இருள் சேர் இருவினை என்றால் என்ன? என் வாழ்வில் இருள் சூழ்ந்து விட்டது என்றால் என்ன? துன்பம் என் வாழ்வைச் சுற்றியுள்ளது என்பதே பொருள். என் வாழ்வில் ஒளி பிறந்திருக்கிறது என்றால் எனக்கு நல்லது நடந்துள்ளது. மகிழத்தக்க நன்மை அரங்கேறியுள்ளது என்பது பொருளாகும்.
கண்ணதாசனின் திரை இசைப்பாடலில் ஒளி மயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது என்ற பாடலைக் கேட்டால் நமது வாழ்விலேயே ஏதோ மகிழ்ச்சி ஏற்பட்டதைப் போல இனம்புரியாத இன்ப உணர்வை அடைய முடிகிறதல்லவா? அதனால் வாழ்வில் ஒளி என்பது இன்பமான மகிழ்ச்சிதான். இதனை நல்வினை என்றால் தீவினை என்று ஒன்று உண்டல்லவா? அந்த தீவினைதான் இருள் என்ற துன்பம் ஆகும்.
இதிலிருந்து இன்பம் மற்றும் துன்பத்தை இருவினைகள் என்றறிகிறோம். இதன்படி பார்த்தால் இருவினைகள் எப்படி இருள்சேர்க்கும்? நல்வினை நன்மையையும் தீவினையையும் செய்வதுதான் முறைமை. அப்படுயிருக்க இருள் சேர் இருவினை என்று எப்படி இருவினைகளைச் சொல்ல முடியும். ஆதலால் வள்ளுவன் சொல்லவரும் இருள் சேர்க்கும் இருவனைகள் நல்வினை மற்றும் தீவினை அல்ல.
அப்படியானால் அந்த இருவினைகள் என்ன?
அவை ஒன்று தீவினை பற்றி எண்ணுவது ஒன்று மற்றொன்று தீவினையைச் செயலாக்குவது. உங்களுக்குப் புரியும்படியே சொல்கின்றேன். ஒரு கொலை நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த கொலை எடுத்த எடுப்பில் செய்யப் படுவதில்லை. முதலில் திட்டம் தீட்டப்படுகிறது. இது தீவினைகளில் ஒன்றான திட்டம் தீட்டப்படும் ஒருவினை.
அடுத்ததாக தீட்டிய திட்டத்தை செயல் படித்துவது இருள்சேர் இருவினைகளில் மற்றொன்றான தீவினை. ஒன்று தீயதை நினப்பது மற்றொன்று நினைத்த தீயதை செயல்படுத்துவது. இவைதான் அந்த இருள்சேர் இருவினை. இவற்றை எப்படி இருவினைகள் எனலாம் என்று நீங்கள் கேட்கலாம். ஒன்றை மட்டும் சொல்லி உங்கள் சந்தேகத்தை தீர்க்கலாம் என எண்ணுகிறேன்.
காவல் நிலையத்தில் ஒரு கொலை பதிவாகிறது. காவலர்கள் இதக்கண்டறிய முற்பட்டு கொலையாளியை கண்டுபிடிப்பார்கள். அடுத்தபடி அந்த கொலைக்கு காரணமானவன் யார் அதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்தது யார் என்று கண்டுபிடிப்பார்கள். சொல்லப் போனால் கொலையாளியை விட கொலைக்கு திட்மிட்டுக் கொடுத்தவனுக்கு அதிக தண்டனை என்று சொல்லப்படுகிறது.
இதிலுருந்து தீயதை எண்ணுவதும் அதைச் செயற்படுத்துவம் ஆகிய இருவினைகளே வள்ளுவன் சொன்ன இருள்சேர் இருவினைகள் என்பதை அறிவோம். அடுத்ததாக இந்த இருவினைளும் சேராத இறைவன் யார்? இறைவனை இயற்கையாக வைத்தால் பொதுவின் பாலாகவோ அல்லது பெண்பாலாகவோ வைக்கலாம். பூமி, ஆறு போன்றவை பெண்பாலாக ஏற்கப் படுகிறது.
மற்றபடி அரசனையும் தலைவனையும் பொதுவின் பாலில் வைத்து காணலாம்.
உலகே பெண்வழிச் சமுதாயமாகவே இயங்கி வந்துள்ளது. இது இயற்கையில் வந்த வழிமுறை. இதை எப்படி என்று பார்பப்போம். விலங்குகளாய் இருந்தோ அல்லது விலங்கு நிலையிலிருந்தே மனிதன் தோன்றினான் என்பது பொதுவான கருத்து. இதை ஏற்காதவர்கள் கடவள்தான் மனிதனையும் விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் படைத்தார் என்பார்கள்.
இப்போது விலங்கிலிருந்து ஆரம்பிப்போம். தாய் விலங்குதான் குட்டிகளை ஈன்று பேணிப் பாதுகாத்து வளர்க்கிறது. இதில் பொறுப்புணர்வு என்பது பெண் விலங்கிற்கே அதிகம் இருக்கிறது. ஆண் விலங்கு பெண்விலங்கை கருவுறச் செய்துவிட்டு பெண் விலங்கையோ அது ஈன்ற குட்டிகளையோ பற்றி சிறிதும் சிரத்தை கொள்ளாமல் பொறுப்புன்றி சுற்றுத் திரிகிறது.
இதன் எச்சமாகத்தான் இன்றும் பல ஆண்கள் மனைவி மக்களை கண்டு கொள்ளால் குடித்து கும்மாளமிட்டு பொறுப்பின்றி அலைவதால் பெண்கள் கடினமாக உழைத்து குடும்பத்தைக் காக்கவேண்டிய அவலநிலை உருவாகிறது. அதன்பின்னரே ஆண்வழிச் சமுதாயமாக மாறியது. ஆண்வழிச் சமுதாயமாக எப்படி மாறியது? அதை அப்படி மாற்றியவர்கள் யார் என்பதை மனித வரலாற்றை படித்தவர்கள் நன்கறிவார்கள்.
இந்த பின்னணிகொண்டு பொருள் சேர் இறைவனைக் காணவேண்டும். அதாவது இறைவன் என்பதற்கு பொருள் காணவேண்டும். இங்கே இறைவன் என்று குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது. ஆதலால் இறைவன் என்றவுடன் கோவிலில் குடியமர்த்தப் பட்டிருக்கும் இறைவன் என்று எண்ணிவிடக் கூடாது. ஏன் குடியமர்த்தப் பட்டிருக்கிறார் என்றால் இயற்கையாக இருப்பவருக்கு உருவைக் கொடுத்து குடியமர்த்தியிருக்கிறான் மனிதன்.
அதனால் தன்னைப்போலவே இறைவனையும் புலம்பெயரவைத்து பல நாடுகளில் குடியேற வைத்துள்ளான். வள்ளுவர் இருள்சேர் இருவினையும் சேரா இறைவனை பொருள்சேர் என்று சொல்லியிருக்கிறார்.
கோயில் என்பது கோ வாழும் இல்லம். கோ என்பது அரசன், தலைவன் மற்றும் இறைவன் என்று பொருள் வருவதால் அவர்களில் அது யார் வாழும் இல்லமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆதலால் தக்க பொருளைக் காண்பது அவசியம். அரசன் வாழ்வது அரண்மனை அல்லவா? ஆம், அரண்போன்று பாதுகாப்புடைய மனை என்பதால் அரண்மனை ஆனது.
இதைத்தவிர கோயில் என்றாலும் அரசன் வாழும் இல்லம்தான். இறைவனாக உருவகப் படுத்தப் பட்டிருக்கும் இயற்கை இரு வினைகளையும் செய்யாது. சான்றாக கடலில் ஏற்படும் காற்றழுத்தத்தால் உருவாகும் புயல் மற்றும் ஆழிப்பேரலை போன்றவற்றை இயற்கை திட்டமிட்டு செயல் படுத்துவதில்லை. ஆதலால் இயற்கை எனும் இறைவனைப் பொருள் கொள்ள முடியாது.
அடுத்ததாக அரசனை எடுத்துக் கொள்வோம். கடுமையான வரிவிதித்து கருவூலத்தை நிறைக்க திட்டமிடுகிறான். பின் வரிவசூல் செய்யும் திட்டத்தை நிறைவேற்றுகிறான். எனவே கொடுங்கோல் அரசனே இருள்சேர் இருவினைகளையும் செய்கிறான். ஆனால் இது மன்னராட்சிக் காலம் அன்று. ஆதலாலால் அரசனையும் இருள்சேர் இருவினையும் சேரா இறைவனாக தற்காலத்தில் பொருள் கொள்ள முடியாது.
எஞ்சியிருப்பவன் தலைவன். ஆரம்ப காலத்தில் குழுக்களாக மக்கள் இணைந்து வாழ்ந்தபோது மக்கள் தலைவனாக ஒருவனைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் தற்கால மக்களாட்சி காலத்தில் வாக்கைச் செலுத்தி தலைவன் ஒருவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த அரசியல் தலைவனே நாட்டை ஆள்கின்றான். இப்படிப் பட்ட அரசியல் தலைவன் இருள்சேர் இருவினையும் சேராதவனாக இருக்க வேண்டும்.
இந்த அரசியல் தலைவன் செய்யும் இருள்சேர் இருவினைகளில் ஒன்று மக்களுக்கு அதிக வரிபோடும் திட்டம். அடுத்ததாக அப்படி சேகரித்த பணத்தை மக்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்தாமல் அதை
அபகரித்து தனக்கும் குடும்பத்துக்கும் சேர்த்து வைக்கும் செயல் மற்றொன்று. இப்போது புரிகிறதா? இருள் சேர் இருவினையும் சேரா அரசியல் தலவன்தான் உண்மையான தலைவன். அவனே இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்.
இதனைப் புரிந்து கொள்பவர்களே புகழுக்குரியவர்கள் என்பதை எடுத்தியம்புகிறார் வள்ளுவர். திருக்குறள் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதால் அக்காலத்துக்கு தக்கவாறே பொருள் காணவேண்டும். பிள்ளைக்கறி சாப்பிட எண்ணியதும் அதைச் சமைக்க தூண்டியதும் அன்றைய இறைவன்.
பொற்கொல்லன் சொல்லை நம்பியது ஒரு தீவினை என்றால் கோவலனை கொன்று மற்றொரு தீவினையையும் செய்தான் அக்கால அரசன். இறைவனும் அரசனும் இக்காலத்துக்கு பொருந்த மாட்டார்கள. ஆதலால் இன்று கடும்வரி விதித்தல் மற்றும் மக்கள் பணத்தைக் கொள்ளயடித்தல் போன்ற இருள் சேர் இருவினையும் சேராமல் இருப்பவனே நல்ல தலைவன் என்பதை அறிவோம்.
அப்படி அறிபவர்களே புகழுக்குரியவர்கள். இதனை நான் சொல்லவில்லை வள்ளுவப் பெருமகனார் சொல்கிறார். அவர் கூறும் குறள் சொல்கிறது. மேலும் எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காணவேண்டும் என்று அவரே சொல்லியும் இருக்கிறார்.
-சங்கர சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment