய் "இதோ பாருங்க ! நீங்க இனிமேல் எனக்கு எந்த வரனும் பார்க்க வேண்டாம். நானே பார்த்துவிட்டேன்" என்றாள். மகளிடமிருந்து உண்மையை அறிந்து கொள்ளும் ஆவல் நிறைந்தவளாய் "அப்படியா கவிதா! யாரு அந்தப் பையன் ? எனக் கேட்டாள் தாய். "வேறுயாருமில்லை , என்னோட நண்பன் சரவணன் என்று அடிக்கடி சொல்வேனே அவரைத்தான் திருமணம் செய்யப்போறன்" என்று உறுதியாகச் சொன்னாள் கவிதா." யாரு சரவணனா ? அவன் தூரத்தில எங்கோ இருக்கிற பெடியன், அவனைப் பற்றி எதுவுமே தெரியாதே" என்றாள் தாய்.

"என்னம்மா சொல்றீங்க ? அவர் தூரத்தில் இருப்பவரா?. அவர் தூரத்தில் இருந்தாலும் எனக்கு உள்ளே இருக்கின்றார் . நீங்க பார்க்கின்ற உறவுக்காரர் எல்லாம் அருகிலே இருந்தாலும் எனக்குத் தூரத்திலேதான் இருக்கினம். ஏன் என்னையே அவர்கள் தூரத்திலேதான் வெச்சுப் பார்க்கினம். வேறு என்ன சொன்னீங்கள் அம்மா? தெரியாதவர் என்றா? உங்களுக்கு அவர் தெரியாதவராக இருக்கலாம். ஆனால் என்னை அவர் தெரிஞ்சு வைச்சிருக்கிறார். புரிஞ்சு வைச்சிருக்கிறார். தெரியாத ஒருவரை திருமணம் செய்து சில காலம் வாழ்ந்து பிரிவதைப் பார்க்கிலும். என்னைப் புரிந்து கொண்டவரைத் திருமணம் செய்து பலகாலம் வாழ விரும்புறன் அம்மா. நீங்க சொல்லும் உறவுக்காரர் எல்லாம் என் வெளித் தோற்றத்தைத்தான் பார்க்கினம். என் சரவணன் என் உள்ளத்தில் உள்ள வெண்மையைத், தூய்மையைப் பார்க்கின்றார் அம்மா. ஊர் உலகம் என்மேல் இப்படி ஒரு பழியைச் சுமத்துவதற்கு நீங்களும் ஒரு காரணம் அம்மா. சிறு வயது முதல் எல்லோருக்கும் உதவி செய்பவளாய், பணிவிடைகள், வீட்டு வேலைகள் செய்பவளாய் என்னை வளர்த்ததும் நீங்கள்தானே ? வீட்டிற்குள் எதனைச் செய்தேனோ , அதையே வீட்டிற்கு வெளியே செய்கிறேன் . அதாவது உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதில் என் நேரத்தை செலவு செய்கிறேன். எனக்குப் பின்னே பேசுபவர்களை நான் திரும்பிப் பார்க்கவில்லை. எப்போதுமே முன் பார்த்து நடப்பதே என் இயல்பு, என்று கூறியவளாய் தாயின் பதிலை எதிர் பாராமல் நகர்ந்தாள். மறு நாள் சரவணைச் சந்தித்த வேளையில் மனதிற்குள் எழுந்த கேள்விகள் மனத்தைக் குழப்ப தயங்கித் தயங்கி "வாங்க சரவணன் எப்படி இருக்கிறீங்க?"என்று கேட்டாள்.
"நான் நல்லா இருக்கிறேன் கவிதா உங்கட புண்ணியத்தில" எனும் போதிலே  கண் சிமிட்டியபடியே புன்னகைத்தவன், பதிலுக்கான எந்தப் புன்னகையும் எதிரிலே காணாத ஏக்கத்துடன் "என்ன கவிதா! எதோ குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறதே, என்ன நடந்தது? உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் எனக்கு சொல்லலாமே" என்று கேட்டவனிடம்," சரவணன்! என்னைத் திருமணம் செய்யுறீங்களா?"எனக் கேட்டாள் கவிதா. இதனை எதிர்பாராத சரவணன், தனது அதிர்ச்சியை மறைத்துக் கொண்டவனாய் விரைந்து அவள் கரங்களைப் பற்றியவாறு, தன் அளவு கடந்த மகிழ்ச்சியையும் கட்டுபடுத்திக் கொண்டு என்ன நடந்தது கவிதா எனக் கேட்டான். அவள் அவன் மார்பில் சாய்ந்தவாறு அழுத வண்ணம் நடந்தவற்றைக் கூறினாள்." அழாதே கவிதா, உன்னைப் புரிந்து கொண்ட உன் சரவணன் நான் இருக்கிறேன் "என்று
அன்போடு அணைத்தவாறு, தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரத் தொடர் வண்டியை நோக்கி நடக்கலானான் சரவணன்.

 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 நான் பல சிறு கதைகளை வானொலி நிகழ்ச்சிக்காக எழுதிப் படித்திருக்கிறேன் . ஆனால் இணையம் மூலம் ஆலம் விழுதுதான் என் முதல்கதை. என் எழுத்துக்களை
இணையம் மூலம் படிப்பவர்களுக்கு வழங்குவதற்கு என்னை ஊக்குவித்த, தமிழ் முரசு இணையத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் என்
எழுத்துக்களுக்கு விமர்சனம் எழுதிவரும் முகம் அறியா வாசக நெஞ்சங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நல்ல படைப்புக்களைத் தருவதுடன்,
வார இறுதிநாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விபரங்கள் பற்றி அறிந்துகொள்ளவும் மிக மிக உதவியாகவும் தமிழ் முரசு இணையம் உதவுகின்றது. வாழ்க என்றென்றும்
 நன்றிகலந்த அன்புடன்
சோனா பிறின்ஸ்

2 comments:

kirrukan said...

சரவணன் மாதிரி எல்லா ஆண்களும் இருந்தால் வாழ்க்கை நல்லாயிருக்கும்.......

Karuppy said...

Sona, you are really doing well. It is a great story. Compared to most of the " so called " writers your one is excellant. Keep it up.