ஒரு காலத்தில் ஒரு முதிய பெண் தனது குடிசையில் உடைகளை தைத்து கொண்டிருந்தாள். அப்போது அவள் பயன்படுத்திய ஊசி தவறி விழுந்து போயிற்று. அவள் குடிசையில் விளக்கு எதுவும் இல்லை; மேலும் அவளது கண்களில் முத்திரை நோய் (கட்டாரக்ட்) இருந்ததால் அந்த ஊசியை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதனால் அவள் வெளியே வந்து தெருவிளக்கின் கீழ் அந்த ஊசியைத் தேடத் தொடங்கினாள். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு மாணவன் அந்த முதிய பெண்ணிடம், “பாட்டி, நீங்கள் என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அந்தப் பெண், “நான் ஒரு ஊசியைத் தேடுகிறேன்” என்று கூறினாள்.
மாணவன், “நீங்கள் அதை எங்கு இழந்தீர்கள் என்று சொல்லுங்கள்; அதைத் தேட நான் உதவுகிறேன்” என்றான்.
அதற்கு அந்தப் பெண், “நான் என் குடிசையில் தைத்துக் கொண்டிருந்தபோது அதை இழந்தேன்” என்று கூறினாள்.
அப்போது அந்த மாணவன் ஆச்சரியத்துடன், “அப்படியானால், குடிசையில் இழந்த ஊசியை நீங்கள் ஏன் தெருவில் தேடுகிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அந்த முதிய பெண், “என் குடிசையில் விளக்கு இல்லை. ஆனால் தெருவில் வெளிச்சம் இருக்கிறது. அதனால் நான் இங்கே தேடுகிறேன்” என்று பதிலளித்தாள்.
பாருங்கள்! வீட்டில் இழந்ததை தெருவில் தேடுகிறாள்!
இன்றைய மனிதனும் இதையே செய்கிறான். உண்மையான ஆனந்தமும் அன்பும் மனிதனின் உள்ளத்திலேயே இருக்கின்றன. ஆனால் அவன் அறியாமையால் அதை வெளியிலே தேடிக் கொண்டிருக்கிறான்.
வெளிப்புற அன்பும் சந்தோஷமும் தற்காலிகமானவை. ஆனால் இறைவனுடன் உள்ள உறவு நித்தியமானது.
மனித உடல் நிலையற்றது. இந்த நிலையற்ற உடலிலிருந்து நிலையான ஆனந்தத்தை எவ்வாறு பெற முடியும்?
நாம் யோகம், தியானம், ஜபம் போன்ற ஆன்மீக சாதனைகளை செய்கிறோம். அவை கூட ஒரு அளவுக்கு தற்காலிக திருப்தியைத் தருகின்றன.
ஆனால் இறைவனின் மீதான அன்பே நித்திய ஆனந்தத்தை அளிக்கக் கூடியது. 🙏
No comments:
Post a Comment