புருஷோத்தமா மாதம் - நிறைவு பகுதி

.


ஹரே கிருஷ்ணா! பத்ம புராணத்தில் இருந்து புருஷோத்தமா மாதத்தின் புகழின் நிறைவு பகுதியினை இந்த வாரக் கட்டுரையில் பார்ப்போம்.

பிரமண பெண்ணின் இந்த வார்த்தையை கேட்ட துருவாச முனி மிக்க கோபம் கொண்டார்,அவரது உடல் கொதித்தது, அவரது கண்கள் சிவந்தன.ஆனால் இந்த பெண்ணின் உதவியற்ற நிலையை மனதில் கொண்டு தன்னை கட்டுபடுத்திக் கொண்டார்.

துருவாச முனி கூறினார்"ஓ மூடப்பெண்ணே!நான் உன்னை சபிக்க மாட்டேன்,ஏனெனில் உனது தந்தை எனது நெருங்கிய நண்பர்.நீயும் உதவியற்ற நிலையில் இருக்கிறாய்.அறிவற்ற பெண்ணான நீ சாஸ்திரங்களின் இறுதி சுருக்கத்தை அறிய மாட்டாய்.உனது இந்த அபராதத்தை நான் கடுமையாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.அதே சமயத்தில் நீ புருஷோத்தம மாதத்திற்கு செய்த அபராதத்தை சுலபமாகவும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீ அடுத்த ஜன்மத்தில் இந்த அபராத்திற்கான தண்டனையை அனுபவிப்பாய்". பிறகு துருவாச முனி அந்த இடத்தை விட்டு மிக அவசரமாக பகவானின் சேவையில் ஈடுப்பட சென்றார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனரிடம் கூறினார் "ஓ பாவமற்றவனே, துருவாச முனி அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு அந்த பிராமண பெண் (திரௌபதி - முன் ஜன்மத்தில்) ஒரு நொடியில் அனைத்து செல்வத்தையும் இழந்தாள். புருஷோத்தம மாதத்தின் அபராதியான அவளது உடல் கோரமானது,அவளது அழகை இழந்தாள்.பிறகு அஷுதோஷ் என்ற பெயரை உடைய, வெகு விரைவில் திருப்தி அடையும் சிவனை வழிப்பட முடிவு செய்தாள்.

இந்த பிராமண பெண், பார்வதியின் கணவணான சிவபெருமானை திருப்திப்படுத்த பெரும் தவத்தை செய்ய தொடங்கினாள்.தனது தவத்தை 9000 வருடம் செய்தாள். கோடை காலத்தில்,நெருப்பு சூழ அனல் வீசும் சூரியனின் முன் தியானம் செய்வாள்.குளிர் காலத்தில் உறைய வைக்கும் குளிர்ந்த நீரில் தியானம் செய்வாள்.அவளது தவத்தை கண்ட தேவர்கள் பயந்தனர். அவளது தபஸ்ஸையும், வழிப்பாட்டு முறைகளையும் கண்டு மகிழ்ந்த சங்கரன்,அந்த பிராமண பெண் முன்பு தோன்றினார்.சிவன் தனது ஆன்மீக உருவில் அந்த பெண் முன்பு தோன்றியதும் அவள் புத்துணர்ச்சி பெற்றாள்.சிவனின் பிரசன்னத்தால் அவளது உடலின் பலகீனம் மறைந்தது,மீண்டும் அவள் அழகானவள் ஆனாள். சிவனை கண்ட அவள்,தனது மனத்தால் அவரை வழிப்பட தொடங்கினாள், பிறகு சிறந்த ஸ்லோகங்களால் அவரை துதித்து அவரை திருப்தி படுத்தினாள்.

அந்த பெண்ணிடம் திருப்தி அடைந்த சிவன் அவளிடம்,"சிறந்த தவத்தை செய்த பெண்ணே உனக்கு எல்லா நற்பேர்களும் கிடைக்கட்டும்.உனக்கு வேண்டும் வரத்தை கேள்.நான் உன்னிடத்தில் திருப்தி அடைந்தேன்.உனக்கு வேண்டும் வரத்தை நான் அளிக்கிறேன் என்றார்.

இந்த வார்த்தையை சிவனிடமிருந்து கேட்ட அந்த பெண்,"ஏழைகளின் நண்பனே!நீங்கள் என்னிடம் திருப்தி அடைந்தீர்களாயின் தயவு செய்து எனக்கு கணவனை கொடுங்கள்.மீண்டும் மீண்டும் "எனக்கு கணவனை கொடுங்கள்" என்று ஐந்து முறை கேட்டு மௌனமானாள். அதற்கு சிவன் பதில் கூறுகையில் "அப்படியே ஆகுக!நீ என்னிடம் ஐந்து முறை கணவன் வேண்டும் என்று கேட்டாய் ஆதலால் உனக்கு ஐந்து கணவர்கள் கிடைப்பார்கள்" என்றார்.

சிவனின் இவ்வார்ததைகளை கேட்ட அவள் அவமானமடைந்தாள்.அவள் கூறினாள் "இறைவா !ஒரு பெண்ணிற்கு ஐந்து கணவன் என்பது வெறுக்க தக்க ஒன்றாகும், எனவே உங்களது வார்த்தையை திரும்ப பெற்று விடுங்கள். சிவன் மிக கடுமையாக கூறினார்."அது என்னால் முடியாது,நீ என்னிடம் கேட்டதை நான் அளித்து விட்டேன்.அடுத்த பிறவியில் உனக்கு ஐந்து கணவர் கிடைப்பார்கள். முன்பாக துருவாச முனியின் அன்பான அறிவுரையை மதிக்காமல் புருஷோத்தம மாதத்தை பழித்தாய்.ஓ பிரமண பெண்ணே! எனது உடலுக்கும் துருவாசரின் உடலுக்கும் வித்தியாசம் இல்லை. பிரம்மா,சிறந்த முனியான நாரதர் உட்பட அனைத்து தேவர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கட்டளைபடி புருஷோத்தம மாதத்தை வழிபடுகிறோம். புருஷோத்தம மாதத்தின் பக்தர்கள்,அனைத்து நற்பேரும் பெற்று, இந்த வாழ்வின் இறுதியில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடமான கோலோக தாமிற்கு செல்வார்கள். இந்த புனித புருஷோத்தம மாதத்தின் அபராதியான உனக்கு அடுத்த ஜன்மத்தில் ஐந்து கணவர்கள் கிடைக்க கடவாய்" என்றார். அந்த பெண் தனது எதிர் காலத்தை நினைத்து மிக வேதனையையும்,பயத்தையும் அடைந்தாள்.இவ்வாறாக சிறிது காலத்திற்கு பிறகு பகவானின் சித்த படி அவளது உடலை நீத்தாள்.

பகவான் கிருஷ்ணர் மேலும் கூறினார், "ஒ அர்ஜுனா, இதற்கு நடுவில் திரௌபத ராஜா நீண்ட தியாகம் செய்து கொண்டிருந்தார். அந்த தியாக சுடரிலிருந்து ஒரு இளம் பிராமணி அவதரித்தாள். அவள் மகாராஜா திரௌபதவின் மகளாக தோன்றினாள். ஒ அர்ஜுனா, மேதாவி ரிஷியின் மகளாகிய அவள், இந்த உலகில் திரௌபதி என்ற பெயரில் மிக பிரசித்தி ஆனாள். அவள் உனது மனைவியே அன்றி வேறு யாரும் இல்லை. அவளது கடந்த ஜன்மாவில் புருஷோத்தம மாதத்தை பற்றி அவதூறாக பேசியதால், அவள் குரு பேரவையில் அனைத்து பாண்டவ புருஷர்கள் முன்னால், துச்சாதனனால் அவமானப்படுத்தப்பட்டாள். அதிர்ஷ்ட வசமாக அவள் என்னை(ஸ்ரீ கிருஷ்ணரை) சரண் அடைந்தாள். அவளை மன்னித்து, துச்சாதனனிடம் இருந்து காப்பற்றி, மிகவும் கடினமான நிலையிலிருந்து மீற்றேன். ஒ, எனதருமை பாண்டவ சகோதரர்களே, தயவு செய்து வரப்போகும் புருஷோத்தம மாதத்தை பூஜிக்கத்தவறாதீர்கள். எவன் ஒருவன் புருஷோத்தம மாதத்தை பற்றி அவதூறாக பேசுகிறானோ, அவனுக்கு என்றும் நல்லது நடக்காது. இந்த புருஷோத்தம மாதமானது உங்களது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி துன்பங்களிலிருந்து விடுவிக்க கூடியது. இச்சமயம் உங்களது பதினான்குஆண்டு காட்டு வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது. அதனால் தயவு செய்து இந்த புருஷோத்தம மாதத்தை வழிபட்டு நற்பயனை அடைவீர்கள்". இவ்வாறாக பாண்டவர்களுக்கு முழு ஆறுதல் தந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவ்விடத்திலிருந்து த்வாரகா விரைந்தார்.

அதன் பிறகு புருஷோத்தம மாதம் தோன்றிய பொழுது, மகாராஜா யுதிஷ்திரர் தமது தமையர்கள் மற்றும் மனைவி திரௌபதி ஆகியோருக்கு பகவான் கிருஷ்ணர் கூறிய வார்த்தைகளை நினைவுகூர்ந்தார். அனைவரும் பகவான் கிருஷ்ணர் கூறிய நெறிமுறைகளை பின்பற்றினர். புருஷோத்தமராகிய ஸ்ரீ கிருஷ்ணரை இந்த மாதத்தில் பல முறைகளில் வழிபட தொடங்கினர். புருஷோத்தம விரதத்தை பின்பற்றிய காரணத்தால் பாண்டவர்கள், தாங்கள் இழந்த இராஜ்ஜியத்தை மீட்டு, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து, பகவான் கிருஷ்ணரின் கருணையால் பகவானின் உலகத்தை சென்றடைந்தனர்.

அறிவுள்ள மனிதன் தன்னை ஒரு தூய ஆத்மாவிடம் கிருஷ்ண கதை கேட்பதில் ஈடுபட வேண்டும். இவ்வாறாக, ஒருவர் சதா கிருஷ்ணரை பற்றி தியானித்தும் அவரது திருவிளையாடலை பற்றி மற்ற பக்தர்களிடம் பகிர்ந்து கொண்டும் இருக்க வேண்டும். அவன் ஓய்வு எடுக்கும் போதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி மனதில் நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லற வாழ்க்கையை பின்பற்றும் ஒருவர் தனது வீட்டு கடமைகளை உண்மையான மற்றும் சமாதன முறையில் செய்ய வேண்டும். அவர் வன்முறை ஏதும் செய்யாமல், சாதுக்கள் மற்றும் ஏழைகளிடம் கருணையோடு இருக்க வேண்டும். மிருகங்களை பாதுகாத்தல், உண்மையான பேச்சு, கருணைத்தன்மை, மற்றும் அஹிம்சை ஆகியவை ஒரு க்ரிஹச்தர் பின்பற்ற வேண்டியவன ஆகும்.

சூத கோஸ்வாமி நைமிசரன்யத்தில் இருக்கும் ரிஷிகளிடம், பகவான் நாராயணர் மற்றும் நாரதர் இடையே நடைபெற்ற உரையாடலை பற்றி கூற ஆரம்பித்தார். அவர் கூறியதாவது "ஒ பிராமணர்களே, மிகவும் உயர்ந்த முனியாகிய நாரத முனி புருஷோத்தம மாதத்தின் மகிமையை பற்றி பகவான் நாராயணரிடம் கேட்டு மகிழ்ந்தார். அவர் நாராயணரிடம் நமஸ்காரம் மீண்டும் மீண்டும் செய்த பிறகு கூறுகிறார் "ஒ, இந்த புருஷோத்தம மாதம் என்பது, மாதங்களில் சிறந்தது, இது ஏனைய விரதம் மற்றும் தவங்களை விட சிறந்தது. எவன் ஒருவன் புருஷோத்தம மாதத்தின் மகிமையை நம்பிக்கையுடன் கேட்கின்றானோ, அவன் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ புருஷோத்தமரின் பக்தி தொண்டை அடைந்து, எல்லா பாவ காரியத்தின் விளைவுகளிலிருந்தும் மீள்கிறான். எவன் ஒருவன் புருஷோத்தம மாதத்தை அனுசரிக்கிறானோ அவன் கோலோகத்தின் அளவுக்கு அடங்கா பலனை பெறுகிறான்.

நாரத முனி பகவான் நாராயணரை பார்த்து கூறுகிறார், "ஒ பகவானே, இப்போது நான், எனது மனம் மற்றும் எனது இதயம் முழு மகிழ்ச்சி அடைந்து விட்டது. எல்லா புகழும் உனக்கே!!"

இவ்வாறாக புருஷோத்தம மாதத்தின் மகிமையை பற்றி எடுத்துறைத்த ஸ்ரீல ஸுத கோஸ்வாமி அங்கே கூடியிருந்த ரிஷிகளிடம் அங்கிருந்து கிளம்ப மற்றும் , கங்கையில் குளித்து, பிற தினப்படி காரியங்களை செய்ய அனுமதி கோரினார். அவர்களும் மகிழ்ச்சியுடன் அனுமதி வழங்க, ஸுத கோஸ்வாமி ரிஷிகளிடம் தாழ்ந்து சிரம் தாழ்த்தி வணங்கி விடை பெற்று கங்கை நோக்கி சென்றார். நைமிசாரன்யத்தின் ரிஷிகள் அவர்களிடையே பேச ஆரம்பித்தனர், "ஒ, இந்த புருஷோத்தம மாதம் மிகவும் உயர்ந்த மற்றும் பழமை வாய்ந்தது. இது ஒரு கற்பக வ்ருக்ஷ்த்தை போல் பக்தரின் ஆசையை கருணையோடு நிறைவேற்றுகிறது. என்னே இந்த புருஷோத்தம மாதத்தின் மகிமை!"

இத்துடன் புருஷோத்தமா மாதத்தின் புகழ் குறித்த பகுதி நிறைவு பெறுகின்றது. புராணங்களைப் படித்து அதில் இருக்கும் ஒவ்வொரு நெறிமுறையையும் பின்பற்றுவது இந்த கலியுகத்தில் அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. உதாரணமாக கங்கையில் நீராட வேண்டுமெனில் நாம் வட இந்திய செல்ல வேண்டும். இது நம்மில் பல பேருக்கு இயலாத காரியம் ஆகும். ஆகவே கலி யுகத்தின் மஹா மந்திரமான ஹரே கிருஷ்ணாமாத்திரம் ஒன்றை மட்டுமே ஜெபித்து நாம் இறந்த பிறகு ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடமான கோலோக வ்ரிந்தாவனத்திற்கு செல்ல முடியும்.

ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!
என்றும் அன்புடன்,
கனஷியாம் கோவிந்த தாஸ்

No comments: