இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 06

.
பழந்தமிழ் வழக்கில் குறுநிலப் பகுதிகளான நாட்டுப் பிரிவுகளிலே தலைமை அதிகாரங்களைப் பெற்றிருந்தவர்களைக் கோ என்று குறிப்பிடுவது வழக்கம். அவ்வண்ணமாக கி.மு. 2ஆம் நூற்றாண்டிலும் ஆனைக்கோட்டை பகுதியிலே கோ என வழங்கிய தலைவர் இருந்திருக்கலாம் என கருதலாம்.

அகித்தி ஜாதகம் அதே காலமளவில் ஆட்சி புரிந்த ஒரு சிற்றரசைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. கந்தரோடையிற் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பொறித்த சில அரிய காசுகள் கிடைத்துள்ளன.


அவற்றிலும் நாக பொலம் என்ற வாசகம் ஒரு நாணத்திற் காணப்படுகின்றது. நாக அரசன் வழங்கிய காசு என்று அதனை விளக்கலாம்.

அவ்வாறாகில் கந்தரோடைப் பகுதியை மையமாகக் கொண்டு தமிழ் மொழியைப் பேசிய நாக வம்சத்தினர் ஆட்சி புரிந்தனர் என்றும் நாணயங்களை வெளியிட்டனர் என்றும் கொள்ள முடிகின்றது.

யாழ்ப்பாணத்திலும் அதற்குத் தெற்கிலும் உள்ள வன்னிப் பகுதியிலும் பெரும் அளவிலான எழுத்துப் பொறித்த கலவோடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வேளான், அபிசிதன் எனும் முழுச் சொற்கள் காணப்படுகின்றன.

பல கலவோடுகளிலே தமிழ் மொழிக்குச் சிறப்பான எழுத்தாகிய 'ழ', 'ள', 'ற' காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கி.மு. காலத்தில் தமிழ் அங்கு பேச்சு வழக்கு மொழியாக இருந்தமைக்கு இவை ஆதாரமாகும்.

கந்தரோடை ஒரு வணிக தளமாகும். கலாசார பரிவர்த்தனை நிலையமாகவும் விளங்கியது. ஆந்திர பிரதேசத்திலும் தமிழ் நாட்டிலும் உள்ள பௌத்த நிறுவனங்களும் அநுராதபுரம் போன்ற இடங்களிலுள்ள சங்கத்தாரும் அங்கிருந்த பௌத்தப் பள்ளிகளோடு தொடர்பு கொண்டிருந்தனர்.

கந்தரோடை ஏறக்குறைய 2500 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரு குடியிருப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வல்லிபுரம் கல்வெட்டில் நாகதீவினை ஆளுகின்ற ஒரு அரசனைப் பற்றி கூறப்படுகின்றது. நாகதீவு என்பது ஒரு தனியான அரசியல் பிரிவாக அதிற் சொல்லப்பட்டுள்ளது.

அந்தச் சாசனத்தில் உள்ள பிராகிருதத்தில் தமிழ் செல்வாக்கு மிகுந்து காணப்படுவது கவனத்திற்குரியது. 13ஆம் நூற்றாண்டிலே தான் யாழ்ப்பாணத்தில் இராச்சியம் முதன் முதலாக அமைக்கப்பட்டதென்ற கருத்து நிலைபெற்று வந்துள்ளது.

ஆனாற் கந்தரோடை, மாந்தை, பூநகரி முதலான இடங்களிற் பெருமளவில் கிடைத்த நாணயங்கள் அதற்கு முற்பட்ட காலங்களில் வடபிராந்தியத்தில் அரச வம்சங்கள் வெவ்வேறு காலங்களில் ஆட்சி அதிகாரம் பெற்றிருந்தமைக்குச் சான்றுகளாக உள்ளன.

கங்கவம்சமிசம் ஒன்றைச் சேர்ந்தவர்கள் வெளியிட்ட நாணயங்களும் காணப்படுகின்றன. அவற்றை மாதிரியாகக் கொண்டே ஆரியச் சக்கரவர்த்திகள் சேது நாணயங்களை வெளியிட்டார்கள்.

மீன் வடிவங்களையும் நாணயங்களில் பொறித்தார்கள். அதுவும் மூன்று மீன் வடிவங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள் அங்கு பெருளவில் கிடைத்தன. அந்தப் பிரதேசங்களிலே வெவ்வேறு காலப் பகுதியில் அரசு புரிந்தவர்களால் அவை வெளியிடப்பட்டிருந்தல் வேண்டும்.

அந்த நாணயங்கள் தனித்துவமானவை. இவற்றைப் போன்ற காசுகள் தென்னிந்தியக் கரையோரங்களிலும் காணப்பட்டன. ஆதிகாலத்தில் வெளியிடப்பட்ட இலட்சுமி நாணயத்தில் சில வட இலங்கையில் வெளியிடப்பட்டன.

அவற்றில் இந்து சமய சின்னங்களாகிய திரிசூலம், மயில், இடபம், சுவஸ்திகம் ஆகியன உள்ளமை குறிப்பிடத்தக்கது. அநுராதபுர காலப்பகுதியில் இப்பகுதியில் இருந்த தமிழ் பிரதானிகள் வேளாண்மையின் விருத்தியின் பொருட்டு பல குளங்களை அமைத்தார்கள் என்பதை அறிய முடிகிறது.

வன்னிப் பகுதியில் உள்ள பல குளங்கள் தனியாரின் பெயர்களைக் கொண்டவையாக இருந்துள்ளன. வேறு சில இராமநாதபுரம், மதுரை, கன்னியகுமாரி மாவட்டங்களில் உள்ள சில குளங்களின் பெயர்களை ஒத்தவையாகும்.

தமிழ் நாட்டிலுள்ள பகுதிகளைப் பல்லவர் ஆட்சி புரிந்த காலத்தில் அவர்களின் செல்வாக்கு மிகுந்த அளவில் ஏற்பட்டது. இக்காலத்திலே திருக்கேதீஸ்வரம், திருக்கோணஸ்வரம் ஆகிய ஈழத்துப் புராதன சிவாலயங்கள் தமிழகத்தில் அறிமுகமாகிவிட்டன.

இவற்றைப் பற்றிய நாயன்மார்களின் பாடல்கள் உண்டு. அநுராதபுரத்திலும் வேறு பல இடங்களிலும் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் அமைக்கப்பட்டன.

பல்லவர் பாணியில் உள்ள வரி வடிவ முறையும் தமிழ் வரி முறை, கிரந்த எழுத்து முறை என்பன இலங்கையில் பரவின. அநுராதபுர மன்னர்கள் பல்லவர்களோடு நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தியிருந்தனர்.

இலங்கையிலே தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களிற் பல்லவரின் நாணயங்கள் பல கிடைத்துள்ளன. இரு சாராருக்கும் இடையில் வணிகத் தொடர்புகள் வலுவடைந்தன.

பல்லவரின் கட்டிட சிற்பக் கலைகள் இலங்கையிலும் குறிப்பாக தமிழர்களிடையிலேயும் அதிக செல்வாக்கைச் செலுத்தியிருந்தன. அநுராதபுரத்தின் வடபுறத்திற் பல்லவர் கால கட்டுமான முறையில் அமைந்த இந்துக் கோயில்கள் பல காணப்படுகின்றன.

தொடரும்..

கலாநிதி சி.பத்மநாதன்

ஓய்வுநிலை பேராசிரியர்
பேராதனை பல்கலைக்கழகம்
நன்றி யாழ் மண்

No comments: