செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல் ஆரம்பம்
அவுஸ்திரேலியா - இலங்கைக்கு இடையே விமான சேவைகளை அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தீரமானம் : வாரத்துக்கு 14 விமான சேவைகள்
வடக்கு, கிழக்கில் காணி மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் 'லன்டெர்ன்' திட்டம் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துடன் இணைவு
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து தூதுவர்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தை ; மணிலாவில் கொள்கை விளக்க உரையாடலிலும் பங்கேற்பு
செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல் ஆரம்பம்
Published By: Vishnu
13 Mar, 2026 | 05:02 AM
செம்மணி மனிதப் புதைகுழியில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியன்று மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதியை வியாழக்கிழமை (12) மாலை யாழ்ப்பாணம் நீதிவான் உள்ளிட்ட அகழ்வு பணிகளில் ஈடுபடும் தரப்பினர் நேரில் கள விஜயம் செய்து பார்வையிட்டனர்.
இதன்போது அகழ்வு பகுதியில் நீரினுடைய அளவு மேற்பார்வையயிடப்பட்டு குறித்த நீரை அகற்றுகின்ற நடவடிக்கை மார்ச் மாதம் 28ஆம் திகதி நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்ததுடன் அகழ்வு பணிக்கான தற்போதைய திகதியாக ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் அகழ்வு பணிகள் தொடர்பான வழக்கின் ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஏப்ரல் மாதம் 8 ஆம் திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படும் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
அவுஸ்திரேலியா - இலங்கைக்கு இடையே விமான சேவைகளை அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தீரமானம் : வாரத்துக்கு 14 விமான சேவைகள்
11 Mar, 2026 | 11:52 AM
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ், கொழும்பு மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கும் வகையில் வாராந்திர சேவைகளை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 2026 ஆகஸ்ட் 2ஆம் திகதி முதல் கொழும்பு – மெல்போர்ன் நகருக்கு இடையே வாரத்திற்கு 10 விமான சேவைகள் இயக்கப்படவுள்ளன.
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக சுற்றுலா, குடும்ப உறவினர்களைச் சந்திக்கும் பயணங்கள் போன்ற தேவைகள் உயர்ந்து வருவதால் இந்த சேவை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் முக்கிய சந்தைகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதிதாக சேவையில் இணைக்கப்பட்ட விமானங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளன.
கொழும்பிலிருந்து புறப்படும் நேரம்: பிற்பகல் 2.10 மணி
மெல்போர்னை அடையும் நேரம்: அடுத்த நாள் அதிகாலை 4.30 மணி
அடுத்து மெல்போர்னிலிருந்து விமானங்கள் புறப்படும் நேரம்: காலை 6.00 மணி
கொழும்பை வந்தடையும் நேரம்: நண்பகல் 12.15 மணி ஆகும்.
இந்த பயண நேர அட்டவணை சுற்றுலாப்பயணிகள் இலங்கையில் அதிக நேரம் செலவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு வழியாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கான இணைப்பு பயணங்களுக்கும் வசதியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சேவைகளுடன் சேர்த்து, ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் தினசரி விமான சேவைகளும் தொடரும்.
UL604 விமானம் – கொழும்பில் இருந்து அதிகாலை 12.20 மணிக்கு புறப்பட்டு மெல்போர்னில் பிற்பகல் 2.40 மணிக்கு சென்றடையும்.
UL605 விமானம் மெல்போர்னிலிருந்து பிற்பகல் 4.10 மணிக்கு புறப்பட்டு கொழும்பை இரவு 10.25 மணிக்கு வந்தடையும்.
இந்த சேவைகள் இந்தியா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு எளிதான இணைப்பு பயணங்களை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினருக்கும் இந்த சேவை விரிவாக்கம் பெரும் நன்மையாக அமையும். குடும்பத்தினரை சந்திக்க இலங்கைக்கு வருவதற்கும் மீண்டும் திரும்பிச் செல்வதற்கும் அதிக வசதி கிடைக்கும்.
மேலும், அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களுக்கும் இந்த கூடுதல் விமான சேவைகள் பயனுள்ளதாக இருக்கும். கல்வி அட்டவணைகள் மற்றும் விடுமுறை காலங்களை கருத்திற்கொண்டு பயணத்தை எளிதாக திட்டமிடுவதற்கு இது உதவும்.
இந்த கூடுதல் சேவைகள் மூலம் கொழும்பு சர்வதேச விமான நிலையம் பிராந்திய விமான மையமாக மேலும் வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் கொழும்பு வழியாக மெல்போர்ன் செல்வதற்கான வசதிகள் மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது. நன்றி வீரகேசரி
வடக்கு, கிழக்கில் காணி மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் 'லன்டெர்ன்' திட்டம் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துடன் இணைவு
10 Mar, 2026 | 01:48 PM
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான 'லன்டெர்ன்' (LANTERN - Land and Trust-building Engagement in the Regions of the North & East) திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைத்து முன்னெடுக்கவுள்ளதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவர் கிறிஸ்டின் பார்ஸோ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்தார்.
புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும்
மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் இடையிலான இவ்விசேட சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது.
இச்சந்திப்பில், அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' பேரிடரால் பாதிக்கப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ஐ.ஓ.எம். நிறுவனத்தால் வழங்கப்படவுள்ள உதவிகள் தொடர்பில் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. அவர்களுக்கு எவ்வாறான உதவிகள் வழங்கப்படவுள்ளன என்பது குறித்து விவரிக்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர்ப்பட்டியலும் ஆளுநரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் தமது தாய்நாட்டுக்குத் திரும்ப விருப்பம் தெரிவிப்பவர்களுக்கான உதவிகளை வழங்குவது தொடர்பில் ஆளுநர் இதன்போது விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த ஐ.ஓ.எம். பிரதிநிதிகள், யு.என்.டி.பி. நிறுவனத்துடன் இணைந்து அடுத்த மாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ள 'லன்ரேன்' செயற்றிட்டம் தொடர்பில் ஆளுநருக்கு விளக்கமளித்தனர்.
அத்துடன், அப்புதிய செயற்றிட்டத்தின் ஊடாக, இவ்வாறு நாடு
திரும்பும் ஏதிலிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.
இவ்விசேட சந்திப்பில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் ஐ.ஓ.எம். நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
நன்றி வீரகேசரி
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து தூதுவர்
Published By: Digital Desk 3
10 Mar, 2026 | 05:20 PM
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, இன்று செவ்வாய்க்கிழமை (10) முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தார்.
இந்நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எழுந்துள்ள நிலைமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இலங்கையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தை நிறுவியதிலிருந்து 70 ஆண்டுகளில், இந்நாட்டின் இளைஞர்களின் தொழில் பயிற்சியை மேம்படுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்ற சமூக மற்றும் கலாசாரத் துறைகளின் மேம்பாட்டிற்கு பங்களித்துள்ளது என்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, அந்த ஆதரவை மிகவும் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கின் போர் நிலைமை குறித்து இலங்கையின் நிலைப்பாட்டிற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, நாட்டின் இளைஞர்களின் தொழில் பயிற்சியை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் தொடர்ந்து ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதல் செயலாளர் (அரசியல்) Justine Boillat இந்நிகழ்வில் கலந்து கொண்டார். நன்றி வீரகேசரி
ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தை ; மணிலாவில் கொள்கை விளக்க உரையாடலிலும் பங்கேற்பு
11 Mar, 2026 | 01:18 PM
பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) சிரேஷ்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
இலங்கை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், நடைமுறையில் உள்ள திட்டங்களை மீளாய்வு செய்தல் மற்றும் எதிர்காலக் கூட்டாண்மை வாய்ப்புகளைக் கண்டறிதல் ஆகியவற்றுக்கு இப்பேச்சுவார்த்தைகளின்போது முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இந்த விஜயத்தின்போது, பிரதமர் ஆசிய அபிவிருத்தி வங்கியின்
தலைவர் Masatsugu Asakawa சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, இருதரப்புக்கும் இடையிலான உறவை மேலும் உறுதிப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
பிரதமரை வரவேற்ற தலைவர் Masatsugu Asakawa, அண்மைக்கால பொருளாதார நெருக்கடியின் பின்னர் இலங்கை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார்.
'டித்வா' சூறாவளி அனர்த்தத்தின்போது ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய உதவிகளுக்கும், இலங்கையுடன் முன்னெடுத்து வரும் விரிவான அபிவிருத்தி ஒத்துழைப்புகளுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையின் நீண்டகால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு இன்றியமையாதது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (தெற்கு, மத்திய மற்றும் மேற்கு ஆசியாவுக்கான) பிரதித் தலைவர் Yingming Yangஐயும் பிரதமர் சந்தித்தார்.
இந்த சந்திப்பு வேளையில், இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
துறைசார் குழு 3இன் (Sectors Group 3) பணிப்பாளர் நாயகம் Christine Engstromஉடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மானுட மற்றும் சமூக அபிவிருத்தி, பொதுத்துறை முகாமைத்துவம் மற்றும் நிதித்துறை சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் எதிர்கால முதலீடுகளின்போது, உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மேலதிகமாக, மனிதவள மேம்பாடு மற்றும் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் தரத்தை உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இப்பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ASEAN நிறுவனங்கள், பிலிப்பைன்ஸ் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பங்கேற்ற கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி குறித்த கொள்கை விளக்க உரையாடலில் பிரதமர் கலந்துகொண்டார்.
பிராந்திய கல்வி முறைகள், கொள்கை ரீதியான ஒத்துழைப்பு மற்றும் கல்வி மற்றும் திறன் அபிவிருத்திக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலின்போது, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையே கல்விசார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை, குறிப்பாகக் கொள்கைப் பரிமாற்றம் மற்றும் நிறுவன ரீதியான ஒத்துழைப்பு ஆகிய துறைகள் குறித்து பிரதமர் வலியுறுத்தினார்.
அத்துடன், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) துறையின் அபிவிருத்தி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப திறன் அபிவிருத்திக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த மணிலா விஜயமானது, நிலையான அபிவிருத்தியை முன்னெடுத்தல், கல்வி முறைகளை வலுப்படுத்துதல் மற்றும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இலங்கை, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிராந்திய பங்காளிகளுக்கு இடையிலான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நன்றி வீரகேசரி










No comments:
Post a Comment