மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி மற்றும் காயம் ; பல சிறுவர்களுக்கு 'பேரழிவு' நிலை! - யுனிசெஃப் கவலை
அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் – ஈரான் எச்சரிக்கை
ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை
ஈரானிய கால்பந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம்
லெபனானில் வன்முறை தீவிரம் : இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவியை விரிவுபடுத்தும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு
மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி மற்றும் காயம் ; பல சிறுவர்களுக்கு 'பேரழிவு' நிலை! - யுனிசெஃப் கவலை
12 Mar, 2026 | 02:38 PM
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மில்லியன்கணக்கான சிறுவர்களின் வாழ்க்கையில் "பேரழிவு" நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் எச்சரித்துள்ளது.
யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இதுவரை 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வன்முறையினால் காயமடைந்துள்ளதோடு, பலர் உயிரிழந்துள்ளனர்.
இதில் உள்ளடங்குபவை:
ஈரான்: 200 சிறுவர்கள் உயிரிழப்பு.
லெபனான்: 91 சிறுவர்கள் உயிரிழப்பு.
இஸ்ரேல்: 4 சிறுவர்கள் உயிரிழப்பு.
குவைத்: 01 சிறுவர் உயிரிழப்பு.
வன்முறை மேலும் தீவிரமடைந்து வருவதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் கவலை வெளியிட்டுள்ளது.
தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக நூறாயிரக்கணக்கான சிறுவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அத்துடன், இந்தப் போர் நெருக்கடியினால் மில்லியன்கணக்கான சிறுவர்கள் தமது கல்வி கற்கும் வாய்ப்பினை இழந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
"சிறுவர்களைக் கொலை செய்வதையோ, அங்கவீனப்படுத்துவதையோ அல்லது அவர்கள் தங்கியிருக்கும் அத்தியாவசிய சேவைகளை அழிப்பதையோ எதனாலும் நியாயப்படுத்த முடியாது. இப்பிராந்தியத்தில் உள்ள சுமார் 200 மில்லியன் சிறுவர்கள், உலகம் விரைவாகச் செயற்படும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்" என யுனிசெஃப் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. நன்றி வீரகேசரி
அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் – ஈரான் எச்சரிக்கை
Published By: Vishnu
13 Mar, 2026 | 08:47 AM
ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கொமெய்னி தனது முதல் தொலைக்காட்சி உரையில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் மூடப்படாவிட்டால் ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்றம் கடுமையாக அதிகரித்து வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் பல பகுதிகளை வான்வழியாக தாக்கியது.இந்த தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்களில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்ததாக ஈரான் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரானும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பகுதிகள் மீது தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஹார்மூஸ் நீரிணை என்ற உலக வர்த்தகத்திற்கு முக்கியமான கடல் பாதையை ஈரான் மூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்துக்கு முக்கியமான இந்த கடல் வழி மூடப்பட்டதால், சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் எர்பில் நகரில் உள்ள ஹரீர் விமானப்படை தளம் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தலைமையகம் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை சமீபத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் குறைந்தது 5 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தளம் சர்வதேச கூட்டணி படைகளுக்கான முக்கிய இராணுவ மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில், இஸ்ரேல் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஈரானுடன் போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் நாட்டில் 2,339 பேர் தாக்குதல்களில் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அயதுல்லா அலி காமேனி உயிரிழந்த நிலையில், அவரது மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்சத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரும் சமீபத்திய தாக்குதல்களில் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், அவர் வெளியிட்ட முதல் அறிக்கை ஈரானின் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
அந்த அறிக்கையில், ஹார்மூஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் என்றும், அந்த பகுதி ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அண்டை நாடுகளுடன் நட்புறவு தொடரும் என்றாலும், அமெரிக்க இராணுவ தளங்களை மூட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த மோதல்களின் தொடர்ச்சியாக வளைகுடா கடற்பகுதிகளில் பல சரக்கு கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் அருகே இரண்டு கப்பல்களும், ஐக்கிய அரபு அமீரகம் அருகே ஒரு கப்பலும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை மொத்தம் 6 கப்பல்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதன் விளைவாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து, ஒரு பீப்பாய் எண்ணெய் 100 அமெரிக்க டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனால் பல நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயம் நிலவுவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வளைகுடா நாடுகளில் வசித்து வரும் பல்வேறு நாடுகளின் குடிமக்களின் பாதுகாப்பு குறித்த கவலையும் அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி வீரகேசரி
ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை
Published By: Vishnu
12 Mar, 2026 | 10:10 PM
வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்துவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதன்கிழமை (11) தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 135 நாடுகளின் இணையனுசரணையுடன் பஹ்ரைனால் கொண்டுவரப்பட்ட இத்தீர்மானம், பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் 13 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன.
பாதுகாப்புச்சபையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தின் பிரகாரம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், ஓமான், கட்டார், பஹ்ரைன் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள்மீது ஈரான் நடாத்திவரும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு சர்வதேச எரிபொருள் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் ஈரானின் எந்தவொரு செயலையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கும், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடாத்திவரும் தொடர் தாக்குதல்களுக்குமான பதில் நடவடிக்கையாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத்தளங்களை இலக்குவைத்து தாக்குதல் நடாத்தி வருகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் மேற்படி தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய ஐ.நாவுக்கான பஹ்ரைன் தூதுவர் ஜமால் ஃபாரெஸ் அல்ரோவாயி, வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது வெறும் பிராந்திய விவகாரம் மாத்திரமல்ல எனவும், மாறாக அது உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் நேரடித் தொடர்புடைய சர்வதேசப் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் இந்தத் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என ஈரான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுபற்றிக் கருத்துரைத்திருக்கும் ஈரானிய தூதுவர் அமீர் சயீத் இரவானி, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டுவரும் அப்பட்டமான ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை இத்தீர்மானம் திட்டமிட்டு மறைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். நன்றி வீரகேசரி
ஈரானிய கால்பந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம்
Published By: Digital Desk 3
10 Mar, 2026 | 02:26 PM
ஆசியக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த ஈரானியப் பெண்கள் உதைபந்தாட்ட அணியின் ஐந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அரசியல் புகலிடம் வழங்கியுள்ளது.
போட்டியின் ஆரம்பத்தில் ஈரானிய தேசிய கீதத்தைப் பாட மறுத்தமைக்காக, நாடு திரும்பினால் அவர்கள் கொல்லப்படலாம் அல்லது கடும் தண்டனைக்குள்ளாகலாம் என்ற அச்சத்திற்கு மத்தியிலேயே இந்த மனிதாபிமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டோனி பர்க் திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், ஸஹ்ரா கன்பரி (அணித்தலைவி), பாத்திமா பசந்திதே, ஸஹ்ரா சர்பாலி அலிஷா, மோனா ஹமூதி, அத்தீபே ரம்ஸானிசாதே ஆகிய ஐந்து வீராங்கனைகளுக்கு வீசா வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
"நீங்கள் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்; இது உங்கள் வீடு போன்றது" என அமைச்சர் அவர்களுக்குத் தைரியம் ஊட்டியுள்ளார்.
ஈரான் மீது போர் தொடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த வீராங்கனைகளின் பாதுகாப்பு தொடர்பில் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
"ஐந்து பேர் ஏற்கனவே பாதுகாக்கப்பட்டனர், எஞ்சியோர் வழியில் உள்ளனர். அவர்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவது பாரிய மனிதாபிமானத் தவறாக அமையும். அங்கு அவர்கள் கொல்லப்பட அதிக வாய்ப்புள்ளது" என ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தென் கொரியாவுக்கு எதிரான போட்டியின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, ஈரானிய வீராங்கனைகள் மௌனமாக நின்றதை ஈரானிய அரச ஊடகம் "கௌரவமற்ற செயல்" என விமர்சித்திருந்தது. அத்துடன், அவர்கள் "யுத்த கால துரோகிகள்" என முத்திரை குத்தப்பட்டதால், நாடு திரும்பினால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என மனித உரிமை அமைப்புகள் எச்சரித்திருந்தன.
தற்போது ஏனைய வீராங்கனைகளும் அவுஸ்திரேலியப் பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ள போதிலும், ஈரானில் உள்ள தமது குடும்பத்தினரின் பாதுகாப்புக் கருதி சிலர் நாடு திரும்ப யோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி வீரகேசரி
லெபனானில் வன்முறை தீவிரம் : இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவியை விரிவுபடுத்தும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு
10 Mar, 2026 | 01:43 PM
லெபனானில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் தொடர்ச்சியான குண்டுவீச்சுகளால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் மனிதாபிமான மருத்துவ அமைப்பான எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (Médecins Sans Frontières (MSF)) நாடு முழுவதும் தனது அவசர உதவி நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது.
எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு மார்ச் 7ஆம் திகதி பெய்ரூட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வன்முறை அதிகரிப்பால் உருவாகியுள்ள மனிதாபிமான தேவைகள் மிகப்பெரிய அளவில் இருப்பதாகவும், அவற்றை சமாளிக்க விரிவான சர்வதேச ஆதரவு அவசியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
லெபனான் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, மார்ச் 2ஆம் திகதி முதல் இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல்களில் குறைந்தது 217 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 800 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் குண்டுவீச்சுகள் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குப் புலம்பெயரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தெற்கு லெபனான், தெற்கு பெய்ரூட் மற்றும் பெகா பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் வெளியிடப்பட்ட அவசர வெளியேற்ற உத்தரவுகள் காரணமாக மக்கள் தங்குவதற்கான பாதுகாப்பான இடமின்றி தஞ்சம் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டிருக்கலாம் என்ற கவலைகளையும் எழுப்பியுள்ளது.
“எங்கள் அணிகள் உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால், தேவைகள் மிகவும் அதிகமாக உள்ளன. பாதுகாப்பு, குடிநீர், அடிப்படை நிவாரணப் பொருட்கள் மற்றும் சுகாதார சேவைகள் ஆகியவற்றுக்கு உடனடி தேவை உள்ளது” என லெபனானில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் திட்டங்களின் தலைவரான Jeremy Ristord தெரிவித்துள்ளார்.
மார்ச் 2ஆம் திகதி முதல் லெபனானின் பல நகரங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம் புகுந்துள்ள இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் குழுக்கள் மதிப்பீடு செய்து உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பலர் ஏற்கனவே முந்தைய மோதல்களின்போது பல முறை இடம்பெயர்ந்தவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பல தற்காலிக தங்குமிடங்கள் மிகுந்த நெரிசலுடன் காணப்படுகின்றன. சிலர் தங்களது வாகனங்களிலோ அல்லது வீதியோரங்களிலோ இரவைக் கழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் வெளியேற்ற உத்தரவுகளைப் பொருட்படுத்தாமல் வீடுகளில் தங்கியிருக்கின்றனர். மற்றவர்கள் தங்குமிடங்களில் இடமின்மை அல்லது வாடகை வீடுகளை எடுக்க முடியாத நிலை காரணமாக மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், லெபனான் முழுவதும் இடம்பெயர்ந்த மக்களை அடைவதற்காக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு பல மொபைல் மருத்துவக் கிளினிக்குகளை (Mobile Clinics) இயக்கியுள்ளது. தெற்கு லெபனானின் முக்கிய நகரமான சைடா பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட மொபைல் மருத்துவ சேவை ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியதுடன், உளவியல் முதலுதவியும் வழங்கியுள்ளது.
மேலும், மவுண்ட் லெபனான் பிராந்தியத்தில் உள்ள பர்ஜா பகுதியில் அமைக்கப்பட்ட மற்றொரு மொபைல் கிளினிக் சில மணிநேரங்களுக்குள் 72 பொதுச் சிகிச்சைகள், 11 பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார ஆலோசனைகள் மற்றும் 13 மனநல ஆதரவு அமர்வுகளை வழங்கியுள்ளது.
வட லெபனானில் உள்ள அக்கார் மாவட்டத்தின் பெப்னைன் பகுதியில் தொடங்கப்பட்ட மூன்றாவது மொபைல் மருத்துவ சேவை தனது முதல் நாளிலேயே தெற்கு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்துள்ளது.
இதனுடன், பெய்ரூட், பெகா மற்றும் சோஃப் பகுதிகளில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் குழுக்கள் ஏற்கனவே 350,000 லீட்டர் குடிநீரையும், 7 தொன் அளவிலான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும் – குறிப்பாக போர்வைகள், சுகாதாரத் தொகுப்புகள் போன்றவற்றை ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்ததால் தெற்கு லெபனானின் நபதியே உள்ளிட்ட சில பகுதிகளில் நேரடி உதவி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பணியாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பெய்ரூட்டின் புர்ஜ் ஹம்மூத் மற்றும் பால்பெக்-ஹெர்மெல் மாகாணத்தின் அர்சால் ஆகிய பகுதிகளில் உள்ள எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் மருத்துவ நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றன.
மேலும் திரிபோலி நகரில் உள்ள முதன்மை சுகாதார மையங்களுக்கும் ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நெருக்கடியை சமாளிக்க விரைவான சர்வதேச உதவி தேவைப்படுவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
2026 லெபனான் மனிதாபிமான பதில் திட்டத்திற்கு இதுவரை 14% மட்டுமே நிதி கிடைத்துள்ளதாகவும், அவசர நிவாரணப் பொருட்களின் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே இடம்பெயர்ந்த மக்களுக்கும் அவர்களை தங்கவைத்துள்ள சமூகங்களுக்கும் விரைவாக உதவி அளிக்க அவசர மற்றும் நெகிழ்வான நிதி ஆதரவை உடனடியாக இயக்கவேண்டும் என எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment