உலகமயமாதல் சூழலில் தமிழ்

.

கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஜூன் 24 அன்று, ‘உலகமயமாதல் சூழலில் தமிழ்’ எனும் தலைப்பில் நடைபெற்ற பொழிவரங்கத்தில் பேராசிரியர் தமுஎகச மாநிலத் தலைவர் அருணன் ஆற்றிய உரை வருமாறு:-உலகமயமாதல் என்கிற சிந்த னையை தமிழன் சட்டென்று எதிர்க்க மாட்டான். அவன் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சங்க காலத்திலேயே உலகளாவிய சிந்தனையை- அப்படி யொரு உலகமயச் சிந்தனையை- தந்தவன். இப்போதும் கூட அப்படியொரு உலகமயமாதல் நடந்தால் ஏற்றுக்கொள்வான். அதாவது, சகல நாடுகளும் சமத்துவமாகக் கூடிப்பேசி, சகல நாடுகளுக்கும் ஏற்ற கொள்கைகள், நடைமுறைகள் என்றால் ஏற்றுக்கொள்வான்.

ஆனால், இப்போது நடப்பது அப்படிப்பட்ட உலகமயமாதல் அல்ல. இங்கே நடப்பது அமெரிக்கா திணிக்கும் உலகமயமாக்கல். இங்கிலாந்தை கடைக்காரர்களின் தேசம் என்று ஓர் அறிஞர் அழைத்தார் என்று இந்தப் பொழிவரங்கத்தின் தலைவர் பேராசிரியர் நாகநாதன் குறிப்பிட்டார். அப்படிப் பார்த்தால் இன்றைய அமெரிக்கா அதைவிட மோசம். இது “வியாபாரிகளின் தேசம்.” அந்த தேசம் தன்னை உலக வியாபாரியாக உயர்த்திக் கொள்ளப்பார்க்கிறது.

இந்த உலக வியாபாரி தனது நலனையே உலக நலனாகச் சித்தரித்துக் காட்டுகிறார். இத்தகைய காலவித்தை வரலாற்றில் புதிது அல்ல. இந்திய வரலாற்றில் பிராமணியவாதிகள் தங்களது நலனையே உலக நலனாக சாஸ்திரங்களில் எழுதி வைத்தார்கள். தங்களது குருவையே “லோக குரு” என்று பறைசாற்றினார்கள். அப்படி அமெரிக்க ஏகாதிபத்தியமானது, தனது நலனை உலக நலன் எனச் சொல்லி உலகமயமாக்கலைப் புகுத்தி வருகிறது.

எது அமெரிக்காவின் நலன்? அதைப் பொறுத்தவரை, அதற்கு வேண்டிய கச்சாப்பொருட்களை பிற நாடுகள் சகாய விலையில் தரவேண்டும். அது உற்பத்தி செய்து விற்கும் பொருட்களைக் கூடுதல் விலை கொடுத்து பிற நாடுகள் வாங்க வேண்டும். இதில் கொள்ளை லாபம் அடிக்க வேண்டும். இதுதான் அதனுடைய நலன்.

மனிதர்களுக்காகச் சரக்குகள் தயாரிக்கப்படுவதை அறிவோம். சரக்குகளுக்காக மனிதர்கள் தயாரிக்கப்படுவதும் நடக்கும் என்றார் மாமேதை மார்க்ஸ். அதைத்தான் இன்றைய ஊடக விளம்பரங்களிலேயே கண்டு வருகிறோம். அமெரிக்கா தயாரிக்கும் பொருட்களை வாங்காவிட்டால் வாழ்வே அர்த்தமற்றது என்பது போலக் கருத்துருவாக்கம் செய்கிறார்கள். இதில் ஒவ்வொரு நாட்டுச் சொந்தப் பண்பாடும் கிழிபடுகிறது.

தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் மோரும், இளநீரும் கொடுத்து உபசரிப் பார்கள். இன்றோ கோகோவோ, பெப்சியோ கொடுக்காவிட்டால் விருந்தாளி கோபித்துக் கொள்வாரோ என்று யோசிக்கிறார்கள். கிராமப்புறமே இப்படியென்றால் நகர்ப்புறம் பற்றிச் சொல்ல வேண்டிய தேயில்லை.

பன்முகப்பட்ட உலகப் பண்பாடுகளைச் சிதைத்து, ஒற்றைப் பண்பாட் டைக் கொண்டு வருகிற முயற்சியில் ஒரு பகுதியாக பல மொழிகளையும் ஒழித்து, ஒற்றை மொழியைக் கொண்டுவரப் பார்க் கிறார்கள். அவர்களது ஆங்கிலத்தைப் புகுத்துவதற்கு இந்தியா போன்ற நாடுகளில் நல்ல வாய்ப்பு இருக்கிறது. இது ஏற்கெனவே ஆங்கிலேயர்கள் ஆண்ட பூமி. அந்த வரலாற்று வசதி இருக்கிறது. இந்திய ஆட்சியாளர்களின் தற்போதைய மொழிக் கொள்கையும் இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

நமது அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் இந்தி மட்டுமே ஆட்சி மொழி. இதர 21 மொழிகளுக்கு மாற்றாக பதிலியாக-ஆங்கிலத்தை முன்வைக்கிறார்கள். மத்திய அரசானது இந்தி-இங்கிலீஷ் என்று இரு மொழிக்கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.

ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லவில்லை. அது இன்றைய சூழலில் இணைப்பு மொழியாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ் உள்ளிட்ட நமது தேசிய மொழிகளுக்கெல்லாம் அதுதான் மாற்று என்றால், அவற்றின் இடத்தில் எல்லாம் ஆங்கிலம் தான் காலங்காலமாக இருக்கும் என்றால், இந்த தேசிய மொழிகள் என்னாகும்? ஏற்கெனவே என்ன ஆகிக் கொண்டிருக்கிறது?

இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் திரு.உதயநாராயணசிங் கூறியிருக்கிறார் “இந்தியக் கல்வி முறையில் பயன்படுத்தப்படும் மொழிகள் தேய்ந்து வருவதற்கு காரணம், உள்கட்டமைப்பு மற்றும் நிதிப் பற்றாக்குறை மட்டுமல்ல, சந்தை எதை விரும்புகிறது என்பதுமாகும்” சரக்குச் சந்தையால் உருவாக்கப்படுகிற மொழிச் சந்தை, அரசு கொள்கைகளால் உருவாக்கப்படுகிற மொழிச்சந்தை ஆங்கிலத்தையே வேண்டுகிறது. ஆகவே தமிழர்கள் உள்ளிட்ட பலரும் அதை நாடி ஓடுகிறார்கள்.

இதே நிறுவனத்தின் மொழியியல் நிபுணர் முனைவர் பி.மல்லிகார்ஜூனன் கூறுகிறார், “தாய்மொழியை மக்கள் கைவிடுவதற்கு முக்கியக் காரணம், அது தங்களுக்கு பொருளாதார ரீதியாகப் பயனளிக்கவில்லை என்பதாகும். யாரும் சமூக மற்றும் கலாச்சாரப் பயன்பாடுகள் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்கள் பொருளாதாரப் பயன்பாட்டில்தான் அக்கறை கொள்கிறார்கள். இது விஷயத்தில் ஆங்கிலம் இதர இந்திய மொழிகளைக் காட்டிலும் முன்னணியில் உள்ளது. 12ம் வகுப்போடு இந்திய மொழிகள் நின்றுவிடுகின்றன. அதற்குப்பிறகான நுழைவுத் தேர்வுகளைப் பெரிதும் ஆங்கிலத்தில் எழுத வேண்டியிருக்கிறது. சுதந் திரத்திற்குப் பிந்தைய மத்திய அரசின் கொள்கையானது, இந்தியை வளர்ப்பதைக் கண்ட தென்னிந்தியர்கள், இந்தி தான் கொலைகார மொழியாக இருக்கப்போகிறது என்று நினைத்தார்கள். இன்றோ 60 ஆண்டு களுக்குப்பிறகோ அனைத்து இந்திய மொழிகளையும் கொல்லுகிற மொழியாக ஆங்கிலம் ஆகிப்போனது”

தமிழின் தொன்மை, வளம் பற்றி நாம் பேசுகிறோம். அதெல்லாம் உண்மைதான், சரிதான். ஆனால் நடைமுறை வாழ்வு என்பது சகலத்தையும் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்து விடுகிறது. பொருளாதாரப் பயன்பாடு இல்லாத தாய்மொழியின் கதி என்னாகும் எனும் கேள்வி இருக்கிறது. இன்றைக்கு இந்திய மொழிகளின் பொருளாதாரப் பயன்பாட்டை ஒழிக்கும் மொழியாக ஆங்கிலம் வந்து கொண்டிருக்கிறது. இதைத்தான் அந்த இரு மொழி அறிஞர்களும் கூறுகிறார்கள்.

இது உண்மை என்பதையே “டைம்ஸ் ஆப் இந்தியா” ஏட்டில் வந்துள்ள ஒரு புள்ளி விபரம் உணர்த்துகிறது. அதன்படி 2004ல் இந்தியர்களில் இந்தியைப் பயிற்று மொழியாகக் கொண்டிருந்தவர்கள் 51 சதவீதம் பேர். அது 2009ல் 48சதவீதம் எனக் குறைந்தது. 2004ல் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டிருந்தவர்கள் 6 சதவீதம் பேர். அது 2009ல் 4 சதவீதம் என வீழ்ந்தது. இப்படி மராத்தி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம் என்று பல மொழிகள் இது விஷயத்தில் வீழ்ச்சியடைந்தன. ஆனால், ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்டோர் தொகை மட்டும் 6 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்ந்தது.

இதையெல்லாம் மனதில் கொண்டு தான் இந்தியாவின் தேயும் மொழிகள் பட்டியலில் ஒரியா, கன்னடம், தமிழ் போன்றவற்றை சேர்த்திருக்கிறது யுனெஸ்கோ நிறுவனம். “மெல்லத் தமிழினிச் சாகும்” என்றொரு பேதை உரைத்ததாகப் பாரதி பாடினான். அந்தப் பேதை சொன்னது உண்மையாகிப் போய் விடுமோ என்று கவலையாக இருக்கிறது.

தேயும் மொழியாகத் தமிழ் ஆகிவிடாமல், அது வளரும் மொழியாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த மாநாடு யோசிக்க வேண்டும். உலகமயமாதலை எதிர்த்து நின்றுத் தமிழைக்காப்பது எப்படி, வளர்ப்பது எப்படி என்று சிந்திக்க வேண்டும்.

உலகமயமாதலை எதிர்கொள்ள தொழில்நுட்பக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பொழிவரங்கத் தலைவர் சரியாகவே குறிப்பிட்டார். ஆனால் இதுவரை பொறியியல் படிப்பில் கூட தமிழ்வழி இல்லாமலிருந்தது. இந்த ஆண்டு தான் வரப்போகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு நல்ல முயற்சியைத் தமிழக அரசு செய்தது. அதற்கு மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள “தொழில் நுட்பக்கல்விக்கான அகில இந்தியக்குழு” முட்டுக் கட்டை போட்டது. ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதன் காரணமாக ஆர்வத்துடன் தமிழ்வழியில் சேர்ந்த மாணவர்களையும் ஆங்கில வழியில் தூக்கிப்போட்டது தமிழக அரசு. இப் போதும் கூட அந்தக்குழு நமது முயற்சிக்குத் தடைபோடக்கூடும். தமிழக அரசு உறுதியோடு இருந்து தமிழ்வழிப்படிப்பைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அறிவியல் தமிழை வளர்க்க தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்க வேண்டியது அவசியம். ஆங்கிலத்தில் பத்து லட்சம் சொற்கள் இருக்க, தமிழில் ஐந்த லட்சம் சொற்களே உள்ளதாகப் பொழிவரங்கத் தலைவர் கூறினார். கலைச்சொல்லாக்கம் வளரத் தமிழாசிரியர்கள் மட்டுமல்லாது அந்தந்தத்துறை அறிவியலாளர்களும் முயலவேண்டும். இருதரப்பும் இணைந்தால்தான் அவை உருவாகும். ஆனால், சோகம் என்ன தெரியுமா? பொறியியல் படிப்பிலும் மருத்துவப்படிப்பிலும் தமிழ் ஒரு பாடமாக முதலாம் ஆண்டில்கூட இல்லை. ஆங்கிலம் இருக்கிறது. தமிழ் இல்லை. தமிழர் வீட்டுப் பிள்ளைகள் தமிழ் படிக்காமல்தான் இந்த முக்கியப் படிப்புகளை முடிக்கிறார்கள். இவர்கள் எப்படித் தமிழ்க்கலைச் சொற்களை உருவாக்குவார்கள்? அப்படி உருவாக்கி னாலும் அது எப்படிச் சரியாக இருக்கும்?

ஆகவே, தமிழர் வீட்டுப் பிள்ளைகளுக்காகிலும் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் தமிழை ஒரு பாடமாக அவசியம் சேர்க்க வேண்டும். இல்லையெனில் இங்கே தொழில்நுட்பத் தமிழ் வளராது. அது வளரவில்லை எனச்சொல்லி ஆங்கிலத்தை மட்டுமே பயிற்றுமொழியாகக் காலங்காலமாகத் தொடரும் போக்கு வந்துவிடும்.

உலகமயமாக்கல் சூழலில் தமிழைக் காக்க இப்படி மேலிருந்து எடுக்க வேண்டிய பல நடவடிக்கைகள் உண்டு. அவற்றை மத்திய-மாநில அரசுகள் எடுக்க வேண்டும். அதேபோல கீழிருந்து செய்ய வேண்டிய பணிகளும் உள்ளன. படித்த தமிழர்கள் மத்தியிலே தமிழ் உணர்வை ஊட்ட வேண்டியிருக்கிறது. அதிலே இந்த மாநாடு ஒரு பங்களிப்பைச் செய்திருக்கிறது என்பது உண்மை. இது தொடரவேண்டும்.

இன்று நம்மால் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேச முடியவில்லை. தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழாவில்கூட ஓர் அன்பர் “தமிழ் புக்ஸ்சை இப்போ ரிலீஸ் பண்ணுகிறோம்” என்றுதான் பேசுகிறார். இந்தப் போக்கை எப்படி மாற்றப்போகிறோம்? தமிழர்கள் மத்தியில் தமிழிலேயே பேசுவது என்பதை ஒரு வைராக்கியமாக மாற்ற வேண்டும். இதன்பொருள், பழைய தனித்தமிழ் இயக்கத்தை நோக்கிச் செல்லுவது அல்ல. அது இனிப் பயன் படாது. பிறமொழிச் சொற்களை தமிழ்மயமாக்க வேண்டியிருக்கும். திசைச் சொற்களை ஏற்கலாம் என்று தொல் காப்பியரே வழிகாட்டியிருக்கிறார். இங்கு நான் சொல்வது இயல்பான பழகுதமிழ். தேவையே இல்லாமல் ஆங்கிலச் சொற்களை கலக்காத தமிழ். புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்களைக்கூடப் புறக் கணிக்கிறோமே, அப்படி இல்லாத தமிழ். அப்படித் தமிழ் பேசுகிற ஓர் உணர்வை நாம் ஊட்ட வேண்டும்.

அப்படி மேலிருந்தும், கீழிருந்தும் ஒருங்கே ஒரு வலுவான இருமுனைப் போராட்டத்தை நடத்தினால்தான் உலகமயமாக்கல் சூழலில் தமிழைக் காக்க முடியும், வளர்க்க முடியும்.

No comments: