"அந்தோணி" ஈழத்து திரைப்பட விமர்சனம்- செ .பாஸ்கரன்

 .




 அந்தோணி ஒரு திரைப்படம் அல்ல மீனவ சமூகத்தோடு நாம் வாழ்ந்த நினைவின் மீள் பார்வை. இந்த திரைப்படம் March மாதம் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை Sydney யில் திரையிடப்பட்டிருந்தது. ஆவலோடு அந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தேன். திரைப்படத்தை பார்க்கின்ற பொழுது, நான் யாழ்ப்பாணத்து மண்ணில் அதுவும் மீனவ சமூகம் வாழுகின்ற கடற்கரை மண்ணில், நாம் நடந்து திரிந்த, நாம் உறவாடிய, நாம் கண்டு களித்த, நாம் பழகிய, நாம் பார்த்த அத்தனை விடயங்களையும் மண்வாசனையாக அள்ளிக்கொண்டு என் முன்னே விரிந்து சென்றது.


நீலக் கடல் , அதிலே பயணித்துக் கொண்டிருக்கும் பல்வகையான தோணிகள், கடலோரம் வீசுகின்ற காற்று, அந்தக் காற்றிலே அலைகின்ற மரங்களினுடைய இலைகள், வெண்மணல் மேட்டில் தெரிகின்ற அந்தோணியார் ஆலயம் இப்படி வெள்ளை மண்ணையும் கடலையும் மிக அழகாக தத்துரூபமாக செதுக்கி இருக்கின்றார்கள் திரைப்பட குழுவினர். திரைப்படம் ஒரு பெரிய விடயத்தை சொல்லி சென்றதா என்றால் இல்லை என்பது தான் என்னுடைய பார்வை, இது தவறாக கூட இருக்கலாம் ஆனால் ஒரு மீனவக் குடும்பத்தினுடைய இயலாமை, ஒரு மீனவ குடும்பத்தினுடைய துயரம், ஒரு மீனவர் குடும்பத்தினுடைய வலி, ஒரு மீனவக் குடும்பம் வாழ்ந்த வாழ்க்கை, அதிலும் நேர்மையாக, மனைவிக்காக, மனைவியின் காதலுக்காக, தன் குடும்பத்திற்காக என்று வாழுகின்ற ஒரு மனிதனின் துயரத்தின் வலியை சுமந்து வந்ததுதான் அந்தோணி திரைப்படம்


அந்தோணி திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே என் மனதில் நடமாடியவர் டைரக்டர் சுகிர்தன். யாழ்ப் பாணத்தில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது அதனுடைய உதவி இயக்குனராக தலையிலே ஒரு வெள்ளை துண்டும் கட்டிக் கொண்டு ஓடித் திரிந்த அந்த உருவம்,அமைதியான பார்வை, புன்சிரிப்பு ஏதாவது பேசினால் ஓர் இரு வரிகளில் விடை சொல்லும் பழக்கம், அந்த சுகிர்தன், இவ்வளவு திறமைகளை உள் கொண்டவரா? இந்த திரைப்படத்தை இவ்வளவு அற்புதமாக கொண்டு வர இவரால் எப்படி முடிந்தது, இவ்வளவு திறமைகளும் அவரிடம் இருந்த போதும் அவர் அமைதியோடு இருந்ததை நினைத்து பார்க்கின்றேன், காட்சிக்கு காட்சி பரந்து கிடக்கும் கடலும் பறந்து செல்லும் தோணிகளும், இரவு நிலவும், அந்தி மாலையும், வெண் மணல் பளிங்குகளும், இப்படியே காட்சிகளாய் சுற்றிக்கொண்டு அடுக்கடுக்காக என் மனங்களை எல்லாம் அள்ளிச் செல்கின்ற யாழ்ப்பாணத் திரைப்படம் என்று நினைத்துப் பார்க்க மிகவும் மனம் மகிழ்ச்சியடைகின்றது. நெறியாளர்களான சுகிர்தன், ஜெனோசன் இருவருக்கும் வாழ்த்துக்கள் .



இவர்களுடைய பார்வை எல்லாவற்றையுமே தன் கண்களால் மிக அழகாக கொண்டு வந்திருக்கின்றார் ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம் அவர்கள். முன்பும் இவரது திரைப்படங்கள் வந்திருந்தது ஆனால் இந்த திரைப்படத்தில் எவ்வளவு அற்புதங்களை செய்திருக்கின்றார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். யாழ்ப்பாணத்து கலைஞர்கள் என்றாலே அமைதியும் அடக்கமும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. இவரை ஒரு முறை பார்த்த போதும் மிக அமைதியாக இருந்த ஒருவரை தான் பார்க்க முடிந்தது, ஆனால் திரைப்படங்கள் வருகின்றபோது அவருடைய அந்த கேமரா எப்படித்தான் இத்தனை விடயங்களையும் உள்வாங்கிக் கொள்கின்றது என்று வியக்க வைக்கிறது. என் மனதிலே இந்த கடலையும் அந்த இரவு மங்குகின்ற இரவு பொழுதையும் யாராவது படம் பிடிக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் சில நெறியாளர்களுடன் பேசி இருக்கின்றேன். இப்படி அந்த காட்சியை வைக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றேன், ஆனால் இதுவரை வந்த எந்த திரைப்படத்திலுமே அந்தக் காட்சிகளை நான் விரும்பியது போல் பார்க்கவில்லை, ஆனால் இந்த திரைப்படத்திலேயே ரிஷி செல்வம் அவர்கள் எம்முடைய பிரதேசத்தில் இருக்கின்ற கடலிலும் அந்த வானத்திலும் இப்படியான அழகான காட்சிகள் எல்லாம் இருக்கும் என்பதை எவ்வளவு தத்துவமாக கொண்டு வந்திருக்கின்றார். ரிஷி செல்வம் நிச்சயமாக உங்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் இன்னும் பல திரைப்படங்களுக்கு நீங்கள் உங்கள் கேமராவில் பேச வேண்டும் என்பது என் ஆசை.


அடுத்து திரைப்பட நடிகர்களை பற்றி பார்க்க வேண்டும். இவர்கள் இலங்கை நடிகர்களா என்ற கேள்வி எழுகின்றது எனக்கு மட்டுமல்ல அந்த திரைப்படத்தை பார்த்த எல்லோருக்குமே நிச்சயமாக இந்த கேள்வி எழுந்திருக்கும். அந்தோணியாக நடித்த வின்சென்ட் நகுல், முன்பும் சில திரைப்படங்களில் நடித்து பார்த்திருக்கின்றேன், இந்த திரைப்படத்தில் அவர் முத்திரை பதித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் அவர் இரண்டு பாத்திரமாக வருகின்றார் ஒன்று KP (கல்யாணத்துக்கு பின்) அடுத்தது KM (கல்யாணத்துக்கு முன்) இந்த இரண்டு வின்சென்ட் உடைய நடிப்பும் மிக வேறுபட்டதாக இருக்கின்றது, தன்னுடைய நடிப்புத் திறமையை அங்கே கோடிட்டு காட்டி இருந்தார். இந்த இடத்திலே இளமையான வின்சனை சற்று சுறுசுறுப்பாக காட்டி இருக்கலாம், இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக காட்டி இருக்கலாம் என்ற ஒரு எண்ணம் லேசாக வந்து சென்றது ஆனால் அவருடைய நடிப்பு ஒரு கிறிஸ்தவராக ஒரு பாதிரியாருக்கு முன்பு எப்படி பேச வேண்டும், ஒரு சம்மட்டிக்கு முன்பு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அளவோடு அளந்து கொடுத்திருக்கின்றார் என்று தான் கூற வேண்டும். அந்தோணியினுடைய கண்களை பார்க்கின்ற போது உண்மையிலேயே அந்தோணியார் உடைய கண்களை பார்ப்பது போன்ற ஒரு கூர்மையும், ஒரு ஒளியும், அந்த கண்களிலே அவர் எந்த வேளையிலும் வைத்துக் கொண்டு இருந்தார் பாராட்டுக்கள்.


அவருடைய மனைவி நளினியாக நடித்த டி ஜே பானு, பானுவைப் பற்றி நான் பேச வேண்டிய அவசியமே இல்லை ஏனென்றால் பல திரைப்படங்களில் நடித்து அவரை தமிழர்கள் பார்த்திருக்கின்றார்கள். காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் அவருடைய நடிப்பை பேசக் கூடியதாக ஒரு நடிப்பாக இருந்தது, அதேபோல் மாடர்ன் லவ் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு இப்படி பல திரைப்படங்கள் ஹிந்தி மற்றும் சில மொழிகளிலே வந்த படங்களையும் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. இங்கு அவர் நடித்த போது, இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்ற ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. இவ்வளவு மென்மையானவராக இருக்கின்றாரே ஒரு சில வார்த்தைகளை இன்னும் அவருக்கு கொடுத்திருக்கலாமே என்ற ஆதங்கம் இருந்தது ,ஆனால் நெறியாளர்கள் அளந்து கொடுத்த வசனங்களால் அவர் அவருடைய கண்களினாலும் அவருடைய உதடுகளினாலும் ஆயிரம் விடயங்களை பேசிச் சென்றார். அற்புதமான அந்த நடிகைக்கு சரியான பாத்திரத்தை வழங்கியிருந்தார்கள் இந்த நொறியாளர்கள் என்று தான் கூற வேண்டும். ஒளிப்பதிவாளர் பற்றி பேசி இருந்தேன் இவர் ஒவ்வொரு முறையும் டிஜே பானுவை காட்டுகின்ற போது அதிகமாக குளோசப் பிலே கொண்டு வருவார் அது அவருடைய முக பாவங்களை அள்ளிக் கொடுக்கின்றார் என்பதை அறிந்த அந்த ஒளிப்பதிவாளர் செய்தது தான் என்று நான் நினைக்கின்றேன்.அசோக்காக வரும் சுதர்சன் ரவீந்திரனுடைய நடிப்பு எங்களுடைய இளமை காலங்களை தட்டிச் சென்றது. சட்டை கொலரை தூக்கிவிட்டு நடந்து செல்வதும், சரிந்து முகத்தை வைத்துக்கொண்டு ஒரு பார்வை பார்ப்பதும், அவளை பார்க்கின்ற போதெல்லாம் அவரை அறியாமலே இதழ்கள் நடனமாடுவதுமாக, இளமைக் காலங்களில் எங்களையும் எங்கள் நண்பர்களையும் ஒன்றாக பார்த்தது போல் இருந்தது, அருமையான நடிப்பு, முரடாக ஒரு சில கணங்களும், நீதி கேட்பவராக ஒரு சில இடங்களிலும் காதலுக்காக காதலனாக ஒரு சில இடங்களிலும் இப்படி பலவிதமாக மிக அருமையாக நடித்துச் சென்றார். அருள்தாஸ் பாஸ்கரனாக வருகின்றார் அவருடைய நடிப்பை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை இந்திய திரைப்படங்களிலேயே எல்லாவற்றிலுமே பெரும்பாலும் வந்து போகின்றார் அவர் வருகின்ற போது அவருடைய நடிப்பை அள்ளி தெளித்துவிட்டு செல்வார், அது இந்த திரைப்படத்திற்கும் மிக அருமையாக தன்னுடைய நடிப்பை செய்து இருக்கின்றார். அதேபோல் பாதர் ஆக வருகின்ற நிழல்கள் ரவி அமைதியான ஒரு பாதராக வாழ்ந்து விட்டு சென்றார். சம்மாட்டியாக வருகின்றவர் ரமணதாஸ் எனக்கு சந்திக்கின்ற வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை, அவர் சம்மாட்டியாக நடித்திருப்பது உண்மையிலேயே அந்த கடல் பிரதேசங்களில் இருந்த சம்மாட்டிமார்களை கொண்டு வந்தது. கணக்கு பார்ப்பதும் காசு வாங்குவதும், அவர் ஒரு தயாரிப்பாளராக இருக்கின்ற காரணமோ தெரியவில்லை கணக்கு வழக்கோடு அவரை கொண்டு வந்திருக்கின்றார்கள்.

இத்தனை கருத்துகளையும் வைத்து பேசிக்கொண்டு செல்கின்ற போது இசையைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது அல்லவா இசையைப் பற்றி நாம் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கின்றது, இசையின் இமயமலை, ராகங்களின் தலைவன் இளையராஜா எத்தனை விதமான இசைகளை கொடுத்தவர், எத்தனை விதமான பாடல்களை கொடுத்தவன் இங்கே அந்தோணியை ஒரு படி மேலே தூக்கி விட்டு இருக்கிறான் என்றால் அது மிகையாகாது. அந்த பாடல்கள் பல வருடங்களுக்கு முன்பு கேட்ட ஒரு பாடலின் அடியை ஒட்டி வந்த அந்த கடல் பாடல் மனதை விட்டு அகலாமலே இருக்கின்றது. அத்தனை பாடல்களும் அத்தனை இசையும் மிக அற்புதமாக அந்தோணிக்கு சமர்ப்பணமாக கிடைத்திருக்கின்றது.


எல்லாவற்றுக்குமே பேசிக் கொண்டு செல்லுகின்ற போது வேறு என்னத்தை பேச வேண்டும் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் ஏதோ ஒரு இன்டர்வியூ கொடுக்கின்ற போது அதாவது நமது அவுஸ்ரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டு தாபணத்தில் ஏஜே ஜெயச்சந்திரா அவர்களுடைய இந்த இன்டர்வியூவில் பிரச்சினைகள் வருகின்ற போதெல்லாம் அந்தோணியார் பார்த்துக் கொள்வார் என்று அவர் கூறுவது போல அவருடைய பிரச்சினைகளை எல்லாம் அந்தோணியார் தீர்த்திருக்கின்றார். இந்த சினிமா என்பது ஒரு பாதாள கிணறு போன்றது தோண்ட தோண்ட பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும், ஒரு அடி எடுத்து வைத்தால் இரண்டு பாறைகள் முன்பு கடக்க வேண்டி வரும் இவற்றையெல்லாம் கடந்து இந்த திரைப்படத்தை உலக தமிழர்களுக்கு ஒரு முத்திரையாக தந்திருக்கின்ற ரமணதாஸ் அவர்களுடைய நடிப்போடு இந்த முத்திரை பதித்த திரைப்படத்திற்காகவும் அவரை மனதார வாழ்த்துகின்றேன்.


எத்தனையோ திரைப்படங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருந்தாலும் கூட ஒரு சில திரைப்படங்கள் மாத்திரம் மனதிலேயே நின்று செல்லுகின்ற திரைப்படங்களாக இருக்கும் அந்த வகையிலே இந்த திரைப்படமும் முத்திரை பதித்த ஒரு திரைப்படம். முத்திரை பதித்த ஒரு திரைப்படம் என்று நான் முதலில் குறிப்பிட்டது காரணம் இது ஒரு தேசியத்தை பற்றியோ, அல்லது நமது போராட்டத்தின் வலியை பற்றியோ பேசவில்லை, ஒரு மனிதனுடைய, ஒரு கடல் வாழ் சமுகத்தின் ஒரு மனிதனுடைய தனி வலி களை பற்றி பேசிய ஒரு திரைப்படம், ஆகவே இந்த திரைப்படம் ஓடுவதாக இருந்தால் அந்தக் கதைக்காகவும் அந்த நெறியாள்கைக்காகவும், அந்த கேமராவுக்காகவும், அந்த திரைப்படம் நல்ல திரைப்படம் என்ற ஒன்றுக்காகவும் தான் ஓட கூடியதாக இருக்கும், ஆகவே இது ஓடிக்கொண்டிருக்கின்றது இதை பார்த்து எல்லோருமே அற்புதமான திரைப்படம் என்று பதிவு பண்ணுகிறார்கள், அந்த வகையிலே இந்த வெற்றி ரமணதாசுக்கு நிச்சயமாக ஒரு மாபெரும் வெற்றி என்றுதான் கூற வேண்டும். முன்பும் கடல் வாழ் சமூகத்தின் கதையை வாடை காற்று என்ற பேரிலே நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்திலேயே எடுத்திருந்தார்கள், அந்த திரைப்படம் பற்றி இன்றும் கூட பேசப்பட்டு கொண்டிருக்கின்றது. அதேபோல் இந்த அந்தோணி திரைப்படம் நிச்சயமாக எத்தனை காலங்கள் சென்ற பின்பும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.


படம் பற்றி பேசுகின்ற போது எப்போதுமே இருக்கின்ற குறைகளையும் நான் பேசுவது வழக்கம். ஒரு படத்துக்கு நாங்கள் எழுந்த மானமாக பிளஸ் பாயிண்ட்டை கொடுத்து விட்டு செல்ல முடியாது. விமர்சனம் வந்திருந்தால் அது சில குறைகளை பற்றியும் எடுத்து கூறத்தான் வேண்டும். அது குறை கூறுவதற்காக அல்ல சில விடயங்களை இன்னும் ஒரு திரைப்படத்திலே தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக. நான் சொல்வது முற்று முழுதாக சரி என்று நான் எடுக்கவும் இல்லை அல்லது மற்றவர்கள் எடுக்கவும் கூடாது. சரியாக இருந்தால் எடுத்துக் கொள்வது சிறந்தது என்று தான் நம்புகின்றேன். சோகம் நீண்ட நேரம் எம்மை ஆட்கொண்டு விட்டது, அந்த சோகம் சொல்லப்பட வேண்டிய சோகம், வலிகளை சொல்லுவதாக இருந்தால் அது சோகமாக தான் இருக்கும், வலி எப்போதுமே வலிக்கத்தான் செய்யும், ஆனால் அந்த வலியை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தால் ஒரு திரைப்படம் பார்க்க செல்பவனுக்கு அந்த வலி வந்து விடுகின்றது ஆகவே இங்கு அந்த திரைப்படத்திலேயே அந்த வலி மெல்ல மெல்ல எமது மனசோடு ஒட்டிக் கொள்ளத் தொடங்கியது இறுதியாக ஒட்டுமொத்தமாக மனிதனுடைய மனதை வலிக்க பண்ணிவிட்டது. அந்தோணியும் அவரது குடும்பமும் தங்களைக் கயிற்றால் பிணைத்து கடலிலே நங்கூரத்தை எறிந்து விட்டு அந்த கயிறு ஓடிக் கொண்டே இருக்கின்ற அந்த சில நொடிப் பொழுதுகள் என் நெஞ்சையும் இழுத்துக் கொண்டே செல்கின்றது. அவ்வளவு துயரத்தையும் ஒட்டுமொத்தமாக சம்மட்டியால் ஓங்கி அடித்தது போல் அடித்துவிட்டது திரைப்படம். தியேட்டரில் இருந்த மக்கள் அனைவரும் அழுது கொண்டிருக்கின்ற காட்சியும் அமைதியாக தலையை குனிந்து கொண்டிருக்கின்ற காட்சியும் படம் முடிந்தும் ஒரு சில நிமிடங்கள் தொடர்ந்தது. எழுந்து போகவில்லை. யாரோ நாலஞ்சு பேர் கைதட்டிய சத்தம் மட்டும் கேட்டது, மற்றவர்களுக்கு கையை எடுத்து தட்ட வேண்டும் என்ற எண்ணம் கூட வராமல் சோகத்தில் ஆழ்ந்திருந்தார்கள். இது என்னுடைய பார்வையிலே தவித்து இருக்க பட வேண்டிய ஒன்று. அளவாக சோகத்தை கொடுத்திருந்தால் சற்று நிம்மதியாக இருந்திருக்கும். அது மட்டுமல்ல இப்போது பொசிடிவ் விடயங்களை திரைப்படங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றது, இந்த வலிகளையும் நம்மால் வெல்ல முடியும் என்ற ஒரு பொசிட்டிவான விடயம் வர வேண்டும் என்று என் மனம் கேட்டுக் கொண்டே இருந்தது, ஆனால் கிடைத்தது நெகட்டிவ் விடையம் தான். ஏன் ஒரு வலி மிகுந்த குடும்பம் வாழ முடியாதா, அந்த வலியை துடைத்தெறிய முடியாதா, அந்த வலிக்கு ஒரு மாற்று இருக்க கூடாதா, அதை கொடுத்திருந்தால் இன்னும் அந்த வலியை சுமக்கின்ற மக்களுக்கு அது ஒரு மருந்தாக இருந்திருக்குமே என்று எண்ணத் தோன்றியது இதை நிச்சயமாக கொடுத்திருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன்.


அந்த அந்தோணியின் மனைவிக்கு உள்ள வருத்தத்திற்காக காசு வேண்டும் என்று நினைக்கின்ற போது அசோக்காக நடிக்கின்ற சுதர்சனன் சங்கத்திலேயே புதிய திட்டத்தை முன்வைக்கின்றார் பணம் சேர்க்கின்றார் அது ஒரு பொசிட்டிவான ஒரு விடயம் அல்லவா, அந்த விடயத்தை வைத்துக்கொண்டு ஒரு மாற்றத்தை செய்திருந்தால் அல்லது ஒரு காட்சியை வைத்திருந்தால் இந்த திரைப்படத்தின் நிலை இன்னும் மேலே சென்று இருக்கும் என்பது என்னுடைய பணிவான அபிப்பிராயம் மட்டும்தான். இந்த திரைப்படம் நிச்சயமாக யாழ்ப்பாண தமிழர்களுடைய, யாழ்ப்பாண கலைஞர்களுடைய கலைத்துறையிலே ஒரு முத்திரை பதித்த ஒரு விடயம்.


இறுதியாக நான் ஒரு விடயத்தை கூறுவதற்கு முன்பு இன்னும் ஒரு விடயத்தை இப்போது கூற வேண்டும் இத்தனை பேரை பற்றியும் பேசிய இவர் ஏன் அந்த குழந்தையைப் பற்றி பேசவில்லை அந்தோணியினுடைய மகளாக வருகின்ற அந்தச் சிறுமி Ashana Julius Kanistan எவ்வளவு அற்புதமான நடிப்பு, இந்த நடிப்பை இவளுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் அல்லது இயல்பாகவே இவளுக்கு அந்த நடிப்பு இருந்ததா, இந்த வயதிலேயே அத்தனை விடயங்களையும் உள்வாங்கி இவ்வளவு அழகாக அந்த திரைப்படத்திலே அதைக் கொண்டு வந்திருக்கின்றாள் இறுதிக் காட்சியிலே அந்த தண்டைக் கொண்டு வந்து தந்தையிடம் கொடுத்து அப்பா இதை பிடியுங்கள் உங்கள் தாயிடம் செல்லுங்கள் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என்று அவள் கூறுகின்ற அந்த வார்த்தைகளும், அவளுடைய முகபாவமும் உண்மையிலேயே ஒரு கடல் வாழ் சமூகத்தினுடைய ஒரு குழந்தையினுடைய அப்பாவி தனத்தையும் அன்பையும் அழகாக கொண்டு வந்தது. எதிர்பார்க்காத விதமாக அவளை நோய் தீண்டுகின்றது நோய் தீண்டி விட்டது என்று பார்க்கின்ற போது உண்மையிலேயே தங்கள் குழந்தைகளை இழந்த ஒரு சோகம் பலரிடம் பற்றிக் கொண்டது அவளுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.


இறுதியாக சிட்னியிலே திரையரங்கிலே இந்த திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. நான் வெளிநாடு சென்றிருந்து சனிக்கிழமை திரும்புகின்றேன், ஞாயிற்றுக்கிழமை இந்த திரைப்படம் உடனடியாக தொடர்பு கொண்டு அந்த திரைப்படத்துக்கான நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டு அந்த திரைப்படத்திற்கு சென்றேன் ஆனால் அந்த திரையரங்கிலே இருந்த மக்களை பார்த்தபோது மனம் கொதித்தது. குப்பை திரைப்படங்கள் இங்கே தியேட்டர்களுக்கு வருகின்ற போது முண்டியடித்துக் கொண்டு செல்லுகின்ற நம்மர்கள் இந்த திரைப்படங்களுக்கு வராமல் ஏன் கண்மூடி கொண்டிருக்கின்றார்கள் இவர்களுக்கு தெரியாதா இப்படி ஒரு திரைப்படம், ஒரு உள்ளூர் நம்முடைய மண்னிலே இருந்து ஒரு திரைப்படம் வருகின்றது என்று தெரியாதா இல்லை தெரியாது போல் நடிக்கின்றார்களா அல்லது நமது மண்ணிலிருந்து வருகின்ற திரைப்படங்கள் நல்ல திரைப்படங்கள் அல்ல என்று எண்ணுகின்றார்களா இதை நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கின்றது. அண்மையில் திரையிடப்பட்ட ஒரு திரைப்படம் எந்த ஒரு திரை கதையும் இல்லை எந்த ஒரு விடயமும் அதிலே இல்லை ஆனால் ஹவுஸ்புல் போட்டார்கள் அந்த அளவுக்கு அது இந்திய தமிழ் மக்கள் மட்டுமல்ல எமது மக்களும் எத்தனையோ பேர் தாங்கள் பார்த்ததாக கூறியிருந்தார்கள் ஒரு குப்பை படம் ஆனால் குப்பை படம் என்று தெரிந்தும் அதை போய் பார்த்துவிட்டு வருகின்ற இவர்களுக்கு ஏன் எங்கள் மண்ணிலே இருந்து வருகின்ற ஒரு படத்தை பார்ப்பதற்கு ஆர்வம் வருவதில்லை என்ற கேள்வி எழுகின்றது. இனிவரும் காலங்களிலாவது நம் மக்கள் எங்களுடைய திரைப்படங்களை நிச்சயமாக பார்க்க வேண்டும். பார்த்தால் தான் உங்களுக்கு உண்மை புரியும் நீங்கள் அந்த திரைப்படத்தோடு வாழ்ந்து விட்டு வருவீர்கள். நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை அனுபவித்து விட்டு வருவோம் என்பது உண்மை. ஒரு சில திரைப்படங்கள் சில வேளைகளிலே எம்மை கடுப்பேத்தி விடுகின்றது உண்மைதான், அதற்காக எல்லா திரைப்படங்களையும் தவித்துககொள்ளக் கூடாது அல்லவா இனிமேலாவது அரங்கம் நிறைய வேண்டும். ஒரு நாள் அல்ல பல நாட்கள் எங்களுடைய திரைப்படங்கள் போட வேண்டும் புலம்பெயர்ந்த மண்ணிலே இருக்கின்ற நாங்கள் புலத்திலே இருக்கின்ற கலைஞர்களை வாழ வைக்க வேண்டும். அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் அந்தோணி திரைப்படத்தை இவ்வளவு அற்புதமாக தந்த இயக்குநர்கள் இரட்டையர்கள் சுகிர்தன் கிருதுராஜா, ஜெனோசன் ராஜேஸ்வர் இருவரும் இரட்டையர்கள் ஆகவே இருக்க வேண்டும் இன்னும் அற்புதமான படங்களை தர வேண்டும். ஓசை பிலிம்ஸ் ரமணதாஸ் போன்றவர்கள் எங்கள் மண்ணிலே வருகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் தயாரிப்பாளர்களாக வரவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

No comments: