ஞானம் நிறைந்தால் நல்வழி திறக்கும் !















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்……அவுஸ்திரேலியா 




தேடும் வரைக்கும் தேட வேண்டும்
தேடிய பின்னர் தெளிவுற வேண்டும்
நாடிய அனைத்தும் நம்வச மானால்
நாடெலாம் நம்மை வியந்துமே பார்க்கும்

பொன்னைப் புகழைத் தேடித் திரிகிறார்
மண்ணில் மன்னராய் வாழத் துடிக்கிறார்
எண்ணி லடங்கா எண்ணியே நிற்கிறார்
இருக்கும் காலத்தை எவருமே அறியார்

கரியைக் காசாய் ஆக்கிட முனைகிறார்
கடமை என்பதை உணரா திருக்கிறார் 
முடிவை எவரும் எண்ணிட மாட்டார்
எப்படி வருமென எவருக்கும் தெரியா

எண்ணி லடங்கா எத்தனை இருக்கு
எத்தனை அறிவு எத்தனை தத்துவம்
கண்ணில் தெரிவதைக் கருத்தில் கொள்கிறோம்
உண்மை எதுவென உணர மறுக்கிறோம்

உண்மை உணர்ந்தால் உள்ளம் வெளுக்கும்
உள்ளம் வெளுத்தால் கள்ளம் அகலும்
கள்ளம் அகன்றால் ஞானம் நிறையும்
ஞானம் நிறைந்தால் நல்வழி திறக்கும் !

No comments: